சகிப்புத்தன்மை, சாத்வீகம் மற்றும் சகோதரத்துவத்தின் பிறப்பிடம் என்று வெற்று டப்பாவை உருட்டிக் கிடக்கிறது இந்தியா.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அதன் அடைமொழிக்கு ஒரு அர்த்தமுமில்லை. பௌத்தம் சமணம் உள்ளிட்ட மாற்றுக்கருத்துக்களை வன்முறைகளாலும் புறக்கணிப்புகளாலும் ஒழித்துக்கட்டியவர்களின் இன்றைய வாரீசுகளான இந்துத்துவ தீவிரவாதிகள் சகிப்பின்மை என்ற கொடுந்தடத்தில் சமூகத்தைக் கடத்திச் செல்ல முனைகிறார்கள். இவர்களது வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் வழக்கு தொடுத்து அலைக்கழிக்கும் மலிவான தந்திரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தளர்ந்துபோய் இந்த நாட்டைவிட்டு தன்னைத்தானே வெளியேற்றிக் கொண்டிருக்கிறார் ஓவியர் எம்.எஃப்.ஹூஸைன். தன் கோடுகளாலும் வண்ணங்களாலும் உலகெங்குமுள்ள கலைமனங்களை வென்றெடுத்த ஹூஸைனுக்குத் தன் சொந்தநாட்டு மதவெறியர்களிடம் ஏற்பட்ட தோல்வியை தங்களுக்கானதாய் பாவித்து வருந்துகிறது சர்வதேச அறிவுச்சமூகம்.

உருவங்களை வரைவது தமது மார்க்கத்திற்கு விரோதமானது என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அவரது ஓவியங்கள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று இந்துத்துவ அடிப்படைவாதிகளும் ஒரு சேர தாக்குதல் தொடுக்கின்றனர் ஹூஸைன் மீது. மடங்களை காமக்களியாட்டக்கூடமாக மாற்றியவர்களை லோககுருவாகவும், கோயில் கருவறையை பள்ளியறையாக மாற்றியவர்களை அர்ச்சகராகவும், உலகத்தின் அத்தனை பித்தலாட்டங்களையும் ஒருசேர செய்கிற பொறுக்கிகளை அவதாரங்களாகவும், கொனார்க் சூரியக்கோவிலையும் கஜூராஹோ சிற்பங்களையும் கலை வெளிப்பாடாகக்  கொண்டாட முடிகிற இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு ஹூஸைனின் கலை ததும்பும் ஓவியங்கள் ஆபாசமாய் தெரிவதற்கு மதக்காழ்ப்பே காரணம். தேசிய நலனுக்கு திட்டவட்டமான எதிரிகள் என இஸ்லாமியர்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவாவினர், இந்தியாவின் தொன்மங்களை மதம் கடந்து கொண்டாடும் ஹூஸைன் போன்றவர்களை எளிதில் கடக்க முடியாமல் திணறுகின்றனர். அதன் விளைவாகவே அவர்கள்  ஹூஸைனை அப்புறப்படுத்த விரும்பினர், எப்படியோ இறுதியில் அது நிறைவேறியும் விட்டது.

இந்திய தேசத்தவர் என்ற உரிமையைத் துறந்து கத்தார் தேசத்தவர் என்ற இக்கட்டான நிலைக்கு அவரைத் தள்ளிய பின்புலம் இன்று ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தியாவின் பெருமைக்குரிய குடிமக்களில் ஒருவரான ஹூஸைன் விரைவில் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடியை கலை இலக்கியவாதி களும் மதச்சார்பின்மைவாதிகளும் ஊடகவியலாளர்களும் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளனர். 95 வயதாகிவிட்ட அவர் இனி நாடு திரும்புவதாயிருந்தால், அது இங்கு வந்து சாவதற்காகத்தான் இருக்கமுடியும் என்று அவரது நண்பர் ஒருவர் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார்.

பிறந்த பூமியில்தான் உயிர் விடுவேன் என்று அடம் பிடித்து திரும்புமளவுக்கு இந்த நாடு எப்போதாவது அவரை கௌரவமாக நடத்தி இருக்கிறதா? வேண்டாம் ஹூஸைன்,  நீங்கள் நிம்மதியாகக் கத்தாரிலேயே இருந்து விடுங்கள். கட்டற்ற பெருவெளியில் அசைந்தாடும் கொடியென உங்களது தூரிகை சுதந்திரமாய் வரையட்டும்.

மும்பை நகரம் எல்லோருக்கும் சொந்தமென்று சொன்னதற்காக விளையாடுவதோடு நிறுத்திக்கொள் என்று சச்சின் டெண்டுல்கரும், ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கான வியாபாரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தமைக்காக, நடிப்பதோடு நிறுத்திக்கொள் என்று ஷாருக்கானும் சிவசேனாவால் உரிய முறையில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியில் பேசியதற்காக ஒரு நடிகரின் குடும்பம் பால் தாக்கரேயிடம் மன்னிப்பு கோர வேண்டியிருந்தது. பதவி பிரமாண வாசகங்களை இந்தியில் சொன்னதற்காக சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார். ரயில்வே பரிட்சை எழுதவந்த வட இந்தியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ( ஆஸ்திரேலியாவில் படிக்கப் போன இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக இவர்கள் கூப்பாடு போடுவது கேலிக்கூத்துதான் ) ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து எதன் பொருட்டு எங்கு தென்பட்டாலும் பலவந்தப் படுத்தி அவர்களுக்கு கல்யாணம் முடிக்க தாலிக்கயிற்றை மடியில் கட்டிக்கொண்டு அலைகிறது ஸ்ரீராம்சேனா.

மக்களைத் திரட்டும் பொறுமையும் ஜனநாயக வழிப்பட்ட போராட்டங்களில் நம்பிக்கையும் அற்ற இவ்வமைப்புகள் வதந்திகளையும் வன் முறையையுமே தமது வழிமுறையாகக் கொண்டுள்ளன. மக்களை வாட்டி வதைக்கும் எந்தவொரு அடிப்படைப் பிரச்னையையும் தீர்ப்பதற்காக சிறுதுரும்பைக்கூட கிள்ளிப்போடாத இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக மான அவமானப் பிரச்னைகளைக் கிளப்பிவிட்டு சமூகத்தை நிரந்தரப் பதற்றத்தில் வைத்திருக்க முயற்சிக்கின்றன. ஒருவரது அண்டை வீட்டில் மற்றொரு இனத்தவரோ மதத்தவரோ வசிப்பதை சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு மற்றமை மீதான துவேஷம் கிளப்பி விடப்படுகிறது. பிற இன, மொழி, மத, பிரதேச அடையாளமுள்ளவர்கள் தமது சொந்த நிலை பாட்டிலிருந்து தெரிவிக்கும் கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பு மீறப்படுகிறது. உருட்டுக்கட்டைகளால் சமூகத்தை ஆள நினைக்கிற இந்த அழிவுச்சக்திகள் சட்டத்தின் ஆட்சி என்பதை மறுதலிக்கின்றன.

இந்த மண் எல்லோருக்குமான வாழிடம் என்கிற மிக அடிப்படையான உரிமையை உயர்த்திப் பிடிப்பதற்கான வல்லமையை இந்தியா இழந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே எனக்கும் ஒரு இடம் போட்டு வையுங்கள் ஹூஸைன் என்று சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுணர்வும் சுயமரியாதையுமுள்ளவர்கள் சொல்ல வேண்டி வருமோ என்ற கவலை எழுகிறது.

டெய்ல் பீஸ் : அரசியல் தன்மையுள்ள போராட்டங்களில் நடிக நடிகையரை கட்டாயப்படுத்தி பங்கெடுக்க வைப்பது குறித்து பாசமிகு தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவில் சில கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித். தமிழ்நாட்டில் இருப்பதை மறந்துவிட்டு இந்த மலையாளி இப்படி பேசலாமா என்று பேட்டைவாதம் கிளம்பியிருக்கிறது. தன் கருத்தில் தவறேதுமில்லை என்பதால் அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்றும் மனதிற்குச் சரியெனப்பட்டதை சொல்கிற சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சினிமாவுக்கே தலைமுழுகவும்கூட தயாராயிருப்பதாகவும் அஜீத் தெரிவித்துள்ளார். சென்னையை விட்டு வெளியேறி கேரளாவுக்கே போய்விடுவதென்ற அவரது முடிவை தமிழக தாக்கரேக்களும் தமிழ்ச்சேனாவினரும் கொண்டாடும் கேவலமும் நடந்தேறக்கூடும்.  –

- ஆசிரியர் குழு

Pin It

கடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறு நிலைக்குள்ளானது. தேசிய இன மொன்று சமஉரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது. அதுபற்றிய சுரணையே இல்லாமல் பெருந்தேசிய  அகங்காரம் மேலும் சிதைவுகளுக்குள் மூழ்கியபடி. ஒருபக்கம் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளாத சிறு தேசிய இனம்; மறுபக்கம் இனங்களின் சமஉரிமையை மறுக்கப்போய் தனது சுயாதி பத்தியத்தைத் தன்னுணர்வில்லாமலே இழந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை இனம்.

ஈழத்தின் இந்த அனுபவங்களை மீளாய்வுக்குள்ளாக்கும் எத்தனம் தொடங்கப்படும் போதே தெலுங்கு மொழித் தேசியம் தகர்க்கப்படுவதற்கான தெலுங்கானாப் போராட்டம் எழுச்சி கொண்டது. தேசியமே அர்த்தமற்ற கற்பிதமா? தேசங்களின் இறைமை  சுயாதிபத்தியம் என்பவற்றுக்கு இனி இடமில்லையா?

இவைதொடர்பாக முன்னெடுக்கப்படும் விவாதங்களின் அடியொற்றி நமக்கான தேசியத்தின் தனித்துவ வேறுபாடு குறித்து அலச முயல்கிறது இக்கட்டுரை. வர்க்கச் சமூக ஐரோப்பா கண்டறிந்த மார்க்சியத்தை சாதியச் சமூகத்தில் பிரயோகிப்பதில் பிரத்தியேக வேறுபாடு உள்ளதா? வர்க்கப் பிளவுபட்ட ஐரோப்பாவின் தேசியத்திலிருந்து சாதிய பேதத்தால் ஏற்றத்தாழ்வைக் கொண்டு இயங்கும் நமது தேசியம் எத்தகைய வேறு பாட்டைப் பெற்றுள்ளது? சாதிப்பிளவுகளுடைய இந்தியா ஒரு தேசமாக முடிந்தது எப்படி? இனத் தேசியம் இன்று பிளவுற முயல்வது ஏன்? இவை குறித்த கருத்தாடலை ஈழத்தேசியப்போராட்டம், தெலுங்கானாப் போராட்டம் என்பவற்றை முன்னிறுத்தி அலசுவோம்.

அது ஒரு துன்பியல் சம்பவம் என்ற கூற்று தமிழர் மத்தியில் எத்தகைய கருத்தியல் சார்ந்தவர்களிடமும் ஏதோவொரு வேடிக்கைப்பொருள் தரும் ஒன்றாக புழக்கத்தில் வந்து விட்டது. இந்தியப் பெருந்தேச உணர்வுக்குச் சவால்விடும் வகையில் அதன் நம்பிக்கைக் குரிய எதிர்காலமாகத் திகழ்ந்த தலைவரைத் தனது தற்கொலைப்படைகொண்டு அவரது மண்ணிலேயே சாய்த்த பிரபாகரன் அதற்கான வருத்தத்தையும் முழுமையாகத் தெரிவிக்க மறுத்துக் கூறியது அந்த வாசகம்; எல்லோருக்கும் தெரிந்ததுதான். பலருக்கும் ஆத்தி ரத்தை ஏற்படுத்திய அதேவேளை, அவரைக் கொண்டாடியவர்களையும் தெளிய வைத்த வார்த்தைகள்!

இப்போது மீட்டுச் சொல்லப்படக் காரணமுண்டு. தீராநதி ஜனவரி இதழில் தமிழவன் எழுதும் மரபும் ஓயாத காற்றும் தொடரின் 9வது பகுதி அண்ணா,ஆண்டர்சன், தமிழ்த் தேசியம் எனும் தலைப்பில் வெளிவந்திருந்தது. இந்தியச் சூழலில் தமிழகத்தை மையமாகக்கொண்ட தமிழ்த் தேசியம் குறித்த சர்ச்சை அக்கட்டுரையின் அடிநாதம். அதற்கான படிப் பினை சார்ந்து ஈழத்தமிழ்த் தேசியமும் பேசுபொருளாகியுள் ளது. தேசியத்தைக் குறுகிய வட்டத்துக்குள் அணுகி முடக்கி விடாமல், சர்வதேச நோக்கில் பார்த்தாக வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தும் அவரது அக்கறை கவனிப்புக்குரியது. இத்தகைய சர்வதேசப் பார்வையைத் தமிழ்த் தேசியம் போதியளவு கைக்கொள்ளவில்லை; குறிப்பாக ஈழத் தமிழ்த்தேசியத்தின் தோல்விக்கு அதுவே அடிப்படையான காரணியாக ஆனது எனச் சொல்கிறபோது, இந்த சர்வதேசச் சிந்தனையின் பின்னடைவால்தான் ஈழப்போர் ஒரு துன்பியலாக முடிந்தது என்கிறார் தமிழவன்.

இப்படியாகத் துன்பியல்கள் தொடர்கதையாவதற்கு சர்வ தேச அணுகுமுறை இல்லாமற் போனதுதான் காரணமா? அப்படி யொன்று இருக்கப் போனதே காரண மாகும் என்பதுதான் துன்பியல்! இதனைத் தமிழவன் காணத் தவறுகி றார். ராஜீவ் படுகொலை வெறும் ஈழப்போர் எதிரடி மட்டுமல்ல, அதற்கு சர்வதேசப் பின்னணி உண்டு என்ற குரல் இந்திய அதிகாரத்  தரப் பால் முணகப்பட்டு மூடிக்கட்டப் பட்ட ஒன்று என்பதில் இரகசியம் ஏதுமில்லை; அது இந்தியாவின் சர்வதேச உறவும் எதிர்காலக் கனவும் சார்ந்த மூடுமந்திரம்.

இப்போது ஈழப்போரின் துன்பியல் முடிவுக்குக் காரணம் அதன் சர்வ தேச அணுகுமுறையேதான். பிரபாகரன் கடைசிவரை நோர்வே ஊடாக, அல்லது நேரடியாக அமெரிக்கா தம்மை இரட்சிக்க வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஊடாகச் சரணடைதல் என்பது குறித்து எடுத்த நடவடிக்கைகள் எப்படிக் கையாளப் பட்டது, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு என்பது எல்லாம் சர்வதேசம் உள்விவகாரங்களில் தமது நலன் பேண ஏற்ற பேரப்பேச்சுக்குரிய விடயங்களாக கையாளப் படுவதற்கு உரியனவாக உள்ளனவேயன்றி மக்களது உயிர்ப் பிரச்சனையாக அணுகப்படவில்லை.

ஓடிக்கொண்டிருந்த பிரபாகரன் கூடவே மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் கேடயமாக எடுத்துச சென்றது சர்வ தேசம் வந்து காவந்து பண்ணும் என்ற நம்பிக்கையோடுதான். பண்ணவில்லை என்பதோடு, அதன் இறுதிக்காட்சியைத் தனக்கு ஏற்றதாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அந்தச் சர்வதேசம் மிகக்கேவலமான முறையில் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறது என்பதில் ஈழத்தமிழ்த் தேசிய அக்கறையாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கற்கவில்லை என்பது தொடரும் துன்பியல்.

அப்போது முள்ளிவாய்க்காலும் சரி இன்று இலங்கை பூராவி லும் சரி, சர்வதேச வலைப்பின்னலுக்குள்ளேயும் பிராந்திய மேலாதிக்கப் பிடிக்குள்ளேயும் சிக்கித் திணறும் கோரம் உணர்வுமட்டத்திலும் அறிவுத்தளத்திலும் கொண்டு வரப்படு தல் அவசியம். முள்ளிவாய்க்காலில் அரசு முன்னேறித் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டபோது பிரபாகரன் தற்காப்பு நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்தநிலையில் யுத்தம் நிறுத்தப்பட்டு இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் பேரப் பேச்சுத் தொடரப்பட்டிருப்பின் புலிகள் புத்துயிர்ப்புப் பெற் றிருக்க இடம் ஏற்பட்டிருக்கும். இந்தியப் பிராந்திய மேலா திக்கத்துக்கு அது இடைஞ்சல் என்பதனாலேயே ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவது குறித்துக் கவலை கொள்ளாமல் புலிகள் அழிக்கப்படும் இறுதி யுத்தத்தை இந்தியா  மிகமூர்க்கமாகவே நடாத்தி முடித்தது.

இலங்கை இராணுவம் நிறைவேற்றியது என்றில்லாமல் இதென்ன புது விண்ணாணம், இந்தியா முடித்தது என்பதாக? இலங்கை இராணுவத் துக்கு அதீத நாயக அந்தஸ்தைக் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாக சிங்களப் பேரினவாதத் தேசியத் தீயை வளர்த்துக் குளிர்காய்ந்த ஜனாதிபதி ராஜ பக்ஷவின் கூற்றுத்தான் யுத்தத்தை இந்தியாவே நடாத்தி முடித்தது என்ப தும்! முள்ளிவாய்க்காலில் ஒரு இடைத்தங்கலைச் சர்வதேசம்- அதாகப்பட்டது, அமெரிக்க மேலா திக்கம் விரும்பியது. அந்த விருப்புக் குரிய உள்ளுர் பிரதிநிதி என்பதா லேயே பிரபாகரன் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பை வளர்த்து வந்தார்; தவிர்க்கவியலாத நெருக்கடியில் சரணடைவு என்ற இடைச் செருகல் மேற்கொள்ளப்பட்டு துன்பியலில் முடிந்தது. அதிகாரத்தரப்பின் துன்பியல் சம்பவ முன்னெடுப்புக்கள் பூனையோடு எலி கொள்ளும் உறவு என்பதை முள்ளிவாய்க் கால் போதிய வலுவோடு எடுத்துக்காட்டியுள்ளது. பிராந்திய மேலாதிக்கம் பூனை பாய்ச்சலில் முந்தியபோது உலக மேலாதிக்கப்பூனை நல்லப்பிள்ளைச்சாமி வேடம் போட முடிந்திருக்கிறது. ஈழத் தமிழ்த்தேசியம் இந்த நல்லப் பிள்ளை பூனைச்சாமிக்குப் பின்னால், இன்னமும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கே வாக்களித்திருந்தது. அதை யும் மீறி பிராந்திய  மேலாதிக்கப் பிரதிநிதியான ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக முடிந்துள்ளது. அவர் மீள எடுத்துக் கொள்வதற்கு சிங்களப் பேரினவாத உணர்வை முழு அள வில் பிரயோகித்துக்கொண்டார். சிங்கள வாக்குகள் அங்கு குவியவும், மேலும் உக்கிரத்துடன் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக்கப் பக்கம் சாயக் காரணமானது.

இப்போது ஜனாதிபதியின் வெற்றிமீது சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. எதிரணிக் கட்சிகள் இதனை முன்னெ டுத்த போதிலும் சிங்கள மக்களிடம் இந்த அதீதப் பெரும் பான்மையினாலான வெற்றி பற்றிச் சந்தேகங்கள் இருந்த போதிலும் எதிர்ப்பு வலுவான வெகுசன எழுச்சியாக வளர்ச்சி கொள்ள முடியவில்லை. அதற்கான பிரதான காரணி, எதிர்ப்பைத்  தூண்டும் எதிரணி அமெரிக்கச் சார்பா னது என்பதோடு அது ஈழத்தமிழ்த் தேசியத்துக்கு உயிர்ப்பூட் டும் என்ற அரசுதரப்பின் பிரச்சாரம் ஆகும்.

இப்படிச் சொல்வதால் சிங்கள மக்கள் அமெரிக்க மேலாதிக் கத்திற்கு எதிரான அரசியல் விழிப்புணர்வைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதோ, இந்தியச்சார்பை ஏற்றுக் கொள்கி றார்கள் என்பதோ அல்ல. இந்தியா கவனமாக நிலை மையைக் கையாள்கிறதேயன்றி, அதன் தலையீடு இருப் பதைக் கண்டால் சிங்கள இன உணர்வு அதற்கெதிராகவும் கெம்பியெழும். இந்தக் கெம்பியெழல் மேற்கோள் குறிக் குள் முடங்கக் காரணம் உண்டு. சுதந்தி ரத்தின் பின்னர் மூன்று தசாப்தங்கள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்புணர் வோடு இறைமையும் சுயாதிபத்திய முள்ள ஒரு நாட்டுக்கான முற்போக்கு குணாம்சமுள்ள மக்களாக சிங்கள மக்கள் திகழ்ந்திருக்கிறார்கள். கூடவே பேரினவாத அகங்காரமும் ஏனைய தேசிய இனங்களது சமஉரிமை மறுப் பும் வளர்ந்தநிலையில் பிந்திய மூன்று தசாப்தங்களாக அமெரிக்கச்சார்பு உட்பட சுயாதிபத்திய-இறைமை இழப்புகளைக் கண்டு கொள்ளாமல் மோசமான சிதைவுகள் அவர்களிடம் வளர்ந்துவிட்டன. இப்போதும் இன வாதமே எடுபடு பொருளாயுள்ளதால் பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிரா கவோ, அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகவோ ஒரு துரும்பையும் போட முடியாதவர்களாகவே உள்ளார்கள்.

அத்தகைய பிற்போக்கு நிலைக்குரிய பௌத்த - சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான ஈழத்தமிழ்த் தேசியப் போராட் டம் முற்போக்கானதுதானே? அவ்வாறு அமையாமல் போனதுதான் துன்பியல். பேரினவாதத்துக்கு எதிராகப் போராடவேண்டிய தேவைகள் வலுத்துவந்த போதிலும் அது ஆரம்பம் முதலாகவே முற்போக்குத்திசையிலன்றி பிற் போக்கு மார்க்கத்தையே வரித்துக்கொண்டது. ஈழத்தமிழ்த் தேசியத்தின் முதற்கோரிக்கையான ஐம்பதுக்கு ஐம்பதை முன்வைத்த ஜி.ஜி.பொன்னம்பலம் மலையக மக்களது பிரசாவுரிமையைப் பறித்த ஐ.தே.க. அரசில் அங்கம் வகித் தார்; அப்போதே கிழக்கைத் துண்டாடும் நோக்கோடு திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தடுக்க வக்கற்றவராக அந்தத் தமிழ்த்தலைவர் இருந்தார். அவரது தமிழ்த்தேசியம் ஏகாதிபத்திய நலன்களோடு உறவுடையது என்ற அதன் பிணைப்போடு தொடர்பானது அந்த பலவீனம். இந்தத் தவறான இணைப்பே முன்னேற்றத் துக்கான வலுவான தடை என்பதை உணராமலேதான் இன்று வரை ஈழத்தமிழ்த் தேசியம் முன்னெடுத்துவரப்பட்டுள்ளது.

