சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக் கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம்.
இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை, செல்வாக்கு, அது இதுவரை செய்திருக்கும் வேலை ஆகியவைகளைப் பற்றியும் ஒருவாறு விவரிப்போம்.
அதன் பொருள்
சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால் இந்தியாவில் தேசீயம் என்கின்ற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றி பிழைக்க ஒரு கூட்டத்தார், அதாவது மேல் ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தாரின் சூட்சியாலும் பாமர மக்களை ஏமாற்றி சிலர் பிழைக்க உபயோகப்பட்டு வரும் ஒரு பாதக மும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் தேசீயம் என்பது மக்களின் ‘ஆத்மார்த்த - இயல்’ என்பதில் கடவுள், மோட்சம், நரகம் என்கின்ற வார்த்தைகள் எப்படி அர்த்தமற்றதாகவும் புரோகிதக் கூட்டமும், பாதிரிக் கூட்டமும், முல்லாக் கூட்டமும், சன்யாசிக் கூட்டமும், பாமர மக்களிடம் சமயத்திற்கு ஒரு அர்த்தமும் சந்தர்ப்பத்திற்கு ஒரு கருத்துமாய்ச் சொல்லி அவர்களை ஏமாற்றி பிடுங்கித்தின்று சோம்பேறிகளாய் இருந்து நோகாமல் வாழ்வதற்காகச் செய்து கொண்டிருக்க உபயோகிக்கப்பட்டு வருகின்றதோ, அதேபோல் தேசீயமென்னும் பதமும் சரீரப் பிரயாசை ஒரு சிறிதும் எடுத்துக் கொள்ள இஷ்டமில்லாமல் நெஞ்சத்தில் அழுக்குப் படாமல் பாமரர்களை ஏமாற்றிப் பிழைக்கவும் கீர்த்தி பெறவும் கண்டு பிடிக்கப்பட்ட சாதகமாகும்.
இந்தப் பதமானது ஆங்கில பாஷையில் “நேஷனல்” என்கின்ற பதத்தின் மொழி பெயர்ப்பு என்கின்ற முறையில் ஏற்பட்டதே தவிர மற்றபடி அது இந்தியாவின் வேறு எந்த பாஷையிலும் எந்த கருத்திலும் இருந்ததல்ல வென்றே சொல்லலாம்.
அன்றியும் ஒரு சமயம் பத அர்த்த உணர்ச்சியானது தேசத்தின் பொதுவான நன்மைகளை உத்தேசித்ததாகக் காணப் படுவதாயிருந்தாலும் அப்பதத்தின் பேரால் நடைபெற்று வரும் முயற்சிகள் முழுவதும் அரசியல் சம்பந்தமான துறையில் சில உத்தியோகங்களையும், அதிகாரங்களையும் மாத்திரம் கருதி அவைகளை அரசாங்கத்தாரிடமிருந்து அடைவதற்காக செய்யும் முயற்சிகளாகவே இருந்து வருகின்றதேயல்லாமல் வேறில்லை.
உதாரணமாக தேசியம் (அதாவது இந்திய தேசியக் காங்கிரஸ்) ஏற்பட்டு இன்றைக்குக் கிட்டத்தட்ட 50, 60 ஆண்டுகளாகி, அது இன்றைய தினம் செய்திருக்கும் வேலை என்ன வென்று பார்த்தால், அரசாங்க சம்பந்தமான உத்தியோகங்களை ஒன்றுக்கு 10 ஆகப் பெருக்கி அவ்வுத்தியோகங்களுக் கெல்லாம் சதா வேலை இருக்கும்படியாக அநேக புதிய புதிய அதிகாரங்களை உண்டாக்கி அவ்வுத்தியோகங்களும் அதிகாரங்களும் மக்களுக்கு சதா தேவையாய் இருக்கும்படியாக, மனித வாழ்க்கையையும் குணங்களையும், ஒழுக்கங்களையும் திருப்பி இதன் பயனாய் முன் சொல்லப்பட்ட உயர்ந்த ஜாதியார் என்னும் எல்லாப் பார்ப்பனர்களும் படித்தவர்கள் என்றும் பார்ப்பனரல்லாதாரும் போட்டி போட்டு வாழும் படியாக ஏற்பட்டதல்லாமல், நாட்டிற்கோ, நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்கோ ஏதாவது நன்மை ஏற்பட்டிருக்கின்றதா என்பதை சிறிதாவது கவனித்தால் நாம் கூறுவதில் உண்மை நன்றாக விளங்கும்.
