naan 350“முதுமை தளர்வுடன் இருந்தாலும் மூளை 24 மணி நேரமும் பெரியாரையும் மொழியையும் அசை போட்டே இருக்கிறது”

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் தனது 94ஆம்அகவையில் கடந்த 7.11.2017 அன்று சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். அவரது உடலில் கருஞ்சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. கழக சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் தபசி குமரன், அன்பு தனசேகர், வேழவேந்தன், உமாபதி, அய்யனார், செந்தில்குமார், துரைராசு, ராஜூ, குகன் உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

கழகத்தின் ‘நிமிர்வோம்’ மாத இதழ் கடந்த பிப்ரவரி மாதம் அவரது நேர்காணலை பதிவு செய்தது. இதுவே அவரது இறுதி நேர்காணலாகவும் அமைந்துவிட்டது. பேராசிரியர் நன்னன் அவர்களின் முழுமையான ‘தன் வரலாறாக’ வெளி வந்திருந்த நேர்காணலிலிருந்து சில பகுதிகளை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இங்கே பதிவு செய்கிறது.

பெரியாருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?

அன்றைக்கு மாயவரம் (மயிலாடுதுறை) அருகே உள்ள வடகரை எனும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊரில் மிலாது நபி பொதுக் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. பெரியார் பேச அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்துக்கு மாணவர் பேச்சாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியனுக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது. எனக்கு தேர்வுகள் முடிந்திருந்தன. அப்போது வடகரை கூட்டத்திற்கு என்னைப் போகச் சொன்னார்கள். எனக்கு பெரியார் கொள்கைகள் அவ்வளவாக தெரியாது. ஏதோ இரண்டு மூன்று செய்திகள் மட்டும் தெரியும். தயக்கத்தோடு ஒப்புக் கொண்டேன்.

அடுத்தநாள் கூட்டம். சிதம்பரத்திலிருந்து மாயவரம் போக வேண்டும். பேராசிரியர் அன்பழகன் தந்தை கல்யாணசுந்தரம் என்னை அவரது வீட்டில் தங்க வைத்து வடகரைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தார். அப்போது உலக யுத்தம் நடந்த நேரம். சிதம்பரத்திலிருந்து மாயவரம் போக வேண்டுமானால் ‘பாசஞ்சர்’ இரயிலில்தான் போக முடியும். விரைவு வண்டியில் 100 மைலுக்கு குறைந்த தூரத்துக்கு டிக்கட் தர மாட்டார்கள். பாசஞ்சர் இரயில் போய்விட்டது. அப்போது ‘போட் மெயில்’ என்ற விரைவு இரயில் மட்டுமே ஓடியது. என்னிடம் காலணா காசு கூட கிடையாது. சிதம்பரத்தில் ‘போட்மெயில்’ நிற்கும். ஒரு ‘பிளாட்பாரம்’ டிக்கெட்டை மட்டும் எனக்கு வாங்கிக் கொடுத்து, டிக்கெட் பரிசோதகர் இல்லாத பெட்டியைப் பார்த்து என்னை ஏற்றி விட்டார்.

வடகரைக் கூட்டத்தில் நான் சிறிது நேரம் பேசினேன். பெரியார்தான் சிறப்புரை. மசூதிக்கு வெளியே தான் சாப்பாடு போட்டார்கள். கடும் வெய்யிலில் பெரியார் சாப்பிட்டார். எனக்கு ஒரே ஆச்சரியம். அது பற்றி எல்லாம் பெரியார் கவலைப்படுவதே இல்லை. அந்தக் கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் முக்காடு போடுவது பற்றியும் நான் குறை கூறி பேசினேன். சாப்பிடும்போது பெரியார் அதுபற்றிக் கூட என்னிடம் எடுத்துக் கூறி திருத்தினார். ‘ஏதோ நம்மைப் பேச அழைக்கிறார்கள்; அதைப் பயன்படுத்திக் கொண்டு பொதுவான சமுதாயக் கருத்துக்களைத் தான் கூற வேண்டும்; அழைத்தவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது” என்று எடுத்துச் சொல்லி திருத்தினார்.