ஜி.ஜி.க்கு எதிராக அடுத்தக்கட்டப் போராட்டத்தை சமஷ்டிக் கோரிக்கையுடன் முன்வைத்த செல்வநாயகத்தின் தலைமை யிலான அணி தேசிய முதலாளித்துவ உணர்வோடு ஒரு தசாப்தத்துக்காயினும் முற்போக்குப் பாத்திரத்தை வகித்திருந் தது. சிங்களத்தேசிய முதலாளித்துவ சக்தி பண்டாரநாயக்க தலைமையில் வெற்றி கொண்டபோது இதுவும் தமிழர் மத்தியில் எழுச்சிபெற்றது. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தால் தனது வர்க்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தி னார் என்றால், இவர்கள் ஏகாதிபத்திய நலன்களை இங்கி ருந்து அகற்றவிடாமல் போராடும் தமது அற்பத்தனமான வர்க்கப் பலவீனத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் 1960ல் ஐ.தே.க. அரசு ஏற்படுவதை நிராகரித்ததில் அவர்களுக்கும் ஒரு முற்போக்குப் பாத் திரம் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அரசோடு பேரப்பேச்சில் இறங்கவும் உடன் செல்லவும் அது உதவியது. அந்த முற்போக்குக் குணாம்சம் வளர்த்தெடுக்கப்பட்டிருப் பின் நமது வரலாறு வேறுவகையாக முன்னேறியிருக்க முடியும். சிங்கள - தமிழ் தேசிய முதாலாளி வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து இயங்க முடியாமல் போன தற்கு 1960 - 1965 இல் இயங்கிய ஸ்ரீமாவோ அரசு இழைத்த தவறுகள் பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளன; அதுமட்டுமே காரணி அல்ல. தமிழ்த் தலைமை தனது நிலைப்பாட்டை பெருமுதலாளி வர்க்கச்சார்புக்கு மாற்றிக்கொண்டு முன்னர் எதிர்த்த ஐ.தே.க. எனும் சிங்களப் பெருமுத லாளித்துவக் கட்சியோடு கைகோர்த்தமையே பின்னடை வுக்குப் பிரதானக் காரணியாக அமைந்தது. குறைந்தபட்சத் தேசிய முதலாளித்துவ நலனைக் கொண்டிருந்த காலத்தி லேயே ஏகாதிபத்திய நலன்களை இந்த மண்ணில் தொடரக் குரல் கொடுத்த இந்தத் தலைமை, பெரு முதலாளித்துவ உள்ளடக்கத்தை வரித்த பின்னர் முற்றிலும் ஏகாதிபத்தியத் தின் நிழலாகவே தமிழ்த்தேசியப் போராட்டத்தை அடையாளப்படுத்தினர்.

70களின் பிற்கூறில் பிரிவினைக் கோரிக்கையுடன் எழுச்சி பெற்ற இளைஞர் இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு ணர்வை வெளிப்படுத்தியதோடு, சோஷலிஸத் தமிழீழம் பற்றிய விவாதங்களையும் முன்னெடுத்தனர். இருப்பினும் அவர்கள் நாடிய சோவியத் யூனியனின் நட்புறவு ஆப்கானி ஸ்தானில் ஆக்கிரமிப்புப் படையாக சோவியத் இராணுவம் சமராடிக் கொண்டிருந்த வரலாற்றுக் கட்டத்துக்குரியது. அதைவிடவும், இந்திய அரசு அனுசரணையோடு அவர்கள் தமது இராணுவங்களைப் போஷித்தபோதே இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தின் கருவியாகிவிட்டிருந்தனர். ஆக, அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பும் மார்க்ஸிய நாட்டமும் பொருளற்றனவாய் அமைந்தன. அப்பண்பு காரணமாக அவர் களால் சொந்த மக்களை அணிதிரட்ட முடியாமற் போனது; போகவும், அமெரிக்க மேலாதிக்கவாதப் பிரதிநிதிகளான புலிகளால் இலகுவில் களத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.

அந்தவகையில் முதற்கோணலோடு முற்றிலுங் கோணலா கவே முடிந்த ஈழத்தமிழ்த் தேசியம் குறித்த கற்றல் மார்க்சிய அணுகுமுறையில் இன்னும் ஆழமாக அணுகப்பட வேண்டி யதாகும். மார்க்சியர்கள் தேசியம் குறித்துப் போதிய அளவில் அக்கறை கொள்ளவில்லை என்ற குறைபாட்டைத்தான் தமிழவன் முன்வைத்திருந்தார். மொத்தத்தில் நல்ல சிந்தனையாளர்களும், அறிவாளிகளும்கூட தமிழ் பற்றிய விருப்புவெறுப்பற்று யோசிக்கவில்லை. அதன் தமிழ்த் தேசிய உட்கிடைகளை அறிவதில் தடுமாறுகிறார்கள். இதற் கான ஒரு காரணம் அகில உலகப் பேரறி வான மார்க்சியத்தைத் தமிழக இடதுசாரிக் கட்சிகள் கொச்சைப்படுத்தியிருப்பது தான் எனக்கூறும் தமிழவனும் தமிழ்த் தேசியம் குறித்த ஆய்வுக்கு மார்க்சி யத்தைப் பிரயோகிக்க முன்வரவில்லை. தமிழ்த் தேசியத்தைப் புரிந்து கொள்ளத் தனக்கு இயங்கியல் அணுகுமுறையை விட அமைப்பியலே சரியாகப்படுவதாக அவர் கூறுகிறார். இயங்கியல்ரீதியாக விளக்கமுடியும் என்பது குறித்த விவா தத்தை பின்போட்டுக் கொள்வோம்; இது வரை பேசிவந்த விடயம் தொடர்பில் அவரது ஒரு கருத்து இங்கு உடனடி அக்கறைக்குரியதாயுள்ளது.

இந்தியாவின் தமிழ்த் தேசிய உருவாக்கம் தொடர்பாக அவர் கவனங்கொள்ளச் சொல் கிற அம்சத்தை அவரது வார்த்தைகளில் காண்பது அவசிய மானதாகும். சமீபத்தில் ஒரு ஆங்கில நூல் படிப்பதற்குக் கிடைத்தது. அச்சும், நாட்டுப்புறவியலும், தேசியமும், காலனி ஆதிக்கத் தென்னிந்தியாவில் என்பது நூலின் நீண்ட பெயர். நூலின் ஆசிரியர் பல தமிழாய்வாளர்களுக்குப் பழக்கப்பட்டவரும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை லண்டன் எஸ்.ஓ.எ.எஸ். நிறுவனத்தில் தமிழ் கற்பித்து வந்த வருமான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள். நாட்டுப்புறவிய லும், இலக்கியமும் முதன்முதலில் அதாவது 1800 வாக்கில் அச்சுக்கு உள்ளாக்கப்பட்டபோது தமிழ் மனோபாவத்தில் நடந்த மாற்றங்களை முன்வைக்கிறார். தமிழ்த்தேசியம் தமிழில் கட்டமைக்கப்பட்ட முக்கியமான காலகட்டம் இது என்கிறார். 18ம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு எழுதியவர் களால் இந்நோக்கு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல தமிழ் ஆசிரிய ஆய்வுகளைப் போலவே 18,19ம் நூற்றாண்டு ஆய்வுகள் தமிழில் தரமின்றியே உள்ளன. ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள் நாட்டுப்புறவியல் கதை களை முதன்முதலில் தொகுத்த தாண்டவராய முதலியாரை முக்கியப்படுத்துகிறார். இது சரியான பார்வை. நம்முடைய முதல் நாவல், பிரதாப முதலியார் சரித்திரம் - தாண்டவராய முதலியாரின் தொடர்ச்சி. பிளாக் பர்னிடம் இச்செய்தி இல்லை. ஆனால், தமிழ்மொழியின் பெருமை பற்றிய கருத்துக்கள் பிரதாபமுதலியார் சரித்திரத்தில் பல பக்கங் களுக்கு நீளுகின்றன. அதாவது நான் முன்வைக்க வருவது உரைநடையில் இலக்கியம் தோன்றுவதும் தமிழ்த் தேசியம் தோன்றுவதும் பின்னிப் பிணைந்தவையாகும் என்ற கருத்து. இது இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிந்தி காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழனான அண்ணாத்துரைக்கு தமிழரசியல் தோற்ற மளித்ததோடு தொடர்புடையதாகும். தமிழ்பற்றிப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரைகுறையான, பழைய, இப்போது மார்க்சியர்கள்கூட மறந்துபோன சூத்திரத்தை ஒதுக்கிவிட்டு, எதார்த்த அரசியல், பிராந்திய நிலவரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துப் பேசவேண்டும் என்பது தமிழவனின் விவாதம்.

தமிழ் பற்றிப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரையுண்மையை இப்போது மார்க்சியர்கள் மறந்துபோனது, அது தவறு என்பதால் அல்ல; அது ஏற்கனவே நிறை வேறித் தொலைத்துவிட்டது என்பதனால்! ஈழத்தமிழ்த் தேசியம் புலிப்பாஸிஸத்தை தாராளமாய் அனுபவித்தது. அதன் துன்பி யல் முடிவுக்கும் அந்தப் புலிப்பாஸிஸம் ஒருவகையில் காரணமாய் அமைந்தது; அவர்கள் அரவணைத்த சர்வதேசமே அவர்களைத் தடைசெய்து, எவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனதாலேயே மிக வலுவான இராணுவமாய் வளர்ந்துங் கூட ஒன்றும் பண்ணமுடியாத கையறு நிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டா? முன்னரும் புலிகள் முன்னேறித் தாக்கியவேளைகளில் சிங்கள இராணுவத்தினருக்குள் கோடரிக்காம்புகளைத் தேர்ந்தெடுத்துக் காசுகொடுத்து ஓடவைத்துக்கொண்டு இருந்தார்களேயன்றி, புலிகளிடம் பெரும் வீரம் எதுவும் கிடையாது எனக்கூறும் பேரினவாத அடிவருடிகளை இங்கே காணமுடிந்தது. இத்தகையவர்களும் புலிப்பாஸிஸம் பற்றிப் பேசப் பின்னிற்பதில்லை. இத்தனை தீவிரமாகத் தமிழகத்தில் தமிழ்ப்பாஸிஸம் வெளிப்படா வகையில் இந்தியப் போலி ஜனநாயகம் செயற்பட்டபோதி லும், திராவிடர் இயக்கங்களின் கீழான நான்கு தசாப்தங்க ளின் தமிழகச் சமூகத்தின் பல சிதைவுகளுக்கு திராவிடர் இயக்கக் கட்சிகளது ஜனநாயகமயப்பட்ட பாஸிஸம் காரண மாக அமைந்தமை பற்றிப் பலரும் தமது எழுத்துக்களினூ டாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.

அந்த அரையுண்மை அரங்கேறி மக்கள் விடுதலை மார்க்கங் கள் முடங்கிப் போனதற்கு தமிழ்த்தேசியத்தின் மக்கள் நலன் சார்ந்த பக்கத்தைப் பார்க்கத் தவறிய மீதி உண்மை (அதுவும் பாதி தான்) பற்றிய அக்கறையை மார்க்சியர்கள் இப்போது கவனங்கொள்கிறார்கள். இதிலுள்ள துன்பியல், ஓடுகிற பஸ்ஸைத் துரத்தியோடி ஏற முயல்கிற நிலையில் மார்க்சியர்  இருப்பதுதான். மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங் களினுள் முடங்கிப்போய் மார்க்சிய - லெனினிய சிந்தனை முறைமையின்படி இந்தியச் சமூக நியதியைப் பகுப்பாயவும் பாட்டாளிவர்க்க உலக நோக்கை ஸ்தூல நிலைமைக்கு அமைவாக பிரயோகிக்கத் தவறியதுமான குற்றம் இந்திய மார்க்சியர்களிடம் உள்ளது; உண்மையில் அர்ப்பணிப்பு, தியாகம், மார்க்சிய விசுவாசம் என்பவற்றில் இந்திய மார்க் சியர்கள் வேறெந்தவொரு நாட்டின் முன்னுதாரணத்துக்கும் குறைவானவர்களல்ல.

தமிழ்த் தேசியம் பாஸிஸ வடிவங்கொள்ளும் என்ற எதிர்வு கூறலை முன்மொழிந்த மார்க்சியர்கள் அதற்கான அடிப் படைக்  காரணியையும் காட்டத் தவறவில்லை. மேலே தமிழ வன் காட்டுகிற தமிழ்த்தேசியத்தின் ஊற்றுமூலம் குறித்து கைலாசபதி போன்ற தமிழியல் துறையில் இயங்கிய மார்க்சியர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். குறிப்பாக, கோ.கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் நூலுக்கான கைலாசபதியின் முன்னுரை இதுதொடர்பில் மிகுந்த கவனிப்புக்குரியதாகும். அங்கே தமிழ்த்தேசியத்தின் முதற்கோணல் எது என்பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இயல்பாக தமிழ்த்தேசியத்துக்கான தேவை ஒருபக்கம் இருக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சதிக்கு ஏதுவாக திராவிட மேன்மைபற்றி ஐரோப்பிய சிந்தனையாளர்கள் செயற்பட்டவாறினைக் கைலாசபதி மிகத்தெளிவாகவே காட்டியிருந்தார்.

ஏகாதிபத்தியத்தின் இந்தக் கையாளல் மிகுந்த கவனிப்புக்குரி யது. தமிழவனின் நீண்ட மேற்கோளை  காட்டியிருப்பதற் கான பிரதான காரணம், இந்த அம்சமும் செயற்பட்டது என் பதை அவர் எங்காவது சொல்லியுள்ளாரா எனத் தேடிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே. அக்கட்டுரை முழுமை யிலும் எங்குமே இதனை அவர் காட்டவில்லை. கைலாசபதி யின் மேலே குறிப்பிட்ட முன்னுரையைப் பார்க்கிற ஒருவர், தமிழ்த்தேசியத்தின் அவசியமான பங்களிப்பாக கால்ட் வெல் போன்றோரது திராவிடமொழி ஆராய்ச்சி அமைந்த மையைச் சொல்லித்தான், பிரதான அம்சமாக இதனை வலி யுறுத்தினார் என்பதனைக் காணமுடியும். மாறாக, மார்க்சியர்  மீது குற்றம் சுமத்துகின்ற தமிழவன் தனக்கான ஒரு அம்சத்தை வளர்த்துச் செல்கிறாரேயன்றி, வரலாற்றுச் செல் நெறியில் பிரதான அம்சமாக அமைந்த மறு பக்கத்தைக் குறிப் பிடவேயில்லை. ஒருபக்கக் கட்டுரையேயாயினும் எந்த வொரு விடயத்தினதும் இரு அம்சங்களையும் குறிப்பிட்டாக வேண்டும் என மாஓ வலியுறுத்தியிருந்த விடயத்தை மார்க்சியர் பெரும்பாலும் பின்பற்றத் தவறியதில்லை.

இருப்பினும் தமிழ்த்தேசியத்தில் ஏகாதிபத்தியச் சதிக்கு ஆட் படும் பக்கத்தை வலியுறுத்திய அதேவேளை, அதன் சரியான அம்சம் சார்ந்து மக்கள் மத்தியில் மார்க்சியர்கள் இயங்காமற் போனதால் தவறு வலுவாய்த் தாக்கியுள்ளது என்ற விமர்சனத்தை இன்று மார்க்சியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். தேசியப்பிரச்சனையின் பன்மைப்பரிமாணங்கள் குறித்த தீர்க்கமான தேடலும் அவை சார்ந்த கொள்கை வகுப்பும் இன்னமும் சரியான திசைப் படவில்லை என்பது மெய். நமது சமூகமுறைமை சார்ந்த புரட்சியின் வடிவம் இனங்காணப்படாமல் வெறும் புத்தக வாத வாய்ச்சவடால்கள் மேலோங்கியிருப்பதும் உண்மை.

இதுதொடர்பில் அக்- 2009 புதிய புத்தகம் பேசுது இதழில் வெளியான யி.ஙி.றி. மொரேயின் நேர்காணல் கவனிப்புக்குரி யது. ஜஸ்வந்சிங்கின் ஜின்னாவைத்  தேசியவாதி என்று எழு திய சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பானது அந்த நேர்காணல். இன்று பொறுப்பற்ற முறையில் ஜஸ்வந்சிங் இந்தியாவின் பிரிவினையின்போது பிரிட்டிஷாரின் பங்கைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஜின்னா ஒரு தேசியவாதி என்று சொல் கிறார் என மொரே கூறும் போது தமிழவனைப் போலன்றி, முஸ்லிம் தேசியவாதத்தைத் தூண்டிப் பிரிவினைவரை வளர்த்ததில் பிரிட்டிஷாருக்குள்ள வலுவான பாத்திரத்தை உணர்த்துகிறார். உண்மையில் பிரிவினையை முஸ்லிம் தேசி யத்துக்கு முன்னரே பெரியாரின் திராவிடரியக்கம் முன் வைத்துவிட்டது என்பதையும் மொரே எடுத்துக் காட்டியுள் ளார். இங்கே, தமிழவனைப் போலவே திராவிடத் தேசியத் தின் அவசியத்தை மொரே ஏற்றுக்கொள்கிறார் (தமிழ்த்தேசி யம் திராவிடத் தேசியத்திலிருந்து பல வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இரண்டுக்குமான இரத்தபந்த உறவு வலுவானது என்ற வகையில் இங்கு இணக்கமாக நோக்கப் பட்டுள்ளது). இந்தத் திராவிடத் தேசியத்தை மொரே எங்குமே வகுப்புவாதம் எனக் கொச்சைப் படுத்தியதில்லை. மாறாக, முஸ்லிம் தேசியத்தை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அகில இந்திய முஸ்லிம்லீக் என்பது ஒரு வகுப்புவாத கட்சி.  ஏனெனில் அந்தக்கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இந்த வகுப்புவாத கட்சி யின் தலைவர் ஜின்னா எனக் கூறி, 25 வீதமான முஸ்லிம் மக்களுக்கு மட்டும் உரியதாக உள்ள வகுப்புவாதக் கட்சியின் தலைவரைத் தேசியவாதி எனக் கூறமுடியாது என்கிறார்.

ஒரு வகுப்புவாத கட்சியின் தலைவர், இந்தியாவின் ஒற்று மைக்காக ஒருவேளை பேசி இருந்தாலும், ஜின்னாவை வகுப்புவாத தேசியவாதி என்றே அழைக்கமுடியும் என்று நினைக்கின்றேன். அவரை நிச்சயமாக ஒரு தேசியவாதி என்று சொல்லமுடியாது. ஒரு மதத்தையோ, ஜாதியையோ சார்ந்து செயல்படும் எந்த ஒரு நபரையும் தேசியவாதியாகக் கூற முடியாது என்கிறார் மொரே. பெரியாரது திராவிடரியக் கம் திராவிடர் அல்லாதார் அங்கம் பெறாதவகையில் கட்ட மைக்கப்பட்டபோதிலும் அதை வகுப்புவாத அமைப்பாக மொரே கருதவில்லை. அக்காலத்தில் பல மார்க்சியர்கள் திராவிடர் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் வகுப்புவாத அமைப்புகளாகவே பார்த்தனர் என்பது கவனிப்புக் குரியது.  ஒருவர் தமிழ்த் தேசியராயும் இந்தியத் தேசியராயும் இருக்க முடியும் என்பதை ஏற்பதில் சிரமம் இல்லை. பாரதியிடம் இத்தகைய இனத்தேசியமும் நாட்டுத்தேசியமும் சார்ந்த பண்புகள் விரவிக் காணப்பட்டன.

பல்வேறு தேசிய இனங்களின் மத்தியிலும் இயங்கிய இந்தியத் தேசியக் கவிஞர்களும் இத்தகைய பண்புகளைக் கொண்டவர்களே. இரவீந்திரநாத் தாகூர் வங்காளத்தேசியத்தையும் இந்தியத் தேசியத்தையும் அற்புதமாய்க் கவித்துவமாக்கியவர். இந்தியத் தேசியகீதம் மட்டுமல்ல, இஸ்லாமிய நாடான பங்களாதேஷின் தேசிய கீதமும் இரவீந்திரருடையது என்பது கவனிப்புக்குரியது. மகாகவி இக்பால் இஸ்லாமியத் தேசிய உணர்வுக்கும் இந்தியத் தேசிய உணர்வுக்கும் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். அந்தவகையில் மொரே கருதவதுபோல தேசியத்துக்கு உட்படமுடியாததாக இனத்தேசியத்தை விலக்க முடியாது. மதம் தேசிய வடிவத்தைப் பெற முடிந்தது ஏகாதிபத்தியத் துக்கு ஆட்பட்டிருந்த எமது வரலாற்று நிர்ப்பந்தத்தால் ஏற் பட்ட ஒன்று என்பதை ஏற்றாக வேண்டும். இதுதொடர்பில் வரலாற்றுத்துறை போராசிரியர் சி.அரசரத்தினத்தின் கூற்று கவனிப்புக்குரியது; நாம் எடுத்துக்கொண்ட ஆசிய நாடுகளில் தேசிய இயக்கங்கள் கிறிஸ்தவ வல்லரசுகளை எதிர்த்து நின்றன. அத்துடன், இவ்வியக்கங்கள் பல, சமயம் ஒன்றுதான் மேலானதெனக் கோருவதை எதிர்த்து, தங்கள் சமயங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் நன்னப்பிக்கையூட்டு வதை நாடி நிற்கின்றன. அதன் விளைவாக தேசியவாத மானது எப்படி அரசியலுரிமைகளைப் பெற இயங்கும் ஓரியக்கமாயிற்றோ, அதேபோலக் கலாச்சார சமய மறு மலர்ச்சி இயக்கமாயிற்று. ஆகையால் இந்நாடுகளில் தேசிய வாதம் தோன்றிய காலத்திலேயே, அங்கு பெரும்பாலும் பரவியிருக்கும் சமயங்களாகிய இந்து, பௌத்த, இஸ்லாமிய சமயங்களின் மறுமலர்ச்சியும் ஏற்பட்டதை தற்செயலாக ஒரே காலத்தில் நடந்த இரு சம்பவங்களெனக் கொள்ளலா காது.

