தலைசிறந்த பத்திரிகையாளராக மதிக்கப்படும் பிரணாய்ராய் நடத்திவரும் என்.டி.டி டி.வி. என்ற தனியார் தொலைக் காட்சியை முடக்கிடும் முயற்சிகளில் மோடி ஆட்சி இறங்கியிருக்கிறது. அய்.சி.அய்.சி.அய். எனும் தனியார் வங்கியிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.டி. டி.வி. வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்தவில்லை என்று சி.பி.அய்., என்.டி.டி. டி.வி. மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. என்.டி.டி. டி.வி. கடனாக பெற்றது 375 கோடி. திருப்பி செலுத்த வேண்டிய தொகை 48 கோடி. அந்தத் தனியார் வங்கி புகார் ஏதும் தராத நிலையில் சி.பி.அய். இதில் தலையிட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறது.

மோடி ஆட்சியை தொடர்ந்து இந்த தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வருவதே இதற்குக் காரணம். அண்மையில் இறைச்சி விற்பனைக்கு மோடி ஆட்சி தடை விதித்தது குறித்த ஒரு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா என்பவர் எதிர்த்துப் பேசுவோரை பேசவிடாமல் நிகழ்ச்சியை சீர்குலைத்ததோடு அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். பெண் நெறியாளர் நிதிரஜ்தன், இந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும், இல்லையேல் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று உறுதிபடக் கூறி, நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார். ஏற்கனவே இந்த தொலைக்காட்சியின் இந்திமொழி அலைவரிசையை முடக்கியது மோடி ஆட்சி.

2002 குஜராத் இனப்படுகொலையில் மோடி அமித்ஷாவின் இரகசிய சதியை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சியையும் இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

மோடி ஆட்சிக்கு நெருக்கமாக இருக்கும் அதானி வங்கிகளுக்கு தர வேண்டிய கடன் பாக்கி ரூ. 72,000 கோடி.  ரூ.10 இலட்சம் கோடியை அரசு வங்கிகளில் கடனாகப் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மீது எந்த சோதனையோ, வழக்கையோ தொடராத சி.பி.அய்., என்.டி.டி. டி.வி.யை மட்டும் குறி வைக்கிறது. அதுவும் புகார் ஏதும் இல்லாமலேயே!

ஒட்டு மொத்த ஊடகங்களையும் மிரடடுவது தான் இந்த நடவடிக்கையின் பின்னணி!

Pin It