பெரியார் எழுத்து பேச்சுகளுக்கு - பதிப்பு உரிமை கோரும் உரிமை கி. வீரமணியை செயலாளராகக் கொண்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு கிடையாது என்றும், பெரியார் அந்த உரிமைகளை தனக்கும் கோரவில்லை; மற்றவர்களுக்கும் வழங்கிடவில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி கே. சந்துரு, ஜூலை 27, 2009 அன்று காலை 10.30 மணியளவில் இத்தீர்ப்பை வழங்கினார். 

பெரியார் எழுத்து பேச்சுகளை 1925 முதல் 1938 வரை தொகுத்து, 27 தொகுதிகளாக, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டது. அதை எதிர்த்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி வழக்கு தொடர்ந்தார். அறிவுசார் சொத்துடைமை’, ‘பதிப்புரிமைசட்டப் பிரிவுகளின் கீழ் பெரியார் எழுத்து பேச்சுகளை வெளியிடும் உரிமை - தமது நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்று கோரிய வீரமணி, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடைகோரியதோடு, ரூ.15 லட்சம் இழப்பீடும் கேட்டு வழக்கு தொடர்ந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் இருவர் மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்ததோடு, தங்களிடமிருந்த குடிஅரசுபிரதிகளை திருடிச்சென்றதாக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் மனுவும் தந்தார்கள்.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், ‘குடிஅரசுதொகுதிகள் வெளியீட்டுக்கு இடைக்கால தடைவிதித்திருந்தது. பெரியாரியலாளர்களாலும், தமிழின உணர்வாளர்களாலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பைக் கேட்டு, உண்மை பெரியார் தொண்டர்கள் மகிழ்ந்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பெரியார் தனது எழுத்து பேச்சுகளுக்கு பதிப்புரிமை ஏதும் கோரவில்லை என்பதோடு, பதிப்புரிமை கோரும் உரிமையையும் எவருக்கும் வழங்கிடவும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி எடுத்துக் காட்டினார். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வாதாடிய திருமதி கிளாடிஸ் டேனியல் அவர்களும் இதே வாதத்தை முன் வைத்தார்.

1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 52(1) (எம்) பிரிவை - இந்த வழக்கின் தீர்ப்புக்கு மய்யமான ஆதாரமாக நீதிபதி முன் வைத்துள்ளார். பதிப்புரிமை எவற்றிற்கெல்லாம் கோர முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு விளக்குகிறது. இதன்படி பொருளாதாரம், அரசியல், சமூகம் அல்லது மதம் தொடர்பான தலைப்புகளில், நாட்டின் நடப்புகள் குறித்து - செய்தித்தாள், இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிட்டால், அதற்கு பதிப்புரிமை கோர முடியாது. அப்படி பதிப்புரிமை கோர வேண்டுமானால், இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள், அதற்கான பதிப்புரிமையை கோரி இருந்திருக்க வேண்டும் என்று இந்த பிரிவு குறிப்பிடுகிறது. இந்த சட்டப்பிரிவை முன் வைத்து வழக்கறிஞர் துரைசாமி முன் வைத்த வாதம் வலிமையானதாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். (He (Mr.Duraisamy) Pleaded a strong reliance upon the said provision and pleaded for the dismissal of the application) இந்த வழக்கில் எழுப்பிய பிரச்சினைக்கு, மேற்குறிப்பிட்ட சட்டத்தின் விதிவிலக்குப் பிரிவு பதிலாக அமைந்துள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டப் பிரிவின் அடிப்படையிலே கி.வீரமணியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். (The issue raised here is squarely covered by the exemption provided under section 52(1) (m) of the copy right act, 1957. Accordingly the application is dismissed.)

குடிஅரசு - பத்திரிகையில் எழுதியவர் பெரியார்; அவரே அதன் உரிமையாளர். குடிஅரசில் வெளிவந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை பொருளாதாரம், அரசியல், சமூகம், மதம் தொடர்பான தலைப்புகளில் தான். இந்தக் கட்டுரைகளுக்கு தனக்கு பதிப்புரிமை ஏதும் பெரியார் கோரவில்லை. எனவே 52(1) (எம்) பிரிவின்படி பெரியார் எழுத்தை வெளியிடுகிறவர்கள் பதிப்புரிமையில் குறுக்கிட்டுவிட்டதாகக் கூற முடியாதுஎன்று தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, “சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அமைப்பு விதிகளில் கூட, பெரியாரின் எழுத்துகளுக்கான உரிமைகள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், எதிர்காலத்தில் வாங்கக் கூடிய சொத்துகள் தான் இந்த நிறுவனத்துக்கு உரிமையாகும் என்றே, அச்சங்கத்தின் விதிகள் 22, 23 குறிப்பிடுகின்றனஎன்று சுட்டிக் காட்டியுள்ளார்.