அன்றியும் இன்றைய தினமும் தேசியம் என்பதின் பேரால் உள்ள காங்கிரஸ் என்னும் கூட்டத்திற்கோ இயக்கத்திற்கோ தேசியம் என்னும் தேச சம்பந்தமான நன்மைகளைப் பொறுத்த கொள்கைகள் என்ன என்று பார்ப்போமானால் கூட அவை பெரிதும் உத்தி யோகங்களையும், அதிகாரங்களையும் பொறுத்ததாகவே இருக்கின்றதே தவிர, வேறு என்ன என்று பார்த்தால் அதன் மூலமும் உண்மை விளங்கும்.
ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டும் என்று பார்ப்போமானால் குறைந்த பக்ஷம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும் மனசாக்ஷியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாகவாவது இருக்க வேண்டும்.
ஈதன்றி அதற்கு மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும், கல்வி வேண்டும், ஆராய்ச்சி வேண்டும், கண்ணியமானத் தொழில் வேண்டும், சமத்துவம் வேண்டும், ஒற்றுமை வேண்டும், தன் முயற்சி வேண்டும், உண்மை உணர்வு வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும், சோம்பேறிகள் இருக்கக்கூடாது, அடிமைகள் இருக்கக் கூடாது, தீண்டாதவர்கள் தெருவில் நடக்கக் கூடாதவர்கள் முதலிய வர்கள் இருக்கக்கூடாது, இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.
தேசியம் செய்ததென்ன?
ஆனால் இவைகளில் எதனையேனும் இந்த ஐம்பது வருஷத்திய தேசியம் செய்திருக்கின்றதா? என்று பொது தேசியத் தலைவர்களையும், தனித்தனி தேசியக் கட்சித் தலைவர்களையும் இவைகளில், சம்பந்தப்பட்ட தேச பக்தர்களையும், தேசத் தொண்டர்களையும் கேட்கின்றோம்.
இந்த ஐம்பது வருஷ காலமாக உத்தியோகப் பெருக்குக்கும், அதிகாரப் பெருக்குக் கும் அவற்றிற்கு ஏற்பட்ட யோக்கியதா பட்ச பெருக்குக்கும், சம்பளப் பெருக்குக்கும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான திட்டங்கள் கொண்ட சட்டங்கள் தேசியத்தின் பேரால், நிறைவேற்றப் பட்டிருப்பது போல், உண்மையாகவே தேச நன்மைக்கேற்றதான மேலே குறிப்பிட்டவைகள் விஷயத்தில் ஏதாவது சட்டம் செய்ய இந்த தேசிய இயக்கமோ, தேசியத் தலைவர்களோ, ஒரு சிறிது முயற்சியாவது செய்து சட்டம் செய்தார்களா? செய்ய முற்பட்டார்களா? என்று கேட்பதுடன், அவ்வித சட்டம் செய்ய முன் வந்த வேறு கனவான்கள் முயற்சிக்காவது முட்டுக்கட்டை போடாமலிருந்தார்களா? என்று கேட்கின்றோம்.
பட்டினங்களில் உள்ள பொதுக்கிணறுகளில் சக்கரவர்த்தியின் குடிகளும், இந்நாட்டுப் பழங்குடிகளும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு மிக்க அவசியமான சமூகமுமான ஆதித்திராவிட மக்கள் என்போர் தாகத்திற்குத் தண்ணீர் மொள்ளுவதற்கு இந்த நாட்டில் இனியும் சட்டம் செய்துதான் அமுலில் கொண்டுவர வேண்டியிருப்பதுடன் அவ்வித சட்டம் இதுவரை எந்த தேசியவாதியாலும் கொண்டு வரப்படாமல் இருப்பதுடன் தேசியவாதி அல்லாதவர் என்பவரால் (திரு.வீரையன் அவர்களால்) கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு தேசியவாதிகளின் எதிர்ப்பில்லாமலும் இருக்க முடியவில்லை.
