ஈரோடு மாநாடு பெண்களுக்கு அழைப்பு
‘பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன் வரவேண்டும்’ என்று ஈரோடடில் நடந்த சுயமரியாதை மாநாடு பெண்களுக்கு அறைகூவலை விடுத்தது.
அரங்குகளில் மண்டபங்களில் மட்டுமே ஒலித்து வந்த பெண்ணுரிமைக் கருத்துகளை திறந்தவெளி மாநாடாக நடத்தி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். சென்னையில் ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்தது பெண்கள் மாநாடு. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது.
ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெண்கள் சுயமரியாதை மாநாடு டிசம்பர் 16 மாலை, வீரப்பன் சத்திரம் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோவை, சேலம், மேட்டூர், திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், தோழியர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளைக் கொண்டு பாடல்களையும், இசை நாடகங்களையும் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தன.
பெரியார் படத்துடன் அன்னை நாகம்மையார், பெரியாரின் சகோதரி கண்ணம்மாள், அன்னை மணியம்மையார், முத்துலட்சுமி (ரெட்டி) ஆகியோரின் படங்கள் அடங்கிய துணிப்பதாகை மேடைக்கு எழுச்சியூட்டியது. 4 மணியிலிருந்தே தோழர்கள் பெண்களும், ஆண்களுமாக கருஞ் சட்டையுடன் குவியத் தொடங்கினர். தோழமை அமைப்பினரும், பொது மக்களும் ஏராளமாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புரட்சிகரப் பாடல்கள், இடையிடையே தோழர்கள் உரை என்று நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
சென்னிமலை கழகத் தோழர் கவிப்பிரியா வரவேற்புரையாற்றினார். மாநாட்டுக்கு முழுமையாக பொறுப்பேற்று செயல்பட்டு மாநாட்டை வெற்றி மாநாடாக்கியதில் பெரும் பங்காற்றிய அரங்கம் பாளையம் மணிமேகலை தலைமை உரையாற்றினார். திருப்பூர் முத்துலட்சுமி, சங்கீதா முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, புரட்சிகர மாணவர் முன்னணியைச் சார்ந்த கண்மணி, பெரியாரியலாளர் ஓவியா, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். மாநாட்டுக்கு முன்னின்று உழைத்த இராசிபுரம் கழகத் தோழர் சுமதி நன்றி கூறினார்.
மாநாட்டில் நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகக் கட்டமைப்பு நிதியின் முதல் தவணையாக கழகப் பொறுப்பாளர்கள் ரூ10,000/-த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். குமாரபாளையம் மு.கேப்டன் அண்ணாதுரை-பரிமளம் ஆகியோரின் மகள் ஈழக் கனிமலர், தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் தொகையை மாநாட்டு நன்கொடையாக வழங்கினார்.
மாநாட்டு மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்
வழமையாக கழக நிகழ்வுகளில் நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டு மேடையிலும் நடந்தது. திருமணத்தை உறுதிமொழி கூறி நடத்தி வைத்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘இந்தத் திருமணம் ஜாதி ஆணவம் பேசும் ஜாதியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டவருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நடக்கும் திருமணம்” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் திண்ணப்பட்டி கிராமம் தங்கவேலு-வெண்ணிலா இணை யரின்மகன் பிரபாகரன், ஓமலூர் வட்டம் பண்ணப்பட்டி கிராமம் குணசேரகன், இலட்சுமி இணையரின் மகள் நந்தினி ஆகியோர் மாலை மாற்றி இருவரும் இணைந்து வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்றனர்.
கழகம் துணை நிற்கும்
ஈரோடு மாநாட்டு மேடையில் மற்றொரு நிகழ்வும் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ரவிக்குமார்-ஜோதி இணையரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத் திருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணின் பெற்றோர்களான பாலசுப்பிரமணியன்-மீனாட்சி, திருமணத்தை அங்கீகரித்து இருவரையும் குடும்பத்தில் இணைத்துக் கொண்டனர். இதனால் பெண்ணின் பெற்றோரை அவரது ஜாதியினர் (பிற்படுத்தப்பட்ட ஜாதி) சமூகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாதி விலக்குக் குள்ளான பெற் றோர்களையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யர்களையும் மேடையில் ஏற்றி “இங்கே திரண் டிருக்கும் கழகக் குடும்பங்கள் இவர்களுக்கு என்றும் துணை நிற்கும்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். வேறு மிரட்டல்கள் வந்தாலும் அதை கழகம் எதிர்கொள்ளும் என்றும் அறிவித்தார். பலத்த கரவொலி எழுப்பி கூட்டத்தினர் ஆதரவை வெளிப்படுத்தினர்.