பெங்களூரில் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துத்துவ எதிர்ப்பாளரும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் - அவரது இந்து எதிர்ப்பு கருத்து களுக்காகவே சுடப்பட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக நவீன் குமார் மற்றும் அவரது மத்தூரைச் சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. நீதிபதி முன் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். ஆனால் இந்த ஒப்புதல் வாக்குமூலம் சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டு கோள்படி வெளியிடப்படவில்லை. இது வெளியிடப்பட்டால் தேடப் படும் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடும் என்பதுதான் காரணம். கைது செய்யப்பட்ட நவீன்குமார் என்பவர் எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்பது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட வில்லை. ஆனாலும் அவரது மனைவி சி.என்.ரூப்பா, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தந்த வாக்குமூலத்தில் தனது கணவர் ‘சந்தான் தர்ம சன்ஸ்தா’ என்ற அமைப்போடு தொடர்புடையவர் என்று கூறியிருக்கிறார்.

“2017ஆம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய ‘சிவாமோக்கா’ என்ற நிகழ்ச்சிக்கு என்னை எனது கணவர் அழைத்துச் சென்று அமைப்பின் பிரமுகர்களை என்னிடம் அறிமுகப் படுத்தினார். தசரா பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு துப்பாக்கியையும் துப்பாக்கிக் குண்டு களையும் வாங்கினார். ஏன் இதை வாங்குகிறீர்கள் என்று நான் கடிந்து கொண்டபோது, ‘இது வெத்துக் குண்டுகள்; குரங்குகளை விரட்டு வதற்காக வாங்கினேன்’ என்று சமாதானம் கூறினார். தசரா பண்டிகையின்போது துப்பாக்கிக்கு பூஜை போட்டார். ‘சந்தான் தர்ம சன்ஸ்தா’ அமைப்பிலிருந்து ஒருவரை எனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார்.  ஒரு நாள் இரவு முழுதும் தங்கியிருந்தார். கோவாவை மய்யமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப் பின் 400 ‘இந்து’ செயல்பாட்டாளர் களில் தன்னையும் ஒருவராக தேர்வு செய்யப்பட் டுள்ளதாக என்னிடம் கணவர் கூறினார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் கோவா போனார். பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அதேபோல ‘ஷீப்பாள்ளி’யில் நடந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்றார். ஒரு கட்டத்தில் மங்களூரில் ‘சாந்தம் ஆசிரமத்தில்’ நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு முன் பதிவு செய்து என்னை அழைத்துப் போனார். ஆசிரமத் துக்குச் சென்ற அடுத்த நாள் தொலைக் காட்சியில் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட காட்சியைப் பார்த் தேன்” என்று குற்றம்சாட்டப்பட்ட வரின் மனைவி கூறியுள்ளார்.

சந்தான் டாட் ஓஆர்ஜி (Santan.org) என்ற இணையதளப் பதிவு சோதனைக்குட்படுத்தப்பட்டு (Forensic Report) குற்றப் பத்திரிகை யில் இணைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி மத்தூரில் கொலைக்காக நடந்த திட்டமிடல் கூட்டம் பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் பதிவாகியுள்ளது. இதில் நவீன்குமார் கலந்து கொண்டதாக புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

புலனாய்வுக்குழுவின் 651 பக்க குற்றப் பத்திரிகை, “கவுரி இந்து தர்மத்துக்கும், இந்து கடவுளுக்கும் எதிராகப் பேசியதால், இந்து தர்மத்தைப் புண்படுத்தியதாக நவீன் கடும் கோபத்தில் இருந்தார்” என்று குறிப்பிடுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நவீன்குமாரின் மனைவி ரூபா ‘பிரூர்’ என்ற பகுதியில் அரசுத் துறையில் ‘குரூப் டி’ பிரிவு ஊழியராகப் பணியாற்றுகிறார். குற்றப் பத்திரிகையில் குற்றம் சாட்டப் பட்டவர் சார்ந்துள்ள அமைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. காரணம் அந்த அமைப்பே இந்த கொலை சதியில் ஈடுபட்டிருந்தது என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை” என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

அமைப்பே சதி செய்தது என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பது மிகவும் கடினம். அமைப்பே சதித் திட்டம் தீட்டியதற்காக ஆதாரங்களை சமர்ப் பித்தாக வேண்டும். எந்த அமைப்பும் தீர்மானம் போட்டு இத்தகைய சதிகளை நிறைவேற்றுவது இல்லை. இதை ஒரு சாக்காக வைத்து குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பி விடுவார். காந்தி கொலை வழக்கில் கோட்சே - ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்படாத தற்கும் இதுவே காரணம். பா.ஜ.க. வினர் இதைத்தான் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரர் அல்ல என்ற தங்களின் வாதத்துக்கு ஒரு சான்றாகக் கூறி வருகிறார்கள்.  கவுரி லங்கேஷ் இந்து தர்மத்தை எதிர்த்ததால் தான் கொல்லப்பட்டார்” என்று குற்றப் பத்திரிகை கொலைக்கான நோக்கத் தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் என்று இந்துத்துவத்தை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளில் பயன்படுத்தப் பட்ட குண்டுகளும் ஒரே தன்மையில் இருப்பது கண்டறியப்பட்டது. இப்போதுதான் கவுரி லங்கேஷ் கொலையில் முதன்முதலாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் கட்டத்துக்கு வழக்கு வந்திருக்கிறது.

Pin It