சென்ற மாதத்திலும் சென்னை சட்டசபையில் கிராமப் பொதுக் கிணறுகளில் பொதுமக்கள் யாவருக்கும் தாகத்திற்கு தண்ணீர் மொண்டு குடிக்க உரிமை வேண்டுமென்று ஒரு தேசியவாதி அல்லாதார் என்கின்றவரால்தான் சட்டம் கொண்டுவர முடிந்ததே தவிர வேறில்லை.
அப்படியிருந்தும் அந்த சட்டத்தையும் தேசியவாதிகள் எதிர்க்காமலிருக்கவில்லை. தேசியவாதிகள் தயவால் மந்திரியாகி தேச மக்கள் பணத்தில் தேச மக்கள் பேரால் மாதம் ஒன்றுக்கு 5000 ரூபாய் சம்பளம் வாங்கினவரும், சுயாட்சி சங்கத்தைச் சேர்ந்தவரும், ஜாதி வித்தியாசமே இல்லாததும் “தினம் தினம் கடவுள்களுடனும் மகாத்மாக்களுடனும் சம்பாஷனை செய்து கொண்டிருக்கும்” சங்கமாகிய பிரம்மஞானச் சங்கத்தைச் சேர்ந்தவருமான திரு.ரங்கநாத முதலியாரால் ஆட்சேபிக்கப்பட்டதுடன், அவ்வாட்சேப னைக்கு அவர் சொன்ன காரணம் என்னவென்றால் இந்தச் சட்டம் நிறை வேறினால் தேசத்தில் அடிதடி கொலைகள் முதலியவைகள் ஏற்பட்டுவிடும், ஆதலால் கூடாது என்று சொன்னாராம்.
இதைத் திருவாளர் சத்தியமூர்த்தி முதலிய பச்சைத் “தேசியவாதிகள்” ஆதரித்தார்களாம். தேசிய இயக்க யோக்கியதைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்றுதான் கேட்கின்றோம்.
தவிரவும், குழந்தைகள் விவாகங்களையும், குழந்தைகளைப் புணர்ச்சி செய்வதையும் தடுக்க இதுவரை எந்த தேசியவாதியும் சட்டம் செய்யவே இல்லை. தேசியவாதி “அல்லாதவரால்”தான் இதற்கும் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.
அப்படியிருந்தும் அந்த சட்டத்தையும் எதிர்க்க பச்சைத் தேசியவாதிகளான திருவாளர்கள் சத்தியமூர்த்தி, சீனிவாச அய்யங்கார், வெங்கிட்டரமணய்யங்கார், சேஷய்யங்கார், எம்.கே.ஆச்சாரி யார், துரைசாமி அய்யங்கார் முதலாகிய “இந்திய தேசிய பிரதிநிதிகளே” இன்று கச்சை வரிந்து கட்டிக் கொண்டு முன்னணியில் நிற்கின்றார்கள்.
மக்கள் ஜாதிப் பேதத்தையும், மத பேதத்தையும் ஒழிக்க தேசியவாதிகள் கவனிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல் அவற்றை நிலை நிறுத்தவும் வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதில்லை. இன்றைய தேசிய வாழ்வில் தேவஸ்தான மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? சாமிகள் பேரால் பெண் மக்கள் விபசாரத்தைத் தடைபுரியும் மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? மக்கள் எல்லோருக்கும் சமப் பிரதிநிதித் தத்துவமும் சமசந்தர்ப்பமும் அளிக்கவேண்டும் என்னும் கொள்கைகளை எதிர்ப்பவர் யார்? இவைகளை முந்தியவர்கள் யார்? என்ற விவரங்களைக் கவனிப்போமானால் “தேசத்துரோகி”கள் என்பவர்களால் மசோதாக்கள் கொண்டு வரப்படுவதும், “தேசியவாதிகள்” என்பவர்களால் எதிர்க்கப்படுவதுமாயிருக்கின்றதேயல்லாமல் வேறு என்னவென்றுதான் கேட்கின்றோம்.