“படித்து முடித்து விட்டாய் அடுத்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.  “ஒன்றும் திட்டமில்லை; ஊருக்குப் போக வேண்டியதுதான்” என்றேன். “என்னோடு வருகிறாயா?” என்றார். உடனே ‘சரி’ என்று கூறி விட்டேன். அடுத்து மாயவரத்திலா அல்லது கும்பகோணத்திலா என்று நினைவில்லை. அங்கே ஒரு பூங்காவில் பொதுக்கூட்டம். நெடும்பலம் சாமியப்ப முதலியார் தலைமையில் நடந்தது. கூட்டத்தை முடித்துக் கொண்டு பெரியாரோடு ஈரோடு போய் விட்டேன். இதெல்லாம் எங்கள் வீட்டுக்கு எதுவும் தெரியாது. அப்போது பெரியாருக்கு உதவியாளராக கஜேந்திரன் என்பவர் இருந்தார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கும் எனக்கும் நீண்டகாலம்  நட்பு தொடர்ந்தது. நான் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக பதவியேற்ற போது கூட என்னை வந்து சந்தித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். அவரும் பெரியாரோடு வருமாறு என்னை அழைத்தார். “ஈரோட்டில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் வேலை செய்கிறாயா?  அல்லது என்னுடன் பயணத்துக்கு  வருகிறாயா?” என்று பெரியார் கேட்டார். நான் அலுவலகத்தில் வேலை செய்வதாகக்  கூறினேன்.  சாப்பாடு பெரியார் வீட்டில். இரவு தூங்குவது ‘குடிஅரசு’ அலுவலகம். மாதம் 50 ரூபாய் ஊதியம்.  

ஈரோடு ‘குடிஅரசு’ அலுவலகத்தின் நிர்வாகியாக இருந்தவர் கலிவரதசாமி. அய்யாவுக்கு உறவினர்.  வரவு செலவு எல்லாம் அவர்தான். என்னைப் போல் பணி செய்கிறவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்.  இளைஞனாகிய எனக்கு அது பிடிக்கவில்லை.  அது மட்டுமின்றி ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு கூட்டம் குறித்து செய்திகளை எழுதும்போது சில தவறுகளை செய்துவிட்டேன். திருச்செங்கோட்டில் பெரியார் கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு மின்சாரம், டாக்டர் சுப்பராயன் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. ‘குடிஅரசு’க்கு செய்தி எழுதிய நான், “டாக்டர் சுப்பராயன் மின்சாரம் தந்து உதவினார்” என்பதை குறிப்பிடாமல் விட்டு விட்டேன்.  “உதவி செய்தவருக்கு நன்றி கூறாமல் இப்படி அலட்சியம் காட்டலாமா?” என்று பெரியார் கடுமையாகக் கோபித்தார். தொடர்ந்து, இதுபோல் சில தவறுகளை செய்தேன்.

ஈரோட்டிலிருந்து கிளம்பிவிட முடிவு செய்து விட்டேன். அப்போது ஒரு செய்தித்தாளில் ‘தமிழ் ஆசிரியர்கள் தேவை’ என்று விளம்பரம் வந்தது. உடனே நான் சில ஊர்களுக்கு, தமிழாசிரியர் வேலைக்காக மனுப் போட்டேன். அப்போது எனது பெயர் மு. திருஞானசம்பந்தம். விண்ணப்பங்களில் எனது இருப்பிட முகவரியாக மே/பா. பெரியார், ஈரோடு என்று குறிப்பிட்டிருந்தேன். நான் விண்ணப்பித்த அனைத்து ஊர்களிலிருந்தும் வேலைக்கு அழைத்து கடிதங்கள், ஈரோடு பெரியார் முகவரிக்கே வந்தன. நான் ஈரோட்டில் இருக்க விரும்பவில்லை என்பதை பெரியார் புரிந்து கொண்டுவிட்டார். அவரே நான் வேறு ஊர்களுக்கு வேலைக்குப் போவதைவிட,  சென்னைக்குப் போவதே நல்லது; அதுவே என் முன்னேற்றத்துக்கு உதவும் என்று முடிவு செய்து சென்னையிலிருந்த ஒரு பள்ளி தந்த வேலை வாய்ப்பை தேர்வு செய்தார். அப்படி நான் சென்னைக்குப் பணியாற்ற வந்ததால் தான் ஆசிரியர் என்ற நிலையிலிருந்து, கல்லூரி பேராசிரியராக உயர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் என்ற நிலையை எட்ட முடிந்தது.

