இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’:

“தமிழின் பெயரால் - தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லை வாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு” என்கிறது அக்கட்டுரை! அதாவது - தில்லை வாழ் அந்தணர்களை தனிமைப்படுத்திவிடாமல், அவர்களுக்குப் பின்னால், இறை நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அணி திரட்ட முயற்சிக்கிறார்கள்.

இது விஷயத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அழைக்கிறது அக்கட்டுரை. அதாவது - கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்ற பிரிவை உருவாக்கி, தீட்சதப் பார்ப்பனர்களை, கடவுள் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக்கும் முயற்சி; பார்ப்பனர்கள் மூளை எப்போதுமே இப்படித்தான் இயங்கும்.

பிற மதத்தவரோடு மோத வேண்டும் என்றால், இந்துக்களே ஒன்று திரளுங்கள் என்பார்கள். இந்து வைதீக மதத்துக்குள்ளேயே பார்ப்பனர்கள் மேலாண்மை கேள்விக்குள்ளாகும் போது, கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்களே ஒன்று சேருங்கள் என்பார்கள்.

ஆனால், சமூக வாழ்வு, சமூக பண்பாட்டு, அரசியல் அதிகாரம் என்று வரும்போது - பார்ப்பனர்கள் சக இந்துக்களையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் உதறி விட்டு, தங்களுக்கு மட்டுமே ஆதிக்க ‘சிம்மாசனம்’ என்று அறிவித்து விடுவார்கள். அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் பிரச்சினையானாலும் சரி, மண்டல் பரிந்துரையானாலும் சரி, உயர் கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வரும் போதும் சரி, இதைத் தான் நாடு பார்த்தது. அந்தப் பார்ப்பன அம்புக்கு ‘வில்லாக’ இத்தகைய அர்ஜுன் சம்பத்துகள் பயன்படுகிறார்கள்; அவ்வளவு தான்.

இந்தக் கட்டுரையிலே அப்படி என்ன அறிவார்ந்த வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன? அர்ஜுன்சம்பத் எழுதியிருந்தாலும் சரி; அல்லது அவரது பெயருக்குப் பின்னால் பதுங்கி நிற்கும் பார்ப்பன ‘அறிவு ஜீவி’கள் எவராக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் சேர்த்தே, இந்த பதில்களை முன்வைக்கிறோம்.

“சைவத்தின் தலைநகரம் தில்லை நடராசன் கோயில்” என்று தொடங்கி, இந்தக் கோயிலுக்கான புராண பெருமைகளை வியந்து வியந்து போற்றி மகிழுகிறது இக்கட்டுரை. இருக்கட்டும். நமக்கு அது பற்றி அக்கறை இல்லை. ஆனால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல புராணப் பெருமைகளோடு சேர்த்து, தீட்சதப் பார்ப்பனர்களையும் புகழின் உச்சிக்கு ஏற்றிவிடுகிறார்கள். அப்படி அவர்களை உயர்த்திப் பிடிப்பதற்கு சரியான வரலாற்றுத் தகவல்களை முன் வைக்காமல், பொய்களை கூச்ச நாச்சமின்றி பட்டியல் போடுகிறார்கள். இதுவே இவர்களின் அறிவு வறட்சியை காட்டுகிறது.

“மூவர் பாடிய தேவாரம், இந்தக் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டிருந்தபோது, மாமன்னர் ராஜராஜசோழன் - தில்லை வாழ் அந்தணர்களின் சம்மதத்தோடு தேவார ஓலைகளை மீட்டெடுத்ததாக கட்டுரை இயம்புகிறது. இது உண்மையல்ல; பச்சைப் பார்ப்பனப் பொய்!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் - என்று சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற கோயில் தில்லை கோயில். இதில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவார ஓலைச் சுவடிகளை தில்லை நடராசன் கோயிலுக்குள்ளே தீட்சதப் பார்ப்பனர்கள் ஒரு அறையில் போட்டு பூட்டி வெளியே பரப்பாமல் இருட்டடிப்பு செய்து விட்டனர். ஓலைச் சுவடிகள் பல கரையானுக்கு உணவாகிவிட்டன. தேவாரப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த ராஜராஜசோழன், அந்தப் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுக்க விரும்பி, நம்பியாண்டார் நம்பியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

