நீதித்துறையில் 20 ஆண்டுகள் நீதி வழங்கிய நீதிபதிகளாக இருந்தாலும், தங்கள் மீதான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவது என் பது, சாதிப் பிரிவினையின் தவறான பக்கத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் போராட்டமாகும். அண்மையில் (மார்ச் 26, 2011) பட்டியல் சாதி மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 17 நீதிபதிகளை சட்டீஸ்கர் அரசு, கட்டாய ஓய்வு பெறும்படி நிர்பந்தித்தது, தனிப்பட்ட கொடுமையா அல்லது சாதியக் கொடுமையா என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பல ஆண்டுகளாக நீதி வழங்கியும், தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வையும் பெற்று வந்த இந்த நீதிபதிகள், திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அரசின் இச்செயலில் உறுத்தும் நடவடிக்கை என்னவென்றால், இந்த கட்டாய ஓய்வுக்கு சட்டீஸ்கர் அரசு நியாயமான காரணம் எதையும் கூறவில்லை – மேலோட்டமாக அவர்களின் செயல்பாடு போதிய அளவு இல்லை என்று கூறியதைத் தவிர.

நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முடிவை மாநில சட்டத்துறை, சட்டீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் எடுத்ததாகவே தெரிகிறது. இத்தகைய பரிந்துரை, தவறான நடத்தை மற்றும் உறவினர்களுக்கு சலுகை காட்டுவதற்கு கிடைக்கும் தண்டனையை ஒத்ததாகும். பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி – பழங்குடியின நீதிபதிகள் பெரும்பாலானோருக்கு இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் பணி மீத மிருக்கிறது. எனவே, இதில் மாபெரும் சதி இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இப்பணிநீக்கத்தை எதிர்த்து அவர்கள் நிர்வாக மன்றத்திலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளனர். அப்படியும் நீதி கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றத்தை அணுகவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

இதற்கிடையில் முன் ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்த, நீதிபதிகளுக்கு இது ஓய்வு எடுக்கும் நேரமுமல்ல. “என் பழைய பணிப் பதிவேடுகளைப் புரட்டினால், அவை என் திறமையைப் பறை சாற்றும். என்னைப் பணிநீக்கம் செய்த காரணங்கள் எனக்கு தெரிந்தாக வேண்டும். என் சாதி காரணம் எனில், அதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்'' என்கிறார், 51 வயதான கோர்பா மாவட்ட நீதிபதியான பி.எஸ். பைக்ரா அவர்கள். துர்க் கூடுதல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த பைக்ராவுக்கு இன்னும் ஒன்பது ஆண்டுகள் பணி மீதமிருக்கின்றன. கடந்த அக்டோபர் வரை ஒரு விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருந்த அவர் பின்னால் முறைப்படுத்தப்பட்டு, துர்க் மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

“நான் முறைப்படுத்தப்பட்டதற்கு காரணம் என் பணித்திறன், பயனுறுதன்மை மற்றும் நேர்மை. சில மாதங்களிலேயே நான் தகுதி இல்லாதவன் என்று கருதப்பட்டதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை'' என்கிறார் பைக்ரா.

முன்னுதாரணம் ஏதும் இல்லாத இந்த முடிவால், 20 ஆண்டுகள் பணி முடிந்த அல்லது 50 வயதிற்கு மேற்பட்ட நீதிபதிகளுக்கு – மாநில உயர் நீதிமன்றப் பணி (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலை) சட்டம் 2006இன் 13ஆவது பிரிவின் துணைப் பிரிவு 2 இன் கீழ் கட்டாய ஓய்வு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை இப்பரிந்துரையை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும்போது, இம்முடிவு நீதிபதிகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட மாநில அரசு, கட்டாய ஓய்வு ஆணையை பிறப்பித்தது. கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட நீதிபதிகளில் மூன்று பேர் பட்டியல் சாதியினர்; மீதமுள்ளோர் பட்டியல் பழங்குடியினர். அவர்கள் சுர்குஜா, தாண்டேவாடா, பிலாஸ்பூர் மற்றும் ராய்கட் மாவட்டங்களில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகளாக அல்லது மாவட்ட கூடுதல் அல்லது அமர்வு நீதிபதிகளாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்.

இன்னொரு பட்டியல் சாதியை சேர்ந்த நீதிபதி நர்சிங் உசேண்டி. பஸ்தார் மாவட்டத்தில் கான்கர் பகுதியில் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்தார் இவர், அரசின் சட்டம் மற்றும் சட்டப்பேரவை துறை அனுப்பிய ஓர் ஆணை (2309/756/XX1 – B/C.G/2011) இன்படி "பொது நலன் கருதி' ஓய்வு பெற வைக்கப்பட்டார். “ஒருவேளை என்னுடைய இத்தனை ஆண்டு பணியில் ஏதேனும் குறைபாடு இருந்தால், என்னைப் பற்றி புகாரும், துறை ரீதியான விசாரணைகளும் நடந்திருக்கும். ஆனால், அவை எதுவுமே நடைபெறவில்லை'' என்கிறார் அவர். நர்சிங் உ÷சண்டிக்கு எதிராக எந்த வித ஆதாரமும் இல்லாதபோது, சமூகக் களங்கத்தை ஏற்படுத்தும் திடீர் வேலை நீக்கம் எதற்காக என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

“நான் சட்டத்தை கேள்வி கேட்க மாட்டேன். ஆனால், அது நிறைவேற்றப்படும் விதத்தைப் பற்றி கேள்வி கேட்பேன். அச்சட்டம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார் உசேண்டி. மேலும், “எந்த விதமான அறிவுப்புமின்றி, அதிகாரப் பூர்வ விசாரணையுமின்றி, துறை ரீதியான விசாரணையுமின்றி, அரசின் கட்டாய ஓய்வு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது'' என்கிறார் அவர்.