சமயத்திற்களித்த இம்முக்கியத்துவம் தேசியவாதத் திற்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடிந்தது. அது தேசிய வாதத்தினை ஒரு விரிவான அடிப்படையுள்ளதாகச் செய் வதற்கு முனைந்தது. அத்துடன் தனி அரசியல் இயக்கம் எதுவுக்கும் கிடைத்திருக்க முடியாத பொது ஆதரவைத் தேசியவாதம் பெறுவதற்கு உதவியது. உதாரணமாக இந்தியா விலே காந்தியொருவர் முன்வந்து இந்தியத் தேசியவாதத் தினை இந்துக் கலாச்சாரத்தின் உயிர்நாடியோடு இணைக்கும் வரை இந்தியத் தேசியவாதம் பெரும்பாலும் ஒரு மத்திய வகுப்பினரின் இயக்கமாகவே இருந்தது. காந்தி அவ் வண்ணஞ் செய்தபோதுதான் இந்தியாவின் நாட்டுமக்களுள் மிஸீபீவீணீஸீ றிமீணீணீஸீக்ஷீஹ் பெரும்பகுதியினர் தேசியவாதத்தில் ஊக்கங் கொண்டனர். மற்றநாடுகளிலும் பற்பல அளவுகளில் இப்படியான போக்கு ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தினைத் தட்டி எழுப்புவதற்குச் சமயத்திற்க ளித்த முக்கியத்துவம் சரியானதாகவிருந்தது. ஆனால் பல மதங்கள் உள்ள நாடுகளிலே அது பல விபரீதவிளைவுகளை உண்டுபண்ணக் கூடியதாகும். இதனை இந்தியாவில் நடைபெற்ற சோக சம்பவங்கள் நன்கு எடுத்துக்காட்டுகின் றது. அங்கு முஸ்லிம் மக்களுடைய தேசியவாதமானது, இந்திய ஒற்றுமையின்மீது கொண்ட விசுவாசத்திற்கும் மேலாகச் சமயத்திலே கூடிய ஆர்வங்கொண்டு, இந்திய முஸ்லிம்களின் தேசியநோக்கங்கள் ஒரு தனி இஸ்லாமிய நாடு அமைப்பதாலேயே சாத்தியப்படுமென்ற முடிவுக்கு வந் தது.

இந்திய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட  இந்தியத் தேசிய காங்கிரசாலும் இத்தகைய பிளவினைச் சமா ளிக்க முடியவில்லை. ஆகவே தென்கிழக்காசிய நாடுகளின் தேசியவாதத்தினை உருவாக்கி நின்ற பல்வேறு அம்சங் களும் ஒரே இயக்கத்திலே ஒன்று கூடியிருக்க முடியாத அளவிற்குத் தங்களுக்குள் முரண்பட்ட கோரிக்கைகளை உடையனவாக அமைந்தன (அரசரத்தினம்.சி, ஆசியாவில் தேசியவாதத்தின் மூலங்கள். பார்க்க: கூடம், ஏப்பிரல் - ஜூலை 2009.ப.45). இது 1960களில் எழுதப்பட்டது. இன்று இன்னும் விரிவாக நமது தேசிய இயக்கங்களில் மதம் வகித்த பாத்திரம் குறித்தது பேசப்பட்டுள்ளது. இருப்பினும் இந்துத்தேசியத்தால் ஒடுக்கப்பட்டபோது இயல்பாக உருவாகத்தக்க இஸ்லாமியத் தேசிய உணர்வை வகுப்புவாதமாகக் காணும் தவறு, பல அம்சங்களில் மிகுந்த முக்கியத்துவமிக்க விடயங் களை வலியுறுத்துகிற ஒருவரிடமும் ஏற்பட்டுவிடுகிறது என்பதையே புதிய புத்தகம் பேசுது நேர்காணலில் மொரே வாயிலாக வெளிப்படக் காண்கின்றோம். அவர் மதத்தையோ சாதியையோ சார்ந்து செயல்படும் ஒருவரை தேசியவாதி யாகக் கூறமுடியாது எனக்கூறியிருந்ததையும் கண்டோம். இங்கு பெரியார் வேண்டப்படுகிறார்; 1925 இல் பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறியபோது தமிழகக் காங்கிரஸில் பிராமண ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகக் கூறி பிராமண ரல்லாதார் சாதி நோக்கைத்தானே முன்வைத்தார்! ஜோதிராவ் புலேயும் இந்தியக் காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னெடுப்பதாகக் கூறித்தானே அதனை எதிர்த்தார்! பிராம ணரல்லாதாருக்குள்ள ஏதாயினும் ஒரு சாதி மேலாண்மை சாத்தியப்பட்டால், ஒடுக்கப்பட்ட ஒரு சாதிப் பிரிவு தனது தேசியத்தை முன்வைக்கக்கூடாதா, இஸ்லா மியத் தேசியம் மேலெழுந்தது போல?

( 2 )

மார்க்சியர்கள் ஒரு கோட்பாட்டு வரையறைக்குள் நிற்பத னால் புதிய விடயங்களைக் காணத்தவறுகிறார்கள் எனக் கூறும், மார்க்சியத்தைக் கடந்து சிந்திப்பவர்களான அமைப் பியல்வாதிகள் பின்நவீனத்துவவாதிகள் கூட சாதித் தேசியத் தின் சாத்தியத்தை ஏற்க முடியாதவர்களாகவே உள்ளனர். எவரது விருப்பு வெறுப்புக்கும் அப்பால் யதார்த்தம் தன் பாட்டுக்கு இயங்கிக்கொண்டு இருக்கும். மக்கள் விடுதலைக் கான திசை மார்க்கத்தில் அதனைச் சரியாக அணுகிக் கோட்பாட்டு உருவாக்கம் செய்து இயக்க வடிவப்படுத்து வதற்குத் தவறும்போது, ஆதிக்கசக்திகள் மக்களைப் பிளவு படுத்துவதற்கு அவற்றைக் கையாண்டு தாறுமாறானதாக ஆக்கிவிடுவார்கள் - பாகிஸ்தான் பிளவுபட்டதைப் போல.

தான் செய்த மிகப்பெருந்தவறு பாகிஸ்தானை உருவாக்கி யமை என ஜின்னா தனது இறுதிக்காலத்தில் வருத்தப்பட்ட தாக அறிய முடிகிறது. உண்மையில் தெற்காசியப் பிராந்தியத் துக்கு கேடாக அமைந்த அதேவேளை, முஸ்லிம் மக்க ளையே பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தியதாகவுமே பாகிஸ் தான் உருவாக்கம் அமைந்தது. இதுகுறித்து மேற்படி நேர் காணலில் மொரே கூறியுள்ளார். எல்லா இடங்களிலுமுள்ள இஸ்லாமியர் நலன்களைப் பாதுகாப்பதே ஜின்னாவின் நோக்கமாக இருந்தது. ஜின்னாவின் சாதனை என்பது முஸ் லிம்களை பிரித்ததுதான். முஸ்லிம்களை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுத்தார். ஆனாலும் இந்தியா ஏறக்குறைய காப்பற்றப்பட்டது. ஏனெனில் பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு மாகாணங்கள் இந்தியாவின் பகுதிகளாக இருந்ததில்லை. 19ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்தப் பகுதிகளை பிரிட்டிஷார் இந்தியாவோடு இணைத்தனர். இந்துக்கள் சற்றே இழந்தார்கள். இஸ்லாமியர்கள் நிறைய இழந்தார்கள் என்பது மொரேயின் கருத்து.

பிரதேச அளவில் இந்துக்கள் இழந்தது குறைவு எனக்கூற முடிந்தாலும், இன்றுவரை வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழப்பதற்கான ஒரு காரணியாய் இப்பிரி வினை அமைந்திருப்பதை மறுத்துவிடமுடியாது. சுதந்திரம் பிளவுபடாதது. இஸ்லாமியர்களின் உரிமை மறுக்கப்படுகிற போது இந்துக்களுக்கு மட்டும் சுபீட்சமான வாழ்வு சாத்தியப் படப் போவதில்லை. மறுதலையாக சொன்னால், அதிகாரத் துவத் தரப்பு மிகப் பெரும்பான்மையினரான இந்துக்களை ஒடுக்கிச் சுரண்டி சுபிட்சமற்ற வாழ்வுக்கு நிர்ப்பந்திப்பதை மறைக்கவே, இஸ்லாமியர்மீதான வெளிப்படையான ஒடுக்குமுறையைக் காட்டிக் கொள்கின்றது என்பது இன் றைய இந்திய நிதர்சனம்; முஸ்லிம்களது சுதந்திரம் மறுக்கப் படுகிறபோது அங்கு இந்துக்களின் சுதந்திரம் இழக்கப்பட்டி ருக்கிறது என்பதே பொருள். இலங்கையில் சிங்களப் பேரின வாத  அரசுகள் சிங்கள மக்களது உரிமைகளையும் வாழ்வாதா ரங்களையும் பறித்து மறுப்பதை மறைக்கவே ஏனைய தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை.

இத்தகைய உரிமை மறுப்புகள் இனரீதியாக மட்டுமே நிகழும் என்றில்லை. அதிகாரத்தரப்பு தனக்கு சாதகமான அடையாளம் ஒன்றை வலுவான தளமாக வைத்துக் கொண்டு, ஏனைய அடையாளங்களுக்குரிய மக்கள் பிரிவி னர் மீதான ஒடுக்குமுறைகளைக் கையாண்டு அவர்களது உரிமைப் பறிப்புகளே முந்திய தமக்கான அடையாளப் பிரி வினரது மீட்சிக்கு வாய்ப்பு எனக் காட்ட உள்ள சந்தர்ப்பங் களைத் தவறவிடுவதில்லை. அதற்கேற்ற மற்றும் ஒரு பேர டையாளமாக சாதி திகழ்கின்றது. அதிகாரத்தரப்பு ஏதாயின மொரு சாதியின் நலன் சார்ந்து செயற்படுகிறபோது, புறக் கணிக்கப்படுவதாக உணரும் மற்றொரு பேரடையாளத்துக்கு வாய்ப்பான சாதி தாம் பெரும்பான்மையாக உள்ள பிரதேசத் தில் தமது நலன்கள் முன்னுரிமை பெறுவதற்கு ஏற்ற பிரிவி னைக்கான சாதகத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக் கும். மொழிசார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் பெரிதான பேரடையாளத்தைப் பிளவுபடுத்துவது தவிர்க்க முடியாது எனக் கருதினால் இத்தகைய சாதியடையாளம் அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது தவிர்க்கவியலாததாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் - தமிழடையாளம் ஒன்று அரசியல்ரீதி யாகக் கட்டமைக்கப்பட வேண்டிய தருணத்தில் டெல்லி மத்திய அரசாங்கத்தை வலிமைப்படுத்தும் தவறான அதிர்ச்சி தரத்தக்க சிந்தனையை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராம தாஸ் (தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும்) முன் வைக்கின்றார் எனக் குறைபட்டுக் கொள்கிறார் தமிழவன் (மேலே குறித்த ஜனவரி தீராநதி சஞ்சிகையிலான கட்டுரை) நீண்டகாலமாக மருத்துவர் ராமதாஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இருப்பினும் இதனை வென்றெடுப் பதற்கான செயற்பாட்டுக் களத்தில் அவர் இறங்கவில்லை. அதற்கு ஏற்ற அளவில் வடதமிழகத்தில் பெரும்பான்மையின ராக உள்ள மருத்துவர் ராமதாஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதிப்பிரிவினர் புறக்கணிப்பை உணரும்பட்சத்தில் பிரி வினைக் கோரிக்கை செயற்பாட்டுக்கான இயக்கமாக வளர இடமுண்டு. வட தமிழகத்துக்கு உட்பட்டே தமிழகத்தின் தலைமையகமாய் சென்னை இருப்பதோடு பல்வேறு வாய்ப்புகள் இப்பிரதேசத்துக்கே அதிகம் உள்ளமையால் பிரிவினை நாட்டம் வலுப்பெறவில்லை. இவர்களுக்கு உள்ள முணுமுணுப்புக்கான அடிப்படை தமிழகத்தின் அரசியல் ஆதிக்கம் தென் தமிழகத்தின் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு சாதிப்பிரிவினரிடம் போயிருக்கிறது என் பதுதான். இவர்களைவிடவும் அந்தத் தென்தமிழக சாதிப் பிரிவினரினர் கூடுதல் பெரும்பான்மை பெற்றுள்ளமை யால், அதற்கான சட்டமன்ற உறுப்பினர்களே அதிகம் என்ப தால், அரசியல் ஆதிக்கப் பிரச்சனை வந்து தொலைக்கிறது.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது இந்திய அளவுக்கு மட்டுமன்றித் தமிழக அளவிலும் சொல்லப்படு கிற ஒன்றாகவே உள்ளது. அரசியல் ஆதிக்கப்போட்டி காரண மாக வடதமிழகம் பிரிவினையை விரும்புகிறது என்றால், பிரதேசப் புறக்கணிப்பை முன்வைத்து தென்தமிழகத்தில் பிரிவினை நாட்டம் எழுவதுண்டு. எல்லாவற்றுக்கும் சென்னைக்கா வரவேண்டும், தென்தமிழகத்தில் அதிகாரப் பகிர்வோடு கூடிய அதிகாரமையம் வேண்டாமா என்ற கோரிக்கை அவ்வப்போது தென்தமிழகத்திலும் எழுவ துண்டு. குறிப்பாக உச்சநீதிமன்றம் தொடர்பாக இத்தகைய கோரிக்கை வலுத்தபோது சிலவருடங்களின் முன்னர் மதுரையில் பல அதிகாரங் களுடன் உச்சநீதிமன்றப் பிரிவு உரு வாக்கப்பட்டதை அறிவோம். இவ் வகையில் மேற்கொள்ளப்படும் அர வணைப்பு என்பதோடு தமிழகம் பூராவுமான அரசியல் ஆதிக்க வாய்ப் பும் காரணமாக தென்தமிழகப் பிரிவினை அங்கே செயற்பாட்டுக் கான வளர்ச்சி பெறாது உள்ளது. இன்னொரு வலுவான காரணியும் தமிழகத்தில் பிரிவினைக்கோரிக்கை வெகுசனமயப்படுவதற்கு தடையை  ஏற்படுத்துவதாக அமைந் துள்ளது. இதனை அ.மார்க்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார். அதே  ஜனவரி தீராநதி இதழில் அவர் எழுதிவரும் தொடரான    பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என்பது, தெலுங்கானா கோரிக்கையும் திணைநிலை உருவாக்கங்களும் என்ற தலைப்போடு வெளி வந்தது. தமிழகப்  பிரிவினை சாதியடையாளத்தோடு முன் வைக்கப்படுவதனைக் கூறி ஒன்றுபட்ட தமிழகத்துக்கான வாய்ப்புக் குறித்து அவர் தெரிவிக்கும் கருத்தை காண்பது அவசியமானதாகும்.

சந்தடிசாக்கில் தமிழ்நாட்டையும் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இங்கு சிலர் எழுப்பினர். இந்தக் கோரிக்கையை எழுப்பியவர் கள் பெரும்பாலும் சாதிரீதியான பின்புலம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு வரலாற்று ரீதியாகவோ, பொருளியல் ரீதியாகவோ ஏதும் நியாயமில்லை. தமிழ்நாடும் கூட இன்றிருக்கும் வடிவத்தில் இணைக்கப்பட்டது சமீபத்தில்தான் என்றபோதிலும் வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற அடையாளம் கட்டமைக்கப் பட்டது சமீபத்தில் அல்ல. அதற்கு ஒரு 2000 ஆண்டு காலப் பாரம்பரியமுண்டு. தவிரவம் இத்தகைய ஒரு பேரடையா ளத்தைக் கற்பித்துக் கொண்டவர்களாயினும் புவியியல் அமைப்பு, பண்பாடு, உணவு, உற்பத்திமுறை என எல்லா வற்றிலும் வேறுபட்ட ஐந்துதிணை நிலைகளை உள்ளடக் கிய பாரம்பரியம் நம்முடையது. இந்த உள்ளடக்கும் பாரம் பரியத்தை (மிஸீநீறீவீஸ்மீ ஜிக்ஷீணீபீவீவீஷீஸீ) காப்பாற்றுவோம் என்பது அ.மார்க்ஸ் கருத்து.  இந்தளவுக்கு இல்லையெனினும் தெலுங்குமொழி சார்ந்து ஆந்திரா முழுமையையும் ஒன்றிணைக்கும் உள்ளடக்கும் பாரம்பரியம் அவர்களுக்கும் உரியதுதான். இருபகுதியின ரது தெலுங்கு மொழிப்பிரயோகம் - உச்சரிப்பு என்பவற்றில் பாரிய  வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தி லும் நான்கு திசைகளது தமிழ் உச்சரிப்புகள் - பிரயோகங்களி டையே வேறுபாடு நிலவத்தான் செய்கிறது. அதைவிட ஆந்திரா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது, தெலுங்கானா மன்னராட்சிக்கு உட்பட்டு நீண்ட காலம் இருந்தது எனும் ஆழமான வேறுபாடு உள்ளது. தமிழகத்திலும் நாயக்கர், மராட்டியர் ஆட்சியென வேறுபாடுகள் இருந்தபோதிலும் வெள்ளையராட்சிக்குள் கணிசமான காலம் ஒன்றுபடுத்தப்பட்டிருந்தது தமிழகம். இங்கும் பிரெஞ்சு ஆட் சிக்கு உட்பட்டிருந்த பாண்டிச்சேரி தனி யூனியனாக இயங்க முடிகிறது. அதைவிட, ஈழத்தமிழ் பலவகை களில் தமிழகத்தோடு இரத்த உறவை யுடையதாயினும் வேறு நாட்டுக்குரி யதாய் மிக அருகிலேயே இருக்க முடிகிறது.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் தெலுங்கானா பிரிவதற் கான வாய்ப்புகளை அதிகமாகவே கொண்டிருப்பதைக் காணமுடியும். பிராந்திய புறக்கணிப்பு, ஒடுக்குமுறை ஆகி யன முற்றாக தவிர்க்கப்படும் வாய்ப்பை வெளிப்படுத்தி இணைப்பை நீடிக்க முடியுமேயன்றி அதிகாரப் பிரயோகங் களால் தமது சுயநிர்ணயத்துக்காக போராடும் தெலுங்கா னாவை முற்றாக ஒடுக்கிவிட முடியாது. இது ஒரே மொழி பேசும், நிலத்தொடர்பு இணைப்புடைய பிராந்தியம் (திணை) ஒன்று கோருகின்ற சுயநிர்ணயக் கோரிக்கை. இங்கு தேசியம் புதிய வடிவில் வீரியம் கொள்கிறதேயல்லாமல், தேசியமே வலுவிழக்கிறது என்பதில்லை.

இங்கு எமது அக்கறைக்குரிய விடயம் தெலுங்கானா தேசி யத்தை இயக்குவதில் சாதித் தேசியத்துக்கு ஏதும் இடமுள் ளதா என்பதுதான். இது குறித்து அ.மார்க்ஸிடம் தகவல் ஏது மில்லை; அவர் சாதித் தேசியத்துக்கான வாய்ப்புக் குறித்த தேடலில் இறங்க விருப்பமற்று இருப்பதால் காண முடியாமலும் இருக்கலாம். ஆயினும் அதற்கான வாய்ப்பு - சாதி சார்ந்து தேசிய உணர்வு வலுப்பெற ஏற்ற நிதர்சனம் குறித்த அருட்டுணர்வு அவரிடம் உண்டு, சாதி மற்றும் பழங் குடி அடிப்படையிலான அடையாளங்களும் இன்று தம்மை உறுதி செய்யத் தொடங்கியுள்ளன. இந்த வேட்கைகளை இன்று இனம், மொழி ஆகிய மேலிருந்து கட்டப்படும் பேரடையாளங்களால் நசுக்கிவிட இயலவில்லை என அ.மார்க்ஸ் கூறுவதில் இதனைக் கண்டுகொள்ள முடியும். பின்நவீனத்துவப் பேரடையாளக் கதையாடலில் மெனக் கெடுவதால் மார்க்ஸிய அடிப்படையிலான தேசியப் பிரச்சனையின் இன்னொருவடிவமாக இதனை அவரால் காண முடியாதுள்ளது.

வட தமிழகம் - தென் தமிழகம் எனும் உணர்வுகளில் இரு பகுதிகளிலுமுள்ள ஒவ்வொரு அறுதிப் பெரும்பான்மையாக வுள்ள ஆதிக்க வாய்ப்புள்ள சாதிகளுக்கான தேசிய நலன் போல, தெலுங்கானாவின் தனிச்சாதித் தலைமை சாத்திய மில்லாமல் இருக்கக்கூடும். ஆந்திராவுக்கான ஆதிக்கச் சாதி களான ரெட்டி, நாயுடு ஆகிய சாதிகளது தெலுங்கானாவி லான செறிவு எத்தகையது? அங்கு மிகமிகச் சிறுபான்மை யாக இருந்தபடி இவர்களது பொருளாதார - அதிகார உத்தி யோக அபகரிப்பைக் கொண்டிருக்கிறார்களா? இவற்றுக்கு எதிரான ஏனைய சாதிகளது அணிசேர்க்கை தெலுங்கானா வில் ஏற்பட்டுள்ளதா? இவை குறித்த தகவல்கள் இல்லை. இவை எல்லாம்விட ரெட்டி, நாயுடுகளின் ஜாதிக் கொழுப் பும் இதனை பசைபோல் பற்றியுள்ளதை எத்தனை காலம் தான் மக்கள் பார்க்காதது போலவே நடிப்பார்கள் என்ற அ.முத்துக்கிருஷ்ணன் கேள்வியில் தொக்கிநிற்கும் சமூக வியல் யதார்த்தம் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை (அ.முத்துக்கிருஷ்ணன். தெலுங்;கானா - நிராகரிப்பின் துர்வாசனை. உயிர்மை, ஜனவரி.2010).