‘தேசியம்’ ஓர் முட்டுக்கட்டையே
கடைசியாக செங்கற்பட்டு மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் யாரால் கொண்டுவரப்பட்டது? இப்போது அவைகள் யாரால் எதிர்க்கப் படுகின்றது? என்று பார்த்தால் அவ்வளவும் தேசியவாதிகள் என்பவர்களாலேயே எதிர்க்கப்படுவதைக் காணலாம். இவைகள்தான் போகட்டுமென்று பார்த்தாலும் இந்திய தேசிய முன்னேற்றத்திற்கு ஒத்துழையாமையைத் தவிர வேறு வழியில்லை என்று திரு.காந்தியால் சொல்லப்பட்டு இந்திய தேசீய இயக்கங்களும், ஒப்புக் கொள்ளப்பட்டு நடைமுறையில் கொண்டுவந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் ஜெயிலுக்கும் போய் தங்கள் உடலையும், பொருளை யும், ஆவியையும் விடத்தயாராயிருந்த காலத்தில் அதைப் பாழ்படுத்தினவர்கள் யார்? என்று கேட்கின்றோம்.
இன்றைய தினம் தேசியத் தலைவர்களாயிருக்கும் திருவாளர்கள் மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு முதலிய இந்தியத் தலைவர்களும் சென்னை தேசியத் தலைவர்கள் என்னும் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், கலியாண சுந்தரமுதலியார், வரத ராஜுலு முதலாகியவர்களும், ஒத்துழையாமை சட்ட விரோதமென்றும் ஒத்துழையாமை அசட்டுத்தனமென்றும் இராட்டையைச் சுழற்றினால் சுயராச்சியம் வந்துவிடாதென்றும், வகுப்பு வித்தியாசமுள்ள இடத்தில் ஒத்து ழையாமை பலியாதென்றும், காந்திக்கு மூளையில்லை, காந்தி தேசியத்திற்கு லாயக்கில்லையென்றும் சொல்லிக் கொண்டு, ஒத்துழையாமையை அழிப்பதற்கென்றே தோற்றுவிக்கப்பட்ட சுயராஜ்யக் கட்சியை ஆதரித்து, அதில் சிலர் திருட்டுத்தனமாய் சேர்ந்து கொண்டு, சிலர் கைக்கூலி வாங்கிக் கொண்டு ஆதரித்து ஒத்துழையாமையை ஒழித்துவிடவில்லையா என்று கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட யோக்கியவர்கள் தானே இன்று நம்மையும் சுய மரியாதை இயக்கத்தையும் சர்க்காருடன் ஒத்துழைப்பவரென்றும் தேசியத் திற்கு விரோதமான கட்சியென்றும், சொல்லுகின்றார்களேயொழிய வேறு உண்மையான யோக்கியர்கள் யாராவது சொல்லுகின்றார்களா? அன்றி யும் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் தேசத்தின் பேரால் தேசீயத் தின் பேரால் ஏதாவது ஒரு ஒத்த யோக்கியமான தலைவர் இருக்கின்றாரா? என்று கேட்கின்றோம்.
தலைவர்களின் ‘பெருமை’
திரு.காந்தியின் நிலைமையோ அவர்தானே தன்னை மனப்பூர்வமாக யோக்கியர் என்று சொல்லிக் கொள்ள முடியவே முடியாது. தேசியம் என்பதின் பேரால் அவர் போட்ட குட்டிக்கரணங்கள் எண்ணித் தொலையாது.
