ராஜீவ் கொலை விசாரணைக்காக 1998ஆம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப் பட்ட – சி.பி.அய்யின் பல்நோக்கு விசாரணை ஆணையம் (எம்.டி.எம்.ஏ) முடங்கிக் கிடக்கிறது. கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண் டிருக்கும் – மக்கள் மறந்து போன இந்த விசாரணை அமைப்பு - இம்மாதம் சி.பி.அய். அமைப் பில் உருவான குழப்பங்களின்போது மீண்டும் செய்தியானது. சி.பி.அய் அமைப்பில் நடந்த அதிகார மாற்றங்களின்போது – அந்த அமைப்பில் இணை இயக்குநராக நான்காம் இடத்தில் இருந்த அருண் குமார் சர்மா – இந்த நிறுவனத்திற்கு அதிகாரியாகத் தூக்கியடிக்கப்பட்டார். நாட்டின் ஆகப் பெரும் புலனாய்வு அமைப்பின் உள் முரண்பாட்டால் ஏற்பட்ட சர்மாவின் நியமனம், எம்.டி.எம்.ஏ அமைப்பையே சந்தேகத்துக்குரிய தாக்கி உள்ளது.

சி.பி.அய்.யில் திறமையானவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. வேறு புலனாய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றார்கள். ராஜீவ் கொலையில் விரிவான சதித் திட்டத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடித்திருக்க வேண்டும். ராஜீவ் கொலைக்குப் பின்னால் நடந்த சதிவேலைகளை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் 20 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை – இவை எல்லாம் வெளிப் படையாக எழும் கேள்விகள். இந்த நீண்ட நெடிய தாமதத்தால் – முக்கியக் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப் பட்டவர்களும், சாட்சிகளும் மரணமடைந்து விட்டனர்.

1991 ஆம் ஆண்டு மே 21 ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பெல்ட்டை இடுப்பில் கட்டிக் கொண்டு மனித வெடிகுண்டாக மாறிய பெண், ராஜீவ்காந்தியைக் கொன்றார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். இச்சம்பவத்தில் மேலும் 14 பேர் மரணமடைந்தனர்.

புலனாய்வின்போது சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப் பட்டனர்; பலர் தண்டிக்கப்பட்டனர்; கொலைக்குப் பின்னணியில் இருந்த சதியைக் கண்டறிய எம்.சி. ஜெயின் கமிசன் நியமிக்கப்பட்டது. விசாரணை யின்போது சதித் திட்டத்தில் பல முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உருவானது. காங்கிரசின் அரசியல் எதிரியான ஒரு சாமியார், காலிஸ்தான் தீவிரவாதி, சர்வதேச ஆயுதத் தரகர், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஆகி யோரின் பெயர்கள் எல்லாம் சேர்க்கப் பட்டன. ஆனால் உண்மை என்ன வென்பது மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. அவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது நம்பிக்கைக்குரிய ‘கே.பி.’ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன் மற்றும் கிட்டு.

இப்போது சி.பி.அய். அமைப்பில் நடந்த குழப்பத்தில் அருண்குமார் சர்மா, ‘எம்.டி.எம்.ஏ.’ விசாரணைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் சி.பி.அய்.க்கான கொள்கைகளை உருவாக்கும் பதவியில் இருந்தவர்.

சதியின் பின்னணி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜெயின் கமிசன், சந்தேகிக்கக் கூடிய 21 நபர்களைப் பட்டியலிட்டதோடு ‘எம்.டி.எம்.ஏ.’ விடம் கேள்விகளை முன்வைத்து– அதற்கு விடை கண்டறிய வேண்டும் என்று கேட்டிருந்தது. அந்த சதியில் சாமியார் சந்திராசாமியின் பங்கு என்ன? காங்கிரசை வசைபாடும் சுப்ரமணிய சாமி, லண்டனில் சந்திராசாமியை சந்தித்தது ஏன்? காலிஸ்தான் பயங்கர வாதிகள் அதில் ஈடுபட்டார்களா? யாருடைய தூண்டுதல் காரணமாக ஆயுதத் தரகர் அட்னன் காஷோகியின் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு அந்த நேரத்தில் ஆயுதங்களை ஏற்றி வந்தது? இந்தக் கேள்விகளை விசாரித்து அறியப் பணித்த ஜெயின் கமிசன், பிரபாகரன், கே.பி., கிட்டு ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தால் அந்நிய சதிகள் பற்றிய உண்மை தெரியும் என்றும் எம்.டி.எம்.ஏ. விற்கு அறிவுறுத்தியது.