இங்கு எமது கவனத்துக்குரிய அம்சம் புறக்கணிப்புக்குள்ளா கும் சாதி அல்லது சாதிகள் தேசிய நலனுக்குட்பட்ட வடிவங்கொள்ள இடமுண்டு என்பதுதான். ஆதிக்கம் செய்யும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாதிகள் பிர யோகிக்கும் மேலாண்மைக்கு எதிராக புறக்கணிக்கப்படும் சாதிகளில் வலுவோடுள்ள சாதி ஏனையவற்றை அணி திரட்டித் தேசிய வடிவமுள்ள கோரிக்கைகளை முன் வைப்பது ஏற்கனவே வரலாற்று அரங்கில் நிதர்சனமாகத் தொடங்கிவிட்டது; அதற்கு வடிவங்கொடுக்கும் சாதி நிலைப்பட்ட கட்சி உருவாக்கமும் இனங்காணப்பட்டுள் ளது. முதலாளி வர்க்கம் தேசிய உருவாக்கத்தில் ஏனைய வர்க்கங்களை அணிதிரட்டித் தலைமை தாங்குவதைப் போலவே பிராந்திய (திணை) பிரிவினைக் கோரிக்கையில் சாத்தியமுள்ள ஒரு சாதி ஏனைய சாதியினரை ஐக்கியப் படுத்தி சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்க ஏற்றதான வாய்ப்பைக் கண்டுகொள்ள விரும்பாமல் மணலுக்குள் முகம் புதைத்துப் பயனில்லை. எமக்கான ஏற்றத்தாழ்வான சமூக உருவாக்கம் ஆதிக்கச் சாதி யாக கட்டமைத்துக்கொண்ட இனக்குழு, வெறும் ஒன்றிரண் டுடன் கூட்டமைத்து தமது திணையின் மேலாண்மையில் ஏனைய திணைகளுக்குட்பட்ட இனக்குழுக்களை சாதி களாக்கிக்கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக நிறைவேறிய ஒன்றாகும். இப்போது புறக்கணிக்கப்படும் பிராந்தியம் (திணை) மேலாதிக்கம் செலுத்தும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சுயாட்சி கேட்பது தவிர்க்கவியலாத ஒரு அவசியம்.

வர்க்கப்பிளவுபட்ட ஐரோப்பியச் சிந்தனைமுறையில் இயங் கியமையால் கோட்பாட்டு உருவாக்கம் செய்து இதற்குரிய நடைமுறைப்பிரயோகம் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை; இப்போது தன்னெழுச்சியாக உருவாகியிருக்கும் இப்பிரச்சனையைப் புரிந்துகொள்ளவாயினும், சாதிமுறை யென்பது தனிவகைப்பட்ட சமூக உருவாக்கம் என்ற உண்மையின்பால் கவனஞ் செலுத்தியாக வேண்டும். திணை மேலாண்மையிலான சமூக ஏற்றத்தாழ்வையுடைய சாதியச் சமூக உருவாக்கம் குறித்த ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளன; அதன் தனித்தன்மைமிக்க பண்பு வேறுபாடுகளின் பரிமா ணங்கள் சரியாக இனங்காணப்படவில்லை. இத்தகைய சமூக முறைக்கான சமூக மாற்றப் புரட்சிகளுக்கான வடிவ வேறு பாடு குறித்துப் பேசப்பட்டுள்ளது. அந்தவகையில் விரிவாக இங்கு அவைகுறித்து விவாதிப்பதைத் தவிர்த்து சாதியிருப்புக் கொள்ளும் தேசியவடிவம் குறித்து அலசுவது அவசியம்.

பாகிஸ்தான் உருவாக்கம் யதார்த்தம் ஆக்கிய பிரதான அம்சம், தேசம்  மொழியை மையமாக்கியது என்பதைக் கடந்து மதம் தேசியத்துக்கான அடிப்படையாக முடிந்தது என்பதாகும். இவ்வகையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரண மாக புறக்கணிப்பையும் ஒடுக்குமுறைமையும் உணரும் எவ் வகையிலுமான பிரிவினர் தேசிய வடிவம் கொள்ள முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சாதிகள் தேசியப் பண்புமிக்கவை என அம்பேத்கர் வலியுறுத்தியதை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியம். அம்பேத்கரது இக்கருத் தினை எடுத்துக்காட்டுகிறவர்களுங்கூட மேலே நாம் பார்த்து வந்தவாறான சாதித்தேசியம் என்பதோடு தொடர்புறுத்திப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு விடயத்தையும் அதது சார்ந்த தாகக் குறுக்கிப் பார்த்துப் பகுதிபகுதியாகவே செயற்பட்டுத் தொலைப்பதே நமது பல பின்னடைவுகளுக்கும் காரணங் களாகின்றன. பகுதி விடயத்துக்கான இயங்காற்றலையும் முழுமை சார்ந்த தொடர்பாடல்கள் - உறவுப் பரிமாற்றங்கள் - செல்நெறியின் தாக்குறவில் ஏற்படத்தக்க புதிய போக்குகள் என்பன கவனங் கொள்ளப்படுவதில்லை. இவை ஒன்றோ டொன்றான சார்புநிலைகளில் நமக்குரியதான சமூக விடயங்களைக் கவனத்திலெடுத்து சாதிச் சமூகத்துக்குரிய தான கோட்பாட்டுருவாக்கம் செய்யப்படாமையினால் நமது புரட்சியின் கோரிக்கையை அறியாதுள்ளோம். சாதியப் பிரச்சனைகள் குறித்த செயற்பாடுகளில் பற்றார்வத்துடன் மார்க்சிய அமைப்புக்கள் இன்று ஈடுபடுடத் தொடங்கியுள் ளமையினால் எதிர்காலத்தில் சரியான கோட்பாட்டுரு வாக்கமும் நடைமுறைப் பிரயோகமும் சாத்தியமாகும்.

இங்கேதான் மார்க்சிய நிலைப்பட்ட வர்க்கப் பார்வை அவசியமானதாகிறது. சாதிச்சமூக இருப்பை மார்க்சியர்கள் கவனத்திற்கொள்ளாத நிலையில் சாதியக் கட்சிகள் இப்பிரச்சனைகளைக் கையில் எடுத்துக் கொண்டன. அவர்களது சாதிய நோக்கு அடிப்படையில் முன்னேற முடி யாத இடர்ப்பாடுகளை இன்று சந்தித்துள்ளனர். பிரதான எதிரியை இனங்கண்டு, அதற்கு எதிராக சாதிபேதங்களைக் கடந்த பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கான சாத்தியம்பற்றி கோட்பாட்டுத் தெளிவின்மையினால் அவ்வப்போதைக் கான சந்தர்ப்பவாதக் கூட்டுக்களையே அவர்களால் ஏற் படுத்த முடிந்தது;அதுவே  அவர்களது அடிப்படைத்தளமான சமூக சக்திகளை நட்டாற்றில் தத்தளிக்கவிடுவதற்கும் வழி கோலியது. குறிப்பாக அத்தகைய கட்சிகளை நம்பி அரசியல் அநாதைகளான தலித் மக்கள் இன்று மீண்டும் மார்க்சியத்தின் பால் கவனஞ் செலுத்த முன்வந்துள்ளனர்.

சாதி வாழ்முறைகளுக்குள் இருக்கும் வர்க்க அமைவின் பிரச் சனையை சாதிய நோக்கிலான ஒரு அரசியல் அக்கறையாளர் எவ்வாறு முகங்கொண்டு அதிர்வுக்கு உள்ளாகிறார் என்பதற்கு நேர்காணல் ஒன்றில் சிவகாமி வழங்கிய பதில் சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்வேறு சமூகத்தினர் எனும் போது சாதியடையாளத்தை அழித்து வருவது அல்லது அதே அடையாளத்தோடு வருவது என்பவை இருக்கும் இல் லையா? ஸ்டாலின் ராஜாங்கம் முன்வைத்த கேள்வி இது. இதற் கான சிவகாமியின் பதில் இவ்வாறு அமைந்தது; அண்மையில் திருச் செந்தூர் போயிருந்தபோது அக்கிர ஹாரத்தில் இருப்பவர்கள் திரண்டு வரவேற்றார்கள். நாங்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை பிராம ணாளக் காப்பாத்துங்கோ என்றார் கள். இது எனக்குப் புது அனுபவ மாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. அவர்களை எது துரத்துகி றது என்று பார்த்தால் கோயிலை நம்பித்தான் அவர்கள் வாழ்கி றார்கள். ஏழைகளாய் நிறுத்தப்பட்ட வர்களை மீட்பதற்குக் குறைந்தபட்சத் திட்டத்தை நாம் பேசுகிறோம். (எழுத்தாளர்களால் அரசியலை மாற்ற முடியுமா? காலச்சுவடு 112.ஏப்ரல் 2009.ப.30) முற்றுமுழுதான ஏற்றத்தாழ்வுகளைத் தகர்க்கும் மார்க்கத்துக் கான நீண்டகால மூலோபாயங்களையும் குறுகியகாலத் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்படும் மார்க்சியர் கள் இத்தகைய சமூக யதார்த்தங்களை உள்வாங்கி இயங்குப வர்கள் என்கிற வகையில் அவர்களை இத்தகைய நிலை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை. தவிர, தலித் மக்களது விடு தலை சாத்தியப்படாதபோது பிராமணருக்கான விடுதலையும் பெறப்படவியலாதது எனும் தெளிவும் உள்ளது.

சாதிகளின் தேசியப்பண்பு நிதர்சனத்தை ஏற்பதால் ஒன்றோ டொன்றான மோதல்களை ஏற்க அவசியமில்லை. பொது எதிரிக்கு எதிராக பல்வேறு சக்திகளை ஐக்கியப்படுத்துவதை சாத்தியமாக்குவதற்கு அமைவான கோட்பாட்டு உருவாக்க லுக்காகவே இந்த ஆய்வில் மார்க்சியர்கள் இறங்க நிர்ப்பந் திக்கப்படுகின்றனர். ஒடுக்குமுறையின் தன்மை, சுயாட்சி கோரும் சக்தியின் சுயநிர்ணயத்துக்கான அவசியம், மக்கள் விடுதலைச் செல்நெறியுடனான தாக்குறவு என்பவற்றைக் கொண்டு பிரிவினைக்கான ஆதரவையோ, ஈடுபாட் டையோ, எதிர்ப்பையோ மார்க்சிய அணி தீர்மானிக்கும்.

இது தொடர்பில் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கும் அம்சம் கவனிப்புக்குரியது: தனி மாநிலக் கோரிக்கைகளை நாம் பொதுவாக ஆதரிப்பதா இல்லையா? புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க மார்க்சிய அறிஞர் ஜேம்ஸ் பெட்ராஸ் சமீபத்தில் கூறியுள்ளதுபோல இம்மாதிரிப் பிரிவினைக் கோரிக்கைகளை, அவை பிரி வினைக் கோரிக்கைகள் என்பதற்காகவே ஆதரித்துவிடவோ அல்லது எதிர்த்துவிடவோ இயலாது. அந்தக் கோரிக்கை களை யார் வைக்கின்றனர், அப்பகுதி மக்களின் பூரண ஒப்பு தல் அதற்குள்ளதா, இந்தக் கோரிக்கைகளுக்குப் பின்புலமாக ஏதும் சக்திகள் செயல்படுகின்றனவா, அவற்றின் நோக்கம் என்ன, பிரிவினை தவிர்த்த வேறு என்ன சாத்தியங்கள் உள் ளன என்கிற கேள்விகளுக்கான பதிலை ஒட்டியே இப் போராட்டத்தை நாம் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இயலும்.

அந்தவகையில் பிரிவினைக்கான கோரிக்கைகள் வலுப்பதாலேயே தேசியப்பேரடையாளம் தகர்ந்துவிடும் எனக் கருதவேண்டி யதில்லை. வெறும் தேசம், இனம், மொழி, ஒருமைப்பாடு முதலான பேரடையாள முழக்கங்களின் மூலம், உள்வேறுபாடுகளைப் புறக்கணித்து ஒரு ஒற்றுமையைக் கட்டி விடமுடியும் என்கிற மமதையை நமது தேசியவாதிகள் விட்டுத் தொலைக்க வேண்டும்  என அ.மார்க்ஸ் வலியுறுத்தும்போது மேலே காட்டப்பட்டவாறு அவசியமற்ற பிரிவினையை மக்கள் விடுதலை நலன் அடிப்படையில் மறுக்கவும் உள்ள நியாயங்களை ஏற்கிறார் என்பதே பிரதானமாகும். அனைத்துப் பிரிவினரது சுய நிர்ணய உரிமையின் அங்கீகரிப்பே முக்கியம். தேசம் என்ற வடிவம் சாதிஅலகு வரைக்கும் நெகிழ்வுள்ளதாயினும், அனைத்தும் பிரிய அவசியமற்றவை; தேசியம் என்பது வெறும் பேரடையாளம் அல்லது குறித்த சூழல் ஒன்றில் வாழும் மக்கள் தமது சுய நிர்ணயத்தை வரையறுப்பதற்கான அரசியல் வடிவம்; அதற்கு பங்கம் ஏற்படுவதனை உணரும் பிரிவினர் தமக்கான சுயாட்சிக்காகப் போராடவும், ஏற்ற வடி வங்களில் சுயநிர்ணயத்தை வரையறுத்து வென்றெடுக்கவும் இயலுமானவர்களாய் இருப்பர். இவ்வாறு காணும்போது பிராந்தியம் (திணை) சார்ந்த தேசியத்திலிருந்து சாதித் தேசி யத்துக்கு அடிப்படையான சில வேறுபாடுகள் உள்ளமை யையும் கவனத்தில் கொள்வது அவசியம். அந்த வகையில் சாதித் தேசியத்தின் சுயநிர்ணயத்துக்கான வரையறைகள் குறித்து எதிர்காலச் சந்திப்பொன்றில் அலசுவோம்.

- ந.ரவீந்திரன்

Pin It

இந்தியாவில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆராய்ச்சி செய்த மேனாட்டு மானிடவியலாளரான மிக்கின் மாரெட்டு இருவேறு வழிபாட்டு மரபுகள் நாட்டுப்புற மக்களிடையே வழக்கத்தில் இருப்பதைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். எழுத்து வடிவில் நடத்தைவிதிகளைப்  பின்பற்றும் பெரு (நெறி) மரபு மற்றும் எவ்விதமான எழுத்துவடிவ நடத்தை விதி களையும் பின்பற்றாமல் மரபுசார்ந்த, எழுதப்படாத நடத்தை விதிகளைப் பின்பற்றும் சிறு(நெறி)மரபு என பாகுபடுத்திக் காட்டுகிறார்.1

நாட்டுப்புற மக்களின் மண்ணிற்கு இயல்பான மரபைச் சிறு (நெறி) மரபு எனவும் அவர்களின் மண்ணிற்கு அயலான மரபைப் பெரு (நெறி )மரபு எனவும் பதிவு செய்யும் ஆராய்ச்சி அணுகுமுறை பொருத்தமானது அல்ல.2 மாறாக, இவற்றை முறையே இயல்மரபு, அயல் மரபு என மாற்றுச் சொல்லாட்சி களால் குறிப்பிடுவதே முறையானது.3 எழுத்துவடிவ நடத்தைவிதிகளைப் பின்பற்றாமையை மட்டுமே இயல் மரபுக்கான அடையாளம் என்று கொள்ள வேண்டுமா அல்லது இயல் மரபை அறுதியிடுவதில் வேறு ஏதாவது பண் பாட்டுக் காரணிகள் உள்ளனவா என்று காண முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இதற்காக இந்தியாவில் காணப்படும் பழங் குடி மற்றும் நாட்டுப்புறப் பண்பாடு சார்ந்த தரவுகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.

இயல் மரபையும் அயல் மரபையும் பிரித்து அறிவதில் நிலவிடும் சிக்கல்கள்

இயல்மரபை அறுதியிடுவதற்கான ஆராய்ச்சி முயற்சியில் ஈடு படும் முன்பாக இன்றைய பண்பாட்டுத் தளங்களில் காணப் படும் இயல் மரபையும் அயல் மரபையும் எளிதில் பிரித்தறிய முடியுமா என்ற கேள்வி தோன்றுகிறது. ஏனென்றால், பெரும் பாலும் இந்திய வழிபாட்டு மரபுகளில் இயல் மரபும் அயல் மரபும் பல்வேறு நிலைகளில் காலம்காலமாகப் பின்னிப் பிணைந்து ஊடாடி வருகின்றன. ஆகவே இந்திய வழிபாட்டு மரபுகளில் பின்னிப் பிணைந்து காணப்படும் அயல்மரபையும் இயல் மரபையும் வேறுபடுத்தி பிரித்து அறிந்து இனம் காண்பது அவ்வளவு எளிதான செயலாக அமைவதில்லை.இதற்குச் சான்றாக, மேற்கு தமிழகத்தில் பெரும்பகுதியாக விளங்கும் கோயம்புத்தூரில் பெரிய அளவில் கடைபிடிக்கப் படும் இயல்மரபான கூத்தாண்டெ நோம்பி என்னும் நாட்டுப் புறத் திருவிழாவில் அரவான் பண்டிகை என்னும் அயல் மரபும் எளிதாகப் பிரித்தறிய முடியாதவாறு கலந்து காணப்படு வதை எடுத்துக்காட்டலாம். இவ்வழிபாட்டு மரபின்போது பாடப்படும் ..... நாடு செழிக்கோணும் நல்ல மழை பெய்யோணும்
ஊரு செழிக்கோணும் உத்த மழை பெய்யோணும்
களத்துக்கொரு மல்லாண்டை செய்யோணும்
ஊருக்கொரு கூத்தாண்டை செய்யோணும்
ஆணுபோன பக்கம் அரச பட்டோம் ஆளோணும்
பொண்ணுபோன பக்கம் பெத்துப் பெருகோணும்...  நாட்டுப்புறப் பாடல்வரிகள் மல்லாண்ட4 என்பது களம் செழிக் கவும் கூத்தாண்டெ என்பது ஊர் செழிக்கவும் வழிபடப்படு வதை எடுத்துக்காட்டிக் கூத்தாண்டெ நோம்பி இயல் மரபின் வகைப்பட்டது என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். இதனால், மேற்குத்தமிழக வளமை வழிபாட்டில் பண்பாட்டுத் தலைவனான கூத்தாண்டெ இயல்மரபுக்கூறு, மகாபாரதக் கதை மாந்தனான அரவான் என்னும் அயல்மரபுக்கூறுடன் இணைந்து இங்கு ஒன்றாகக் காட்டப்படுவது புலனாகும்.

கோயம்புத்தூர் வட்டாரப் பகுதியில் கடைபிடிக்கப்படும் இந்தக் கூத்தாண்டெ நோம்பியின் போது, கூத்தாண்டெ களப்பலி கொடுக்கப்படுவதாகக் காட்டப்பட்டாலும் நடுத் தமிழ்நாட்டின் (கூவாகம், பிள்ளையார் குப்பம், அண்ணாமலை நகர் திரு வேட்களம்) பகுதிகளில் காணப்படுவதுபோல கூத்தாண்டெ உருவத்தில் தலை நீக்கம் மேற்கொள்ளப்படாமல் பூசாரியின் இரு கைப்பெருவிரல்களால் முகம் அழிக்கப்படும் முகம் அழித்தல் என்ற சடங்கே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, முகம் அழிக்கும்போது கிடைக்கும் களிமண் வளமைக்காக ஊர்மக்களால் அவரவர் வீடுகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்நடைமுறையின் வாயிலாக கூத்தாண்டெ நோம்பியானது வளமை வழிபாட்டின் வகைப்பட்ட இயல் மரபு என்பதும் இது மகாபாரதக் கதையின் தாக்கத்தால் அரவான் களப்பலி என்னும் அயல் மரபுக்கூறுடன் இணைக்கப்பட்டுள் ளது என்பதும் மேலும் உறுதிப்படுகிறது.5 இதுபோன்ற (இயல்மரபுக்கூறுடன் அயல்மரபுக்கூறு இணைந்து விட்ட) கலப்புச் சூழல்களில் அயல் மரபிலிருந்து இயல்மரபை வேறுபடுத்திப் பிரித்தறிந்து அறுதியிட உதவும் பண்பாட்டுக் காரணிகளை இனம் கண்டு அவற்றைப் பதிவு செய்வது வழி பாட்டு மரபுகளை ஆராயும் தமிழக மாந்தவியல்சார் ஆய்வுல கில் முக்கியத் தேவையாகும். இருப்பினும், எப்போது இது போன்ற பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன எனத் துல்லியமாக எடுத்துக்காட்ட முடியா நிலை நிலவுகிறது.

நாட்டுப்புறச் சமயம்சார் மந்திர மரபுகளும் இயல்மரபை அறுதியிடுவதில் அவற்றின் பங்களிப்பும்

நாட்டுப்புறச் சமயம்சார் நடைமுறைகளில் தொல்சமயக்கூறுக ளில் ஒன்றான மந்திரம் மக்களால் பின்பற்றப்படும் இரு வேறு அடிப்படை விதிகளின்படி6 தொத்து மந்திரம் தொடு மந்திரம் என்றும் ஒத்த மந்திரம் அல்லது பாவனை மந்திரம் என்றும் இருவகைகளாகப் பிரித்து அறியப்படுகிறது. நாட்டுப்புற வழி பாட்டு மரபில் இந்த இருநிலை மந்திரங்களும் தமக்கெனத் தனித்த இடங்களைப் பெற்று மண் ணிற்கே உரிய இயல் மரபை அறுதியி டுவதிலும் பெரிய அளவிற்குத் துணை நிற்கின்றன என்பதைக் கீழ்க் குறித்த பண்பாட்டுக் காரணிகள் வழியே சற்று விரிவாகக் காண்போம்.