பெரியார் எழுத்துகளை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து - எனவே அது அறிவுசார் சொத்துடைமையாகவும் கருத வேண்டும் என்று கி.வீரமணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி, ‘அறிவுசார் சொத்துரிமைகோருவதற்கும் - எழுத்துபூர்வமாக தரப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுத்துப் பூர்வமாக பெரியார் வழங்கிடவில்லை. பெரியார் எந்த உயிலும் எழுதி வைக்காமல்தான் இறந்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியும்என்று விளக்கமளித்துள்ளார்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற இந்த தீர்ப்பின் வழியாக - இனி பெரியார் எழுத்து - பேச்சுகளை வெளியிடும் உரிமை அனைவருக்கும் கிடைத்துள்ளது. தஞ்சை பகுத்தறிவாளர் கழகம் தயாரித்திருந்த தொகுப்பையே பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது என்று தஞ்சை இரத்தினகிரி, கி.வீரமணிக்கு ஆதரவாக தாக்கல் செய்த மனுவை - ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் இந்த கோரிக்கை வலிமையாக மறுக்கப்பட்டுவிட்டதுஎன்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

25 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பின் தொடக்கத்தில், பெரியாரின் குடிஅரசு தொடங்கிய காலகட்டம், குடிஅரசு சந்தித்த எதிர்நீச்சல், வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசுக்குள் நடத்தியப் போராட்டம், காங்கிரசிலிருந்து வெளியேறி, அதனால் சந்தித்த எதிர்ப்புகள் போன்ற வரலாறுகளை நீதிபதி பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார், “கடவுள் ஒழிக; மதம் ஒழிக; காந்தி ஒழிக; காங்கிரஸ் ஒழிக; பார்ப்பான் ஒழிகஎன்பதையே தனது எதிர்கால அரசியல் செயல் திட்டமாக்கினார் என்றும், நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெரியாருடன் சமகாலத்தில் வாழ்ந்த சைவப் பண்டிதர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளைக்கு 1947 இல் பெரியார் எழுதிய கடிதத்தில், “என்னுடைய நூல்கள், மிகக் குறைந்த விலைக்கே தரப்படுகின்றன. அவைகளுக்கு முறையான விற்பனையும் கிடையாது. பெரும்பாலான நூல்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. வியாபாரம் என்ற முறையில் இதில் தொண்டாற்றுவது இயலாது; அப்படி தொண்டாற்றுவது கடினம்என்று எழுதியுள்ளதை நீதிபதி, “தமிழ்ப் பெரும் புலவர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளைஎன்ற நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார். பெரியார் தனது கருத்துகள் மக்களிடம் பரவிட தனது வெளியீடுகளை இலவசமாகக்கூட வழங்கியவர் என்ற இந்த கருத்து பதிப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கான பதிலாக அமைந்துள்ளது.

பெரியார் திரைப்படத்துக்கு தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியதை எதிர்த்து, டி. கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்தது. அதில், ஒரு நீதிபதி கே. சந்துரு, 2007 ஆம் ஆண்டு தமது அமர்வு வழங்கிய தீர்ப்பில் பெரியார் சாதி, மத, தீண்டாமைக்கெதிராக போராடிய சிறப்புகளை குறிப்பிடப்பட்டிருந்ததை இந்தத் தீர்ப்பில் மீண்டும் நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.

பெரியாரை நீதிமன்ற காகித கட்டுக்குள் புதைத்துவிடக் கூடாது!