அவருடைய வியாக்கியான வித்தியாசங்கள் கணக்கிலடங்காது. இன்றையத் தினம் எந்த விதமான அயோக்கியத்தன்மையும் நாணயமற்றதுமான தீர்மானங்களைக் காங்கிரசிலும், மற்ற கூட்டங்களிலும் நிறைவேற்ற வேண்டுமானாலும் தேசியத் தலைவர்களுக்கு திரு.காந்தியைத்தான் உபயோகப்படுத்திக் கொள்ள முடிகின்றது.
ஆனால், அவர் பேச்சையும் கேட்க ஆட்களைக் காணோம். திரு.மோதிலால் நேருவோ அரசியலை சூதாட்டம் என்றே கருதி இருப்பதோடு சட்டசபைகளில் காலிகளைவிட மோசமாய் நடந்து கொள்ளுகின்றவர்.
எந்தக் காரியம் செய்வதானாலும் அவருக்கு உத்தியோகத்திலும் அதிகாரத்திலும், கட்சித் தலைமையிலும் கண்ணே தவிர நாட்டின் நன்மைக்கேற்ற திட்டம் இன்னது என்பதை அவர் தேசியத்தில் கிடையாது.
அவர் குமாரர் ஜவகர்லால் நேருவோ வாயளவில் பூரண சுயேச்சை, காரிய அளவில் காங்கிரஸ் தலைமை, மற்றபடி நடைமுறைக்கு அவரிடம் யாதொரு கொள்கையும் கிடையாது. பம்பாய் மாகாணத்துத் தலைவர்களான மராட்டியப் பார்ப்பனர்கள் சங்கதி யாவருக்கும் தெரிந்ததேயாகும்.
கல்கத்தா மாகாணத்துத் தலைவர்கள் திருவாளர்கள் சென்குப்தா, போஸ் முதலியவர்கள் நம் நாட்டுத் திரு. ஆதிநாராயணஞ் செட்டியாரை தோற்கடிக்கக் கூடிய தேசியவாதிகளாவார்கள். பஞ்சாப் மாகாணத் தலைவர்கள் யோக்கியதை காங்கிரஸ் வரவேற்புக் கூட்டத்தில் தலைவர் தேர்தலில் நடந்து கொண்ட மாதிரியிலேயே அவர்கள் யோக்கியதையும் அவர்களுக்கு அங்கிருக்கும் மதிப்பும் நன்றாய் விளங்கும்.
மற்றும் சென்னை மாகாணத் தேசியத் தலைவர்கள் யோக்கியதை சொல்லவே வேண்டியதில்லை. வகுப்புவாரியாக தலைவர்கள் இருந்தாலும் அதாவது பார்ப்பனரில்; அய்யங்காருக்கு பிரதிநிதி திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், ஏ.ரங்கசாமி அய்யங்கார், அய்யருக்கு திரு.எஸ்.சத்தியமூர்த்தி; பார்ப்பனரல்லாதாருக்கு திருவாளர்கள் திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஓ.கந்தசாமி செட்டியார், பி.வரதராஜுலு, முத்துரங்க முதலியார், மயிலை ரத்தினசபாபதி முதலியார்; மகமதியர்களில் ஜனாப்கள் அமித்கான் சாயபு, ஷாபி மகமது சாயபு; கிறிஸ்துவர்களுக்கு திரு. குழந்தை, தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு திரு.ஜயவேலு ஆகிய இவ்வளவு பேர்களுடனேயே சென்னை தேசியத் தலைமை அடங்கிவிட்ட போதிலும் இவர்கள் ஒவ்வொருவர்களின் யோக்கியதையும் நிலைமையும் நாம் சொல்லுவதைவிட அவர்கள் ஒருவருக் கொருவர் சொல்லிக் கொள்வதைக் கொண்டு அறிவதே கூடுமானவரை உண்மையாகவும் சுலபத்தில் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்குமென்றே கருதி விட்டு விடுகின்றோம்.