பண்பாட்டுக்காரணி:1-வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்றுதல்

உருவாக்கப்பட்ட வழிபாட்டு உருவங் களுக்கு ஆற்றல் ஏற்றுதல் என்பது இயல் மரபிலும் அயல் மரபிலும் காணப்படும் பொதுப்படையான வழக் கம். இருப்பினும், ஆற்றல் ஏற்றப் பட்ட உருவம் சற்றுச் சிதைந்து போய் விட்டாலும் அந்த உருவத்திலிருந்து ஆற்றல் வெளியேறிவிடும் என்றும் அதனால் அது ஆற்றல் இல்லாததாகி வழிபடுவதற்குத் தகுதி யற்றது ஆகிவிடுகிறது என்றும் கருதி அதை வழிபாட்டிலி ருந்து அகற்றிவிடுகிறது அயல்மரபு. இதற்கு நேர்மாறாக, ஆற்றல் ஏற்றப்பட்ட வழிபடு உருவம் உருக்குலைந்து துண்டு துண்டாகப் போய்விட்டாலும் அதன் ஆற்றல் உருக்குலைந்து போன அந்த வழிபடு உருவத்திலும் உடைந்த துண்டுகளிலும் நிலைத்து நிற்கிறது என்றும் அதனால் அது முன்னைப் போலவே ஆற்றல் கொண்டது என்றும் கருதி சிதைந்த வழி படு உருவத்தையும் அதன் துண்டுகளையும் தொடர்ந்து வழி பாட்டில் வைத்துக் கொள்கிறது இயல் மரபு. கோவை வட்டார அருந்ததியர் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படும் மதுரை வீரன் (உடனமர் பொம்மி, வெள்ளை யம்மா) வழிபாட்டு மரபை இதற்குத் தக்க சான்றாகக் குறிப்பிட லாம். இந்த வழிபாட்டு மரபிற்கென குதிரைமீது அமர்ந்துள்ள மதுரை வீரனுக்கு இருபுறமும் பொம்மி, வெள்ளையம்மா இருப் பது போன்ற சுடுமண் உருவத்தைக் கோயம்புத்தூர் வட்டார அருந்ததியர் சமூகத்தினர் ஆண்டுதோறும் தம் வாழிடங்களின் அருகில் அமைத்து வழிபடுகின்றனர். அந்த ஆண்டு முடிவதற் குள் இந்தச் சுடுமண் உருவம் மெல்லமெல்லச் சிதைந்து உருக் குலைந்து போகிறது. இருந்தாலும் அது தொடர்ந்து வழிபடப் படுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டு புதிதாக மதுரை வீரன் (உடனமர் பொம்மி, வெள்ளையம்மா) சுடுமண் உருவத்தைச் செய்து வழிபாட்டில் சேர்க்கும்போதும் முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்த உருக்குலைந்த பழைய சுடுமண் உருவங்களும் ஆற்றல் உள்ளவையாகக் கருதப்பட்டுத் தொடர்ந்து புதுச் சுடு மண் உருவத்துடன் சேர்த்து வழிபடப்படுகின்றன.

தங்களின் தற்போதைய வாழிடத்திலிருந்து நெடுந்தொலைவு சென்று தம் குலதெய்வத்தை வழிபட முடியாதவர்கள் அந்த தெய்வ உருவம் நிலை கொண்டுள்ள இடத்திலிருந்து பிடி மண் கொண்டுவந்து அதை வைத்துப் புதியதாக அந்த தெய்வ உரு வத்தை அமைத்தோ அப்பிடிமண்ணையே ஆற்றல்மிக்கதாகக் கருதியோ வழிபடும் வழக்கத்தை இங்கு ஒப்பிட்டுப் பார்க்க லாம். அதாவது, ஒருமுறை தொடர்புடையது எப்போதும் தொடர்புடையதாகவே இருக்கும் என்ற தொத்து மந்திர அடிப்படையை இயல் மரபினர் நம்புகின்றனர். அயல் மர பிலோ இதுபோன்ற தொடர் உறவுகள் நம்பப்படுவதில்லை என்பது இங்குக் கருத்தில் கொள்ளத்தக்கது. மேலும், வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்று தல் என்பது மிக எளிய சடங்காக இயல் மரபில் முடிந்துவிட, அயல் மரபிலோ இது மந்திர உச்சாடனம்,  வேள்வி என மிகப்பெரிய சடங்குத் தொகுதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதும் கவனம் கொள்ளத்தக்கது.

பண்பாட்டுக்காரணி-2: ஆற்றல் ஏற்றப்பட்ட வழிபடு உருவங் களுக்கு மறு உயிர்ப்பு அளித்தல்.

வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்றுதல் என்பது இயல்மரபி லும் அயல்மரபிலும் பொதுவாகக் கடைபிடிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் வழிபடு உருவங்களில் ஏற்றப் பட்ட ஆற்றலைத் தூண்டி அதற்கு மறுவுயிர்ப்பு அளிக்கச் சடங்கு மேற்கொள்வது என்பது இயல்மரபில் மட்டுமே மேற் கொள்ளப்படுகிறது. இதற்குச் சான்றாக, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், வெள்ளரிக்கொம்பைக் கிராமத்தைத் தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ள குறும்பர் பழங்குடியினர் ஆண்டுதோறும் நடத் தும் மறுஉயிர்ப்பு அளிக்கும் சடங்கைக் குறிப்பிடலாம். வெள் ளரிக்கொம்பை குறும்பர்கள பூசாரி ஆண்டுதோறும் குறிப் பிட்ட நாளன்று தன் வீட்டின் சுவர்மீது வரைந்து பின் வெள்ளை பூசி மறைக்கப்பட்ட இனக்குழுத் தெய்வ உருவத்தை அதன் வரைகோட்டின்மீது மீண்டும் வரைந்து, அதன் வாயிலாக அந்த வரையோவியத்தில் வாழ்ந்து வரும் இனக்குழுத் தெய்வத்தின் ஆவியை மறுஉயிர்ப்பு பெறச் செய்வதாக நம்புகின்றனர். இந்த மறு உயிர்ப்பிக்கும் சடங்கு முடிந்த மறுநாள் குறும்பர் பூசாரி முன்போலவே அந்த வரையோவியத்தின் மேல் மீண்டும் வெள்ளைபூசித் தெய்வ உருவை மறைத்துவிடுகிறார். இதனால்  அந்தத் தெய்வ உருவின் மீயியற்கை ஆற்றல் தேவையின்றி  வீணாகப் போவதிலிருந்து காக்கப்படுவதுடன் தேவைப்படும் போது மீண்டும் மீண்டும் முழுப் பயன்பாட்டிற்கும் தடை யின்றிக் காலங்காலமாக அதாவது, தலைமுறை தலைமுறை யாக தம் சமுதாயத்திற்கு கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக வும்  இந்தப் பழங்குடி மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு, வழிபடு உருவங்களில் வாழ்வதாக நம்பப்படும் ஆற்றலை மறு உயிர்ப்படையச்செய்வதற்குக் குறும்பர் பழங் குடியினரின் பூசாரி தங்கள் இனக்குழுத் தெய்வ உருவத்தை மீள வரையும் செயலைத் தொத்து மந்திர வகையின் கீழே அடக்கலாம். மேற்படித் தெய்வ உருவம் மறுவரைதலுக்கு உள்படுத்தப்படும்போது அதன் ஆற்றலும் மறைக்கப்பட்டுக் காக்கப்படுகிறது என்பதையும் ஒத்த மந்திர வகையினதாக இனம் காணலாம். இது போன்ற சடங்கு முறைகள் அயல் மரபுக்கு அயலானவை.

பண்பாட்டுக்காரணி-3: மறுஉயிர்ப்புக்குக் குருதியைப் பயன்படுத்துதல்

உயிரற்ற பொருள்களில் ஆவிகள் குடியேறுவதால் அவை ஆற்றலுடையவை ஆகின்றன என்றும் இடைவிடாத தொடர்ந்த பயன்பாட்டால் அந்த ஆற்றல் ஏறிய பொருள்கள் தமது ஆற்றலை இழக்கின்றன என்றும் அவ்வாறு ஆற்றலை இழக்கும்போது அந்த பொருள்களின் மறு உயிர்ப்புக்குக் குருதி தேவைப்படுகிறது என்றும் இயல்மரபில் கருதப்படுகிறது.  ஆந்திர மாநில சவரர் பழங்குடியினர் தாங்கள் பயன்படுத்தும்  வேட்டைக்கான அம்புமுனைகளில் ஆவிகள் குடியேறுவதால் அவை ஆற்றலுடையவை ஆகின்றன எனவும் இடைவிடாத தொடர்ந்த பயன்பாட்டால் அவை ஆற்றல் இழப்புக்கு ஆளா கின்றன எனவும் பெண்கள் வழக்கமாக வந்து செல்லும் நீர் நிலையின் வழிப்பாதையில் அவைகளைப்  போட்டு வைப்ப தால் நீர் கொண்டு வர அங்கு வந்துபோகும் பெண்களில் வீட்டு விலக்காகியுள்ள பெண்களின் குருதி பட்டு அதனால் மேற்படி அம்புகள் மறுவுயிர்ப்புப் பெற்று மீண்டும் ஆற்றலுடன் வேட்டையில் பயனளிக்கின்றன எனவும் கருதப்படுவதை இதற்குச் சான்றாகக் காட்டலாம். இதபோலவே வழிபடு உரு வங்களுக்கு மறுவுயிர்ப்பு அளிப்ப தற்காகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது விழாவின்போது குருதிப்படையலா னது இயல்மரபில் மேற்கொள்ளப்படுகிறது என்பதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

இவற்றுக்கு நேர்மாறாக அயல்மரபானது மறுவுயிர்ப்புச் சடங் கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாகக் குருதி இடம் பெறு வதைப் புறந்தள்ளி விலக்குவதையும்-அதிலும் குறிப்பாக குருதி வெளிப்படும் வீட்டு விலக்கையும் அவ்வாறு வீட்டு விலக்கா கும் பெண்களைத் தூய்மைக் குறைவானவர்களாகக் கருதுவ தையும் தன் இயல்பாகக் கொண்டுள்ளது என்பது இங்கு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. பண்பாட்டுக்காரணி-மிக்ஷி: இறந்தவர்களின் எலும்பு மிச்சங்கள் மீது காட்டப்படும் விழுமியம் இறந்தவர்களின் எலும்பு மிச்சங்கள் புனிதத்தன்மை வாய்ந் தவை என இயல்மரபும் அயல்மரபும் பொதுவாகக் கருதினா லும் அவற்றின் மீது கட்டப்படும் விழுமியத்தில் இரண்டும் பெரியளவிற்கு வேறுபடுகின்றன. இறந்தவர்களின் ஆவிகள் மறுபிறப்பு எடுக்க அவர்களின் எலும்பு மிச்சங்கள் பயன்படும் என அவற்றைப் போற்றிப் பாதுகாக்குமளவிற்கு இயல் மரபா னது அவற்றின் மீது விழுமியம் காட்டுகிறது. மாறாக, இறந்த வர்களின் எலும்பு மிச்சங்களை நீர்நிலைகளில் போடுவதுடன் தன் கடமை முடிந்துவிடுகிறது என அயல்மரபு கருதுகிறது.

எடுத்துக்காட்டாக, நீலகிரித் தொதவர் மற்றும் கோத்தர் பழங் குடியினர் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சடங்கைப்  பிச்சைச் சாவு என்றும் ஓராண்டு முடிவிற்குப் பின் அடக்கம் செய்த இடத்திலிருந்து இறந்தவர்களின் எலும்பு மிச்சங்களைத் திரட்டி மறு அடக்கம் செய்யும் சடங்கை உலர் சடங்கு என்றும் விரிவாகக் கடைப்பிடிக்கின்றனர். அயல் மரபிலோ, பத்தாம் நாள் சடங்கு அல்லது 16ம் நாள் சடங்கு மேற்கொள்ளப்பட்ட உடனே இறந்தவர்களின் எலும்பு மிச்சங் களுக்கும் தனக்குமான தொடர்பு முற்றாக அற்றுப் போவதாகக் கருதப்படுகிறது. நீலகிரி, கோயம்புத்தூர் இருளர் பழங்குடி யினர் மற்றும் மத்தியப் பிரதேசக் கோண்டுப் பழங்குடியினர் இறந்தவர்களின் எலும்பு மிச்சங்களைச் சுடுமண் தாழிகளில் போட்டுத் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் ஒரு மூலையில் தரைக்குக் கீழே புதைத்துப் பாதுகாக்கின்றனர். நாகர் பழங்குடி யினர் இன்னும் சற்று மேலாக, இறந்தவர்களின் மண்டை யோடுகள் உள்ளிட்ட எலும்பு மிச்சங்களைத் தங்கள் வாழிடங் களில் வெளிப்படையாக வைத்துப் பாதுகாக்கின்றனர். இவ்வா றான பண்பாட்டு நடத்தைகளால் இறந்தவர்களின் ஆற்றல் தங்களுடனேயே நிலைத்து இருக்கும் என இந்தப் பழங் குடியின மக்கள் நம்புகின்றனர்.

முடிவுரை

வழிபடு உருவங்களுக்கு ஆற்றல் ஏற்றுதல், ஆற்றல் ஏற்றப் பட்ட வழிபடு உருவங்களுக்கு மறு உயிர்ப்பு அளித்தல், மறு உயிர்ப்புக்குக் குருதியைப் பயன்படுத்துதல், இறந்தவர்களின் எலும்பு மிச்சங்கள் மீது அளவு கடந்த விழுமியம் காட்டுதல் உள்ளிட்ட பண்பாட்டு நடத்தைகள் வாயிலாக இயல்மரபு தனித்த நிலைபாட்டையும் அயல்மரபு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைபாட்டையும் எடுப்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். எனவே, இந்திய வழிபாட்டு மரபுகளில் கலந்து காணப்படும் இயல் மரபையும் அயல் மரபையும் வேறு படுத்திக் காண முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.

அடிக்குறிப்புகள்

1.1955 காலகட்டத்தின்போது மிக்கிம் மாரெட்டு வட இந்தியாவில் உள்ள கிஷன்கார் என்னும் கிராமத்தில் கடைபிடிக்கப்படும் சமய முறைமைகள் குறித்து தான் மேற்கொண்ட தனது ஆராய்ச்சியின் வாயிலாக இந்த இருவேறு நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளை ஆராய்ச்சி உலகத்திற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
2.மாரெட்டு அறிமுகப்படுத்திய ‘Great Tradition’, Little Tradition’ என்ற ஆங்கிலச் சொல்லாட்சிகளுக்கு ஈடாகக் க.த.திருநாவுக் கரசு (1984) பெருமரபு, சிறு மரபு எனவும் பெ.சுப்பிரமணியன் (2000) சிறுநெறி மரபு, பெருநெறி மரபு எனவும் மாறுபட்ட கலைச் சொற்களைத் தமிழில் புழக்கத்திற்கு அறிமுகப்படுத்துகின்றனர்.
3.விரிவான செய்திகளுக்குக் காண்க- சி.மகேசுவரன் (2002), இயல் மரபினை அறுதியிடுவதில் நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் பங்களிப்பு
4.மல்லாண்டெ தொடர்பான விரிவான தகவல்களுக்கு:  சி.மகேசு வரன் (1996)கொங்குநாட்டில் மல்லாண்டை- ஓர் அறிமுகம்
5.விரிவான தகவல்களுக்கு: சி.விணீலீமீஷ்ணீக்ஷீணீஸீ(1997). C.Maheswaran(1997). “Kooththandai Thiruvizhla A Study in Cultural pluralism in Tamil Folklore”.
6. ஒரு முறை தொடர்புடையது எப்போதும் தொடர்புடையதாகவே இருக்கும் ((Once is contact is always in contact) ஒத்தது ஒத்ததை உருவாக்கும் (Like produces like) என்னும் இரு அடிப்படைகளின் வழிமுறையே தொத்து விதி (Low of contagion) ஒத்த விதி ((Law of similarity) உணரப்பட்டன. இந்த இருவிதிகளின் அடிப்படையில், மந்திரமும் முறையே தொத்து மந்திரம் அல்லது தொடு மந்திரம் (contagious Magic), ஒத்த மந்திரம் (Homeapathic Magic) அல்லது பாவனை மந்திரம் (Imitative Magic) எனப் பகுத்து அறியப்படுகிறது. மேலும் விரிவானத் தகவல்களுக்கு காண்க- இ.முத்தய்யா(1980), ஆ.சிவசுப்பிரமணியன் (1988) மற்றும் தே.ஞானசேகரன் (1992).
நோக்கிட்டு ஏடுகள்
*சிவசுப்பிரமணியன்,ஆ-1988. மந்திரம் சடங்குகள், சென்னை. நியூ செஞ்சுரி புக் அவுசு
*சுப்பிரமணியன், பெ. - 2000. தேவேந்திர குல வழிபாட்டு மரபுகள் (பழனி வட்டாரம்), கோயம்புத்தூர் தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்.
*செல்வராசு, சிலம்பு நா. மற்றும் சண்முக விஷ்ணுதாசன் (பதிப்பர்). -1992. நாடுதோறும் நாட்டுப்புற மரபுகள். இருளக்குப்பம் (புதுச் சேரி), சவீதா வெளியீட்டகம்.
*ஞானசேகரன்,தே.- 1992 நாட்டார் சமயம், தோற்றமும் வளர்ச்சியும், மதுரை. கியூரி பதிப்பகத்தார்.
*மகேசுவரன்,சி.- 1996. கொங்குநாட்டில் மல்லாண்டை - ஓர் அறிமுகம் தமிழர் பண்பாட்டு வரலாறு-1 (பதிப்பர்) குருசாமி சித்தன் மற்றும் தே.ஞானசேகரன், கோயம்புத்தூர், தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்.
*முத்தய்யா, இ. - 1980. நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள். மதுரை சர்வோதய இலக்கியப்பண்ணை.
*Maheswaran.C.- 1998. ‘Kooththaandai Thiruvizhaa : A Study in cultural pluralism” Museum’s Journal. Chennai : Government Museum.
*Maheswaran,C. - 2001. “Contribution of Tribal Nilgiris in the preservation of Our Art & Cultural Heritage” Proceedings cultural heritage” Chennai. Government Museum.
*1987, The Encyclopaedia of Religion (vol 9) macmillan publishing house.

- முனைவர் சி.மகேசுவரன்

Pin It

1.

மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அவற்றைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற டாக்டர்.புகழேந்தியின் குரல் தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் அவ்வப்போது ஒலித்து அடங்கும். எப்போதெல்லாம் சொட்டு மருந்தாலோ, தடுப்பூசியாலோ குழந்தைகள் இறந்ததாக புகார் எழுகிறதோ அப்போதெல்லாம் தடுப்பூசிகளை எதிர்க்கும் ஒரு சில மருத்துவர்களின் கருத்துக்கள் மேலோட்டமாக தமிழகத்தில் எதிரொலிப்பது வழக்கம். உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகளையோ, மேலை நாடுகளில் தடுப்பூசி எதிர்ப்பு பற்றிய செய்திகளையோ நம் நாட்டில் கேட்கவே முடியாது. 1880 களில் துவங்கி உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (Anti vaccination leaque)கனடாவில் தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களால் துவக்கப்பட்ட தடுப்பூசிகள் விழிப்புணர்வு அமைப்பு (VRAN)1980 களில் அமெரிக்காவில் தோற்று விக்கப்பட்ட தடுப்பூசி வழக்குகள் நீதிமன்றம் ( U.S. Vaccine court ) என தடுப்பு மருந்துகள் பற்றிய சர்ச்சை உலகமெங்கும் விவாதிக்கப்படும் போது இங்கே எந்தவிதமான எதிர்கேள்விகளும் இன்றி அறிவிக்கப்படாத கட்டாயத் தடுப்பூசிச்சட்டம் அமுலில் உள்ளது. தமிழகத்தின் மருத்துவ விழிப்புணர் விற்கு உதாரணமாக 2008 போலியோ தடுப்பு மருந்தால் இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைகளின் மரணத்தையே எடுத்துக்கொள்ளலாம்.

2008 மே மாதத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டுக் கொண்டிருந்தபோது 7 மாவட்டங் களில் 10 குழந்தைகள் இறந்தன. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தடுப்பு மருந்தின் பக்கம் திரும்பிய போது - அச்சம்பவத்தை ஆராய மத்தியக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மருந்துகள் வைக்கப்பட்ட இடம், அவற்றை பராமரிக்கும் வசதிகள், அவை குழந்தை களுக்கு வழங்கப்பட்ட முறை என்று அனைத்தையும் விசாரித்த அக்குழு நடைமுறையில் தவறுகள் ஏதுமில்லை, வழங்கப்பட்ட மருந்துகளைத் தான் பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மருந்துகள் இமாசலப் பிரதேசத்தின் கசவுலி ஆய்வுமையத்திற்கு அனுப்பப்பட்டன. பரபரப்பு குறைந்த அடுத்த பத்துநாட்களில் அந்த ஆய்வு முடிவும் வெளியானது மருந்துகளில் தவறு எதுவும் இல்லை என்று. வழங்கப்பட்ட மருந்துகளி லும் பிரச்சினை இல்லை, வழங்கப்பட்ட முறையிலும் தவறுகள் இல்லை என்றால் இறப்பிற்குக் காரணம் என்ன? எல்லா தடுப்பூசி இறப்புக்களுக் கும் சொல்லப்படும்- அக்குழந்தைகள் தடுப்பூசியினால் இறக்கவில்லை, வேறுநோய்கள் ஏற்கனவே இருந்திருக்கலாம் என்ற அதே காரணம் மீண்டும் சொல்லப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் இப்படி யான மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் வழக்கமான இதே வரியோடு அவைகள் மறக்கப்படுகின்றன. தடுப்பூசி விற்பனையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இவ்வ ளவு எளிமையாக குழந்தை மரணங் களை மறக்கடித்துவிட முடியாது.

ஆரோக்கியம் தரும் என்று நம்பி, அரசு கொடுக்கிற அனைத்தையும் நாம் கேள்வி கணக்கின்றி குழந்தை களுக்கு கொடுக்கிறோம். யார் பரிந்து ரைத்தாலும் அவற்றைப் பற்றிய தெளிவின்றி நம் குழந்தைகளுக்குக் கொடுப்பது அவர்களுக்கு எதிரான வன்முறையாகும்.