ஜெயின் கமிசனின் ‘செயல்பாட்டு அறிக்கை’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது கிட்டு இறந்து விட்டார். கிட்டுவை இந்திய கடற்படை காட்டிக் கொடுத்ததோடு அவர் வந்த படகையும் மூழ்கடித்து விட்டது. கடற் படையினர் கிட்டுவையும் அவருடன் வந்தவர்களையும் உயிருடன் மீட்டெடுத் திருக்க முடியும். கிட்டுவை விசாரித்திருந் தால் அவர் தந்திருக்கக் கூடிய தகவல் முக்கியமானதாக இருந்திருக்கும் என்று அப்போது ‘எம்.டி.எம்.ஏ.’வின் சென்னைப் பிரிவில் 1999 லிருந்து 2001 வரை பணியாற்றிய புலனாய்வு அதிகாரி கே.ரகோத்தமன் கூறுகிறார். இவர் புலிகளின் நடவடிக்கைகளை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக்குழுவின் விசாரணை அதிகாரியாகவும் இருந்தார். கிட்டுவின் மரணத்துக்குப் பிறகு – இந்த சதிக்கான மர்மத்தைத் திறக்கும் திறவுகோல் பிரபாகரன், கே.பி. ஆகிய இருவரிடம் மட்டுமே இருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் பிரபாகரனைக் கொன்று விட்டது.

உண்மை அறிந்த மூவரில் இப்போது கே.பி. மட்டுமே உயிருடன் இருக்கிறார். பிரபாகரன் கொல்லப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை அரசு கே.பி.யைப் பிடித்து, தனது பாதுகாப்பில் உயிருடன் வைத்திருக்கிறது. இந்தியாவைவிட எவ்வகையிலும் வலிமையில்லாத இலங்கை புலனாய்வுத் துறை, கே.பி.யைப் பிடித்துவிட்ட நிலையில் வலிமை மிக்க இந்தியப் புலனாய்வு நிறுவனம் பல ஆண்டுகளாக இவரைப் பிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக வெற்றி பெற முடியவில்லை என்பதை நம்ப முடிய வில்லை என்கிறார் ரகோத்தமன்.

‘எம்.டி.எம்.ஏ.’வில் 15 ஆண்டுகள் புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றுள்ள பி.என்.மிஸ்ரா, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தருவித்துத் தந்த கே.பி.யை இலங்கையில் பேட்டி கண்டதாகக் கூறுகிறார். இந்தக் கொலை யில் கே.பி. தனக்குத் தொடர் பில்லை என்று மறுத்ததாகவும், பிரபாகரனும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த பொட்டு அம்மானும் இந்த முடிவை எடுத்தனர் என்றும் 2011 ஆம் ஆண்டு ‘எம்.டி.எம்.ஏ.’ அறிக்கை கூறுகிறது.

