கோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே! (3)

“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.

கோட்சே என்ற தனிமனிதனின் வெறிச் செயல் தான் காந்தி கொலை என்றும், அதை பா.ஜ.க.வோ சங்பரிவாரங்களோ ஏற்கவில்லை என்றும் பா.ஜ.க.வினர் வாதாடுகிறார்கள். கோட்சே பயங்கரவாதிதான்; ஆனால் இந்து பயங்கரவாதி என்று கூறுவது இந்து மதத்துக்கு விரோதம் என்றும் கூறுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்காசன் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எழுந்த எதிர்வினைகள் இவை. கோட்சே தனி மனிதரா? ஆர்.எஸ்.எஸ். ‘இந்து’ தர்மம் - இந்துத்துவம் என்ற வலைப் பின்னலிலிருந்து கோட்சேயை தனித்துப் பிரித்தெடுக்க முடியுமா?

gandhi in death bedகாந்தி கொலையில் பல வரலாறுகள் திரிக்கப் பட்டு உண்மைகளை மறைத்து, சங்பரிவாரங் களும் இந்துத்துவா சக்திகளும் திட்டமிட்டு பரப்புரை செய்து வருகின்றன. அது குறித்த வரலாற்று உண்மைகளை ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்குகிறது. (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

சுனிபாய் வைத்யா என்ற குஜராத் மாநிலக்காரர் காந்தி கொலை பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதினார். அப்போது அவருக்கு வயது 85. சர்வோதய இயக்கத்திலும், வினோபாவின் பூமி தான இயக்கத்திலும் பங்கு பெற்றவர். இவர் குஜராத்தில் ‘பூமி புத்ரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இந்திராவின் அவசர நிலைக் காலத்தில் 7 மாதம் சிறையில் இருந்தவர். காந்தியைக் கொன்ற கோட்சேயை - மாவீரனாக சித்தரித்து, மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடகம் நடத்தியபோது இந்த முதியவர் கொதித்தெழுந்து, காந்தி கொலை பற்றிய ஒரு நூலை வினா-விடை வடிவத்தில் எழுதினார். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் வேறு பல மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மதுரையில் ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’ என்ற அமைப்பின் சார்பில் - இதன் தமிழ் பதிப்பும் வெளி வந்திருக்கிறது. அதில் காந்தியைக் கொலை செய்வதற்கு - சுமார் 9 முறை முயற்சிகள் நடந்தன என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1934ஆம் ஆண்டில் - பூனா நகராட்சியின் வரவேற்பு விழாவில் பங்கேற்க காந்தியடிகள் சென்றபோது, அவர் மீது வெடிகுண்டு வீசும் முயற்சி நடந்தது. வெடிகுண்டு காந்தியடிகளின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் முன்னால் விழுந்ததால், அவர் உயிர் தப்பினார். இந்த குண்டு வீச்சில், தலைமை நகராட்சி அதிகாரியும், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 பேரும் படுகாய மடைந்தனர். (இது குறித்து இராமச்சந்திர குகா தரும் தகவல் வேறு இடத்தில் வெளியிடப்பட்டுள்ளது)

அதன் பிறகு 1944ஆம் ஆண்டு இதே நாதுராம் வினாயக் கோட்சே, காந்தியைக் கொலை செய்ய முயற்சித்தார். ‘பஞ்சக்கனி’ என்ற இடத்தில் நாதுராம் கோட்சே, கையில் கத்தியுடன், காந்தியைக் குத்திக் கொலை செய்வதற்கு ஓடினார். அப்போது காந்தியுடனிருந்த, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டி. பிசாரே என்பவர், பாய்ந்து சென்று, கோட்சேயின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி, காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. பூனேயில் உள்ள காரத்தி என்னும் தங்கும் விடுதியின் உரிமையாளரான மணி சங்கர் புரோகித் என்பவர், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால் சாட்சி கூறினார். அந்தச் சம்பவம் நடந்த உடனேயே, தன்னைக் கொலை செய்ய வந்த கோட்சேயை, தாம் சந்திக்க வேண்டும், அவரோடு விவாதிக்க வேண்டும் என்று காந்தி விரும்பி, அவரை அழைத்து வரப் பணித்தார். ஆனால், கோட்சே, காந்தியை சந்திக்க மறுத்துவிட்டார்.

