அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அதிகாரம் அளித்தல் என்பது, அதன் உண்மையான பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. இந்தியாவில் அதிகாரப்படுத்துதல் என்பது, சாதாரண மக்களை மய்யப்படுத்தி நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டக் காலத்தில் தொடங்குகிறது. காந்தியார் அம்மக்களின் ஆற்றலை ஒருகமுப்படுத்தி, ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டினார். சமூக அநீதியும், மத அடிப்படையிலான வேறுபாடுகளும் மலிந்த ஒரு சமூகத்தில், அதிகாரமற்ற மக்களை அதிகாரப்படுத்தியதற்கு அதுவே சிறந்த சான்றாக உள்ளது.

தங்களின் அன்றாட இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வரும் பெரும்பான்மை மக்களுக்கான சம வாய்ப்புகள் அளிப்பது குறித்து விவாதிக்காமல், மக்களை அதிகாரப்படுத்துவது கடினமானது. ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை உயர்த்தி, நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் அவர்களைப் பங்காளிகளாக்கிப் பயன் பெறச் செய்வதே அதிகாரப்படுத்துவதாகும்.

K.R.Narayanan
அதிகாரப்படுத்துதல் என்பது, பெண்களின் நிலையை உயர்த்துவதும், சிறுபான்மையினரை அக்கறையோடு அணுகுவதுமாகும். எனவே, மக்களை அதிகாரப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் கீழிருந்தே தொடங்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு ஆகியோன் வீரஞ்செறிந்த போராட்டங்கள், இந்திய மக்களை அதிகாரப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளாகக் கருதத்தக்கவை.

விடுதலைப் போராட்டக் காலத்தை நோக்கினால், ஆங்கிலேய ஆட்சியிலிருந்த மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதை எதிர்க்கவோ, விடுதலையைக் கோரவோ, ஜனநாயகத்தைப் பேணவோ, தங்கள் வளர்ச்சிக்கான வழிறைகளைத் தேடவோ வழியின்றி இருந்திருக்கின்றனர். பலம் பொருந்திய ஆங்கிலேய அரசை எதிர்கொள்ள, தங்களுக்குள் இருக்கும் அளவற்ற ஆற்றலை ஒட்டுமொத்தமாக அடிமைப்படுத்தப்பட்ட, அதிகாரமற்ற மக்கள் திடீரென உணர்ந்தனர். அது எவ்வாறு நிகழ்ந்தது?

மக்களின் மனதில் இருந்த அச்சத்தைப் போக்கி, அவர்களுக்கு மனபலம் அதிகாரம் அளித்து, அவர்களின் பார்வையை மாற்றி, விடுதலைக்கான அகிம்சைப் போராட்டத்தில் அவர்களை வலுவான ஓர் ஆயுதமாக காந்தியார் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். அந்த வரலாற்றின் அடிப்படையில் அதிகாரப்படுத்துதல் என்பது, நம் சமூகத்தின் அறநெறிகளில் இருந்து உருவாக்கப்பட்ட சட்டங்களை உள்ளடக்கியது.

நாம் விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, மிகுந்த வளர்ச்சியடைந்து ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கிறோம். இந்தியா முழுவதும், மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்லும் அதிகாரம் பெற்றுள்ளனர். உலக நாடுகளின் வரிசையில் நமக்கு உரித்தான இடத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையுடன் மனித வரலாற்றைத் தீர்மானிக்கும் வகையில், ஒரு வலிமை மிக்க பொருளாதார சக்தியாக இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகம் தற்பொழுது அங்கீகத்துள்ளது.

அதிகாரப்படுத்துதல் பற்றிய விவாதங்கள், நமது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன. ஆனால், நமது பொது வாழ்வில் நம்முடைய செயல்பாட்டின் தரம் குறைந்திருப்பது நமக்கு மனச்சோர்வை அளிக்கிறது. ஆகவே, இந்தியாவில் அதிகாரப்படுத்துதல் என்பது, பொது வாழ்வின் தரத்தை மீட்டெடுப்பதையும் உள்ளடக்கியதாகும்.

தரம், நேர்மையுமற்ற அதிகாரப் படுத்துதல் என்பது, இந்தியாவை ஒன்றுமில்லாததாக்கி விடும். இன்று, இந்தியாவின் பல்துறை வளர்ச்சி குறித்தும், பொருளாதாரம் மற்றும் அறிவியல் துறைகளில் அதிகளவு ஆற்றலுடன் எழுந்திருப்பது குறித்தும், உலகமே வியந்து பாராட்டுகிறது. இந்நேரத்தில், நமது விடுதலைப் போராட்ட வீரர்களும், நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களும் நமக்கு விட்டுச் சென்ற கொள்கைகளுக்கு நாம் உண்மையாக வாழ்ந்திருக்கிறோமா என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். பெண்களுக்குரிய மரியாதையும், பண்பாட்டுக் கூறுகளும், ஒழுக்கம் அற்ற அதிகாரப்படுத்தப்பட்ட இந்தியா, பல நூற்றாண்டுகளாகத் துன்பப்பட்ட மக்களின் அதிருப்தியாலும், நாட்டுப்பற்றின்மையாலும் சீர்குலைந்துவிடும்.