சர்வதேச ஆயுதத் தரகர் அட்னன் கஷோகியுடன் கே.பி.க்கு தொடர் பிருந்தது என்றும், கஷோகி சந்திராசாமி யின் பக்தர் என்றும், சந்திராசாமியுடன் நெருக்கமாக இருந்தவரும் பத்திரிக்கை யாளருமான ராஜேந்திர குமார் ஜெயின் கூறுவதோடு, ராஜீவ் கொலை சதியில் சந்திராசாமிக்கு தொடர்புண்டு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 1998 இல் கார் வெடிகுண்டு தாக்குதலில் ஜெயின் கொல்லப்பட்டார். ஆச்சரியம் என்ன வென்றால் ஜெயின் படுகொலையை விசாரிக்குமாறு, எம்.டி.எம்.ஏ.விடம் கூறப்படவில்லை. உண்மையை ஜெயின் வெளியிடாமல் தடுக்கும் நோக்கத் துக்காகவே கொல்லப்பட்டார் என்பது வெள்ளிடைமலை. கடந்த ஆண்டு சந்திரா சாமியும் ஆயுதத் தரகர் கஷோகியும் இறந்து விட்டனர். சந்திராசாமிக்கு ராஜீவ் கொலை சதியில் தொடர்பு உண்டு என்று ஜெயின் மட்டும் கூறவில்லை. சிறையில் இருக்கும் நிழல் உலகத் தாதாவான பப்லு ஸ்ரீவத்சாவும் சதியில் சந்திராசாமியின் பங்கு குறித்து கடுமையான குற்றச் சாட்டை முன்வைத்ததாக முன்னாள் ‘எம்.டி.எம்.ஏ.’ புலனாய்வு அதிகாரி மிஸ்ரா கூறுகிறார்.

ஆனால் அவர் என்ன கூறினார் என்பதை வெளியிட மாட்டேன் என்று கூறுகிறார் மிஸ்ரா. எம்.டி.எம்.ஏ. அமைப் பிலிருந்து பதவியில் நீடிக்க விடாமல் வெளியேற்றப்பட்டவர். எம்.டி.எம்.ஏ. கலைக்கப்படும் வரை மிஸ்ரா பதவியில் நீடிக்க மத்திய அமைச்சரவை உத்தர விட்ட பிறகும் அதைப் பொருட்படுத்தா மல் மிஸ்ரா பதவியில் நீடிக்க அனுமதிக்கப் படவில்லை.

சந்திராசாமியுடன் ரகசியத் தொடர் பில் இருந்தவர் – பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சாமி. அவர் லண்டனில் சந்திராசாமியை சந்தித்ததன் பின்னணி சந்தேகத்துக்கு இடமளிக்கிறது என்று கூறிய ஜெயின் ஆணையம் சுப்ரமணிய சாமியையும் கண்காணிக்க எம்.டி.எம்.ஏ.வுக்கு அறிவுறுத்தியது. தானும் சந்திராசாமியும் ஒரே நேரத்தில் லண்டன் பயணமானது எதேச்சையாக நடந்த நிகழ்வு என்று சுப்ரமணிய சாமி தந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு சுப்ரமணியசாமி மீதான விசாரணையை யும் அவர் தொடர்பான கோப்புகளையும் ‘எம்.டி.எம்.ஏ.’ முடித்து விட்டது என்கிறார் மிஸ்ரா.

ராஜீவ் கொலைக்குப் பிறகு -– அகாலி தளத் தலைவர் மகந்த் சேவாதாஸ் சிங் – ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரதமர் சந்திரசேகரிடம் 6 மாதங்களுக்கு முன்பே எச்சரித்ததாகக் கூறினார். காலிஸ்தான் இயக்க நிறுவனர் ஜக்ஜித் சிங் சோகான் இத்தகவலைத் தம்மிடம் கூறியதாகவும் – அவர் கூறினார். விசாரணையில் இது அதீத கற்பனை என்று ‘எம்.டி.எம்.ஏ.’ முடிவுக்கு வந்தது.

எம்.டி.எம்.ஏ. விசாரணையை இந்தியா வுக்கு வெளியே நடத்த விரும்பவில்லை. அந்நிய சதியை மூடி மறைப்பதே இதன் நோக்கம் என்கிறார் ரகோத்தமன். 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைத் தடுத்தது எது? சந்திராசாமி யின் நெருக்கமான சீடரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் தலால் – காங்கிரஸ் மீதே குற்றம் சாட்டுகிறார். சந்திராசாமியுடன் காங்கிரஸ் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு விசாரணையைத் தொடராமல் முடக்கியது என்று கூறுகிறார். அவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்கிறார், தலால்.