1944ஆம் ஆண்டு காந்தியை கொல்ல மற்றொரு முயற்சி நடந்தது. அப்போது அவர் வார்தாவிலிருந்து பம்பாய்க்கு, ஜின்னாவைச் சந்திக்க புறப்பட இருந்த நேரம். இத்திட்டத்தை முறியடித்து, காந்தி-ஜின்னாவின் சந்திப்பு நடக்கவே கூடாது என்று ஒரு தீவிரவாதக் குழு திட்டமிட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்தக் குழு வார்தாவுக்கு வந்திருந்தது. உளவுத் துறையின் வழியாக இந்தத் தகவல் காந்தியடிகளிடம் தெரிவிக்கப்பட்டவுடன், இவர் இந்தக் குழுவை சந்தித்து விட்டுத்தான் பம்பாய் போவேன் என்று கூறி விட்டார். ஆனால், பாதுகாப்புக் கருதி, காவல்துறை அதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டது. தீவிரவாதிகளின் குழுவையும் காவல்துறை பிடித்துவிட்டது. அந்தக் குழுவிலிருந்த தாட்டே என்பவர் கையில் ஒரு கத்தியை வைத்திருந் தார் . விசாரணையில், காந்தியின் பயணத்தைத் தடுக்கும் நோக்கத்துடனேயே வந்ததாக ஒப்புக் கொண்டார்கள். காந்தியின் உயிருக்கு ஆபத்தை உருவாக்குவதே, இந்தத் தீவிரவாதக் குழுவின் திட்டம் என்று, புனே மாவட்ட காவல்துறை அதிகாரி, காந்தியின் செயலாளர் பியாரிலாலுக்கு அவசரமாக தொலைபேசி மூலம் எச்சரிக்கை செய்தார்.

1946ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மற்றொரு கொலை முயற்சி நடந்தது. அப்போது காந்தியடிகள் சிறப்பு இரயில் மூலம் புனாவுக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அந்தச் சிறப்பு இரயில் ‘நேரல்’ என்ற ஊருக்கும், ‘கர்ஜத்’ என்ற ஊருக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் மீது பாறாங்கற்களைப் போட்டு இரயிலைக் கவிழ்க்கும் சதி நடந்தது. இரயில் ஓட்டுநரின் திறமையால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால், இன்ஜின் பலத்த தேசத்துக்குள்ளானது. தொடர்ந்து இப்படி கொலை முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தன. அதனைத் தொடர்ந்து காந்தியடிகளே ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

“இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார். அதற்கு பதிலளித்து - உடனே நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த ‘அக்ரனி’ என்ற மராத்திய பத்திரிகையில் எழுதினார். “அதுவரை யார் உங்களை உயிருடன் விட்டு வைக்கப் போகிறார்கள் பார்ப்போம்” என்று. அதற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு ஜனவரி 20இல் நடந்த வெடிகுண்டு வீசும் முயற்சி நடந்தது.

காந்தியார் - சுட்டுக் கொல்லப்படுவதற்கு 10 நாள் களுக்கு முன்பு அவரை தீர்த்துக்கட்ட ஒரு முயற்சி நடந்தது.

இந்த சதிக்கான திட்டம் வகுத்தவர்கள் :

  1. நாராயணன் ஆப்தே (சித்பவன் பார்ப்பனர்),
  2. நாதுராம் கோட்சே (சித்பவன் பார்ப்பனர்),
  3. கோபால் கோட்சே (சித்பவன் பார்ப்பனர்),
  4. மதன்லால் (பார்ப்பனர்), 5. விஷ்ணு கார்க்கோர்,
  5. திகம்பர் பேட்கே.

இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய கூட்டு சதி!

1948 ஜனவரி 19ஆம் தேதி டில்லி ‘கன்னாட் சர்க்கில்’ பகுதியிலுள்ள மெரீனா ஓட்டலில் இந்தக் கூட்டம் தங்குகிறது! காந்தியார் பிர்லா மாளிகையிலே தங்கியிருக்கிறார். அப்போதுதான் காந்தியார் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவெடுத்த நேரம்! கோபால் கோட்சே காந்தியாரின் வழிபாட்டுக் கூட்டத்துக்கு வந்து, இடங்களை எல்லாம் பார்வையிடுகிறான். காந்தியாரை கோபால் கோட்சே பார்த்ததே - அதுதான் முதல் முறை. எப்படி காந்தியாரை தீர்த்துக் கட்டுவது என்பதற்கான முன்னோட்டத்திற்காக கோபால் கோட்சே அங்கு வருகிறான்; 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு காந்தியாரை தீர்த்துக் கட்டுவது என்று முடிவெடுக்கப் படுகிறது. 19ஆம் தேதி காலையும் ஆப்தே, திகம்பர் இருவரும் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்; அறைக்குத் திரும்பியவர்கள் வெடிகுண்டுகளை தயார்படுத்திக் கொள்கிறார்கள்; யார் யாருக்கு என்னென்ன வேலை என்று பிரிக்கப்படுகிறது.