தில்லை தீட்சதர்களிடம், அரசன், தேவார ஓலைச் சுவடிகளைக் கேட்டபோது, தீட்சதப் பார்ப்பனர்கள் தர மறுத்துவிட்டனர். இறந்து போன அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும் நேரில் வந்து கேட்டால் தான் தருவோம் என்று வீம்பு பேசினர். உடனே ராஜராஜசோழன், அந்த மூவரின் சிலைகளைக் கொண்டு வந்து நிறுத்தி, இதோ வந்துள்ளார்கள், தேவாரத்தை கொடு என்று கேட்கவே, ‘இவை சிலைகள்’ என்று தீட்சதர்கள் மறுக்கவே ராஜராஜசோழன் - நடராஜனும் சிலையாகத்தானே நிற்கிறார் என்று திருப்பிக் கேட்டான். ஆத்திரமுற்ற மன்னன், தேவாரம் பூட்டப்பட்டிருந்த அறையின் கதவுகளை உடைத்து, உள்ளே இருக்கும் ஓலைச்சுவடிகளை வெளியே கொண்டு வந்தான். இதுவே வரலாறு; உண்மை இவ்வாறு இருக்க -

தீட்சதர்கள் சம்மதத்தோடு ராஜராஜசோழன் மீட்டான் என்பது - காதில் பூ சுற்றும் கதை. இப்போது கிடைத்துள்ள தேவாரப் பாடல்கள் அப்போது ராஜராஜசோழனால் மீட்கப்பட்ட கறையான் தின்றது போக, எஞ்சியிருந்தவைதான். ராஜராஜசோழன் கதவை உடைத்து, தேவார ஓலைச் சுவடிகளைக் கைப்பற்றாமல் இருந்திருப்பானேயானால், தேவாரம் முழுவதுமே கரையானுக்கு இரையாகியிருக்கும்! பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தயாரித்த ராஜராஜசோழன் திரைப்படத்திலே - இப்படி கதவை உடைத்து மன்னன் உள்ளே புகும் காட்சி வைக்கப்பட்டிருந்ததும், சிவாஜி கணேசன் ராஜ ராஜசோழனாக நடித்ததும் - தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

“தில்லை வாழ் அந்தணர்கள் சைவத்துக்கும் - தமிழுக்கும் பெரும் தொண்டு புரிந்தவர்கள் ஆதி சைவ அந்தணர் மரபில் தோன்றிய இவர்கள் சுத்ததமிழர்கள்” - என்கிறது, இக்கட்டுரை.

முதலில் சில கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும். தில்லையிலே - இப்போது ‘முன் குடுமியோடு’ காட்சியளிக்கும் தீட்சதர்கள் தான் பக்தி இலக்கியத்தில் கூறப்படும் அந்தணர்களா? தில்லை வாழ் அந்தணர்கள் என்று இலக்கியத்தில் புகழப்பட்டவர்கள் எப்படி ‘தீட்சதர்’ ஆனார்கள்? ‘தீட்ஷத்’ எனும் வடநாட்டு பார்ப்பனர் பிரிவின், தமிழாக்கம் தான் தீட்சதர். ‘தீட்ஷத்தை’ ‘தீட்சதர்’ என்று தமிழாக்கிவிட்டால், இவர்கள் தமிழர்களாகி விடுவார்களா? பெரிய புராணம் உள்ளிட்ட எந்த பக்தி இலக்கியத்திலும் சரி, சங்க இலக்கியம் திருமுறை எதிலும் ‘தீட்சதர்’ என்ற பெயரே வரவில்லையே! தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராகப் பணியாற்றி மறைந்த, சிறந்த சிவபக்தரும், தமிழ் அறிஞருமான சுப்பிரமணியன் எழுதிய ‘தமிழர் சமயம்; தமிழர் வேதம்; தமிழகத்துக் கோயில்கள்’ என்ற நூலில், இலக்கியங்களில் குறிக்கப்படும் தில்லைவாழ் அந்தணர்கள் வேறு; தீட்சதர்கள் வேறு என்று நிறுவியுள்ளார்.