விடை பெறுவதற்கு முன்பு - இந்த நீதிமன்றம் நிறைவாக ஒன்றை கூற விரும்புகிறது. பெரியார் குடிஅரசில்எழுதியவை எல்லாம், இரண்டு உலகப் போர்கள் நடந்த காலத்தின் இடையே வெளிவந்தவை. காலனி ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் பிடியில் சிக்கிய பெரியார் சிறைச் சாலைகளை சந்தித்தார். அவர் நடத்திய பத்திரிகைகளுக்காக பிரிட்டிஷ் காலனி ஆட்சி வைப்புத் தொகை கேட்டது. பிறகு அதை பறிமுதல் செய்தது. இந்து பழமைவாதிகளால் அவர், புறக்கணிக்கப்பட்டார். சமூகநீதிக்காக போராடுவதற்காக அவர் தேசிய இயக்கத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக சக்தி மிக்க காங்கிரஸ் கட்சியின் கடுங்கோபத்தையும் அவர் எதிர்கொண்டார். ஆனாலும், எந்தப் பலனையும் எதிர்பாராத அவரது பயணம் தொடர்ந்தது.

தற்குறிகள் எண்ணிக்கையே நிறைந்திருந்த அந்தக் காலகட்டத்தில் படித்தவர்களிடம், தமது கருத்துகளைக் கொண்டு சேர்க்க விரும்பிய பெரியார், பல சந்தர்ப்பங்களில் குடிஅரசுபத்திரிகைகளை இலவசமாகவே வழங்க வேண்டியிருந்தது.

பெரியாரின் 130 ஆவது ஆண்டாக மலரப் போகும் 2009இல் பெரியாரின் எழுத்துகள், பதிப்புரிமைப் பிரச்சினைக்குள் சிக்கி, சட்டங்களின் சண்டைக் களமாகமாற்றப்படுவதை கடும் வேதனை வலியுடனேயே இந்த நீதிமன்றம் பார்க்கிறது. அவரது சிந்தனைகளை சகோதர சண்டைக்குள்பெரியாரை சிக்க வைத்து, நீதிமன்றங்களின் காகிதக் கட்டுகளுக்குள் புதைந்து விடக்கூடாது.

நியாயங்கள் வெல்லும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது.

எமது குறிக்கோள் இதுதான்.

நூறு மலர்கள் பூக்கட்டும்; ஆயிரம் சிந்தனைகள் குலுங்கட்டும்.

- நீதிபதி கே. சந்துரு, தீர்ப்பின் இறுதிப் பகுதியில், பதிவு செய்துள்ள கருத்து 

மீண்டும் நீதிமன்றம் சென்றார், வீரமணி! 

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ரவிராஜ் பாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அமர்வுக்கு முன் மேல்முறையீட்டு மனுவை தமது நிறுவனம் சார்பில் ஜூலை 29 அன்று கி.வீரமணியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். நீதிமன்றம், ‘ஏற்கனவே இருந்த நிலை தொடர்கிறது’ Status Quo என்று கூறியுள்ளது. 

வாதாடிய வழக்கறிஞர்கள்

குடிஅரசுவழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மற்றும் வழக்கறிஞர் இளங்கோ ஆகியோரும், பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வழக்கறிஞர் திருமதி கிளாடியஸ் டேனியல் ஆகியோரும் வாதிட்டனர். வழக்கறிஞர் குமாரதேவன், வழக்கறிஞர் அமர்நாத் பல்வேறு நிலைகளில் வழக்கிற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர். 2008 செப்டம்பரில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜெயபால் முன் முதலில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிமன்றம் முதலில் குடிஅரசு தொகுதிகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்தது. வழக்கு பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி கே. சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி - வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடைக்கான கெடு முடிந்திருந்தது. தடையை மேலும் நீட்டிக்க மறுத்த நீதிபதி, 22 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு ஏற்று, இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். ஜூலை 27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நீதிமன்றம் தொடங்கியவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார்.

நீதிபதி கே.சந்துரு, மற்றொரு சிறப்பான நேர்மையான தீர்ப்பை வழங்கியிருப்பதை பெரியாரிய சிந்தனையாளர்கள், மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்!  