2

முதன்முதலில் அம்மை நோய்க்கான தடுப்பூசியை 1796ல் எட்வர்ட் ஜென் னர் என்பவர் கண்டறிந்தார். தன்னு டைய மகனுக்கு அத்தடுப்பூசியைச் செலுத்தி சோதித்ததன் மூலம் முதல் தடுப்பு மருந்தை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு சில வரு டங்களில் அத்தடுப்பூசி முதன்முதலில் போடப்பட்ட ஜென்னருடைய மகனும், இன்னும் சிலரும் மருந்தின் வீரியத்தால் இறந்தனர். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு ஜென்னர் தடுப்பூசியைப் பயன்படுத்தவில்லை. இப்படி கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் தடுப்பூசிக்கு எதிராக உலகம் எங்கும் ஆங்கில மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1853இல் இங்கிலாந்தில் அம்மைத்தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இணைந்து உலக தடுப்பூசி எதிர்ப்புச்சங்கத்தை தோற்றுவித்தனர். 1880ல் பாரீஸில் நடைபெற்ற தடுப்பூசி எதிர்ப்பு மாநாட்டில் அரசுகளுக்கு பல பரிந்துரைகள் அளிக்கப் பட்டன. இங்கிலாந்தில் தடுப்பூசிகளால் ஏற்பட்ட விளைவுகளை ஆராய 1889இல் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1896இல் வெளியான ராயல் கமிஷனின் அறிக்கையின் பேரில் கட்டாயத்தடுப்பூசிச்சட்டம் கைவிடப்பட்டது. உலகம் முழுவதும் இவ்வாறான தடுப்பூசிக்கு எதிரான வரலாறு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 1989ல் அமெரிக்கப் பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் அம்மைத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அமெரிக்க அரசின் நோய்த்தடுப்பு மையம் (Center for Disease Control ) நடத்திய ஆய்வில் அமெரிக்கக் குழந்தைகளில் 98% பேருக்கு அம்மை நோய் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஊசி போடுவதற்கு முன்பிருந்த அளவை விட மிக அதிகம். இந்நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல; உலகின் பலநாடுகளில் இதே நிலைதான். அமெரிக்காவில் 1990களில் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. பின்னர் தடுப்பூசிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் இவற்றைப் பயன்படுத்தும் குழந்தை களுக்கு 13 விதமான நோய்கள் ஏற்படுவதாக அறிந்து 1997ல் கட்டாயத்த்டுப்பூசிச் சட்டம் நீக்கப்பட்டது. தடுப்பூசி வியாபாரம் அமெரிக்க உபயோகமின்றி தேங்கிய நிலையில்தான் உலகப் பணக்காரர் பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலமாக இந்தியாவில் 4.5 மில்லியன் குழந்தைகளுக்கு இலவசமாக மஞ்சள் காமலை தடுப்பூசி போட்டார். இப்போது அதே தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களா லும், அரசு அமைப்புக்களாலும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

3

தடுப்பூசி குறித்த வெளிப்புறத் தகவல் களைக் கண்டோம். தடுப்பூசி என்பது என்ன? அது ஏன் இவ்வளவு விளைவு களை ஏற்படுத்துகிறது? என்பதற்கான அகக்காரணிகளை அறிவோம். தடுப்பூசி மருந்துகள் கிருமிகளால் வரும் நோய்கள் பரவாமல் தற்காத்துக் கொள்ளப் பயன்படுவதாக விஞ்ஞானி கள் கூறுகின்றனர். கிருமிகளின் தோற் றம் குறித்த ஆய்வுகளில் கடந்த 150 வருடங்களாக இறுதியான முடிவு எதுவும் எட்டப்படாமல் அதன் ஒரு பகுதி ஆய்வு முடிவுகளைக் கொண்டு கிருமிகளுக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படு கின்றன. இப்படியான கிருமிகளுக்கு எதிரான மருந்துகளைத்தான் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் என்று அழைக்கிறோம். இந்த நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் புழக்கத்திற்கு வந்த பிறகுதான் புதிய பல மருந்துகளால் வரும் நோய்கள் தோன்றின. (இவை தான் பக்க விளைவுகள் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன). இக்கிருமிகள் நோய் வந்த பிறகு மனித உடலிலேயே தோன்றுகின்றன என்று கூறும் பிளியோமார்ப்பிச ஆய்வுகள் இன்றளவும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளன. என்றாலும், கிருமிகளின் மீதான கரிசனமும், அதன் பின்னாலுள்ள பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மருந்து வர்த்தகமும் இன்றைய மருத்துவ உலகின் பிரச்சாரத்தை தீர்மானிக்கின்றன. முடிவே இல்லாமல் தொடரும் கிருமிகளைப் பரவாமல் கட்டுப்படுத்தும் மருந்தாகத்தான் தடுப்பூசி மருந்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசி மருந்துகளில் அப்படி என்னதான் இருக்கிறது? நோயை ஏற் படுத்தும் என்று நம்பப்படுகிற கிருமிகள் தான் மருந்தாகக் கொடுக்கப் படுகிறது. அது மட்டுமல்ல; இந்த தடுப்பு மருந்தின் தன்மையைப் பாது காக்க பாதரசம் (Mercury)கலக்கப்படுகிறது. கிருமிகள் பரவிய பிறகு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிற பல நோய்களுக்கு கட்டுப்படுத்தும் மருந்துகளே இல்லாத நிலையில், நோய் ஏற்படும் முன்பே பாதுகாக்கும் தடுப்பு மருந்துகள் என்பவை கேலிக்கூத்தானவை. டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் 2000 ஆண்டில் எழுதி வெளிவந்த  “Good bye germ theory” என்னும் தடுப்பூசி குறித்த ஆய்வு நூல் 2006க்குள் ஆறு பதிப்புகள் வெளியாகி பலலட்சம் பிரதிகள் விற்பனை யாகின. அமெரிக்காவின் கட்டாயத்தடுப்பூசிச்சட்டம் இப்போது நடை முறையில் உள்ளபோது இந்நூல் வெளியாகி தடுப்பூசி எதிர்ப்பாளர் களுக்கு புதுவேகத்தை அளித்துள்ளது. அந்நூலில் இருந்து சில குறிப்புகள்:

# அமெரிக்க குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு ((Autism) தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு 3000 மடங்கு அதிகரித்துள்ளது. பாதரசம் மற்றும் பிற ரசாயனங்கள் கலந்த தடுப்பூசிகளைத்தவிர இந்நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கு வேறெந்த காரணமும் இல்லை.
# கட்டாய தடுப்பூசியின் விளைவாக நியூ ஜெர்ஸி பகுதியில் 149 பேரில் ஒரு குழந்தைக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுள்ளது. மேரிலேண்ட் பகுதியில் 1993-98 இல் மட்டும் மூளைக்கோளாறு 513 சதம் அதிகமானது.
# தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூறும் மிக மோசமான விளைவுகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் (AMA)தன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
#அமெரிக்க குழந்தைகளில் வாரத்திற்கு மூன்றுபேர் தடுப்பூசி யினால் மரணமடைகிறார்கள் என்று பெடரல் கவர்ன்மெண்ட் அறிக்கை கூறுகிறது.
# போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் கூறு கிறார்- 1966 முதல் 1976 வரை ஏற்பட்ட போலியோவில் மூன்றில் இரண்டு பங்கு தன் கண்டுபிடிப்பால் ஏற்பட்டது என்று.
 # 1975களிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் DPT தடுப்பூசி தடைசெய்யப்பட்டுள்ளது. கொடிய நஞ்சுள்ள இந்த ஊசி இன்னும் அமெரிக்காவில் (இந்தியாவிலும்) பயன் படுத்தப்படுகிறது.
# சாதாரணநிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டிற்கு 10பேர்தான். கக்குவான் இருமலுக்கான தடுப் பூசிக்குப் பிறகு ஆண்டிற்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.
# அமெரிக்க மத்தியஅரசு FDA அறிக்கையின் படி 90% டாக்டர்கள் தடுப்பூசி சம்பந்தமான மோசமான விளைவுகளை அறிவிப்பதில்லை.
# அமெரிக்க அரசாங்கம் மக்களுடைய வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை தடுப்பூசியின் மோசமான விளைவுகளுக்கு நஷ்டஈடாக வழங்கிக்கொண்டிருக்கிறது.
# தடுப்பூசி போட்டவர்களை விட , தடுப்பூசி போடாதவர்கள் மிகவும் ஆரோக்கியமாக எவ்வித நீடித்த நோயுமின்றி வாழ்வதை உலகத்தின் எந்த அரசு இயந்திரமும் ஆய்வு செய்வதில்லை.
# நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது என்பது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசி போடுவதற்கு சமம்.

. . . இன்னும் ஏராளமான விபரங்களை தன் நூலில் தந்துள்ள டாக்டர். ட்ரெப்பிங் மக்கள் கருத்தரங்குகளில் பங்கேற்று தடுப்பூசியின் விளைவு கள் பற்றி உரையாற்றி வருகிறார். கட்டாயத் தடுப்பூசிச்சட்டம் என்பது எந்த நாட்டில் அமுலில் இருந்தாலும் சரி அது மனித உரிமைக்கும், அந் நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான வன்முறை என்று கூறும் அந்நூல் தரும் கடைசித் தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) ஓர் கொள்ளை நோய் கண்டுபிடிப்பு சேவை மையம். நாடு முழுவதும் அலைந்து நோய்க்கான அறிகுறி களைத் தேடி அதை லாபமாக்கத் திட்டமிடுகிறது. (CDC) க்கு ஒரு ஆலோ சனைக்குழு உள்ளது. இந்தக் குழுவில் யார் யார் உறுப்பினர்கள் தெரி யுமா? மருந்து வியாபாரிகள், மருந்து தயாரிப்போர் ஆகியோர்தான்.

4

சரி, தடுப்பூசி மோசமானது தான். முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாகத் தாக்கியதே. ஆனால் தடுப்பூசி வந்த தற்குப் பின்னால் கொள்ளைநோய்கள் கட்டுக்குள் வந்துள்ளதல்லவா? - இதுதான் தடுப்பூசியை ஆதரிக்கும் மனநிலையில் ஆங்கில மருத்துவத்தால் தயாரிக்கப்பட்ட சராசரி மனிதரின் கேள்வியாக இருக்கும். காந்தி எழுதிய சத்தியசோதனை நூலில் கூட காலரா நோய் ஏற்பட்ட காலத்தில் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருப்பார். அதுவே ஒரு பெரிய மருத்துவ ஆவணம்தான். என்றாலும் கூட நாம் நிகழ்காலத்தின் ஆதாரங்களை பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாகக் கூறப்பட்டது. சீனாவில் ஏராளமான மக்கள் ஒருவகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சார்ஸ் என்னும் சளிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தவோ அல்லது பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஓரிரு வாரங்களில் தானாகவே குறைந்த அக்காய்ச்சல் படிப்படியாக மறைந்தது. அதே போல இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன் குனியா என்ற பெயர் சூட்டப்பட்ட காய்ச்சல் - எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே தானா கவே காணாமல் போனது. எந்த ஒரு நோயானாலும் மக்களில் உடல் நிலையைப் பொறுத்து அது தானாகவே ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையவும் செய்கிறது. உலகத்தின் எல்லா அரசாங்கங்களும் இயற்கையாய் தோன்றி மறையும் எல்லா நோய் களையும் கட்டுப்படுத்தியது தங்கள் சுகாதாரத்துறை என்று மார்தட்டிக் கொள்கிறது.

மருத்துவ வரலாற்றின் பழைய பக்கங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். இங்கிலாந்தில் 1950களில் போலியோ நோயின் தாக்கம் 40 மில்லியன்களாக இருந்தது. அப்போது போலியோ விற்கென எந்த மருந்தும் பிரயோகிக்கப்படவில்லை. ஆனால் நோயின் தாக்கம் 1952 இல் 19 மில்லியன்களாகக் குறைந்தது. பின்பு, 1954 இல் 8 மில்லியன்களாக வும், 1956இல் 10 மில்லி யன்களாகவும் எவ்வித மருந்துகளும் இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடு இருந் தது. 1956க்குப் பின் தடுப் பூசி பயன்படுத்தப்பட்டது. போலியோ வெற்றிகர மாக அழிக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது. பின்பு 1960களிலிருந்து மீண்டும் போலியோவின் தாக்கம் இங்கிலாந்தில் இருந்துவருகிறது. அதேபோல, 186ற்கும் முன்பிருந்து சின்னம்மை வருவதும், பின் குறைவது மாக 200 மில்லியன் களுக்குள் இருந்து வந் தது. 1860ல் தடுப்பூசி போடப்பட்டதற்குப் பின்னால் 400 மில்லியன் களுக்கும் மேலாக அதன் பாதிப்பு உயர்ந்தது. இன்று வரை தொடர்ந்து வருகிறது. இப்படி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நோய்கள் மீண்டும் மீண்டும் வருவதை 150 ஆண்டு கால சுகாதார வரைபடம் விளக்குகிறது. ஆனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910 களில் 500 மில்லியன்களுக்கும் மேல் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் படிப்படியாகக் குறைந்து 1920 களில் 200 மில்லியன்களாகவும், 1930களில் 100 மில்லியன்களாக வும் பின்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக முற்றிலும் குறைந்திருக்கி றது. இதேபோல இன்னும் ஏராளமான நோய்கள் மக்களின் உடல் நிலையைப் பொறுத்து, தானே தோன்றி மறைந்த வரலாற்றை மருத்துவம் மறந்து விடுவது நல்லதல்ல.

மலேரியாக்காய்ச்சல் என்ற நோயை எல்லா நாட்டு வரலாற்றிலும் காணமுடியும். 1600களில் இருந்து மீண்டும் மீண்டும் மருத்துவ வரலாற்றில் குறிப்பிடப்படும் காய்ச்சலாக அது இருந்து வந்துள்ளது. மலேரியாவிற்குக் காரணம் ஒருவகைக் கிருமிகள் என்றும், அவை கொசுக்கள் மூலமாக பரவுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக உலகத்தின் பெரும்பாலான அரசாங்கங்கள் கொசுவை ஒழிக்க என்று பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு வருகிறது. இன்றுவரை பல நோய்களைப் பரப்பும் எமனாக சித்தரிக்கப்படும் கொசுக்கள் உலகம் செலவழித்த டாலர்களையும், ரூபாய்களையும், யூரோக்களையும் ஏப்பம் விட்டு விட்டு பல்கிப்பெருகி உலாவருவதை நிரூபிக்க எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை தானே? இப்படித்தான் கிருமிகளை அழிக்க என்று உலக அரசுகள் செலவழிக்கும் தொகை அவ்வளவும் மருந்துக்கம்பெனிகளின் கையில் அகப்பட்டுக் கிடக்கின்றன. வெகுவேகமாகப் பரவும் எந்த ஒரு நோயும் ஒரு ஊரில் எல்லா மக்களை யுமோ, ஒருவீட்டில் எல்லா ரையுமோ பாதிப்பதில்லை. ஏன் இப்படி கிருமிகள் ஓர வஞ்சனை செய்கின்றன? காற்றில், நீரில், கொசு வில், பறவையில், பன்றி யில்... என பாகுபாடின்றிப் பரவும் கிருமிகள் மனிதர் களை மட்டும் ரகம் பிரித்து தாக்குகின்றனவா? இந்தக் கேள்விக்கு உலகம் முழு வதும் ஒரே ஒரு பதில்தான் சொல்லப்படுகிறது. கிருமிகளின் தாக்கம் என் பது ஒவ்வொரு உடலின் எதிர்ப்புச்சக்தியைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு மனிதனின் எதிர்ப்புச்சக்தியும் கிருமி களை எதிர்த்து அழிக்கப் போதுமானவை என்றால், அதை வளர்ப்பதை விட்டு விட்டு கொசுவிற்கு ஆயிரம் கோடி, கிருமிக்கு ஆயிரம் கோடி, தடுப்பூசிக்கு ஆயிரம் கோடி, தடுப்பூசியின் பாதிப்பிற்கு நஷ்ட ஈடாக ஆயிரம் கோடி என்று மக்கள் வரிப்பணத்தை மருந்துக் கம்பெனிகளுக்கு வாரி இறைக்க உலகின் எந்த ஒரு அரசாங்கத்திற்கும் உரிமையில்லை. கிருமிகள், தடுப்பூசிகள் என்று தடம் புரளும் வீணான ஆய்வுகளை விட்டு விட்டு, தனி மனித எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆரோக்கியமான உணவை ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கும்படி செய்வதே உலக அரசுகளின் அடிப்படைக் கடமையாகும்.

***

மரு.அ.உமர்பாரூக்

குறிப்புகள் மொழியாக்க உதவி : மருத்துவர்.இரா.ஞானமூர்த்தி

Pin It

இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள், இலக்கியம் உள்ளிட்ட நிறுவப்பட்ட ஆவணங்களை முதல் தரவுகளாக மேற்கொள்வது வழக்கம். ஆனால் நவீன பண்பாட்டு மானுடவியல் ஆய்வுலகமோ இந்த ஆய்வுமுறைக்கு மாற்றாக வாய்மொழி வரலாறுகளின் துணைகொண்டு புதிய உண்மைகளைத் தேடுதல் செய்கின்றன.

 ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வோடும் உணர்ச்சியோடும் கலந்துவிட்ட நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறைகளாக எழுதப்படாத வாய்மொழி வரலாறுகளாக சொல்லப்பட்டு வந்துள்ளன. பிற்காலத்தில் அவை அப்படியே எழுத்து வடிவில் பதிப்பிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வாய்மொழி வரலாற்றில் மிக முக்கியமாக இடம் பெறுவது இயல்புக்கு மாறாக நடைபெற்றதாக கூறப்படும் யதார்த்தம் மீறிய வியத்தகு சம்பவங்களாகும். இதனை அற்புதங்கள் என்றும் சொல்வதுண்டு. பொதுவாக இஸ்லாமிய வரலாறுகளில் இத்தகை யதான இயற்கையின் இயல்பான தன்மைக்கும், மனிதனின் இயல்பான தன்மைக்கும் மிஞ்சி யதாக அதீத ஆற்றல் வாய்ந்த சம்பவங்கள் பல உள்ளன. இறைஆற்றலின் வெளிப்பாடுகளாக முஸ்லிம்களின் புனிதநூலான குர்ஆனிலும், நபிமார்களின் வாழ்க்கை யிலும் இச்சம்பவங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு.

 குர்ஆனில் இடம் பெறும் மூசாநபியின் அஸா என்னும் கைத்தடி நிகழ்த்திய அதிசயங் களைக் குறிப்பிடலாம். மூசா நபி அந்த கைத்தடியை நிலத்தில் எறிந்தபோது மலம் பாம்பாக மாறியது. மிகப்பெரிய பாம்பாக உருவெடுத்து மந்திரவாதிகளின் பாம்புகளை விழுங்கியது. பாலைவனத்தில் தாகம் தணிக்க பாறையில் ஓங்கி அடித்தபோது அதிலிருந்து பனிரெண்டு நீரூற்றுகள் கிளம்பின. பிர்அவுன் கூட்டம் துரத்தியபோது அஸாவை செங்கடல்மீது வைத்த போது கடல் பிளந்து பாதை உருவாகியது. மூசாநபி கூட்டத்தை உயிர் பிழைக்க வைத்தது. அதே மணல்திட்டு பாதையில் துரத்திய பிர்அவுன் கூட்டத்தை கடல் திரும்பவும் மூடி அழித்தது. ஈஸாநபி இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்தார். வெண்குஷ்ட பிணியாளர், பிறவிக்குருடர்களை தனது கரத்தால் தொட்டு சுகப்படுத்தினார். களிமண்ணால் பட்சி உருவத்தை செய்து அதில் ஊதி உயிருள்ள பட்சியாக மாற்றினார். இபுராகீம் நபியை எரியும் நெருப்பில் வீசியபோது அந்த நெருப்புக்குண்டமே குளிர்பொய்கையாய் மாறியது. இஸ்மாயில் நபியின் கழுத்து பலிபீடத்தில் வைத்து அறுக்க அறுக்க அறுபடாமல் கத்தி அதிசயம் செய்தது.

 கடலில் தூக்கி வீசப்பட்டபோது மீன்விழுங்கி மீனின் வயிற்றில் யூணஸ் நபி வாழ நேர்ந்தது. நபிசுலைமான் போர் புரிய திரட்டிய ராணுவத்தில் மனிதர்கள், ஜின்கள், பட்சிகள் இருந்துள்ளனர். எறும்புடன் நபி சுலைமான் பேசுகிறார். ஸபா நாட்டின் மக்களை பல்கீஸ் என்ற இளவரசி ஆட்சி புரியும் செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முன்பாக வெகு தொலைவிலுள்ள அவரது சிம்மாசனத்தை ஜின்களில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இவையனைத்தும் குர்ஆனில் இடம் பெறும் நபிமார்கள் வாழ்வில் நிகழும் அற்புதங்களாகும்.

 இமாம் கஸ்ஸாலி இஹ்யா உலூமித்தீன் நூலின் அக்லா குன்னபி பகுதியில் நபிமுகமது நிகழ்த்திய அற்புதங்களை கூறியுள்ளார். இது புறவாழ்வு மற்றும் அகவாழ்வு அற்புதங் களாக விளக்கப்படுகின்றன.

 உஹது யுத்தத்தில் ஹஜ்ரத் கதாதா அவர்களின் கண்விழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்துவிட்டது. நபிமுகமது அவர்கள் அவ்விழிகளை அந்த இடத்தில் எடுத்துவைத்து தடவிவிட்டார்கள். அந்த ஸகாபி குணமடைந்துவிட்டார். இதுபோன்றே ஒருபெண் தனது குழந்தையை நபி முகமது விடம் கொண்டுவந்து, என்னுடைய இக்குழந்தை புத்தி சுவாதீனமானமில்லாமல் இருக்கிறது என்றார். நபியவர்கள் குழந்தையின் நெஞ்சை தடவிவிடவே குழந்தை வாந்தி எடுத்தது. அதன்பிறகு சுவாதீனம் பெற்றது.

 நபிமுகமது அதிசயங்களிலெல்லாம் பேரதிசயம் அல்லா அருளிய புனித நூலான குர்ஆனே என்ற வாசகத்தை இன்னும் சூழ்ந்து உற்று நோக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத சூழலில் (பதூயீன் அரபு பழங்குடி மக்கள்) வாழ்ந்தபோது ஒலி வடிவிலும், பின் எழுத்துவடிவிலும் உருவான குர்ஆன் அறிவுரைகளும் கோட்பாடுகளுமே முஸ்லிம் உம்மத்தை உரு வாக்கியதின் பின்னணியை உணர்த்தும் பெருபங்கினை ஆற்றிய விதமாக குர்ஆனின் அதிசயத்தன்மையை நோக்கலாம்.

 உலகின் முதல் மனிதராக கருதப்படுகிற ஆதம் நபியைப் படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாவின் சன்னிதானத்தில் ஒளியாக படைக்கப்பட்டிருந்தேன் என்ப தான நபிமுகமதின் வாக்கில் பாரம்பர்யத் தோற்றம் சார்ந்த விசித்திரம் தென்படுகிறது. தங்கத்தால் உருக்கி வார்க்கப் பட்ட காளைமாட்டுச் சிலையொன்று பேசியதாக நபி மூசா அவர்களின் சரித்திரத்தில் காண்பதுபோல ஹூபுல் சிலைக் குள் முஸ்பிர் என்ற இப்லீஸ் நுழைந்து செய்த பிரச்சாரத் திற்கு எதிராக நபி நூஹ்வின் காலத்தில் இஸ்லாத்தை தழு விய முகீன் என்னும் ஜின்னை ஏவி குறைவுகளின் அவை யில் சத்தியத்தை நிலைநாட்ட நபிமுகமது பேசவைத்த அதிசயத்தையும் குறிப்பிடலாம்.

