கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் 60-வது பிறந்தநாளையொட்டி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாராகினர். E-4 அபிராமபுர காவல் நிலைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மயிலாப்பூர் பகுதி மக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க அங்கு சென்ற “பெரியார் முழக்கம்” நிருபர் உமாபதி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். காவல் நிலைய அதிகாரிகள் இளையராஜா, வடிவேலு, கலைச்செல்வி ஆகியோர் கைபேசியை பிடுங்க முற்பட்டனர். பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட போலீசாரின் அராஜகப் போக்கை நிருபர் உமாபதி கேள்வி கேட்டார். அப்போது நிருபர் என்றும் பாராமல் முழக்கம் உமாபதியை போலீசார் லத்தியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி, காவல்நிலையத்திற்கு தூக்கிச்சென்று அடித்துத் துன்புறுத்தி கடும் சித்ரவதை செய்தனர்.

muzhakkam umapathyஉடல் முழுவதும் இரத்த காயங்களுடன் காணப்பட்ட முழக்கம் உமாபதியை, வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு மருத்துவர்களின் அறிவுரைப் படி மேல்சிகிச்சைக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 26/11/2014 அன்று உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளே, டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி போலீசார் அழுத்தம் கொடுத்ததால், மருத்துவர்கள் முழக்கம் உமாபதிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை. உடனே உமாபதி உயர் நீதிமன்றத்தை அணுகியதால், நீதிமன்ற உத்தரவுப்படி டீன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சித்ரவதைக்கு உள்ளான உமாபதி மீதே, போலீசார் 2 குற்ற வழக்குகளையும் பதிவு செய்தனர். ஆனால் உமாபதி, தான் தாக்கப்பட்டதாகக் கொடுத்த புகாரில், தாமதமாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சித்ரவதை செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதனை விசாரித்த துணை ஆணையர் அதிவீரபாண்டியன், போலீசார் சித்ரவதை செய்யவில்லையென அறிக்கை கொடுத்து, துறைரீதியான விசாரணையை முடித்து வைத்தார்.

“சித்ரவதை செய்த போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என 2014-ல் காவல்துறையின் சித்ரவதைக்குள்ளான முழக்கம் உமாபதி தொடர்ந்த நீதிப்பேராணை வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், காவல்துறை சித்ரவதை இழைக்கவில்லை என துணை ஆணையர் அதிவீரபாண்டியன் கொடுத்த துறை ரீதியான விசாரணை அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

“துணை ஆணையர் பதவிக்கு குறையாமல் இருக்கும் ஒரு அதிகாரியை தமிழக டி.ஜி.பி அவர்கள் நியமித்து, 2 வாரங்களுக்குள் மீண்டும் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அதிகாரி 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து, கிழக்கு மண்டல இணை ஆணையரிடத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து, பின்பு இணை ஆணையர் அடுத்த 4 வாரங்களுக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார். மேலும், “போதுமான ஆதாரங்கள் இருந்தும், காவல் சித்ரவதை செய்த போலிசார் மீது துறை ரீதியான விசாரணையை நியாயமாக நடத்தாமல், குற்றமிழைத்தவர்களுக்கு சாதகமாக முடித்த, விசாரணை அலுவலரான இணை ஆணையர் அதிவீரபாண்டியன் மீது டி.ஜி.பி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “குற்றமிழைத்த போலீசார் மீது உமாபதி கொடுத்த புகாரின் வழக்கு கோப்புகள், நியாயமான விசாரணை நடத்த வேண்டி, E-4 அபிராமபுர காவல் நிலையத்தினரிடமிருத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்படுகிறது” எனத் தெரிவித்த நீதிபதி, “வழக்கு கோப்புகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி முழக்கம் உமாபதி மீது போடப்பட்ட 2 பொய் வழக்குகளையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். கழக வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தியின் வலுவான வாதங்களால், முழக்கம் உமாபதி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிற இத்தீர்ப்பை வரவேற்பதுடன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் துறை ரீதியான விசாரணையை விரைந்து முடித்து, தவறிழைத்த காவல் அதிகாரிகள் மீது விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.