செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தும் வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும், இசுலாமிய மக்களுக்கு தக்க பாதுகாப்பும் வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்த அறிக்கை.

செங்கோட்டையில் கடந்த 13.09.2018 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் திட்டமிட்டு கலவரமாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்வலத்தில் இந்து தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்கி இசுலாமிய மக்களின் வீடுகள்,வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு சிலரை தாக்கி அம்மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடுத்தநாளும் வன்முறை தொடர்ந்து அப்பகுதி ஒரு பதட்டமான பகுதியாக மாறியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே இப் பகுதியில் வன்முறையை தூண்டுவது காவல்துறையில் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட் டுள்ளது.இந்த ஆண்டும் வன்முறை நிகழவிருக்கும் ஆபத்தை சுட்டிக் காட்டி தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என இசுலாமிய அமைப் புகள் முன்கூட்டியே காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையான புகார்களை பதிவு செய்தும் காவல் துறை தக்க நடவடிக்கைகளை எடுக்காமல், தங்கள் கடைமையை செய்யாமல் இருந்தது காவி பயங்கர வாதிகளின் வன்முறைக்கு வழி வகுத்ததாக அமைந்துவிட்டது.

காவல்துறையின் கண்முன்பே இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட் டுள்ள இத்தாக்குதலை காவல்துறை யினர் வேடிக்கை பார்த்துக் கொண் டிருப்பது கடும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. இந்து மதவாதிகள் மிக சுதந்திரமாக தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தென்காசி சுற்றுப்பகுதிகளிலும் இசுலாமிய மக்களுக்கு எதிரான வன் முறை சூழலை அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டே இருக் கின்றனர். இந்த திட்டமிட்ட வன் முறையை பயன் படுத்தி வாடகைக்கு வீடுகளில் குடியிருக்கும், வாடகைக்கு கடைகள் நடத்தும் இசுலாமிய மக்களை காலி செய்யசொல்லும் போக்கு அங்கு ஆரம்பித்திருக்கிறது என்பது சமூகநல்லிணக்கத்தை சிதைக் கும் மிக ஆபத்தான போக்காகும். இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

கடந்த மாதம் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா செங்கோட்டை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும்படியும்,சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசிச்சென்றுள்ளது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.பாஜகவைச்சேர்ந்த கருப்பு முருகானந்தம் போன்றவர்கள் இப் பகுதியில் தொடர்ந்து பேசி வன் முறையை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

பலலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்துமத திருவிழாக்கள் மதுரை கள்ளழகர் விழா,திருச்செந்தூர் சூரசம்ஹார விழா போன்றவை வன்முறை துளியும் இன்றி அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் சிறு எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு இந்து தீவிரவாத அமைப்பு களால் நடத்தப்படும் போது வன்முறை வெடிக்கிறது என்பதிலிருந்தே இது காவி பயங்கரவாதிகளின் திட்டமிட்ட வன்முறை என்பதை எளிமையாக அறிந்து கொள்ளமுடியும்.

விநாயகர் ஊர்வலம் எனும் பெயரில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் திட்டமிட்டே தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தை உருவாக்கும் இந்துமதவாத வன்முறை கும்பல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

வன்முறையில் ஈடுபட்ட காவி தீவிரவாதிகள் உடனடியாக அடை யாளம் காணப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு வன்முறையை தூண்டிவிடும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் இவர்களின் திட்டமிட்ட வன் முறையை தடுக்க இயலும். இதில் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும்.

இப்பகுதியின் காவல்துறையின் உயர் அதிகாரிகள் காவி பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலின் போது அமைதிகாத்த இசுலாமிய மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்கள் சிலரின் மீதும் வழக்குகளை பதிவு செய்திருப்பது இந்துமதவாதிகளை திருப்திபடுத்தும் செயல் என்பதும் இது கண்டனத்திற்குரியதும் ஆகும்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் இசுலாமிய மக்களின் பாதுகாப்பையும், அவர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் தமிழக அரசும், அதன் காவல்துறையும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

தமிழக அரசே, செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடு!

இசுலாமிய சிறுபான்மை மக்களுக்கு தக்க பாதுகாப்பு கொடு !

Pin It