 நபிமுகமது மிகராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் செல்வதற்கு முன்பு மார்பு பிளக்கப்பட்டு உள்உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே புராக் என்னும் கோவேறு கழுதையைவிட பெரியதுமான வெள்ளைநிற மின்னல்வேக மிருகவாகனத்தில் இவ்விண்ணுலகப் பயணம் நடைபெற்றுள்ளதாக ஹதீஸ் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் தொன்மவியல் விசித்திரங்கள் ஒரு குறியீட்டு மொழியாடலாக முஸ்லிம்களின் புனிதநூலான குர்ஆன் வசனங்கள் பலவற்றில் வெளிப்பட்டுள்ளன.

 ஏழு நபர்கள் ஈமானை பாதுகாக்க மலைக்குகையில் நுழைந்தனர். எதிரிகளிடமிருந்து காப்பாற்ற இறைவன் குகை யின் வாசலை அடைத்து அவர்களை அங்கேயே முன்னூறு வருடம் தூங்கச் செய்தான். ஒருபுறமாக தூங்கினால் விலாப் புறத்தை பூமி தின்றுவிடும் ஆதலால் வலதாகவும் இடதாக வும் புரட்டி புரட்டி தூங்கச் செய்தான். அவர்களோடு வந்த நாய் தனது முன்கால்களை நீட்டி விரித்தபடி அவர்களோடு தூங்கியது. பின்னர் கண்விழித்து நகரங்களுக்குச் சென்றனர். (அல் கபு- குகை அத்தியாயம் 18, வசனங்கள் 71-19)

 இஸ்ரவேலர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் யார் என்பது தெரியவில்லை. உண்மை தெரிவதற்காக ஒரு மாட்டை அறுத்து அதன் நாக்கைக் கொண்டு கொலை செய்யப்பட்ட பிரேதத்தின் மீது அடித் தால் அது உயிர்பெற்று கொலை செய்தவர் யார் என்பதை சொல்லிவிடும் என்று இறைவன் அறிவித்தான். அதன்படி இஸ்ரவேலர்கள் செய்ய பிரேதம் உயிர்பெற்று கொலை செய்தவரை காட்டிக்கொடுத்தது. (அல் பகறா-அத்தமாடு அத்தியாயம் 2, வசனங்கள் 72,73)

 இறந்தோரை எப்படி உயிர்ப்பிக்கிறாய் எனக் கேட்க நான்கு பறவைகளை துண்டுதுண்டாய் வெட்டி அவற்றை நான்கு மலையுச்சிகளில் வைத்துவிட்டு மீண்டும் அப்பறவைகளை அழைக்குமாறு சொன்னான். அவை உயிர்பெற்று வந்தன. (அல்பகறா-அத்தமாடு, அத்தியாயம் 2, வசனம் 260)

 எந்த ஒரு மனிதருமே தீண்டாமல், அல்லாவின் ஆகுக என்ற சொல்லால் மட்டுமே அன்னை மர்யத்திற்கு கர்ப்பம் ஏற்பட்டு ஈஸாநபியை ஈன்றெடுக்கும் சம்பவம் குர்ஆனில் இடம் பெறுகிறது. (இப்ரானின் சந்ததிகள் அத்தியாயம் 3, வசனங்கள் 45-47) மற்றும் மர்யம் அத்தியாயம் 19, வசனங் கள் 16-24). மரணம், உயிர்ப்பித்தல், பிறப்பு என்பதான கருத் தாக்கங்களை விளக்கப்படுத்தும் மேற்குறிப்பிட்ட வசனங் களில் அல்லாஹ்வின் ஆற்றலை நிரூபணம் செய்வதற்கான தர்க்கங்களைக் கொண்ட மொழியாடல்களாக இருக்கின்றன. குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் எழுதும் அறிஞர்களும் ஹதீஸ் கலையில் இத்தகையதான தொன்ம மொழியை கையாளுவதை கவனிக்கலாம்.

 அல்லாவின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தவர் கள் என்று எண்ணாதீர்கள். அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் கீழ்கண்டவாறு விளக்குகிறார். அவர்களின் உயிர்கள் பச்சைநிறத்துப் பறவைகளின் உருவத்தில் அர்ஷில் தொங்க விடப்பட்ட கூண்டில் உள்ளது. அது சுவர்க்கத்தில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்றுபின் அக்கூண்டில் வந்து தஞ்சமடையும்.

 மேலும் இறந்த ஒரு உடலை அடக்கம் செய்யும்போது கறுப்புநிற, நீலநிறக் கண்களுடைய இரு வானவர்கள் அவரி டம் வருவார்கள். ஒருவர் முன்கர். இன்னொருவர் நகீர் என்பதான மொழியாகவும் அது உள்ளது. குர் ஆனின் மற்று மொருவசனம் யானைப்படைகளை அழித்தொழித்த சிறு களிமண் உருண்டைகளைப் பற்றிப் பேசுகிறது.

 யானைகளுடன் வந்த படையை அல்லாஹ் என்ன செய் தான் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லையா? அவர் களது சூழ்ச்சியை முறியடிக்க அவன் பறவைக்கூட்டத்தை அனுப்பிவைக்க அந்தப் பறவைகள் அவர்கள்மீது களிமண் உருண்டைகளை வீசி எறிந்தன அல்லவா?  அதனால் அவர் கள் மாடுமேய்ந்த செடிகளைப்போல ஆகிவிடவில்லையா?

 இறை அற்புதத்தன்மையை வெளிப்படுத்த குறியீட்டு மொழியாடல்களான இந்த வசனத்திற்கு இஸ்லாமிய அறிஞர் அஸ்கர்அலி இன்ஜினியர் வரலாற்றியல் அர்த்தத்தை வழங்குகிறார்.

 அப்ரஹா மன்னன் மக்கா வில் உள்ள அரேபியர்களின் ஆலயத்தை அழிக்க யானைப் படைகளை அனுப்புகிறான். வரும்வழியில் அப்ரஹாவின் படையினரிடையே அம்மை நோய் பரவியதால் சேதம் ஏதும் விளைவிக்காமல் அப் படை பின்வாங்கி செல்லும் படி ஆயிற்று. அபாபீல் வீசிய சிறு களி மண் உருண்டைகள் நோயின் காரணமாக உடலில் தோன்றிய அம்மைநோய் கொப்புளங்களுக்கு குறியீடாகி விடுகிறது என்கிறார். இவ்வாறு குர்ஆனோடும் நபிமார் களின் வாழ்க்கையோடும் தொடர்புடைய அதிசய சம்பவங் கள் முஅஜிஸாத்து என்று அழைக்கப்படுகின்றன. மனித இயல்பு, உலக இயல்புக்கு மாறாக நடைபெறும் நிகழ்வு களாக இவை உள்ளன. ஒரு யதார்த்தக் கருத்தியலை வெளிப் படுத்த முயலும் புனைவு மொழியாடல்களாகக்கூட இவற்றைக் கருதலாம்.

 மெய்ஞானிகள், சூபிகள் என்றழைக்கப்படும் வலியுல் லாக்களின் வாழ்க்கையிலும் இத்தகைய சம்பவங்களைப் போன்றே நிறைய நிகழ்வுகள் நடைபெற்றதாக வாய்மொழி வரலாறுகள் கூறுகின்றன. வலிமார்களின் வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவங்களுக்கு கராமாத்துகள் என்று பெயர். வலி என்றால் பிரதிநிதி, வலி யுல்லாஹ் என்றால் அல்லாவின் பிரதிநிதி, இயற்கைக்கு மாற்றமான, மனித அறிவுக்குப் புலப்படாத மனிதர்கள் திகைப்படையும் வண்ணம் இறைநேசர்கள் நிகழ்த்தும் புதுமைச் செயல்களாக இவை இருக்கின்றன.

 சூபிஞானிகளின் வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கூறப் படும் இத்தகைய வாய்மொழி வரலாறுகளை சிலர் மறுத்து வெறும் கட்டுக்கதைகள் என்றும், ஆதாரமே இல்லாத வெறும் புனைவுகள் என்றும் விமர்சனம் செய்கின்றனர். இவர்களின் கூற்றுக்கிணங்கி இந்த வாய்மொழி வரலாறு களை நாம் முற்றிலும் கட்டுக்கதைகள் என்று நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால் இவை காலங்காலமாக இஸ்லாமிய மக்களால், அவர்தம் மொழியால் பேசப்பட்டு வருபவை. குர்ஆன் கூறும் நபிமார்களின் முஅஜிஸாத்துகளை நம்பிக்கை கொண்டிருத்தலின் தொடர்ச்சியாக கராமாத்துகள் மீது இஸ்லாமிய மக்களின் பெரும்பகுதியினர் நம்பிக்கையும் கொண்டுள்ளனர். எனவே இச்சூழலில் இக்கராமாத்துகள் மூலமாக வெளிப்படும் உண்மைகளை புதியதொரு அணுகு முறையில் நாம் ஆய்ந்தறிய வேண்டியுள்ளது.

 ஈராக் நாட்டில் கஸ்பியன் கடலுக்கு தெற்கிலுள்ள தபரிஸ் தான் மாநிலத்தின் ஜீலான் நகரில் பிறந்தவர் முகியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்றஇஸ்லாமிய சமயஞானி. இவர் (கி.பி.1077- 1165) 91 ஆண்டுகாலம் உலகியல் வாழ்வை நிகழ்த்தியவர். 18ம் வயதில் பகுதாதிற்கு புறப்பட்ட ஆண்டகை 30 ஆண்டுகள் கல்விமுயற்சிகளிலும் கடுந் தவப் பெருக்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டார் .

சூபித்துவத்தின் பாட்டையில் நிகழ்த்திய முகியத்தீன் ஆண் டகையின் பெரும்பயணம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. பாக்காது நாட்டின் தலை சிறந்த கலைக்கூடங்களில் மார்க்க கலைகளை கற்ற முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி  நிகழ்த்திய சொற்பொழிவுகள் புகழ்பெற்ற உரை களாகத் திகழ்கின்றன. பிற்காலத்தில் முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நிகழ்த்திய அற்புதங்கள், வாழ்வின் நிகழ்வு களாக சொல் மற்றும் செயல்களில் அமையப் பெற்றுள்ளன. தமிழ்ச்சூழலில் இக்கராமாத்துகள் குறித்து அப்துற்றஹீம் தனது ஆக்கங்களிலும் விரிவாக ஏழுதியுள்ளார். நயினா முகம் மது ஆலீம் சாகிபவர்களிடம் உரை வாங்கி பக்கீர் மதாருப் புலவர் இயற்றிய முகியத்தீன் மாலை பாடல்களிலும் கராமாத்துகள் விவரிக்கப்படுகிறது.

 முகியத்தீன் அப்துல்காதிர் அவர்கள் தாய் வயிற்றிலிருக் கும் நாளில் நடந்த காரணம், துகிலுடுத்திப் பிறந்த காரணம், மரணித்த மடமானுக்கு உயிர்கொடுத்தது, அசூயையான கரத்தை சுகமாக்கியது, திருடனை ஞானியாய் மாற்றியது, 12 வருஷம் போன கப்பலை திரையிலழைத்தது, ஜின்னை கூலிலடைத்தது என எண்ணற்ற கராமாத்துகள் இந்த நூலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்தியாவின் மேற்குப் பிரதேசங்களில் ஒன்றான ராஜஸ் தான் மாநிலத்தின் அஜ்மீரில் அடங்கப்பெற்றுள்ள ஹஜ்ரத் குவாஜா முகீனுத்தீன் சிஸ்தி கி.பி1192ல் இந்திய மண் ணுக்கு தனது சீடர்கள் குழுமத்தோடு வந்தவர் இஸ்லாத்தின் மூலம் சமத்துவம், மனத்தூய்மை, அன்பு, மக்கள் சேவை கருத்தாக் கங்களை நடைமுறைப்படுத்தியவர். மவ்லவி டி.ஏப்.ரஹ் மத்துல்லா அலி ஸாஹிபு பாகவி அவர்கள் சிஸ்தியின் ஜீவிய சரிதையை எழுதியுள்ளார். இது சென்னை, திருவல்லிக் கேணி ஹாஜி எம்.ஐ.ஷாஹூல் ஹமீது அவர்களால் 1963ல் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்தி நிகழ்த்திய கராமாத்துகளும் இந்நூலின் ஒருபகுதியாக தொகுக்கப்பட்டுள்ளன.

 அஜ்மீர்மன்னன் நியமித்த அஜய்பால் என்ற மந்திரவாதி குவாஜாமுகீனுதீன் சிஸ்தியை பணியவைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுகிறான். மிருகச்சாலா என்றொரு மான் தோல் ஆசனம் அவனிடமிருந்தது. அதை மந்திரம் சொல்லி எறிய தலையில் படாமல் அந்தரத்தில் பறந்து வந்தது. அதில் அவன் அமர்ந்து ஆகாயத்தில் பறக்கிறான். அதை எதிர் கொள்ள குவாஜா முகீனுதீன் சிஸ்தி தமது பாதக்குறடாகிய கால்கட்டையைக் கழற்றி ஏவி விட அதுவும் ஆகாயத்தில் அந்தரமாக பறந்து சென்று அந்த மாயமான் தோல்மீது அமர்ந்து அழுத்தியது. மான்தோல் ஆசனம் மடங்கி தரையில் விழுந்தது. தொடர்ந்து பாதக்குறடு அஜய்பாலின் தலையில் தாக்க தரையில் வீழ்கிறான். சிஸ்தியின் ஞானஆற்றலை கண்ணுற்ற அஜய்பால் அவரிடம் கருணைக்காட்டச் சொல்லி முஸ்லிமாகிறான். அஜ்மீரின் ராய்பத்தூரா எனப்பட்ட பிரித்விராஜ் மன்னனுக்கு எதிரான ஒரு சாதுவான பக்கீரின் கலகங்களாக இக்கராமாத்துகளில் பலவற்றை மதிப்பிடலாம்.

 தமிழக மக்களால் நாகூர் ஆண்டவர் என புகழப்படும் மீறான் சாகிபு ஆண்டவர் என்னும் அப்துல்காதிறு ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம், வடஇந்திய எல்லையான மாணிக் கப்பூரில் தோன்றியவர். கிபி 1490ல் 68 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் தனது இறுதி 28ஆண்டுகளில் தமிழகத்தின் நாகூரில் தங்கியிருந்து சேவை புரிந்து மரணித்தப் பின் அங்கேயே அடங்கப்பட்டிருக்கிறார். நாகூர் தர்கா என்ற பெயரில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாக அது நிகழ்கிறது. பல்சமயத்தினரும் பங்கு கொள்ளும் தர்கா நிகழ் வுகள் மாறுபட்ட நல்லிணக்க இழைகளைக் கொண்டுள்ளது.

 நாகூரின் பெரும்புலவர் வா.குலாம்காதிறு நாவலர் ஷாகுல்ஹமீது மீது நாயகத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து 1902ல் முதன்முதலாக அச்சுவடிவில் வெளிக் கொண்டு வருகிறார். அற்புதப் புதையல் எனப் பொருள் படும் கன்ஜுல் கராமாத்து பெயரிலான அந்த நூல் 131 அத்தி யாயங்களையும், 576 பக்கங்களையும் கொண்ட மிகப் பெரிய நூலாகும். பிறப்புக்கு முன்னும், பிறப்பிற்கு பிறகும், உயிர் வாழ்ந்த காலங்களிலும், இறப்புக்கு முன்னும், இறப்பிற்குப் பிறகும் நாயகம் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் பேசும் நூலாக இது உள்ளது.  சம்பவ விளக்கங்களும், வருணனை வார்த்தைகளும் கொண்ட இந்த மூலநூலிலிருந்து முக்கியப் பகுதிகளை பிழிந்தெடுத்து சுருக்கமாக்கி ரவீந்தர் என்ற திரை வசனகர்த்தாவான புனைபெயருடைய செய்யது ஹாஜா முகையதீன் 1963ல் கன்ஜுல் கராமாத்து கருணைக்கடல் என்ற தலைப்பில் வெளியிடுகிறார்.

 மீறான் சாகிபு ஆண்டகை அவர்களின் அற்புதங்கள் பொதிந்துள்ள தமிழ்ப் புராணங்களும், பிரபந்தங்களும் அனந்தமுண்டு. இவற்றுள் அநேகம் பெரும்புலவர் பெருந் தகை தறுகா மகாவித்துவான் வா.குலாம்காதிறு நாவலர் அவர்களாலே வெளிக்கொணரப்பட்டன. கன்ஜுல் கரா மாத்து என்னும் கிரந்தம் அப்புராண பிரபந்தங்களில் நின்றே பெயர்த்துக் கொணரப்பட்டது. அது எல்லோராலும் எளிமை யில் உணரத்தக்க வசனகாவியமாக அமைந்துள்ளது. அதனை வடிகட்டித் திரட்டியதே இந்த கருணைக்கடல் என்ற அற்புதப்புத்தகம் என்பதாக அந்நூலின் முன்னுரையில் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் வா.கு.மு.ஆரிபு நாவலனார் குறிப்பிடுகிறார்.

 ஓசையைக் கொண்டு சொல் பிறந்தது. ஒவ்வொரு சொல் லிலும் முஹம்மது என்ற பதமே மறைந்திருப்பதாக சீக்கிய மதத்தலைவா குருநானக் அவர்கள் ஓர் கணக்கில் சொல்லியி ருக்கிறார்கள். எல்லா மொழியின் எழுத்துக்கும் ஒவ்வொரு தனி இலக்கணமுண்டு. இதை அரபியில் அப்ஜத் கணக்கு என் கிறார்கள். இக்கணக்குப்படி முஹம்மது என்ற சொல்லின் மொத்த இலக்கம் 92. இந்நூலில் அவர்களது அருளும் பொலி வும் அடங்கி இருக்கவேண்டும் என்று இதை 92 அத்தியாயங் களாக எழுதினேன் என்பதாக இந்நூலை சுருக்கி செய்யது ஹாஜா முகையிதீன் குறிப்பிடுகிறார்.

 ஷாகுல் ஹமீது நாயகம் மரணத்திற்கு பிறகு நிகழ்த்திய கரா மாத்துகளில் ஒன்றாக இதைக் கூறலாம். நாயகமவர்கள் சமாதி யினது தலைமாட்டில் மூங்கில் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந் தன. அருகிலுள்ள அரசு அதிகாரி தன்வீட்டு வேலைக்கு மூங் கில்கள் கிடைக்காததால் நாயகமவர்களது தலைமாட்டில் வளர்ந்து நின்ற மூங்கில்களை வெட்டிக் கொண்டு வரும்படி உத்தரவு போட்டான். நாயகத்தின் பேரர்கள் தடுத்தும் கேட்க வில்லை. பல்லக்கில் வந்தவர்கள் மூங்கிலை வெட்டிய போது நாயகத்தின் சமாதியிலிருந்து ஒரு ஓலைச்சுருள் புறப் பட்டு பறந்து சென்று அந்த அதிகாரி சென்ற பல்லக்கில் விழுந்தது. அதை அவன் எடுத்துப் பார்த்தபோது ஓலைச் சுருள் கூரியவாளாக மாறி அவனுடைய கழுத்தை வெட்டி யது. ரத்தம் பல்லக்கிலிருந்து வழிய பல்லக்குத் தூக்கிகள் பயந்து திரும்பினர்.

 மன்னர்கள் அடிபணிதல், உயிர்மீட்பு, நோய்தவிர்ப்பு அறி வின் ஆற்றலை வெளிப்படுத்துதல், கொடியவர்க்கு எதிரான போராட்டம், ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவும் பண்பு என் பதான பல கருத்தாடல்களை இந்த கராமாத்துகளின் அடித் தள கட்டமைப்பு மாற்று அறவியல்களாக கொண்டுள்ளன. இவ்வாறாக வாய்மொழி கதையாடல்கள் அல்லது கராமாத்துகள் அல்லது பழமரபு வழக்காறுகள் என்பவை ஓரு உட்கருத்தை வெளிப்படுத்தும் வரலாற்றுமொழியாக அமை கிறது. இதன் அமைப்பை கட்டவிழ்த்து நுண்கூறுகளை ஆய்ந்து பார்த்தால் உள்ளடக்கம் உண்மை சார்ந்ததாகவும், வெளிப்பாட்டுமுறை அதிசயம் சார்ந்ததாகவும் இருக்கும்.

 இத்தகையான வாய்மொழிக் கதையாடல்கள் வெற்றிட மாகக் கிடக்கும் வாழ்க்கையின் உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.  இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிற கராமாத்துகள் என்னும் அற்புதச் செயல்களின் மூலமாக சில சொல்லப்படாத உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. இப் பின்னணியில் கன்னியாகுமரி மாவட் டம், நாகர்கோவிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்த தக்கலை என்னும் ஊரில் அடங்கப்பட்டுள்ள சூபி ஞானி ஒரு வரின் தர்கா உள்ளது. பீரப்பா என்று அன்புடன் அழைக்கப் படும் பீர்முகமது சாகிபு வலியுல்லாவின் பிறப்பு, வளர்ப்பு, புறவாழ்க்கை, அகவாழ்க்கை மற்றும் வரலாறு பற்றிய முழுச்செய்திகளும் இதுவரையில் முறையாக கிடைக்கப் பெறவில்லை. ஆங்காங்கே சில குறிப்புகள் மட்டும் உள் ளன. ஆனால் பீரப்பாவின் வாழ்க்கைத் தொடர்பான வாய் மொழி வரலாறுகள் தக்கலை பகுதி முஸ்லிம்கள் மத்தியி லும் ஏராளம் நிலவுகின்றன. செவ்வல் மாநகரம் எம்.ஏ. நெயினா முகமது பாவலரால் 31.7.14ல் தொகுக்கப்பட்டது. 70களில் மவ்லவி டி.ஹாமீம் அலிம் சாகிப் அவர்களின் உரைக்குறிப்புகளிலும் மக்கள் வழக்கிலுள்ளதுமான சில வாய்மொழி வரலாறுகள் இங்கு பயன்படுத்தப்பட்டுள் ளன. இந்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சில அர்த்தத் தேடல்களை நாம் நிகழ்த்தலாம்.