எம்.டி.எம்.ஏ. விசாரணையை நடத்துவதிலோ, தீவிரப்படுத்துவதிலோ கடந்த பல ஆண்டுகளாக ஆர்வம் காட்டவில்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இந்த நிறுவனத்தில் வேலை செய்வோர் எண்ணிக்கையை 38 ஆகக் குறைத்ததிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும்.

உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இந்தியா வுக்குள் புலனாய்வு விசாரணைகள் முடிந்து விட்டன என்று குறிப்பிட் டுள்ளது. கிரிமினல் வழக்குகளில் அண்டை நாடுகளின் உதவி கேட்டு 25 நாடுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. இன்னும் 6 நாடுகளிடமிருந்து மட்டுமே பதில் வரவில்லை என்றும் ‘எம்.டி.எம்.ஏ.’ உள்துறைக்கு அனுப்பிய அறிக்கை கூறுகிறது. இவ்வளவுக்கும் பிறகு இந்த அமைப்பின் விசாரணை ஏன் இழுத்தடிக் கப்படுகிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எதுவும் கூற முடியாது; அது இரகசிய அமைப்பு என்று கூறுகிறார் எம்.டி.எம்.எ அதிகாரி.ஆக எம்.டி.எம்.ஏ அமைப்பானது சோம்பேறித்தனத்தின் உச்சத்துக்கு சென்று விட்டதா? மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விடும் நிறுவனமாக, பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருந்து நழுவிய அமைப்பாக மாறி விட்டதா? விசாரணையானது முற்றாக முடங்கி விட்டதா?

2013 வரை இந்த அமைப்பு அனுப்பிய விசாரணை முன்னேற்றம் குறித்த சீலிடப்பட்ட 60 அறிக்கைகள் சென்னை சிறப்பு நீதிமன்ற அலமாரிகளில் சீல் பிரிக்கப்படாமல் முடங்கிக் கிடப்பது ஏன்? இவற்றின் எண்ணிக்கை தற்போது சுமார் 100 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராஜீவ்காந்தி கொலைக்கு சதித் திட்டம் தீட்டியது யார்? ஏன் தீட்டப் பட்டது என்ற உண்மை இதில் புதைந்து கிடக்கலாம் என்று நம்பப்படு கிறது. அறிக்கைகளை சீலிடுவதற்கு முன்பு அதில் அடங்கியுள்ள விவரங்களை-வழக்கறிஞர்கள் மூலமாக நீதிபதிக்கு விளக்குவோம் என்கிறார் மிஸ்ரா. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனின் வழக்கறிஞர் எஸ்.பிரபு இதை மறுக்கிறார். சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் இந்த சீலிடப்பட்ட அறிக்கைகளை திறந்து பார்க்கத் தாம் விரும்பவில்லை என்று கூறியதாக வழக்கறிஞர் பிரபு தெரிவிக்கிறார்.

இது 2013 இல் நடந்த சம்பவம். ராஜீவ் கொலைக்கு உதவியாக இருந்தவர்கள் பல ஆண்டு காலம் சிறையில் வாடுகிறார்கள். முக்கிய சந்தேகித்துக்குரிய குற்றவாளிகள் இறந்து விட்டனர். அல்லது பிடிபடாதவர்களாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் எம்.டி.எம்.ஏ.வும் செலவு அதிகம் பிடிக்கும் விசாரணையைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த விவகாரம் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தபோதும் தலைமை நீதிபதியோ விசாரணைக் கமிசனுக்கு கால வரம்பை நிர்ணயிக்கவில்லை.

மொழியாக்கம் : அருள்மொழி கற்பகவிநாயகம்

செய்திகளில் சில மாறுபாடுகள் இருப்பினும் கட்டுரையின் சாரம் கருதியே வெளியிடப்படுகிறது.

Pin It