இவர்களது கொள்கைகளோ, திரு.சீனிவாசய்யங் காருக்குப் பூரண சுயேச்சை; அதற்குள் உத்தியோகம் வேண்டாமென்பதற்கு ஒரு கட்சியும், உத்தியோகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்ற ஒரு கட்சியும் வேண்டும். ஆனால் தானும் தன் மகனும் வக்கீல் வேலையில் மாதம் 15,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதித்துக் கொண்டுமிருக்க வேண்டும்.
திரு.ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கோ நேரு திட்டத்தை ஆதரிப்பது என்பது வாய் வார்த்தையில்; எப்படியாவது பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் தொலைய வேண்டுமென்பது; உள் எண்ணத்தில் ‘இந்து’ பத்திரிகையும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையும் தேசியத்தின் பேரால், பார்ப்பனப் பிரசாரமும் செய்து மாதம் 1-க்கு ஐயாயிரம், ஆறாயிரம் ரூபாய் சம்பாதிப்பதுடன், தங்கள் பிள்ளைகுட்டி, அண்ணன், தம்பி, மாமன், மருமகன், எல்லோருக்கும் பெரிய பெரிய உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பது ஆகியவைகள் காரியத்தில்.
திரு.சத்தியமூர்த்திக்கோ திரு.சீனிவாசய்யங்கார் சொற்படி ஆறுமாதம், திரு.ரங்கசாமி அய்யங்கார் சொற்படி ஆறு மாதம்; ஓய்வு நாட்களில் பார்ப்பனீயத்திற்குக் கெடுதி இல்லாமல் பார்த்துக் கொண்டு மற்றபடி பணம் கொடுப்பவர்கள் சொற்படியெல்லாம் நடப்பதேயாகும். மற்றும் பணத்தின் அளவுக்குத் தகுந்தபடி யாரையும் காலித்தனமாக வைதுவிட்டு அடிக்கடி மன்னிப்புக் கேட்டு கொள்வதும் ஆகியவைகளைத்தவிர வேறொன்றும் கிடையாது.
திரு.கலியாணசுந்தர முதலியாருக்கு வாயில் காந்தியடிகள் திட்டம், மனதில் புராண புஸ்தக விற்பனை, காரியத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு இடையூறாக பார்ப்பனருக்கு பிரசார வேலை செய்வதுமேயாகும்.
திரு.வரதராஜுலுவுக்கோ வாயில் (குறிப்பிட்ட கொள்கையில்லாத) தேசியம் என்கின்ற கூச்சலும் அதற்கு சகல உத்தியோகத்தையும், கைப்பற்ற வேண்டும் என்கின்ற திட்டமும் மனதில் தான் ஒரு மந்திரியாக வேண்டும் என்கின்ற கனவும், காரியத்தில் பத்திரிகையும், மின்சார ரசம் விற்பனையில் பணம் தேடுவதுமேயாகும்.
மற்றவர்களுக்கோ சொந்தத்தில் ஒரு அபிப்பிராய முமில்லாமல் திரு.அய்யங்கார் வீசிய கல்லை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருப்பது. இவர்கள் இத்தனை பேர்களும் தனித்தனி யாகவோ சேர்ந்தோ சுயமரியாதை இயக்கத்தையும், சீர்திருத்தத்தையும் எதிர்த்து பொதுவில் பார்ப்பன பிரசாரம் செய்வதில் மாத்திரம் அபிப்பிராய பேதமே கிடையாது என்று சொல்லலாம்.
மற்றபடி நாட்டில் தேசியத்திற்கு யோக்கியதையோ; அகில இந்திய காங்கிரசுக்கு தலைவர் தேர்தல்களில் ஏற்பட்ட சம்பவங்களும், தலைவர் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் யோக்கியதையும் அவர்கள் மறுப்பதும் ஆகியவைகளோடு திரு.காந்தி தலைமைப் பதவி வேண்டாம் என்பதற்குச் சொல்லும் காரணங்களும், ஆகியவைகளைக் கவனித்தால் அதன் யோக்கியதை விளங்காமல் போகாது. திரு.காந்தியவர்கள் காங்கிரசு யோக்கியமான நிலையில் இல்லை என்றும், தான் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்றும், காங்கிரசு விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டமாகவும் நடவடிக்கையாகவும் போய்விட்டதென்றும், தான் தலைமை வகிப்பதால் யாதொரு பலனும் ஏற்படாதென்றும் சொல்லி இருக்கிறார்.