தீட்சதர்கள் சுத்த தமிழர்கள் என்றால், இவர்களின் காதுகள் ஏன் தேவாரத்தைக் கேட்க மறுக்கின்றன. ஓதுவார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் ஏறி - தேவாரம் பாடும்போது, அந்த தமிழ் ஓசை ‘நடராசன் சிலைக்கு’ கேட்டுவிடக் கூடாது என்று கர்ப்பகிரகத்தை இழுத்து மூடினார்களே! இதுதான் சுத்தத் தமிழர்களுக்கான அடையாளமா? சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்று அறநிலையத் துறை அறிவித்தவுடன், அதை எதிர்த்து நீதிமன்றம் ஓடியது தான், இவர்கள் தமிழ்ப் பற்றின் வெளிப்பாடா? தேவாரம் பாடப்பட்டதால், கோயில் புனிதம் கெட்டுவிட்டது என்று தீட்டுக் கழிக்கும் சடங்கு களை செய்தார்களே, இதுதான் தமிழன் என்ற உணர்வா?

“பாரம்பர்யமாக தேவாரம் பாடுவதற்கு அங்கே இடமிருக்கிறது என்பது மட்டுமல்ல, தேவாரம் தினமும் பாடவும் படுகிறது” என்கிறது கட்டுரை. தேவாரம் எப்படிப் பாடப்பட்டது? ஆறுகால பூசைகளின் நிறைவில் தேவாரம், திருவாசகத்தில் சில வரிகளைப் பாடி, பூசையை முடிப்பார்கள். ஆறுகாலப் பூசைகளுக்கு இடைபட்ட நேரத்தில் - தேவாரம் பாட முடியாது.

எனவே சிற்றம்பல மேடை மீதேறியும் பாட முடியாது. ஆறுகாலப் பூசையை நடத்தும் - தீட்சதப் பார்ப்பனர்களுக்குத் தான் பூசையை தேவாரம் பாடி முடிக்க உரிமை உண்டு. இதுதான் - தில்லை கோயிலில் தேவாரத்துக்கு கிடைத்து வந்த மரியாதை. ‘சைவத்தின் தலைநகரம்’ என்று கட்டுரையாளர் சொல்கிறாரே, அந்த தில்லையில் தேவாரத்துக்கு தரப்பட்ட மரியாதை இதுதான்! ஆறுகால பூசைகள் நடக்காத இடைப்பட்ட நேரத்தில், ஏன் தேவாரம் பாடத் தடை? அப்போது- தீட்சதப் பார்ப்பனர் அல்லாத ‘சூத்திரர்கள்’ பாடி விடுவார்களே; அதனால் தான் தடை!

தேவாரம் பாடத் தடை கோரி சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தில் தீட்சதர்கள் தாக்கல் செய்த மனுவில், “தேவாரத்தை எந்த இடத்தில் பாடுவது என்பதை முடிவு செய்யும் உரிமை எங்களுக்குத் தான் உண்டு; சிற்றம்பல மேடையில் வள்ளலார், அப்பர் கூட ஏறியது கிடையாது” என்று திமிரோடு குறிப்பிட்டுள்ளனர்.

சிற்றம்பலம் மேடையில் நின்று தேவாரம் பாட வந்தவர்தான் ஓதுவார் ஆறுமுகசாமி. 8.5.2000 அன்று சிவடினயார் ஆறுமுகசாமி மேடை ஏறி பாட முயன்றபோது, தீட்சதர்கள் அந்த முதியவரை கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, ரத்தக் காயங்களுடன் கோயிலுக்கு வெளியே தூக்கி வீசினார்கள். 55 நாட்கள் கழித்து தான் காவல்துறை முதல் தகவல் அறிக்கையையே பதிவு செய்தது. தமிழக அரசு முறையாக வழக்கை நடத்தாததால் தீட்சதர் கும்பல் விடுதலைப் பெற்றது.