மகத்தான தியாகங்களை சுமந்து, மக்களிடம் பெரியார் விதைத்த சிந்தனைகளை நீதிமன்றத்தில் வழக்குகளாக்கி, அந்த வழக்குகளின் காகிதக் கட்டுகளுக்குள் முடக்குவது, பெரியாருக்கு இழைக்கும் நீதியாகாது என்பதை நீதிபதியே தமது தீர்ப்பில் கவலையுடன் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

யாருக்கு குழந்தை சொந்தம் என்று வழக்காடிய இரண்டு தாய்மார்களில் ஒருவர், குழந்தையை இரண்டு பகுதியாக வெட்டி பிரித்துத் தந்து விடுங்கள் என்றுகூற, உண்மைத் தாயோ, குழந்தையை வெட்ட வேண்டாம், அவளிடமே இருக்கட்டும் என்று மன்றாடிய கதையில் இழையோடும் அதே உணர்வுதான், நீதிபதியின் இந்த கருத்திலும் பிரதிபலிக்கிறது என்பதாகவே நாம் உணருகிறோம்.

தமது வெளியீடுகள் எவற்றுக்கும் பதிப்புரிமை கோராத பெரியார், பல நேரங்களில் மக்களுக்கு இலவசமாகவே வழங்கினார் என்ற உண்மையை நீதிபதி எடுத்துக் காட்டியிருப்பது, பதிப்புரிமை கோரி நிற்பவர்களுக்கு, நீதிமன்றம் வழங்கியுள்ள சரியான பதிலாகும். அதனால்தான் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்புஎன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரை மிகச் சரியாக படம் பிடித்துக் காட்டினார். நீதிமன்ற நீதிக்கே நீதி சொல்வார்என்று ஒரு கவிஞர், பெரியாரைப் பாடினார். அந்தத் தலைவரின் சிந்தனைகளை நீதிமன்றங்களின் தடை ஆணைகளுக்குள் முடக்கத் துடிப்பது, பெரியாரியலுக்கு இழைத்துள்ள துரோகம். இதை வரலாறு பதிவு செய்தே தீரும்.

வழக்கைத் தொடர்ந்தவர்களுக்குக்கூட ஒரு வகையில் நன்றி சொல்லத்தான் வேண்டும். இந்த வழக்கு வந்த காரணத்தால்தான் குடிஅரசுபற்றிய செய்திகள் மேலும் பரவலாக மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.

1925 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலங்களில் ஒன்றில் நடந்த புகழ் பெற்ற ஸ்கோப்ஸ் மங்கிஎன்ற வழக்கை குறிப்பிடலாம். மனிதனை இறைவன் படைத்தான்என்பதை மட்டுமே பள்ளிகளில் பாடமாக கற்பிக்க வேண்டுமே தவிர, மனிதன் பரிணாம வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாகக் கண்டறிந்த டார்வின் கோட்பாட்டை கற்பிக்கக் கூடாது என்ற சட்டத்தை எதிர்த்து, ஜான் ஸ்கோப் என்ற பள்ளி ஆசிரியர், தமது மாணவர்களுக்கு டார்வின் கோட்பாட்டை கற்றுத் தந்தார். அதன் காரணமாக ஆசிரியர் ஆட்சியாளரால் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

பைபிளின் இறைக் கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க தேர்தலில் மூன்று முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நின்ற வில்லியம் ஜென்னிங்ஸ் பயாஸ் வாதாடினார். டார்வின் கோட்பாட்டுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் லாரன்ஸ் டாரோ வாதாடினார். இருதரப்பு வாதங்களும், எட்டு நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து நடந்தன. ஏடுகளில் வெளிவந்த அந்த வாதங்களை மக்கள் பரபரப்பாகப் படித்தார்கள். பைபிளின் படைப்புக் கொள்கைக்கு எதிரான வாதங்கள் அப்போதுதான் மக்களை சென்றடைந்தன. அதே போன்ற தாக்கத்தையே இந்த வழக்கும் சந்தித்திருக்கிறது.

பெரியாரியலை பரப்பும் இயக்கம் எது? முடக்கும் அமைப்பு எது என்பதை நீதிமன்றங்களின் வழியாக மக்கள் மன்றம் இப்போது புரிந்து கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தாலும், நாம் வியப்படைய மாட்டோம். மக்கள் மன்றம், மீண்டும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே செய்யும்.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, பெரியார் திராவிடர் கழகத்துக்கு கிடைத்த வெற்றியாக மட்டும் நாம் கருதவில்லை. பெரியாரியலைப் பரப்பத் துடிக்கும் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.

Pin It