அந்த காலங்களில் கதர் குல்லாவுடன் பிரிட்டிஷ் கால தேச பக்தர்கள் ‘பாரத மாதாக்கி ஜே’ என்று முழக்கம் போடுவார்கள். அவர்கள் கையில் காங்கிரஸ் கொடி இருக்கும். இது ‘வாடகை’ தேசபக்தியாளர்கள் காலம்! ஒரு கையில் பாதுகையை (அதாவது செருப்பை) வைத்துக் கொண்டு ‘பாரத மாதாக்கி ஜே’ என்று கூச்சல் போடுகிறார்கள். தேசியக் கொடி பறக்கும் அமைச்சர் கார் மீதே அந்த ‘ஆயுதத்தை’ வீசினார்கள். இனி செருப்புக்கு எங்கள் ஆட்சியில் எப்போதுமே ஜி.எஸ்.டி. கிடையாது. அது தேசபக்தியின் அடையாளம் என்றுகூட அமைச்சர் நிர்மலாவிடமிருந்து அறிவிப்பு வரலாம்.

ஆமாம்! மதுரையில் தேசியக் கொடியுடன் வந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? அதெல்லாம் பா.ஜ.க.வாக இருக்க முடியாது. விசாரணைக்குப் பிறகு தான் தெரியும் என்கிறார் ஒன்றிய அமைச்சர் முருகன்.

பா.ஜ.க.வின் இந்த வெறுப்பு அரசியலை இனியும் சகிக்க முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கே முழுக்குப் போட்டு விட்டேன் என்கிறார் அக்கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சரவணன். அமைச்சரை சந்தித்து மன்னிப்பும் கேட்டேன் என்கிறார். நீங்கள் விலகினாலும் நான் தான் கட்சியிலிருந்து நீக்குவேன். அதெல்லாம் எனது அதிகாரத்தை நான் விட்டுக் கொடுக்க முடியாது. இதோ ‘சரவணன் டிஸ்மிஸ்’ என்கிறார் அண்ணாமலை.

காஷ்மீர் தீவிரவாதிகள் சுட்டதில் பலியான இராணுவ வீரர் மதுரையைச் சார்ந்த தமிழர். அவருக்கு முதல் மரியாதை செய்ய, இராணுவத்தைவிட, தமிழ்நாடு அமைச்சரை விட எங்களுக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்பது அண்ணாமலையின் வாதம்! அதுவும் சரி தான் என்பதே நமது கருத்து.” காஷ்மீர் என்ற மாநிலத்தையே ஒழித்தது யார்? நாங்கள் தானே? அதை வெறும் யூனியன் பிரதேசம் என்று மாற்றியது யார்? நாங்கள் தானே! அதை நாங்கள் செய்த காரணத்தினால் தானே தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்தது! அதன் காரணமாகத் தானே தமிழ்நாட்டு இராணுவ வீரர் இறந்தார்? இப்படி படாதபாடுபட்டு தீவிரவாதத்தை வளர்த்து விட்டது நாங்கள். அதனால் தான் தமிழ்நாட்டு இராணுவ வீரர் பலியாக முடிந்தது. இதை எல்லாம் மறந்துவிட்டு, எங்களின் தியாகத்தில் நீங்கள் குளிர் காயப் பார்த்தால், நாங்கள் விட்டு விடுவோமா? நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் தான் தீவிரவாதிகளை உசுப்பி விட்ட அசல் தேசபக்தர்களாக்கும்; விட மாட்டோம் என்று வீரம் பேசலாம் அண்ணாமலை.

பா.ஜ.க.வினர் ஒன்றும் விவரம் தெரியாதவர்கள் அல்ல. இதோ பாருங்கள் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பா.ஜ.க. தலைவர் தான் எழுத வேண்டிய தேர்வுக்கு வேறு ஒரு ஆளைப் பிடித்து, எழுதச் செய்திருக்கிறார். இதற்கு மற்றொரு பா.ஜ.க. தலைவர் ஏற்பாடு செய்துள்ளார். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. உடந்தையாக ஏற்பாடுகளைச் செய்த பா.ஜ.க. தலைவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் தெரியுமா? பா.ஜ.க.வின் கல்வித் துறைக்கு பொறுப்பு வகிப்பவர். பொறுப்போடு ‘கல்வி’த் துறையில் புரட்சி செய்யலாம் என்று ஆள் மாறாட்டத்துக்கு உதவியுள்ளார். இது ஒரு குற்றமா? இதைக்கூட ‘திராவிட மாடல்’ ஆட்சி குற்றம் என்கிறது. பாரத மாதாவுக்கு எவ்வளவு அவமானம்? அதனால்தான் அண்ணாமலை தேச பக்தியோடு அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. இப்படி எல்லாம் ‘தேசபக்தர்களை’த் தொடர்ந்து பழி வாங்கக் கூடாது. அதற்கு ஒரு நல்ல யோசனை நம்மிடம் இருக்கிறது சார்! கிரிமினல், மோசடி, மதக்கலவரம், போதைப் பொருள் கடத்தல், ஆள் மாறாட்டம் என்று ‘தேசபக்த சேவை’யில் ஈடுபடும் பா.ஜ.க.வினர்மீது தமிழ்நாட்டில் எந்த வழக்கும் போடக் கூடாது; அதை நீதிமன்றங்களிலும் விசாரிக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் போதும்.

எதிர்கட்சிகள் எதிர்பார்ப்பார்களே என்று கவலை வேண்டாம். அவர்களை அவைத் தலைவர் உத்தரவின் வழியாக வெளியே தூக்கிப்போட்டு விடலாம். மிஞ்சி மிஞ்சிப் போனால் எதிர்கட்சிகள் காந்தி சிலை முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். அவ்வளவுதான். அதுவா முக்கியம்? பாரத மாதாவையும் ‘பாரதீயத்தையும்’ காப்பாற்றியாக வேண்டுமே!

இந்த நல்ல ஆலோசனையை பரிசீலியுங்கள் அண்ணாமலை ஜி!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It