laluprasad 330மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது. அவர் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வந்திருக்கின்றன. அவர் நலம் பெற வேண்டும் என்று நாம் வாழ்த்துகிறோம்.

இந்த ஊழல் வழக்கில் லாலுவுக்கு முன்னாள் முதல்வர்களாக இருந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் வந்தன. ஆனால் தண்டிக்கப்பட்டவர் லாலு மட்டுமே.

மனு தர்மவாதிகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிற, வெறுக்கப்படுகிற அரசியல்வாதி ஒருவர் உண்டு என்று சொன்னால் அவர் லல்லு பிரசாத் என்று நாம் துணிச்சலாக கூறமுடியும். எந்த ஒரு காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியுடனோ அதன் மதவாத அரசியலுடனோ சமரசம் செய்து கொண்டது இல்லை.

இந்திராகாந்தியின் அவசர நிலை கால எதிர்ப்போடு, அவரது அரசியல் தொடங்கியது. ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய முழு புரட்சி இயக்கத்தில் ஒரு மாணவராக அவர் பங்கெடுத்து அவசர நிலையை எதிர்த்து களமாடினார்.

அதன் காரணமாக, மிசா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.சமூகநீதிக் காவலர் விபி சிங் உருவாக்கிய மண்டல் சகாப்தத்தில் வளர்ந்து உருவான ஒரு தலைவர் லாலு பிரசாத்.

லாலு பிரசாத்தை விபி.சிங் முதலமைச்சராக்கி அவர் அரசியலில் தலைவராக வளர்வதற்கு அத்தனை உதவிகளையும் செய்தார் வி.பி.சிங். ஒருகட்டத்தில் விபி.சிங் அவர்களின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி வியூகம் அமைத்து அத்வானி தலைமையில் ‘இராமன்’ ரத யாத்திரை நடத்திய போது அந்த ரதயாத்திரை நாடு முழுவதும் ரத்தக் களறியை உருவாக்கியது.

அந்த ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது துணிச்சலாக தடைசெய்து அத்வானியை கைது செய்தவர் லாலுபிரசாத் என்பது வரலாறு. அதன் காரணமாகவே விபி.சிங் ஆட்சிக்கு பாஜக வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டு விபி.சிங்கின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

மத்திய ரயில்வே அமைச்சராக லாலு இருந்தார். அவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மக்கள் நலன் சார்ந்த அறிக்கையாகவே இருந்தது. இரயில்வே கட்டணத்தை உயர்த்தியதில்லை. இலாபம் ஈட்டும் துறையாக மாற்றினார்.

சரக்கு போக்குவரத்தில் நடந்த பல முறைகேடுகளை ஒழித்தார். பல வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் நல்ல லாபம் தரக்கூடிய ஒரு துறையாக அவர் ரயில்வே துறையை மாற்றி அமைத்ததை வெகுவாக பாராட்டி அவருடைய நிர்வாகத் திறமையைப் பாராட்டினர். அவரை அழைத்துப் பேச வைத்தனர்.

அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலில் கூட சிறைக் கைதியாக மருத்துவமனையில் இருந்து கொண்டே அவர் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு வியூகம் அமைத்து தனது கட்சியை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு வந்து சேர்த்த மகத்தான மனிதராக செயல் பட்டார்.

தேர்தல் அரசியலுக்கே உரிய பலவீனங்கள் இருந்தாலும் அதை மிஞ்சக் கூடிய சமூக நீதி - எளிமை - மக்களுக்கான அரசியல் - மதவாத எதிர்ப்பில் உறுதி என்ற அடையாளங்களோடு அவர் பெருமைக்குரியவராகிறார். அவர் நலம் பெற வேண்டும் என்று காத்திருப்போம்!

விடுதலை இராசேந்திரன்

Pin It