உசேண்டியும், அவருடன் பணியாற்று பவர்களும் இது இயற்கையான நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்டுகின்றனர். அரசுப் பணியாளர்களின் ஆண்டு ரகசிய அறிக்கை நீதிபதிகளின் செயல்களை குறிப்பெடுத்து பதிவு செய் கிறது. இந்நிலையில், “எங்களுக்கு குறைந்த மதிப்பீடு அளித்ததன் மூலம் எங்களை மோசமாக நடத்தியது'' மாவட்ட நீதிபதிகள் மற்றும் பிற உயர் நீதிமன்ற அதிகாரிகளே என்று கூறுகின்றனர் அவர்கள்.

தன்னுடைய நிலை பற்றி குறிப்பிடும் போது, இந்த ஆண்டறிக்கையை பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நீதிபதிகள் உருவாக்கி இருந்தால், எங்களுக்கு இந்த அநீதி ஏற்பட்டிருக்காது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் எவருமே இல்லாததால்தான் எங்களின் ஏ.சி.ஆர். தவறாக உருவாக்கப்பட்டு, எங்களின் பணிநீக்கத்தில் வந்து நிற்கிறது'' என்று கூறுகிறார் உசேண்டி.

"கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட' நீதிபதிகளில் பெருபாலானோர் 1976 – 87 கால பணிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அரசின் இப்பணி நீக்க முடிவு 1990 பணிப்பிரிவை சார்ந்த 20 நீதிபதிகள் பயன் பெற எடுக்கப்பட்டதாக அஞ்சப்படுகிறது. இவர்களின் பணிநீக்கத்தால் காலியாகும் இடங்களில் அவர்களை நியமிக்கலாமே.

மன்சுக் கர்கெட்டா (54), தேர்வு நிலை பெறத் தகுதியான நிலையில் இருந்த 12 பட்டி யல் சாதி நீதிபதிகளில் ஒருவர். ஆனால், நடப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. 2006 சட்டம், 20 ஆண்டுகள் நீதிப் பணி செய்தவர்களையும், 50 வயதைத் தொடப் போகும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின நீதிபதிகளிடையிலும் ஓர் அச்சத்தை கிளப்பி யுள்ளதாகக் கூறுகிறார்.

இந்த ஏ.சி.ஆர். தயாரிக்கப்படும் முறை அவமரியாதையை மேலும் கூட்டுகிறது. “ஒவ் வொரு ஆண்டும் மிக மோசமான நீதிபதிகள் என்று ஏ.சி.ஆர். வரையறுத்த பொதுப் பிரிவு நீதிபதிகள் பலர் பணியில் தொடர வைக்கப்பட்டுள்ளனர்'' என்கிறார், 1987 பணிப்பிரிவை சேர்ந்த கர்கெட்டா. பொதுப்பிரிவில் உள்ள பல நீதிபதிகளை எடுத்துக்காட்டி, “மோசமான மதிப்பீடு' பெற்றிருக்கும் பலர் பணி நீட்டிப்பு பெற்றுள்ளனர். எனக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் பணி வாய்ப்பு இருந்தாலும் என் சாதி அடையாளம் எனக்கு எதிராகப் பார்க்கப்பட்டுள்ளதாக'' கர்கெட்டா மேலும் கூறுகிறார். ஆனால், இப்பிரச்சனை பற்றிய கேள்விகளுக்கு, அதிகாரிகள் வழக்கம் போல் மவுனம் சாதிக்கின்றனர்.

"தெகல்கா' இதழுக்கு பதிலளித்த சட்டத்துறை செயலாளர் ஏ.கே. சமந்தாரி, இந்த ஆணையை பிறப்பித்தது மாநில உயர் நீதிமன்றம்தான் என்றும், அரசுக்கு அதில் எந்த பங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இம்முடிவு முந்தைய முதன்மைச் செயலாளர் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நான் அண்மையில்தான் பொறுப்பேற்றேன். எனவே, என்னால் இது குறித்து அதிகம் பேச முடியாது. உயர் நீதிமன்றத்தில் யாரையாவது அணுகுவதுதான் சிறந்தது என்று கருத்துக் கூறியுள்ளார் சட்டச் செயலர்.

சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத் தலைமை பதிவாளர் அரவிந்த் சிறீவஸ்தவாவை அணுகியபோது, அரசு விஷயங்களைப் பற்றி பத்திரிகையாளர்களிடம் விவாதிக்க முடியாது'' என்று எதையும் கூற மறுத்து விட்டார்.

- பாபா உமர் 

தமிழில் : மாணிக்கம்

நன்றி : "தெகல்கா'

Pin It