1992 இல் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் கோயில் கருவறையில், தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. (17.6.1992 இல் நீதிபதி ஆர். லட்சுமணன் அளித்த தீர்ப்பு) ஆனால், கோயில் கருவறைக்கு வெளியே சிற்றம்பல மேடையில்கூட தேவாரம் பாடுவதைத் தடுக்கிறார்கள் தீட்சதர்கள்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்டில் - தி.மு.க. ஆட்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், சட்ட ரீதியான உரிமையோடு ஜூலை 15 முதல் 20 வரை திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடப் போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி அறிவித்தார். உடனே தீட்சதர் கூட்டம் சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்துக்கு ஓடி தடையாணை வாங்கிவிட்டது. கட்டுரையாளர் கூறுவதுபோல் - தேவாரம் பாடுவதை தீட்சதர்கள் எதிர்க்கவில்லை என்றால், தீட்சதர்கள் ‘சுத்தத் தமிழர்கள்’ என்பது உண்மை என்றால், ஏன், நீதிமன்றம் ஓடித் தடையாணை வாங்கினார்கள்? தேவாரம் பாடப் போனது கடவுள் மறுப்பாளர்களா? இல்லையே! சிவனடியார் தானே!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றக்கூடிய மரபுகளை, சமய நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளை மீறலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது, கட்டுரை!

தீண்டப்படாதவர்களையும், பெண்களையும், கோயிலுக்குள்ளே விடக் கூடாது என்பதுதானே கடந்த கால மரபு? கோயிலுக்கு ‘பொட்டுக்கட்டி’ பெண்களை தேவதாசிகளாக்கி விடுவதுதானே மரபு! இவையெல்லாம் அப்படியே தொடரலாமா? சரி; பழையகால மரபை மீறக் கூடாது என்றால், கோயிலுக்குள் மின்விளக்கு போடலாமா? தீட்சதர் ஸ்கூட்டரில் போகலாமா? சிறைக்குப் போய்விட்டு திரும்பிவந்து தீட்சதர் பதவியில் தொடரலாமா?

இவையெல்லாம் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்; கட்டுரையாளர் கசிந்துருகும் ‘ஆன்மீக’ப் பார்வையிலிருந்தே சில கேள்விகளை கேட்கிறோம்:

தீட்சதப் பார்ப்பனர்கள் தில்லை கோயிலில் நடத்தும் வழிபாட்டு முறையே சிவவழிபாட்டுக்கு நேர் எதிரானது என்று பழுத்த சிவ மதத்தவர்களே - எதிர்ப்பு தெரிவித்திருப்பது, கட்டுரையாளருக்கு தெரியுமா?

சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகவே வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தவர், யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். சைவத்தைப் பரப்பும் பாடசாலைகளை நிறுவியவர். 60-க்கும் மேற்பட்ட பழம் சைவ நூல்களை தேடிப் பிடித்து பதிப்பித்தவர். அவரது ஆளுமைக்காக திருவாடுதுறை ஆதீனத்தால் ‘நாவலர்’ பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து அடிக்டி தமிழகம் வந்து போனவர். அப்போதெல்லாம் பெரும்பாலும் அவர் தங்குமிடம், அவர் போற்றி வணங்கும் சிதம்பரம் தான். தில்லை நடராசன் மீது அபார பக்தி கொண்டவர். சிதம்பரத்திலேயே ‘சைவப் பிரகாச வித்யாசாலை’யை நிறுவியவர். அத்தகைய பழுத்த சிவப்பழம் ஆறுமுக நாவலரே - சிதம்பரம் தீட்சதப் பார்ப்பனர்களை அங்கீகரிக்கவில்லை.

