chandraboseதியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் பொதுச் செயலாளரும், ஐந்திணை மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகருமாகிய அருமைத் தோழர் சந்திரபோஸ் 21.01.2023 அன்று சனிக்கிழமை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் எனும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தோழரின் மரணம், ஜாதி ஒழிப்புக் களத்தில் நிகழ்ந்துள்ள ஒரு பேரிழப்பாகும்.

ஜாதியப் பெருமைகளைப் பற்றி எந்த நிலையிலும் சிந்திக்காமல், ஜாதிய இழிவுகள், புறக்கணிப்புகள், வஞ்சனைகள், உரிமைப் பறிப்புகள் பற்றி தொடர்ச்சியாக எடுத்துரைத்து அவற்றுக்குத் தீர்வு காண பெரும் போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நடத்தி வந்த ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.

பட்டியல் இன மக்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வினையும் பிரிவினையையும் பலரும் பேசி வருகிற சூழலில், சந்திரபோஸ், தியாகி இமானுவேல் சேகரனைப் போலவே அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற விரும்பியவர். தன் குடும்பத்து திருமண உறவுகளில் கூட அந்தப் பிரிவினைப் போக்கினை உடைத்துக் காட்டியவர் அவர். பல ஆண்டுகளாக தனது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய பணிகளை அவர் குறைத்துக் கொண்டதில்லை.

அந்த சமத்துவ உரிமைப் போராளிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக எங்கள் புகழ் வணக்கங்களையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், பேரவை, கட்சித் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It