இந்தியா 5000 ஆண்டு பழமையான நாகரீக வரலாறு கொண்டது, என ஒவ்வொரு நாளும் பறைசாற்றிக் கொள்கிறோம். ஆனால், தலித்துகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் அதிகாரமுடையவர்களால் நடத்தப்படும் விதம், நமது சமூகத்தில் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டின் வீழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நமது அரசியல் சட்டத்தின் தன்மைச் சட்டச் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சமூக, பொருளாதார சமத்துவம் இல்லாத அரசியல் சமத்துவம் நமது ஜனநாயகக் கட்டமைப்பில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்றும், அவற்றைச் சரி செய்யத் தவறினால் அதன் முழுமையான வீழ்ச்சிக்கே அது வழிவகுத்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

சமத்துவமின்மையும், சமூக அநீதியும் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில், சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலானது அவர்கள் எதிர்காலத்தில் அதிகாரப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன. தங்களை அதிகாரப்படுத்துவதற்கு அவர்கள் நடத்தும் போராட்டம், இந்தியாவை அதிகாரப்படுத்துவதற்கானப் போராட்டமாகும்.

அவர்களது போராட்டம் தீவிரமாகும்போது, அழுத்தம் பெறும்போது, அவர்களது மேல் நோக்கிய எழுச்சியை ஏற்றுக் கொள்ள விரும்பாத அதிகார வர்க்கத்தினடமிருந்து அவர்கள் எதிர்ப்பைச் சந்திக்க நேடும். தலித்துகள் கொல்லப்படுதல், சுரண்டப்படுதல், அவர்கள் மீதான வன்கொடுமைகள் ஆகியவை அதிகாரப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கு எதிரானதாகும். அதிகாரப்படுத்தப்பட்ட இந்தியா, கண்டிப்பாக காந்தியார் கனிவோடு வலியுறுத்தி, அதை நடைமுறைப்படுத்த தன் வாழ்நாளை அர்ப்பணித்த "சர்வோதயத்தை' நம்பும்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், சந்தை சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றின் காலமான இன்று, தங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கே நாள்தோறும் போராடும் சாதாரண மக்களின் அடிப்படை வாழ்நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நமது விடுதலையின் 60 ஆண்டுகால சாதனைகளைக் கொண்டாடும் நேரத்தில், சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்களை அதிகாரப்படுத்துவது குறித்து நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தத் திசையில் செய்யப்படும் எந்த முயற்சியும், இந்தியாவை அதிகாரப்படுத்தும். அதுமட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய இடத்தில் இருப்பவர்களுக்கு அது விழிப்புணர்வூட்டுவதாகவும் அமையும்.

ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும் அதிகாரப்படுத்தப்பட்டால், அது கண்டிப்பாக இந்தியாவை அதிகாரப்படுத்த வழிவகுக்கும். இதுவே நமது விடுதலை வீரர்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்ற செய்தியாகும். தற்போதைய தலைமுறையினர் இதனைப் புறக்கணிப்பதன் மூலம் தங்களுக்குத் தாங்களே ஆபத்தைத் தேடிக் கொள்கின்றனர். பொது வாழ்வில் ஊழல் ஒழிக்கப்பட்டால், மக்களை அழுத்தும் வறுமை துடைத்தெறியப்பட்டால், நல்ல நிலைமையில் இருக்கும் சிலர் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, அவர்களின் துன்பங்களை அர்த்தமுள்ள வகையிலும், கணிசமான வகையிலும் தீர்க்க முற்பட்டால் மட்டுமே, அதிகாரப்படுத்தப்பட்ட இந்தியா புதிய சிந்தனைகளை இருகரம் நீட்டி வரவேற்பதாகவும், நமது நாகரீகம் மற்றும் பண்பாட்டின் கூறுகளைப் பரவலாக்குவதாகவும் கருத இயலும்.

இந்தியாவை அதிகாரப்படுத்தும் நோக்கில் செயல்படும் இயக்கம், இந்தச் செய்திகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவைப் பற்றி ஓர் உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தும் அதே வேளை நமது வளங்களை, மக்களின் அடிப்படையான சமூக, பொருளாதாரத் தேவைகளைத் தீர்க்கக் கூடிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே இந்தியாவை உண்மையில் ஓர் அதிகாரப்படுத்தப்பட்ட இந்தியாவாக மாற்ற முடியும்.
Pin It