சிவாகமத்தில் கூறியபடி சிவதீட்சை பெற்றவர்கள் மட்டுமே சிவாலயங்களில் அர்ச்சகராக இருக்கவேண்டும். ஆனால், தீட்சதப் பார்ப்பனர்கள் ஆகமங்களைவிட வேதங்களை உயர்வாகக் கருதக் கூடியவர்கள். சைவ கோயில்களில் ‘சிவ தீட்சை’ பெறாத வைதீக பார்ப்பனர்கள் கையினால் விபூதி வாங்கக் கூடாது. ஆகமக் கோயில்களில் சிவ தீட்சை பெறாதவர்களுக்கு இடமில்லை என்பது நாவலரின் உறுதியான கருத்து. அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்துகளால் தீட்சதப் பார்ப்பனர்கள் நாவலர் மீது கடும் கோபமடைந்தனர்.

1868 இல் ஆறுமுக நாவலர் சிதம்பரம் வந்தபோது, தீட்சதப் பார்ப்பனர்கள் தில்லைக் கோயிலில் உள்ள பேரம்பலத்தில், நாவலருக்கு எதிராக ஒரு கூட்டத்தைக் கூட்டினர். 1869 ஆம் ஆண்டு இந்த கூட்டம் நடந்தது. அப்போது, கூட்டத்துக்கு தலைமை வகித்த தில்லை தலைமை தீட்சதப் பார்ப்பனர் சபா நடேசர் என்பவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து, ‘இப்போதே ஆறுமுக நாவலர் இருக்குமிடத்துக்குப் போய், அவரை இழுத்துக் கொண்டு வந்து, நையப்புடைப்பதற்கு விரும்புகிறேன். நீங்கள் எனக்கு உதவியாக வரவேண்டும்’ என்று அழைப்பு விடுக்கிறார்.

யாரும் முன்வரவில்லை. இதை கேள்விப்பட்ட ஆறுமுக நாவலா கடலூர் பஞ்சகுப்பம் நீதிமன்றத்தில் தீட்சதப் பார்ப்பனர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். 1869 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நம்பூதிரி பார்ப்பனர் மீதான குற்றத்தை உறுதி செய்து ரூ.50 அபராதம்; கட்டத் தவறினால் ஒருமாத சிறை என்று நீதிபதி ‘றொபேர்ட்ஸ்’ அறிவித்தார். (ஆதாரம்: ஸ்பிரீமேன் பத்திரிகை 3-2-1870)

தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள் கட்டிக் காத்து வரும் - வழுவாத பாரம்பர்ய பழக்க வழக்கங்களுக்கு இது ஒரு உதாரணம். 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி, நீதிபதி மகாராசன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. தமிழகக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக - சிவாச்சாரியார்கள், பட்டர்கள் மற்றும் ஆன்மீக வழி வந்தவர்களைக் கொண்ட குழு அது. அந்தக் குழு, சிதம்பரம் நடராசன் கோயில் பற்றி தனது அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறது:

“சிதம்பரம் நடராசர் பூஜை மகுடாகம பூசை. மகுடாகமமே தமிழுக்குச் சிறப்புப் பிரிவுகளாகிய இசை நாடகம் இரண்டையும் சிறப்பிக்க வந்த ஆகமம்... 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் தாங்கள் பாடிய தில்லைக் கல கம்பத்தில், நடராசப் பெருமான் மகுடாகமப் பூசை கொள்கிறார் என்று பாடியிருக்கின்றனர். ஆனால் தில்லையில் மகுடாகமப் பூஜை நடைபெறவில்லை.

பதஞ்சலிபத்ததிப்படி பூசை நடக்கிறது. இது வைதீக பூசை என்று தீட்சதர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கூற்று சரியானதாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. சிதம்பரம் கோயிலில் ஆகமப் பிரதிட்டையேயன்றி, வைதீய பிரதிட்டையல்ல. சிவாச்சாரியர்கள் (தீட்சதர்கள்) வேத மந்திரங்களை சேர்த்துக் கொள்வது அதிகப்படியானது. இங்கு வேதமந்திரம் இன்றியமையாத அங்கம் அல்ல. சிவாச்சாரிகள் வேறிடத்தில் கூறிய வேத ஆகம ஒருமைப்பாட்டு உணர்ச்சியின் விளைவாகத் தான் வேத மந்திரங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் தமிழ்நாட்டுக்கே உரிய வேறு எந்த நாடும் கண்டிராத, நடராசன் மூர்த்தியின் பூசை, வைதீக பூசை என்று கூறுவது பெரும் பிழை மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய புராதனமான கடவுள் கொள்கைக்கும், பண்பாட்டுக்கும் செய்த பெரும் தீமையும் ஆகும். ஆகம விதிப்படி இதுவும் புனிதம் கெடுவதாகும்.”

