2022ஆம் ஆண்டிலும் இப்படி ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தில்லை நடராசன் கோவிலில் முறைகேடுகள் நடப்பதை ஒட்டி அதிகாரிகள், கணக்கு வழக்குகளை சரி பார்க்க சென்ற போது, “அதை கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று தீட்சதர்கள் அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். அறநிலையத்துறைக்கும் தில்லை கோவிலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அந்த சட்டத்திலிருந்து, உச்சநீதிமன்றத்தின் வழியாக நாங்கள் விதி விலக்கு பெற்றுவிட்டோம். எனவே உங்களிடம் நாங்கள் கணக்குகளை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்தக் கோவில் தீட்சதர்களால் கட்டப்பட்ட கோவிலா ? நிச்சயமாக இல்லை. கோவிலுடைய தல புராணமே கூறுகிறது, “இந்தக் கோவிலைக் கட்டியவன், சிம்ம வர்மன் என்கிற மன்னன். நடராசன் அந்த மன்னனின் கனவில் தோன்றி, கோவிலைக் கட்டுமாறு கூறியதாகவும், அதனடிப்படையில் அவன் கோவிலைக் கட்டியதாகவும், நடராசனே சிம்ம வர்மன் என்ற பெயரை இரணிய வர்மன் என்று மாற்றியதாகவும்”அவர்களே தல புராணத்தை எழுதி வைத்துள்ளார்கள். அதற்குப் பிறகு இந்தக் கோவிலை பராமரித்தவர்களெல்லாம் சோழ மன்னர்கள். பராந்தக சோழன் தங்க கூரை போட்டான். விக்கிரம சோழன் நான்கு வீதிகளையும் செப்பனிட்டு தேரை ஓட்டினான். குலோத்துங்க சோழன் சிற்றம்பலத்திற்கு தங்க கூரை போட்டான். எனவே, சோழ மன்னர்களின் பராமரிப்பில் தான் கோவில் இருந்துள்ளது. பக்தர்களின் காணிக்கையில் தான் இந்த கோவில் இப்போதும் செயல்பட்டுக் கொண்டுள்ளது. கோவிலுக்குள் வழிபாடு செய்ய வந்த தீட்சதர்கள் கோவிலே தங்களுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி, அறநிலையத்துறை இதில் தலையிட முடியாது என்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில், அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் வராது என்று இவர்கள் எந்த அடிப்படையில் வாதாடினார்கள் என்பது முக்கியமான கேள்வி. “நாங்கள் இந்து என்ற மதத்தின் கீழ் வரக்கூடியவர்கள் அல்ல. பொது தீட்சதர் தனிப் பிரிவினர். எனவே இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து மதத்தினருடைய தொடர்பில்லாத தனிப்பிரிவினரை சேர்க்கக் கூடாது” என்ற வாதத்தின் படி தான் அறநிலையத்துறை சட்டத்திலிருந்து விதிவிலக்கு பெற்றிருக்கிறார்கள். மற்றொரு வழியில் கூற வேண்டுமானால், “இந்து மதத்திற்க்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” என்று கூறுகிறவர்கள் தான் தீட்சதர்கள்.

மற்றொரு செய்தி, அரசு, கோவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது, வெளியேற வேண்டும் என்று கூக்குரல் போடுகிற புரோகிதப் பார்ப்பனக் கூட்டம், அரசு அமைப்புகளில் ஒன்றான நீதி மன்றங்களின் தீர்ப்புகளை வைத்து தான் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் தருகின்ற தீர்ப்பு மட்டும் இவர்களுக்கு இனிக்குமா ? உச்ச நீதிமன்றம் மட்டும் இதில் தலையிடலாமா ? உச்சநீதிமன்றம், கோவில் தீட்சதர்களுக்கு சொந்தமில்லை என்று கூறினால் அப்போது என்ன செய்வார்கள் ? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டாக வேண்டும்.

அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 29,30,31 பிரிவுகளின் படி, கோவிலில் சில கணக்குகளை பராமரிக்கக் கூடிய அவசியம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் பராமரிக்க மாட்டோம். அதில் எங்களுக்கு விதிவிலக்கு உண்டு என்றும், கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். இப்போது சற்று கீழே இறங்கி வந்து, உரிய குழுவை அமைத்தால், அந்தக் குழுவின் முன், எந்த கணக்கை கேட்கிறீர்களோ அந்தக் கணக்கை மட்டும் சமர்ப்பிக்கத் தயார் என்று தீட்சதர்கள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

1997ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில், நீதிபதி வெங்கடாசலய்யா, கோவிலில் முறைகேடு நடப்பதை ஒப்புக் கொண்டு அதிகாரிகளை நியமிக்கலாம் என்றத் தீர்ப்பை வழங்கினார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே இந்தியாவில் முதல் நீதிபதியாக இருந்த முத்துச்சாமி அய்யர் கூட இந்தக் கோவில் தீட்சதர்களுக்கு உரிமையானது அல்ல என்ற தீர்ப்பை வழங்கி இருக்கிறார். இருந்தாலும் நாங்கள் இந்து மதத்தோடு தொடர்புடையவர்கள் அல்ல தனிப்பிரிவினர் என்று கூறி அந்த சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற்றுக் கொண்டு மன்னர்கள் கட்டிய கோவிலை தங்கள் வசமாக்கிக் கொண்டு பக்தர்கள் காணிக்கையை தங்கள் காணிக்கையாக்கிக் கொண்டு கோவிலை சூறையாடிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் கணக்கு வழக்குகளை அரசிடம் தர முடியாது என்று மறுக்கிறது.

தேசிய வங்கிகளில் பணியாற்றுகிற அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு இந்த வங்கி எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறினால் அதை நாம் ஒப்புக்கொள்ள முடியுமா ? தொடர் வண்டித் துறையில் பணியாற்றுகிற அதிகாரிகளும், பணியாளர்களும் சேர்ந்து கொண்டு இந்த தொடர்வண்டித் துறையே எங்களுக்குத் தான் சொந்தம். அரசு தலையிட முடியாது, என்று சொன்னால் ஒப்புக் கொள்ள முடியுமா ? ஆனால், பக்தி என்று வந்துவிட்டால், பார்ப்பனர் என்று வந்து விட்டால், எதையும் கூற முடியும். இந்த தேசமே எங்களுக்குத்தான் சொந்தம். சூத்திரர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறினால் அப்போதும் அதை ஆதரித்து, சில வைதீக கும்பல்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்தி பேசிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It