ஜோலார்பேட்டைக்கு நான் வந்திருந்தேன். அங்கே பார்த்தசாரதி என்று ஒரு பெரியார் தொண்டர் இருந்தார். (பின்னால் ஜீவாவோடு பெரியார் இயக்கத்திலிருந்து வெளியேறியவர்) அவருக்கு அங்கே ஒரு சினிமா தியேட்டர்கூட இருந்தது. பெரியார் அவருக்கு கடிதம் எழுதி, என்னை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். பார்த்தசாரதி எனக்கு 2 வேட்டிகள், 2 துண்டுகள், பனியன்கள் வாங்கித் தந்து கையில் ரூ.20 பணமும் தந்து, சென்னைக்கு அனுப்பினார். சூளையில் உள்ள ‘இந்து செகன்டரி பள்ளியில்’ தமிழாசிரியராக சேர்ந்தேன்.

அந்தக் காலம் நடந்த கூட்டங்கள் -ஆதரவு -எதிர்ப்புகள் - உங்கள் அனுபவங்கள் பற்றி கூறுங்கள்...

அப்போதெல்லாம் கூட்டங்களில் எதிர்ப்புகள் கூடுதலாக இருக்கும். கூட்டமும் பெரிய அளவில் சேராது. ஒரு ‘லாந்தர்’ விளக்கை வைத்துக் கொண்டுதான் கூட்டம் நடக்கும். தகரக் குழாயில் (மெகாபோன்) பேசுவோம். கூட்டத்தில் பேசியவர்கள் பேசி முடித்தவுடன் கீழே போய் தரையில் உட்கார்ந்து கொள்வார்கள். பேச்சாளர்களுக்கு இரயில் டிக்கட் மட்டுமே எடுத்துத் தருவார்கள். இரயில் டிக்கெட் மூன்றே முக்கால் அணா என்றால் அவ்வளவுதான் தருவார்கள். நான்கு அணா தந்தால் கடலை வாங்கி சாப்பிடுவானே என்றுகூட கருத மாட்டார்கள். எங்களிடம் கையில் காசே இருக்காது. கூட்டம் என்றால் சுமார் பத்து இருபது பேர் மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் தான் நாங்கள் “முழங்குவோம்”. ஆசிரியர் கி. வீரமணி, சிறுவன். அவரை மேஜை மீது ஏற்றிப் பேச வைப்பார்கள். அவர் கையை உடம்பை ஆட்டிப் பேசுவதைப் பார்க்க சிலர் வருவார்கள். பிறகு நாங்கள் பேசுவோம்.

ஒரு சில ஊர்களில் பேச முடியாமலேயே திரும்பியதும் உண்டு. குறிஞ்சிப்பாடியில் ஒரு கூட்டம். ஏற்பாடு செய்தவர் ஒரு சலவைத் தொழிலாளி. அந்த ஊர் நாட்டாமைக்காரர் அங்கே வந்தார். “யாரடா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது? கண்ட பயலும் இங்கே நாட்டாமை செய்யக் கிளம்பிட்டானா?” என்று சத்தம் போட்டார். அவ்வளவுதான். கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த சலவைத் தொழிலாளியேகாணாமல் போய் விட்டார். எதிரே உட்கார்ந்திருந்த சிறுவர்களையும் பெற்றோர்கள் வந்து வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டனர். ஆட்களே இல்லாத இடத்தில், தகரக் குழாயில் (மெக்காபோன்) பேசினேன். கூட்டத்துக்கு வருவோரும்கூட கலாட்டா செய்வதற்கென்றே வருவார்கள். அப்படித்தான் கூட்டங்கள் நடக்கும். அங்கேதான் பேசினோம். ஆனால் இப்படியெல்லாம் பேசினாலும்கூட ஒவ்வொரு ஊரிலிருந்தும் கூட்டம் முடித்துத் திரும்பும்போது களத்திலிருந்து திரும்பும் ஒரு போர்வீரனைப் போன்ற உணர்வுதான் நிறைந்திருக்கும். இப்போதும்கூட அதே உணர்வோடுதான் உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். பெரியார் கொள்கைக்கு அத்தகைய வலிமையும் ஈர்ப்பும் உண்டு.

எங்களுக்கு கொள்கைப் பயிற்சி  வகுப்புகள் நடக்கும். அய்யாவே (பெரியார்) பல மணி நேரம் வகுப்பு நடத்துவார். கைவல்யசாமியார் வகுப்பு நடத்துவார். அவருக்கு காது கேட்காது. இந்து மத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர். அவர் பிறப்பால் ஒரு மலையாளி. ‘குடிஅரசு’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுவார். மூவலூர் இராமாமிர்தம், திருச்சி ‘வக்கீல்’ வேதாசலம், ஈரோடு கலிவரதசாமி போன்றவர்கள் வகுப்பு எடுப்பார்கள். அப்போது பெரியார் கொள்கைகளை சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். வடமொழியை ஆதரித்துப் பேசிய சைவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் பண்டிதமணி தமிழறிஞர் கதிரேசன் செட்டியார் பகிரங்க சவால் விட்டார். சைவர்கள் முன்வைத்த வாதங்களை உடைத்து நொறுக்கிக் குடலை உருவி எடுத்து வெளியே வீசுவார். ‘சைவம்’ என்பதே தமிழ்தானா என்று கேட்டார்.