மற்றபடி திரு.காந்தியால் சிபார்சு செய்யப்படும் தலைவர் திரு.ஜவகர்லாலோ மூன்றா வதாக குறைந்த ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்றியும் மற்றொரு காங்கிரசிற்கு தலைமை வகித்தவரும், சென்னைக் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எல்லா இந்தியத் தலைவர்களில் ஒருவருமான திரு.சீனிவாச அய்யங்காரால் முட்டாள் என்றும், அதிகப் பிரசங்கி என்றும் பட்டம் பெற்றவர். அடுத்தாப்போல மாகாண காங்கிரஸ் மகாநாடுகளைப் பற்றியோ வென்றால், தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு மூன்று வருடங்களாய் கூட்டப்படுகின்றது. இன்னும் முடிந்தபாடில்லை. இந்த வருடம் நடத்துவதிலும் அதற்கு இந்த மாகாணத்தில் தலைவர் கிடைக்கவில்லை.
சட்டத்திற்கு விரோதமாக வெளி மாகாணத்திலிருந்து கொண்டுவரப்பட வேண்டியதாகி விட்டதென்றாலும் அதற்கும் ஆள் கிடைக்காமல் திரு.சி.ராஜகோபாலாச்சாரி சூட்சியின் பேரில், திரு.காந்தியின் பிரயத்தனத்தின் பேரில் திரு.பட்டேல் அனுப்பப்பட்டிருக் கின்றார் என்றாலும் அவரும் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று மறுத்துவிட்ட பிறகு தங்களது சொந்த கௌரவம் போய்விடுமே என்று தனிப்பட்ட முறையில் சிலர் கெஞ்சி கூத்தாடி அழைத்து வந்திருக்கிறார்.
ஆனால், மகாநாட்டிற்கு மற்ற “தேசியத் தலைவர்கள்” போவதில்லை என்று இப்போதே சொல்லிவிட்டார்கள். அப்படியிருந்தும் தலைவர்கள் வந்தால் தக்க மரியாதை கிடைக்குமே என்று “தேசியத் தொண்டர்கள்” எச்சரிக்கையும் செய்து மிரட்டியிருக்கின்றார்கள். காங்கிரசுக்குத் தலைமை வகிக்க திரு.காந்தியால் பிரேரேபிக்கப்பட்ட திரு.ஜவஹர்லாலின் கொள்கையான பூரண கட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு தேசிய மகாநாட்டில் யாரும் பிரேரேபிக்கக் கூடாது என்று தலைவர் திரு.படேல் வாக்குத்தத்தம் வாங்கிக் கொண்டு பிறகுதான் வந்திருக்கின்றார்.
இதனால் திரு.சீனிவாசய்யங்கார் மகாநாட்டுக்கு வருவதில்லை என்று சொல்லிவிட்டார். திரு.வரதராஜுலு ஆதலால் நானும் வருவதில்லை என்று சொல்லிவிட்டார். இந்த நிலைமையில்தான் இன்றைய தமிழ் மாகாணம் இருக்கின்றது. இவ்வளவும் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தும் திரு.காந்தியோ 1929 வருஷம் டிசம்பர் மாதம் 31 ந் தேதி இரவு பன்னிரெண்டு மணி ஒரு நிமிஷத்திற்கு மறுபடியும் ஒத்துழையாமை ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லுகின்றார் !!!
எனவே, இந்த விவரங்களுக்கு மேல் தேசியத்தினுடைய, தேசிய இயக்கத்தினுடைய, தேசியத் தலைவர்களுடைய நிலைமை செல்வாக்கு ஆகியவைகளினுடைய யோக்கியதையை அறிய வேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால் அவைகளை மறுபடியும் ஒரு முறை எழுதுவோம்.
(குடி அரசு - தலையங்கம் - 01.09.1929)