Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

பெரியார் முழக்கம்

வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை

சதுர்த்தி விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப் போனால் அது ஏனைய `கடவுள்’களுக்கு மிகவும் வெட்கக் கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது.

விநாயகர் பிறப்புப் பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம். முதலாவதாக, பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வசாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால் விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடாதென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?

குளிப்பதற்காகச் சென்ற பார்வதி தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற்படியில் வைத்து உயிர் கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. இதுதான் விநாயகர்!

ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியுமா? எனவே, சுத்த ஆபாசமும் அசுத்தமும் நிறைந்தவளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது. அடுத்தப்படியாக, அவள் குளிக்கும்போது அங்கே வருகின்றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், “இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக் கொண்டு வந்தீர்கள்?” என்றதும், அதற்குப் பரமசிவன் கூறுகின்றார், “நான் வரும்போது நடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன்” என்றான். இதிலே குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தாலும்கூட அவனுக்கு அங்கே என்ன வேலை?

இரண்டாவது அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்துவிட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது? மூன்றாவது அவள் கணவனே என்று தெரிந்த பின்னும் பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்? இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப் புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும். இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலைதுண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி “நாதா என் அருமைச் செல்வம் - என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது!” என்று கூறினாள். பிறகு இதைக் கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத் தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒரு கதை.

மற்றொன்று பரமனும், பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்ற போது, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதை பார்த்த ஆசையில் பரமனும் பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவி செய்து பெற்றது தான் விநாயகர்.

மூன்றாவது, ஒரு நாள் பார்வதியும் பரமனும் போய்க்கொண்டு இருக்கை யில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம் . ஆகவே, அப்படிப் பிறந்தது தான் விநாயகர் என்றும் கூறுகிறார்கள். ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால் , இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும் சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வட நாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி-விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள். எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை. இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

- பெரியார்

இதே போன்ற ஒரு கதை இப்போது நடக்குமா?

• கதவுகள் இல்லாத குளியல் அறைக்கு குளிக்கப் போகிறாள் பார்வதி. புராண காலத்திலேயே குளியலறை இருந்திருக்கிறது. ஆனால் கதவு மட்டும் இல்லை. ‘சோப்பு’ தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தக் கதை தெரிந்தால் ‘இதுதான் பார்வதி குளித்த’ சோப் என்று தொலைக்காட்சி விளம்பரம் வந்திருக்கும். இனி அப்படி ஒரு விளம்பரம் வந்தாலும் வியப்பதற்கு இல்லை.

• குளியலறைக்குள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்கு ‘வாட்ச்மேன்’ ஒருவனை பார்வதி தயார் செய்திருக்கிறார். அந்த ‘வாட்ச்மேன்’தான் ‘விநாயகன்’. பார்வதி எனும் பெண் குளிக்கும் இடத்துக்குள் ஒரு ஆண் நுழைந்து விடாமல் தடுக்க ‘வாட்ச் வுமன்’ (றுயவஉh றடிஅயn) ஒருவரை தயார் செய்யாமல், ஏன் ‘வாட்ச்மேன்’ என்ற ஆண் நபரை தயார் செய்தார் என்று பெரியார் கேட்கிறார். அற்புதமான கேள்வி!

நட்சத்திர ஓட்டல் குளியலறைக்குள்ளும் சில ‘பெண்கள் விடுதி குளியலறைகளிலும் ‘சி.சி. டி.வி.’ கேமிராக்கள் திருட்டுத்தனமாக பொருத்தப்படுகிறது என்ற செய்திகள் அவ்வப்போது வருகின்றன. பரமசிவன் என்று ஒரு கடவுள் இப்போது இருந்திருந்தால் ‘இரகசிய சி.சி.டி.வி காமிரா’வுக்கு ஏற்பாடு செய்திருப்பான். விநாயகன் கதைக்கே வேலை இல்லாமல் போயிருக்கும். விநாயகன் சிலை ஊர்வலமும் இருந்திருக்காது.