வாய்மொழி வரலாறு-1

 மகான் பீர்முகமது சாகிபு அவர் கள் வாழ்ந்து வந்த காலத்தில் அவரை, இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி தெரியாதவரென்றும், தொழா தவரென்றும் சிலர் பழிசொல்லி தூற்றினர். இந்நிலையை தெளிவு படுத்தவும், மக்களை குழப்பத்திலி ருந்து மீட்கும் பொருட்டும் அப் போது மார்க்க மேதையாக எல்லோ ராலும் அறியப்பட்ட காயல்பட்ட ணத்தைச் சார்ந்த ஹலரத்து சதக்கத் துல்லா அப்பா அவர்களுக்கு திருமுக பாசுரமெழுதி இப்பிரச்சினையை தீர்க்க வருமாறு அழைத்தனர். சதக்கத்துல்லா அப்பா புறப்பட்டுவருவது பீரப்பாவிற்கு தெரிந்ததும் காயல்பட்டணத்திலிருந்து என்னைக்காண ஒரு வர் வருகிறார். நம்மால் இயன்றதை அவருக்கு செய்ய வேண்டும், சீக்கிரம் சமைத்துவிடு என்று தன் துணைவியாரிடம் கூறுகிறார். அதற்கு அவர்கள் வீட்டில் ஒருபிடி அரிசியு மில்லை என்ன செய்வது என்று கேட்க, பீரப்பா வீட்டில் தான் அரிசியில்லை, தெருவில் மண்ணுமா இல்லை? நாலு பிடி மண்ணையள்ளி ஒரு பானையிலிட்டு தண்ணீர் வார்த்து அடுப்பெரிய விடு. ஒரு சட்டியில் சப்பாத்திக் கள்ளிகளை துண்டுகளாக அறுத்து தண்ணீர் ஊற்றி வேக வை என்று கூறி னார். பீரப்பா சொன்னதை அப்படியே செய்து அடுப்பெ ரித்துக் கொண்டிருந்தார்கள். பீரப்பாவோ தறிக்குழியில் இறங்கி துணி நெய்து கொண்டிருந்தார்.

 சிறிது நேரத்தில் ஹலரத்து சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பீரப்பாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அங்கு வந்து பீரப்பாவைப் பார்த்து நீங்கள் இந்த ஊரில் ஒரு முஸ்லிமாக இருந்தும் அல்லாவைத் தொழாமலும், பள்ளிக்குப் போகா மலும் இருக்கிறீர்களே இது சரியா என்று கேட்க, பீரப்பாவோ சதக்கத்துல்லா அப்பாவை பார்த்து தம்பி ஐந்துவேளையும் இந்தப் பள்ளியில் தொழுவது சிறப்பா அல்லது மக்காவி லுள்ள கஃபத்துல்லாவில் தொழுவது சிறப்பா, நான் தொழு ததை நீங்கள் பார்க்க வேண்டுமானால் இதோ நான் நிற்கின்ற காக்குழியைப் பாருங்கள் என்றார்கள். ஹலரத்தவர்கள் காக் குழியை உற்றுப் பார்த்தபோது அங்கே கஃபா தெரிந்தது. அங்கே இமாமாக நின்று பீரப்பா தொழுவித்துக் கொண்டிருந் தார்கள். சதகத்துல்லா மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.

 பின்னர் பீரப்பா சதக்கத்துல்லா அப்பாவை சாப்பிட  வீட்டிற்குள் அழைத்து வந்தார்கள். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட பானையிலுள்ளதையும், சட்டியிலுள்ளதை யும் எடுத்து வைத்திட இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். பசியாறுங்கள் தம்பி ஏன்று சொல்லியும் சதக்கத்துல்லா அப்பா சாப்பிடாமல் இருந்தார்கள். பீரப்பாவோ என்ன தம்பி சோறுண்ணச் சொன்னால் சும்மா இருக்கிறீர்கள்? மண் ணும் கள்ளியுமாக இருக்கிறதோ? அல்லா குத்த இலாவை உணர்ந்து அவன் பாதையை பற்றிப் பிடித்தவர்களுக்கு அவன் கொடுத்திருக்கும் அதிசய ஆற்றலை பார்த்தீர்களா என்று கூறி அவர்கள் முன்னிருந்த சாப் பாட்டை தன் கையால் தொட்டு, மண்ணையும் கள்ளியையும், நெய்ச்சோறும் கறியுமாக்கி அள்ளி யள்ளி சதக்கத்துல்லா அப்பா அவர் களின் வாயில் ஊட்டினார்கள்.

தெளிவுகள்:

 மேற்சொல்லப்பட்ட வாய்மொழி வரலாற்று சம்பவ நிகழ்வு என்பது மேற்தள கட்டமைப்பாகவும் அதில் உட்பொதிந்துக் கிடக்கும் கருத்தியல் அடித்தள கட்டமைப்பாகவும் அமையப் பெற்றுள்ளது. இதில் உட்பொதிந்து கிடக்கும் கருத்தியல் களை அல்லது உண்மையின்
நுண்அலகுகளை நாம் கீழ் கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

 பீரப்பாவும், சதக்கத்துல்லா அப்பாவும் சமகாலத்தை சேர்ந்தவர்கள். பீரப்பா மூத்தவராகவும், சதக்கத்துல்லா அப்பா இளையவராகவும் சுட்டிக் காட்டப்படுகின்றனர். இதற்கான துணைவிளக்கத்தை அவர்கள் தம் வரலாற்று கால கட்டத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம். சதக்கத் துல்லா அப்பாவின் காலம் 1632 - 1705 ஆகும். பீரப்பா காலம் குறித்து சரியான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை. எனி னும் திருநெறிநீதம் நூலில் குருநபி ஹிஜ்ரத்தாகி குவலகத்தா யிரத்தின் இருபத்துரண்டாமாண்டிலியம்பிடும் ரபியுலாஹிர் கருமமென்றிருபதன்று காரணவெள்ளிநாளில், திருநெறி நீதம்பாட திருவருள் பெருகத்தானே என்று குறிப்பிடுவதால் ஹிஜ்ரி 1022ல் இந்நூல் உருவானதாக அறியலாம். எனவே ஏறத்தாழ கி.பி.1570-1670க்கும் இடைப்பட்டதாகக்கூட பீரப் பாவின் காலத்தை வரையறுக்கலாம். இதனடிப்படை யில் வயதில் முதிர்ந்த பீரப்பாவை, இளையவரான சதக்கத் துல்லா அப்பா சந்தித்திருக்க வாய்ப்புள்ளதாக அறியலாம்.

 (2) சதக்கத்துல்லா அப்பாவிடம் தறி நெய்யும் காக்குழியில் கஃபதுல்லாவை காண்பித்து அங்கே இமாமாக தொழுகை நடத்தியதாக வரும் பகுதி பிற இஸ்லாமிய மார்க்கஞானி களைவிட ஆற்றலிலும் மார்க்கஞானத்திலும் சிறந்தவர் பீரப்பா என்னும் நிலையை உணர்த்த முற்பட்ட குறியீடாக வும் எடுத்துக் கொள்ளலாம்.

 (3) தென்திருவிதாங்கூரின், பத்மநாபபுரம் அரண்மனை பட்டு நெசவு தேவைகளுக்கு இப்பகுதி நெசவாளர்கள் நெய்து கொடுப்பதான செய்தி உண்டு. எனவே அன்றைய முஸ்லிம் குடும்பங்கள் மேற்கொண்ட நெசவுத் தொழி லோடு பீரப்பா வாழ்க்கை நடத்தியிருக்கக்கூடும் என்பதற் கான அத்தாட்சியாக காக்குழி பற்றிய படிமம் இடம் பெற்றிருப்பதாக கருதலாம்.

 (4) உலகியல் வாழ்வில் ஏளிமையாகவும், ஏழ்மையோ டும் பீரப்பா வாழ்ந்தார்கள் என்பதற்கான கூறுகளை, சோறாக்க ஒருபடி அரிசியில்லை என பெறப்பட்ட கூற்றின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். பீரப்பாவின் ஞானப் புகழ்ச்சிப் பாடல்கள் பல இடங்களில் வறுமை, துன்பம், தீங்கு என அனைத்திலிருந்தும் விடுபட இறைவனை இறைஞ்சிப் பாடுவதைப் பார்க்க லாம். (பொல்லாகுபிர்களும் வருங் குற்றமும்), பொருந்தா பிணிதுன்பம் பல ஆபத் தும், நில்லா வறுமையும் மனச்சலிப்பும், நினைப்பும் மறப் பும் வந்தெய்திடாமல் (பாடல் எண்: 102) புவிக்குள் பசித்தவர்க்கென்று ஈயாதலுத்தரையும் ஏன் படைத்தாய் எம்மிறைவனே (பாடல்:9) ஏழை யடியார்க்கு இரங்கும் அல்லல்லாவே எங்கள் வேளை யறிந்துதவும் மேலோனே (பாடல்:475) இதுபோன்ற பல பாடல்வரிக் குறிப்புகளைக் கூறலாம்.

 (5) பீரப்பாவின் அகவாழ்க்கை அதாவது மணஉறவு குடும்ப உறவு பற்றிய தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் ஆனைமலைக்கு அருகில் பீர்மேடு என்னும் மலைப்பகுதி யில் இறைதியானம் என்ற வகையில் பீரப்பா தவம் புரிந்தார் என்பதற்கான செவிவழிச் செய்திகள் உண்டு. இதற்கான துணை ஆதாரமாக பீரப்பா பாடிய முகியத்தீன் ஆண்டவர் மீதான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஞானக்குறம் பாடல் தொகுப்பின் மலைவளம், நாட்டுவளம், வாசல் வளம் உள் ளிட்ட பகுதிகளை குறிப்பிடலாம். ஏனெனில் ஒருவித வாழ் வனுபவமும் உணர்தலின் புரிதலின் அடிப்படையிலேயே இப்பாடல்கள் உருவாகியிருக்கக்கூடும். ஞானப்புகழ்ச்சி யின் மலைமேடு சிறிது- எங்கள் மனமேடு பெரிது (பாடல்: 126) பாதங்கள் மேலுங்கீழுமாய் பத்து நூறாயிரமாண்டு ஓதித் தவம் செய்தாலும் போதாதாம் அன்றுகந்ததுக்கே (பாடல் :29) என்பது போன்ற குறியீடுகள் இடம் பெறுவதைக் கவனத்திற் கொள்ளலாம்.

 இந்நிலையில் இல்லறத்தை மறுத்து துறவறத்தை பீரப்பா வலியுறுத்தினார், இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது என்று ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் இல்லறத்தை நிராகரிக்கச் சொன்னதற்கான ஆதாரங்கள் எதையும் பீரப்பாவின் பாடல்களிலிருந்து எடுத்துக்காட்ட முடியாது. பீரப்பாவின் துணைவியார் சதக்கத்துல்லா அப்பா விற்கு சமைத்து வைத்தார்கள் என்ற வாய்மொழி வரலாற்றுச் செய்தியை மறுப்போரும் உண்டு என்றாலும், இஸ்லாம் பேசும் குடும்ப வாழ்க்கையை பீரப்பா மறுக்கவில்லை என் பதற்கான ஆதாரமாகவும் இதைக் கருதலாம். உடலியல் ஞானம்,ஆண்பெண் உறவு பற்றிய படிமங்கள் சிலவும், ஆன் மீக தத்துவார்த்த விளக்கச் சொல்லாடல்களாகவும் பீரப் பாவின் ஞானரத்தின் குறவஞ்சியிலும் இடம் பெறுகிறது.

 மேலும் பீரப்பா பீர்மேட்டில் தவம்புரிந்தார் என்ற செய்தி யின் மூலமாக அக்காலத்தில் இறையைப் பற்றியும், மனித குலம் மீட்சி பெறுதல் குறித்த ஞானத்தையும் பெற பீரப்பா தனிமையை விரும்பி தனித்து சிந்தித்து தவம்புரிந்து வாழ்ந் திருக்கக்கூடும். இது துறவறம் சார்ந்த விஷயமல்ல. தனிமை சார்ந்த விஷயம். நபிமுகமது தன் வாழ்க்கையில் நபித்துவம் பெற்றதும், இறைத்தூது (வஹி) ஜிப்ரீல் வழி நபி முகமது வுக்கு கிடைத்ததும் ஹிரா மலைக்குகையில் தனித்திருந்த போது தான் என்பது இவ்வேளையில் நினைவுகூரத்தக்கது.

வாய்மொழி வரலாறு - 2

 பீரப்பாவின் ஞானத்தை சோதிக்க திருவிதாங்கூர் மன்னன் அரச சபைக்கு பீரப்பாவை அழைத்து வரச் செய்கிறான். அறிஞர்கள் நிறைந்திருந்த அந்த அவையில் மன்னன் நீரில் மீன் இருக்குமா என்று பீரப்பாவிடம் ஒரு கேள்வி கேட்கிறான். ஆம், நீரில் மீன் இருக்கும் என்று பதில் கூறு கிறார். உடனே ஏளனத்தோடு மன்னன் சிப்பந்தியை அழைத்து தென்னை மரத்திலுள்ள தேங்காயைப் பறிக்கச் சொல்கிறான் பறித்த தேங்காயை உரித்து உடைத்து உள்ளே காட்ட சொன்னபோது அதிசயமாய் தேங்காயின் அந்த இளநீரில் மீன் துள்ளியது.

வாய்மொழி வரலாறு-3

 முத்துசாமி தம்பிரானின் சமஸ்தானத்தில் இளவரசராக ஒரு வார காலத்தில் பட்டம்சூட்டப்பட வேண்டிய அரசகுமாரன் திடீரென்று காய்ச்சல், ஜன்னி வந்து பாதிக்கப்பட்டு எல்லா ராஜ வைத்தியங்களும் பலனளிக்காமல் இறந்து போகிறான். குலசோழிய பார்ப்பனர்களாலும் எதுவும் செய்யமுடிய வில்லை. சமஸ்தானமே துயரத்தில் ஆழ்ந்த சமயம் ஞானி பீரப்பா அழைக்கப்பட்டு அரண்மனைக்குச் செல்கிறார். அங்கே அரசகுமாரன் இறந்துகிடந்த அறைக்குள் சென்று கதவுகளைச் சாத்திவிட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இளவரசனை உயிரோடு எழுப்பி கூட்டி வருகிறார்.

வாய்மொழி வரலாறு-4

 பத்மநாபபுரம் கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் சமயம் அவ்வழியாக சென்ற பீரப்பாவை கோட்டையிலுள்ள சிலர் கேலி செய்ததின் விளைவாக கோட்டை கட்ட முடியாமல் ஆகிப்போகிறது. கற்சுவரை கட்டும்பொருட்டு ஒரு கல்லை வைத்தால் மறுகல் தகர்ந்து விழுந்துவிடுகிறது. பிறகு கோட்டையிலுள்ளவர்கள் தங்கள் தவறை உணர, மன்னனும் பீரப்பாவிடம் வந்து வேண்டிக் கொண்டதன் விளைவாக பீரப்பா தன் திருக்கரங்களால் கல்லெடுத்து வைத்தபின்னரே அக்கோட்டை கட்டப்பட முடிந்தது.

வாய்மொழிவரலாறு - 5

 அதிகாலையில் அடர்ந்த காட்டிற்குள் சென்று அருவி நீருக் கருகே உட்கார்ந்த பீரப்பா தனது கைவிரல்களைத் தொண் டையின் உள்ளேவிட்டு குடல் முழுவதையும் வெளியே எடுத்தார்கள். அதனை ஒரு கல்லில் வைத்து துணியைத் துவைப்பதைப்போல் துவைத்து எடுத்து மீண்டும் அதை விழுங்கினார்கள். பின் உடல் முழுவதையும் கழுவிக் கொண்டார்கள். ஓங்கிய மரத்தின் உயர்ந்த கிளையொன்றை அவர்கள் உற்றுநோக்கவே அது வளைந்து தாழ்ந்தது. அப்பா அவர்கள் தங்கள் பாதங்களின் விரல்களினால் கிளையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தலைகீழாய் தொங்கினார்கள்.

வாய்மொழி வரலாறு - 6

 ஆனைமலைச்சாரலில் தவமிருந்த பீரப்பாவின் முன்னே அவரது சீடர்கள் யோகி ஒருவரை அழைத்துவந்தனர். அவர் கூறினார் பக்கத்து பொதிகை மலையிலிருந்து வெளியிடம் வர ஆயிரம் பேருக்குமேல் தலைவராய் இருக்கும் குருவிடம் அனுமதிகேட்டேன். அவர்கள் ஒரு குளிகையினைத் தந்து வாயில் போடச் சொல்லி பசி, தாகம், களைப்பு தெரியாமல் இருக்கும். பறவைகளைப் போன்று ஆகாயத்தில் பறந்து நினைத்த இடம் செல்லலாம். மாலை பூசைக்குமுன் சென்று வா என உத்தரவு தந்தார். ஆனால் இந்த இடத்தில் வரும் போது வாயில்கிடந்த குளிகை தவறி விழுந்துவிட்டது மாலை பூசைக்கு செல்லாவிடில் பாவம் கிடைக்கும் என்றார். நின்ற அவர் பீரப்பா உபதேசம் செய்தபோது கலிமா சொல்லி முஸ்லிமாகிவிடுகிறார். என் கூட்டத்தினரிடமும் குருவிட மும் உங்களைப் பற்றி நான் எடுத்துகூறுவேன் பொதிகை மலைக்கு எப்படி செல்வது என்று கேட்டபோது பீரப்பா கீழே குனிந்து ஒருசிறு கல்லினை எடுத்து வாயில் போட்டுக் கொள் முந்திய குளிகையைவிடச் சிறந்தது நினைத்த இடத் திற்கு சென்று சேரலாம் என்று கூறுகிறார். பீரப்பாவைப்பற்றி கேட்டு அதிசயப்பட்ட பொதிகைமலையின் குரு பிறகொரு நாள் பீரப்பாவை சந்திக்க வருகிறார். ஞானம் சம்பந்தமான ரகசியங்களை தெளிவாக பீரப்பா எடுத்துக்கூற அதனால் கவரப்பட்டு கலிமாவை மொழிந்து பீரப்பாவின் முன் முஸ் லிமாக மாறுகிறார். என் பெயர் பீர்முகம்மது, உம்முடைய பெயர் எகீன் முகம்மது. நீரே இன்று முதல் எனது முதல் கலீபா ஆவீர் என்று அறிவிக்கிறார்கள். இன்றும் தக்கலை தர்காவில் எகீன் முகமது சாகிபுவினுடையது என்பது இந்த ஊர்மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

தெளிவுகள்:

 இந்த வாய்மொழி வரலாறுகளின் வழியாக சமஸ்தானத்து மன்னன்,மந்திரிகள், புரோகித பார்ப்பனர்கள் ஆகியவர் களைவிட பீரப்பா ஆற்றலிலும் அறிவிலும் உயர்ந்தவர் என்ப தற்கான குறிப்பு உணர்த்தப்படுகிறது. அடித்தட்டு மக்களை வரிகளாலும் உயர்ஜாதி வெறியாலும், கொடுந்தண்டனை களாலும் நசுக்கிக் கொண்டிருந்த சமஸ்தான மன்னர்களை எதிர்த்து நிற்கிற ஆற்றலை பீரப்பா பெற்றிருந்தார் என்பதா கவும் அறிந்து கொள்ளலாம்.இதற்கு ஆதாரமான குறிப்பாக காலங்காலமாக இம்மக்களால் பாடப்படுகிற சாகிப்பைத் என்னும் பீரப்பா பற்றிய புகழ்ப்பாடலின் 16வது பாடல் வரிகளை சொல்லலாம்.

 விரோதிகளான காபிர்கள் அக்கிரமங்கொண்டு சிறைப் படுத்த முயன்றபோது, அதனை முறியடித்து வெற்றி பெற்ற நமது பெருமைக்குரிய பீர்முஹம்மது நாதர் அவர்கள். (வதப்ஈன்லிஹப்ஸில் காபிரீனவ பக்றுனா, பீர்முகமது ஸாகிபுல் காமினில்வலி) இதற்கு பீரப்பாவின் அறிவாற்றல், ஞானத்திறன், சரக்கலை மருத்துவ அறிவு போன்றவை பயன் பட்டிருக்கக்கூடும். ஒன்றை மற்றொன்றாகவோ, ஒரு பொருளை மற்றொரு பொருளாகவோ, பொருளே இல்லாத வெற்றிடத்தில் ஏதேனும் ஒரு பொருள் உள்ளது போன்றோ கருதவைக்கும் ரசவாதக் கலைசார்ந்த புராதன உளவியல் விஞ்ஞானத்தின் கூறுகளும் தவநிலையும் யோகப் பயிற்சி யின் அம்சங்களும், இந்து சமயத்தினரும் பீரப்பாவின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமான நிகழ்வுகளும் இதனுள்ளே உட்பொதிந்து கிடப்பதை கவனிக்கலாம்.

 குர்ஆனிய வசனங்களுக்கும் விளக்கம் சொல்கின்ற தப்ஸீர், நபிமுகமதுவின் சொல்செயல்களை விளக்கும் ஹதீஸ் பிக்ஹு இஸ்லாமிய சட்டங்கள், குர்ஆனை இனிமை யாக பல இசை வடிவங்களில் வெளிப்படுத்தும் கிராஅத், உசூல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம் என பலவித கலை நுட்பங்கள் இஸ்லாமிய கலாசாரத்தில் உண்டு.

 இரும்பைத் தங்கம்போலாக்கும் கீமியா, பிறர்கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடும் ஹீமியா, மறைபொருளை அறி விக்கும் சீமியா, பல உருவத்தோற்றம் கொள்ளும் ரீமியா ஆகிய நான்கு கலைகள் பற்றிய பதிவுகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அவயங்களின் துடிப்புகளால் அறியக் கூடிய துடிசாஸ்திரம் தாதுவின் குணக்குறிகள் அறிதல், கன வின் பலன்கள் புரிதல் சரஓட்டம், நாடி சாஸ்திரம், மூலிகை மருத்துவம், வைத்தியக்கலைகளிலும் விளங்கினர். இந்தப் பின்னணியினூடேதான் சூபிகளின் கராமாத்துகள் எனும் அற்புதங்களை மீள்வாசிப்பு செய்ய வேண்டும். எனவே சிலர்கூறுவதுபோல் கராமாத்துகள் என்னும் வாய் மொழி கதையாடல்களை வெறும் கட்டுக்கதைகளென நிரா கரிக்க வேண்டியதில்லை. அந்த அதிசய கதையாடல்களுக்கு மதிப்பளித்து அவற்றில் உயிரும் உணர்வுமாய் கலந்திருக்கும் நுண்ணிய அளவிலான பண்பாட்டியல் உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்போதுதான் ஆன்மீகத் தின் அர்த்தங்கள் வாழ்வியல் சார்ந்து புதிய தளங்களில் விரிவடையும்.

- ஹெச்.ஜி.ரசூல்

Pin It