மறைமலை அடிகளிடம் சைவர்கள் சென்று பெரியாரைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது அவர் சொன்னார்: “முதலில் தமிழன் இருந்தால்தான் பிறகு சைவமே இருக்க முடியும். பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்து தமிழர்களுக்காகப் போராடுகிறார். இந்தப் போராட்டத்தை அவரால்தான் நடத்த முடியும். பெரியாரை எதிர்க்கக் கூடாது” என்று மறைமலை அடிகள் கூறி விட்டார்.

நான் அரசு வேலைக்கு வந்த பிறகு இயக்கத்தில்  நேரடிப் பங்களிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெரியார் கூட்டங்களுக்கு மட்டும் தவறாது செல்வேன். தொடர்ந்து ‘விடுதலை’ ஏட்டைப் படிப்பேன். 1944இல் புலவர் படிப்பை முடித்தேன்; 5 ஆண்டுகள் பெரியாரோடு இருந்தேன். 1949இல் தி.மு.க. பிரிந்தபோது தி.மு.க.வுக்கு வந்து விட்டேன். பெரியார் மிகவும் நம்பியவர்கள்கூட தி.மு.க.வுக்கு வந்து விட்டார்கள். அவர்களில் ஒருவர் குடந்தை கே.கே. நீலமேகம். அவரிடம் பெரியார் தனது பணத்தை நம்பிக்கையாகக் கொடுத்து வைப்பார். எந்தப் பத்திரமும் கிடையாது. தனது சட்டைப் பையிலிருக்கும் டயரியில் மட்டும் ஒரு இடத்தில் குறித்து வைப்பார். அது அவருக்கு மட்டுமே புரியும். அவ்வளவு தான்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கே.கே. நீலமேகம் தி.மு.க.வில் சேர முடிவெடுத்தபோது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மீரான் சாகிபு தெருவில் இருந்த பெரியார் வீட்டுக்குப் போய் பெரியார் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை திரும்பித் தந்துவிட்டு  தி.மு.க.வுக்குப் போகப் போவதாகக் கூறிவிட்டு வந்தார். நானும் அவருடன் சென்றிருந்தேன். ஆனால் அய்யாவிடம் என்னை அழைத்துப் போகவில்லை. மவுண்ட் ரோடு (அண்ணாசாலை) அருகே உள்ள ஒரு ஓட்டல் வாசலில் என்னை நிற்கச் சொல்லிவிட்டு, நீலமேகம் மட்டும் சென்றார். பெரியார் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தந்துவிட்டு திரும்பி வரும்போது நீலமேகம் கண்ணீர் சிந்தியபடியே வந்தார். பெரியார் ஒருவர் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்றால் அவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட உண்மை யான மனிதர்களாகத்தான் இருப் பார்கள்.

பெரியார் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு 1978இல் நடத்தியபோது நீங்கள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்தீர்கள். அந்த விழாவில் உங்கள் பங்களிப்பு குறித்துக் கூறுங்கள்...

அதை ஒரு நல்வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். நூற்றாண்டு விழாக் குழுவுக்கு என்னைத் தலைவராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். விழாக் குழுவில் திருவாரூர் தங்கராசு, நெ.து.சுந்தரவடிவேலு உள்ளிட் டோரும் இடம் பெற்றிருந்தனர். அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒலி ஒளி காட்சி மிகச் சிறப்பாக சென்னை உள்ளிட்ட நகரங் களில் நடத்தப்பட்டது. அதை எழுதியது நான்தான். அய்யாவின் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. ஆனால், ‘அய்’, ‘அவ்’ என்ற இரண்டு எழுத்துகளை மட்டும் மாற்றக்கூடாது என்று சிலர் பிடி வாதம் காட்டினர். ம.பொ.சி., கி.ஆ.பெ. விசுவநாதம்,  கி.வா.ஜகந்நாதன் ஆகியோர் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். முதல்வரும் அவர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் ஏற்றுக் கொண்டார். அரசு ஆணையில் ‘அய், அவ்’ எழுத்து சீர்திருத்தம் இடம் பெற்றிருந்தது. பிறகு ஆணை அந்த இரண்டு எழுத்துகளுக்கும் திருத்த மின்றி வெளியிடப்பட்டது. நான் முதல்வரிடம் ‘ஆணையை மாற்ற வேண்டாம்’ என்று கூறினேன். ‘பரவாயில்லை கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவோம்’ என்று கூறிவிட்டார். ஆனால், எனது எழுத்துகளில் நான் அய்யா முன்மொழிந்த ‘அய், அவ்’ சீர்திருத்த எழுத்து வடிவங்களையே இன்று வரை பின்பற்றி வருகிறேன்.

