தமிழக அரசே!
அரசுப் பணியாளர் தேர்வாணை யமே!
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வட நாட்டாருக்கு வாரி வழங்காதே!
தமிழ்நாட்டில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் போது தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம், 9351 மாநில அரசுப் பணிகளுக்கு – தமிழ்மொழி தெரியாவிட்டாலும் பரவாயில்லை, மனுப் போடலாம் என இந்தியா முழுமையிலிருந்தும் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
நேபாளம், பூட்டான் போன்ற அன்னிய நாட்டினரும் மனுப் போடலாம் என்றும், பணி நியமனம் பெற்று இரண்டு ஆண்டுகளில் தமிழைக் கற்றுக் கொண்டால் போதும் எனவும் கூறுகிறது அந்த அறிவிப்பு.
தமிழ்மொழி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த நிபந்தனையை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?. திறந்த போட்டிக்கு மட்டும்தான் இந்த அறிவிப்பு என்று தேர்வாணையம் கூறும் சமாதானத்தை எப்படி ஏற்க முடியும்? திறந்த போட்டியிலும் தமிழ் நாட்டைச் சார்ந்த முன்னேறிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை வடநாட்டார் பறித்துக் கொள்ளலாமா?
ஏற்கனவே கருநாடகம், குஜராத், மராட்டியம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மாநில மக்களுக்கே வேலை வாய்ப்புகளை உறுதி செய்து சட்டம் இயற்றியுள்ளன.
தமிழ்நாட்டில் தொடர் வண்டித் துறை, அஞ்சல்துறை, வருமானவரித் துறை, சுங்கம் மற்றும் கலால்துறை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங் களில் வடநாட்டுக்காரர்கள் ஆதிக்கம் குவிந்து கிடக்கும்போது – தமிழக வேலை வாய்ப்புகளையும் வடநாட்டுக் காரர்களுக்கு கதவு திறந்து விடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தமிழக அரசு ‘பாலிடெக்னிக்’ விரிவுரையாளர் பதவிகளில் இதே போல் திறந்த போட்டியில் வட நாட்டுக்காரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு, கடும் எதிர்ப்பு உருவான தால், நியமனங்களை இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. அதே போன்று-
தமிழக தேர்வாணையமே!
மாநில அரசுப்பணிக்கான தேர்வு அறிவிப்பைத் திரும்பப்பெறு!
2018 பிப்ரவரியில் நடக்க விருக்கும் தேர்வுகளை ரத்து செய்!
தமிழக அரசே!
மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்புகளை உறுதி செய்து சட்டமியற்று!
தமிழக இளைஞர்களே!
உரிமைக்கு போராட திரண்டு வாரீர்!
- திராவிடர் விடுதலைக் கழகம்