• பார்வதி உற்பத்தி செய்த ‘விநாயகனின்’ மூலப் பொருள் அழுக்கு. அழுக்கு கடவுள் உற்பத்திக்கான கச்சாப் பொருளாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படி ஒரு தொழில்நுட்பம் நமது புராண காலத்திலேயே இருந்தது என்ற தகவலை, நமது ‘பாரதப் பிரதமர்’ மோடியின் கவனத்துக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறோம். அடுத்து அவர் பங்கேற்கவிருக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்த புராண காலத்து அறிவியல் பெருமையை மார்தட்டிக் கூறுவார் அல்லவா?

• பார்வதியால் இவ்வளவு தடைகள் போடப்பட்டிருந்தாலும்கூட பரமசிவன் ‘என்டிரி’யை தடுக்க முடியவில்லை. குளியலறைக்குள் தன்னை உள்ளே போகக் கூடாது என்று மிரட்டிய ‘விநாயகனை’, ‘என்கவுன்டரில்’ போட்டுத் தள்ளிவிட்டு பரமசிவன் குளியலறைக்குள் நுழைந்து விட்டான். அங்கே தான் சிவன் நிற்கிறான் போங்க!

• ‘என் கவுன்டரில்’ தலையை இழந்து நின்ற விநாயகனைப் பார்த்து பார்வதி பதறிப் போனாள். ‘நான் உருவாக்கிய விநாயகனின் தலை போய்விட்டதே’ என்று அழுது புரண்டாள். மனித உரிமை ஆணையம் அன்று இல்லை. இருந்திருந்தால் புகார் தந்திருப்பாள்!

விநாயகன் ‘கொடுத்து வைத்தவன்’ அப்போது தலையை மட்டும்தான் இழந்தான். இப்போது கதையே வேறு! இந்த இந்து முன்னணிகள் அதையும் தாண்டிய சித்திரவதைகளை ஈவிரக்கமின்றி செய்கிறார்கள்.

கடலில் கரைக்கப்படும் பரிதாபத்துக்குரிய  அந்த விநாயகனைப் பார்த்தால் கண்ணீர் தான் வரும். கால்களை தலைகளை வயிற்றை அடித்து உடைத்து நசுக்கித்தான் விநாயகனை கடலுக்குள் தள்ளுகிறார்கள். விநாயகனுக்கு நடக்கும் இந்த சித்திரவதைகளைக் கண்டு கைதட்டி, விசில் அடித்து, ‘பாரத் மாதாக்கி  ஜே’ என்று தொண்டை கிழிய முழங்குகிறார்கள். “இதுவா கடவுள் பக்தி? இதுவா, தேசபக்தி?” என்று  கேட்டால் ‘மத விரோதி; தேச விரோதி’ என்று எகிறி குதிக்கிறார்கள்.

புராண காலங்களிலேயே வனவிலங்குகள் சட்டம் மீறப்பட்டிருக் கிறது. யானையின் தந்தம் இப்போது வெட்டப்படுகிறது என்றால் பரமசிவன் தலையையே வெட்டி ‘விநாயகனுக்கு’ பொருத்தியிருக் கிறான், பாருங்கள். இதற்கும் நமது மோடி பெருமை பேசுவார் தான்!

மனிதனுக்கு யானை தலையைப் பொருத்திய ‘உறுப்பு மாற்று’ மருத்துவம் புராண காலத்திலேயே வந்து விட்டது என்று பூரித்துப் பேசியிருக்கிறார், இருக்காதா?

சொல்லப் போனால் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் ஒரு கார்ட்டூன் படத்துக்கான கதை, திரைக்கதைகளின் அம்சம் கொண்டவன் விநாயகன். அந்த விநாயகனுக்குத்தான் இந்த பக்தி இவ்வளவு பதட்டம்!

- கோடங்குடி மாரிமுத்து

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 mk 2017-08-24 19:37
appadiyae allah,jesus pathi pottu thittunga paarpom...comed y piece ya neenga
Report to administrator

Add comment


Security code
Refresh