திராவிட இயக்கக் கொள்கைகள் வெற்றி பெறவில்லை என்று ஒரு விமர் சனம் முன் வைக்கப்படுகிறது. நீங்கள் இது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

திராவிட இயக்கக் கொள்கைகள் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறது. மறுக்க முடியாது. ஆனால், வெற்றி பெற வேண்டிய அளவுக்கு வெற்றி யடையவில்லை என்பதுதான் எனது கருத்து.

நான் தி.மு.க.வில் சேர்ந்தேன் என்றா லும் அய்யாவின் ஒரு கொள்கையில் இன்றும் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். சமுதாய மாற்றத்துக்குப் போராட வேண்டிய இயக்கம் தேர்தல் அரசியலுக்குப் போகவே கூடாது என்பதுதான் எனது கருத்து. நாளைக்கு உங்கள் இயக்கம் அப்படி ஒரு முடிவை எடுத்தால்கூட அதை நான் அழுத்தமாகக் கண்டித்துத் தான் பேசுவேன்.

திராவிடர் இயக்கக் கொள்கைகளில் தி.மு.க. அதற்கான கொள்கை அடையாளங்களை இழந்து விட்டது. நூற்றாண்டு விழா மாநாட்டில் கலைஞரை வைத்துக் கொண்டே நான் இதைப் பேசினேன். விழாத் தலைவராக இருந்த மோகன், ஓய்வு பெற்ற நீதிபதி, உரையை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். நான் அதைப் பொருட்படுத்தாது எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன். இறுதியில் பேசிய கலைஞர், பேச்சு முழுதும் என்னைப் பற்றியே இருந்தது. புலவர் கூறுவது உண்மைதான், மறுக்கவில்லை. ஆனால், இது கொள்கைபூர்வமான இயக்கமாக நிச்சயம் மாறும். உங்களது காலத்திலேயே பார்க்கத்தான் போகிறீர்கள் என்று உறுதியளித்தார். கலைஞரைப் பொறுத்தவரை அவரது உணர்வு உண்மையானதுதான். அவரது கொள்கை உணர்வை நான் சந்தேதிக்க மாட்டேன். ஆனால் அரசியல் என்று வந்து விட்டால் அவர்களுக்கு தேர்தல் தான் முக்கியம். கொள்கையைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் கொள்கையை முன்வைத்து தொடங்கப்பட்டது திராவிடர் இயக்கம். இந்த இயக்கத்தால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து விழிப்புணர்வு பெற்று முன்னேறி வருகிறார்கள். ஆனால், தங்களை ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களை எதிர்த்தவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள தலித் மக்கள் மீது ஜாதிய ஒடுக்குமுறையை திணிக்கிறார்கள் என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது. உங்களின் கருத்து...

என்னைக் கேட்டால் ஜாதி ஒழிப்பு தான் மிக முக்கியமான வேலை என்றே கூறுவேன். இதை மட்டும் பெரியார் இயக்கம் செய்தாலேபோதும். கடவுள் நம்பிக்கையைக்கூட விட்டுவிடத் தயாராக இருப்பார்கள். ஆனால், ஜாதியை விட்டுத் தர முன் வரமாட்டார்கள். அதேபோல்தான் மத நம்பிக்கையும். நீங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து சிறந்த பெரியார் இயக்கமாக செயல்பட்டீர்கள்.

நான் மகிழ்ந்தேன். அப்படியே பிரியாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். நான் அண்மைக் காலமாக வெளியே நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை. வீட்டிலேயே இருக்கிறேன். முதுமை காரணமாக அதற்குரிய தளர்வுகள் இருந்தாலும் மூளைமட்டும் 24 மணி நேரமும் பெரியார் சிந்தனைகளிலும் தமிழ் மொழி குறித்தும் அசை போட்டுக் கொண்டேயிருக்கிறது.

Pin It