- இது மகாராசன் குழு பரிந்துரை. தீட்சதப் பார்ப்பனர்களின் வழியாக குறித்த கருத்து. வேதத்தின் மீதுள்ள பார்ப்பனப் பற்று காரணமாகவே, வழிபாட்டு முறையில் ஆகமத்தைப் புறக்கணித்து கோயில் புனிதத்தைக் கெடுத்து வருகிறார்கள் என்கிறது, மகாராசன் குழு பரிந்துரை. இவர்களைத் தான் பாரம்பர்யத்தைக் கட்டிக் காப்பாற்றி வருவோம் என பெருமை பேசுகிறது தினமணி’ கட்டுரை.

இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளி வந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: சென்ற இதழ் தொடர்ச்சி-

தில்லை தீட்சதர்களுக்கு - நடராசன் கோயில் பாரம்பர்ய உரிமை படைத்தது என்றும், அவர்களுக்கு அரசு உத்தரவு போட முடியாது என்றும் கூறுகிறது, கட்டுரை!

மக்களாட்சி அமைப்பில் அரசு கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விலக்குப் பெற்ற எந்த நிறுவனமும் இருக்கவே முடியாது. குடும்பத்துக்குள்ளேயே சட்ட மீறல் நடந்தால், காவல்துறை தலையிட்டு வழக்கு தொடர உரிமை இருக்கும்போது பழம் பெருமை வாய்ந்த கோயில் முழுமையாக அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியுமா? நடராசன் கோயிலில் திருட்டுப் போய்விட்டது என்றால், காவல்துறைக்கு புகார் தர மாட்டார்களா? கோயில் விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாமா?

தமிழ்நாட்டில் - எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது கோயில் சொத்துகளைப் பங்கு போட்டுக் கொள்வதில் தீட்சதர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து கோயிலுக்குள் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். கோயில் நகைகளை திருடிக் கொண்டு போய் விட்டதாக, ஒரு தீட்சதர் அணி, மற்றொரு அணி மீது மாறி மாறி காவல் நிலையத்திற்குப் போய்த் தான் புகார் தந்தது. தமிழகம் முழுதும் சிரிப்பாய் சிரித்த கதை இவை. அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், தில்லைக் கோயிலுக்கு தனி அதிகாரி ஒருவரை நியமித்து, கோயிலை அரசே எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். உடனே தீட்சதப் பார்ப்பனர்கள் உயர் நீதிமன்றம் போய் தடை வாங்கிவிட்டனர்.

அரசு தலையிடவே முடியாது என்று கட்டுரை எழுதக் கிளம்பியுள்ள “ஆன்மீகங்களை”ப் பார்த்து நாம் கேட்க விரும்புகிறோம்; அரசே தலையிட முடியாது என்று கூறுகிற தீட்சதர்கள், ஏன், நீதிமன்றத்துக்கு ஓட வேண்டும்? காவல்துறையில் புகார் தர வேண்டும்? நீதிமன்றம் விதித்த தடையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்? தில்லை நடராசனிடம் முறையிட்டு விட்டு, ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே! கோயில் நகைகளையும், பொருட்களையும் திருடுவதும், பங்கு போட்டுக் கொள்வதில் ‘கும்மாங்குத்து குஸ்தி’ போடுவதுதான் - தெய்வீகத் திருப்பணியா?

கோயில் வருமானத்தைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்ற தீட்சதப் பார்ப்பனரை வேறு சில தீட்சதப் பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கோயில் கல்தூணிலேயே மண்டையை மோதி, “மோட்சத்துக்கு” அனுப்பினார்கள். ஆன்மீகத்துக்கு சவால் விடுவது யார்? அர்ஜுன் சம்பத்துகள் பதில் சொல்வார்களா?

Pin It