‘ஆனந்தவிகடன்’ மார்ச் 2017 இதழில், சபிதா எழுதிய கட்டுரையிலிருந்து.
‘கணவனை மதிக்காத மனைவியை, படுக்கையைவிட்டு விலக்கி, அடித்துக் கட்டுப்படுத்தலாம்’ என்கிறது குர்ஆன் 4:34.
“பெண்ணைப் படைத்த போதே அவளை பொய் சொல்லும் குணத்துடனும், நகைகளுக்கு ஆசைப்படுபவளாகவும், கோபம், தற்குறித்தனம், சிறுமதி, ஏமாற்று, கெட்ட நடத்தை போன்ற சகல துர்குணங்களுடனும் ஆண்டவன் படைத்துவிட்டான். அவளிட மிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஆண் கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்கிறது மனுசாஸ்திரம்.
“பெண்களுக்கு, உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு பார்க்கத் தெரியாது. அவர்கள் மணலைப் போல உறுதியற்றவர்கள்; பாம்பைப் போல கொடூர மானவர்கள்” என்கிறது பௌத்தம்.
“பாவ உடம்பைப் பெற்ற பெண் - கடவுளை ஆணில்தான் காண வேண்டும்” என, கிறிஸ்துவம் சொல்கிறது.
இப்படியான மத மற்றும் சமயங்களின் தாக்கம்தான் ‘சீறும் பாம்பை நம்பு - சிரிக்கும் பெண்ணை நம்பாதே!’ என ஆட்டோவின் பின்னால் இன்று வரை எழுத வைக்கிறது; சக உயிர் மீது ஆசிட் வீச வைக்கிறது; இரத்த வெள்ளத்தில் வெட்டிச் சாய்க்கிறது.
என் கல்லூரித் தோழி, கலப்புத் திருமணம் செய்து கொண்டவள். ஆரம்பத்தில் கணவரின் சமய வழக்கங்களைப் பின்பற்றினாள். உயர்ந்த பதவியில் இருப்பவள். புத்தகப் புழு. புத்தகங்கள், அவளுக்கான வானத்தைத் திறந்து வைத்தன. சமீபத்தில் சந்தித்த போது அவள் கடவுள் மறுப்பாளராக மாறியிருந்ததைக் கவனித்தேன்.
“பெண்ணை போதை வஸ்துபோல, அடக்க வேண்டிய கொடிய மிருகத்தைப் போலச் சித்திரிக்கும் சமயமும் மதமும் நமக்கு அவசியமா? எனும் கேள்வி, என்னையும் அறியாமல் எனக்குள் வேரூன்றிவிட்டது. அது மட்டும் அல்லாமல் இங்கே மதங்களின் பேரால் நிகழும் உயிர்ப்பலிகளும் கலவரங்களும் என்னை கடவுள் மறுப்பாளராக மாற்றி விட்டன. ஆனால், என் குடும்பத்தினர், நான் ஏதோ வழிதவறிப் போய் விட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். என்னை பூசாரியிடம் அழைத்துச் சென்று, ‘பேயோட்ட வேண்டும்’, ‘மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றெல்லாம் கூறினர்” என வருத்தமாகப் பேசினாள். எவ்வளவோ முன்னேறிவிட்ட சமூகத்தில், ஒரு பெண் கடவுள் மறுப்பாளராக இருப்பதை ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறோம்? ஏன் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறோம்?
நம் வரலாறு நெடுகவே ஆன்மிகமோ, துறவறமோ அல்லது ‘கடவுள் இல்லை’ என்று வாதிடும் நாத்திகமோ, தனக்கான மார்க்கத்தைத் தேர்வு செய்யும் உரிமையை ஆணுக்கு வழங்கப்பட்டது போல பெண்ணுக்கும் வழங்கப்பட் டிருந்தால், எத்தனையோ பகுத்தறிவு வாதிகளும் பெண் துறவிகளும் இதே மண்ணில் உதித்திருப்பார்கள். ஒரு வேளை, புத்தனுக்குப் பதிலாக அவனது மனைவியே துறவறம் பூண்டிருக்கலாம். அவர்களால் எழுதப்படும் புனித நூல்களில் பெண்ணின் விலா எலும்பில் இருந்து ஆண் உதித்தான் என எழுதப்பட் டிருக்கும். பகுத்தறிவு கொண்ட பெண்ணின் வளர்ப்பில் வளரும் அடுத்த தலைமுறையில், மதத்தின் பெயரால் நிகழும் தீவிரவாதம் குறைந்து போயிருக்கலாம்.
கல்யாண தத்துவம் கொடுமையானது!
ஆண், பெண் கல்யாண விஷயத்தில் அதாவது, புருஷன்-மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்துப் பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு, அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஓர் அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிக்கின்றோம். ....................
இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால், சொற்ப காலத்திற்குள்ளாக அதாவது, ஒரு அரை நூற்றாண்டுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அநேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடு மாத்திரம் குரங்குப் பிடியாய்ப் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால், தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில்தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக்கின்றது.
பெரியார் - ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலிலிருந்து