மதன்லால் - காம்பவுண்டு சுவரில் வெடிகுண் டோடு இருக்க வேண்டும். முதலில் இவன் வெடி குண்டை வீசி கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். திகம்பர் பேட்கே, கோபால் கோட்சே ஆகிய இருவரும் காந்தியார் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்குப் பின்னால் உள்ள வேலைக்காரர் தங்கும் அறையில் வெடிகுண்டோடு இருக்க வேண்டும். அங்குள்ள ஜன்னல் வழியாக வெடிகுண்டை காந்தியார் மீது வீசுவது என்பது திட்டம். வேலைக்காரர்களிடம் காந்தியாரை போட்டோ எடுக்க வந்ததாக சொல்லிவிட வேண்டும்; காம்பவுண்டு சுவரில் உள்ள மதன்லால் வெடி குண்டை வீசி வெடித்தவுடன் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும். அப்போது - வேலைக்காரர் அறையிலிருந்து ஜன்னல் வழியாக காந்தியார் மீது ஒருவன் வெடிகுண்டை வீச வேண்டும். இன்னொருவன் துப்பாக்கியால் சுட வேண்டும்; இதைத் தவிர கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருக்கும் கார்க்கோர் என்பவனும் காந்தியார் மீது ஒரு வெடிகுண்டை வீச வேண்டும்; நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகிய இருவரும் இவைகளை எல்லாம் கண்காணிக்க வேண்டும் என்று முடிவெடுக் கப்பட்டது.

தங்கியிருந்த ஓட்டலை விட்டு இருவர் இருவராக தனித்தனியே வெளியே கிளம்பினார்கள்; வெடிகுண்டுகள் சகிதமாக! அந்த நேரத்திலும் ஆப்தே - டாக்சிக்காரருடன் பேரம் பேசிக் கொண்டிருந்தான்! திட்டமிட்ட வாறு - அந்தந்த இடத்துக்கு எல்லோரும் சென்றனர்! காந்தியாரின் பிரார்த்தனைக் கூட்டம் துவங்கியது! வேலைக்காரர் அறைக்குள் சென்ற பேட்கேவுக்கு ஓர் அதிர்ச்சி! அங்கே இருந்த வேலைக்காரனுக்கு ஒற்றைக் கண்! ஒற்றைக்கண் மனிதர் ஒரு அபசகுனம் என்பது இந்து தர்மத்தின் நம்பிக்கை! அதனால் பேட்கே நடுங்கிப்போய் வெளியே ஓடிவந்துவிட்டான்!

உள்ளே இருந்தது கோபால் கோட்சே மட்டும்தான். ஆனால் எந்த ஜன்னல் வழியாக காந்தியாரை நோக்கி சுட வேண்டுமோ அந்த ஜன்னலுக்கும், காந்தியார் அமர்ந்திருந்த மேடைக்கும் உயரம் வித்தியாசமாக இருந்தது. அந்த ஜன்னல் வழியே காந்தியாரைக் குறி வைத்துப் பார்க்க முடியவில்லை; கோபால் கோட்சேவுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. காம்பவுண்டு சுவரில் தயாராக இருந்த மதன்லால் என்ற பார்ப்பனன், சமிக்ஞை கிடைத்த வுடன் அமைதியாக ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைத்தான்; அந்த சிகரெட் நெருப்பைக் கொண்டு - காலுக்கு அடியில் இருந்த வெடிகுண்டைப் பற்ற வைத்து - வீசினான்; குண்டு வெடித்துவிட்டது; கூட்டத்தில் குழப்பம். இப்போது ஜன்னல் வழியே காந்தியாரை நோக்கிச்சுட வேண்டிய நேரம்; கோபால் கோட்சே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்; திட்டம் தோல்வியில் முடிகிறது! போலீசார் - மதன்லாலைக் கைது செய்தனர்; மற்றவர்கள் தப்பி ஓடி விடுகின்றனர்; போலீசார் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சோதனையிடச் செல்வதற்குள் எல்லோருமே தப்பிவிட்டனர்!

குண்டு வெடித்தபோது - காந்தியார் அமைதி யாகப் பேசிக் கொண்டிருந்தார்! உண்ணாவிரதத்தால் உடல்நலிவுற்ற அவரை - ஒரு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி வந்திருந்தார்கள்; பேச முடியாத உடல் பலவீனம்; அருகே இருந்த சுசீலா நய்யார் குண்டு வெடித்தவுடன் அலறுகிறார். அப்போது காந்தியார், “பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும்போது சாவதை விட - வேறு நல்ல சாவு ஏது?” என்று கேட்டுவிட்டு கூட்டத்தினரைப் பார்த்து அமைதிப்படுத்துகிறார். அருகே இருக்கும் இராணுவப் பயற்சி முகாமில் ஒத்திகை நடந்திருக்கிறது; வேறு எதுவும் இல்லை என்று சமாதானப்படுத்திவிடுகிறார்; அதற்கு சரியாக 10ஆவது நாளில் - அதே பார்ப்பனர் கூட்டம் காந்தியாரைத் தீர்த்துக் கட்டிவிடுகிறது!