இந்தியாவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு 20 ஆயிரம் பேர் மருத்துவம் படிக்க சென்றிருக்கிறார்கள். போர்ச் சூழலில் அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காக நீட் தேர்வைக் கொண்டு வந்தோம் என்று ஒன்றிய ஆட்சி கூறியது. பாஜகவினரும் அப்படித்தான் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் நீட் தேர்வு வந்ததற்குப் பிறகு தான் 20 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு சென்றிருக்கிறார்கள். காரணம் இங்கே வாங்குகிற கட்டணத்தைவிட அங்கே கட்டணம் மிக மிகக் குறைவு. நீட் தேர்வு தேவையில்லை, 50ரூ மதிப்பெண்கள் எடுத்தாலே உக்ரைனில் மருத்துவம் படிக்க முடியும். இங்கே நீட் தேர்வும் இருக்கிறது, கட்டணக் கொள்ளையும் இருக்கிறது. தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றிய அரசு என்ன செய்தது ? எதுவுமே செய்யவில்லை. அவர்களின் கட்டணக் கொள்ளைக்கு வழி திறந்து வைத்ததுதான் இதில் வேடிக்கை.

நீட் தேர்வில் பெறக்கூடிய கட் ஆஃப் மார்க்கை மிக மிக குறைவாக தளர்த்தி தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்வதற்கும்; அவர்கள் நிர்ணயித்த கட்டணங்களை வாங்கி கொள்ளையடிப்பதற்கும் வழி திறந்து வைத்தது தான் ஒன்றிய ஆட்சி.

மோடி சொல்கிறார், ‘ஒரு சின்னஞ்சிறு நாட்டில் நமது நாட்டு மாணவர்கள் ஏன் மருத்துவப் படிப்பை படிக்க செல்ல வேண்டும்? இந்தியாவிலேயே மருத்துவத்திற்கான முதலீடு செய்வதற்கு தனியார்கள் முன்வர வேண்டும். அவர்களுக்கான இடங்களை மாநில அரசுகள் ஒதுக்கித் தர வேண்டும்’ என்று மோடி கூறுகிறார். மீண்டும் தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்குத் தான் அவர் பேசுகிறாரே தவிர, அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி வெளிநாடு செல்லும் மாணவர்களை தடுக்கும் கவலை அவருக்கு சிறிதும் இல்லை.

விடிய விடிய உக்ரைன் நகரில் இரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றன. இங்கே விடிய விடிய சிவனுக்கு பூஜை போட்டுக் கொண்டு சிவராத்திரி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தென்னாட்டின் கடவுளாகப் போற்றப்படும் சிவன், தென்னாட்டு கர்நாடக மாணவனைக் காப்பாற்றக்கூட வரவில்லை. ‘அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் அவதாரம் எடுத்து வருவேன்’ என்று கூறிய கிருஷ்ண பகவான் போர் மேகங்கள் சூழ்ந்து இருக்கும்போது மக்களைக் காப்பாற்ற முன் வரவில்லை. கடவுளும் மதமும் மக்களைக் காப்பாற்றுவதில் இருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டன.

ஏவுகணைகளும் துப்பாக்கிக் குண்டுகளும் தான் மனித வாழ்வை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட போர்ச் சூழலில் நமக்கு எது தேவைப்படுகிறது? போர் இல்லாத உலகம். நாடுகளின் தனித்துவம். அந்தந்த நாடுகளின் இறையான்மை. அங்கே அனைவருக்குமான சமூக நீதி. இது தான் உக்ரைன் நமக்கு சொல்லிக் கொடுக்கின்ற பாடம்.

- விடுதலை இராசேந்திரன்