கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது தி.மு.க. ஆட்சி முறைகேடாக பிறப்பித்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததோடு, இச் சட்டத்தின் கீழ் உள்ள எந்தப் பிரிவின் கீழும் கொளத்தூர் மணி குற்றமிழைக்கவில்லை என்று கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தை காங்கிரசாரை திருப்திப்படுத்தும் ஆயுதமாக முறைகேடாக பயன்படுத்திய கலைஞர் கருணாநிதிக்கு நீதிமன்றத் தீர்ப்புகள் பலத்த அடியை வழங்கி வருகின்றன. ஏற்கனவே இயக்குனர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்த உயர்நீதிமன்றம் இப்போது கழகத் தலைவரையும் விடுவித்துள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் ஏப்.27 ஆம் தேதி நீதிபதிகள் எலிப் தர்மராவ், ஆர்.சுப்பையா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் சகோதரர் டி.எஸ்பழனிச்சாமி பெயரில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவை தாக்கல் செய்து வாதாடினர்.

ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பது தவறு. அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்பதே சரி என்று கொளத்தூர் மணி கடந்த பிப்.20 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்த கழகக் கூட்டத்தில் ஏராளமான சான்றுகளுடன் உரையாற்றினார். ‘ராஜீவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது’ என்று பேசியதற்காக, தமது ஆட்சி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததாக கலைஞர் கருணாநிதி ‘முரசொலி’யில் எழுதினார். தோழர் கொளத்தூர் மணியின் முழு உரையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் - அந்த உரை, அரசுக்கு எதிரானது அல்ல; பொது ஒழுங்கை சீர் குலைப்பதும் அல்ல என்று, தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

முதலில் - இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், கழகத் தலைவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிறப்பித்திருந்தார். இறையாண்மைக்கு எதிராக எந்தப் பிரிவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பது பிறகு தெரிந்தவுடன், தாம் ஏற்கனவே வெளியிட்ட ஆணைக்கு திருத்தம் ஒன்றை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார். அதில் இறையாண்மைக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை பொது ஒழுங்கை சீர் குலைத்த குற்றச்சாட்டாக திருத்திக் கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். இப்படி ஒரு திருத்தம் வெளியிட்டிருப்பதே, இந்தத் தடுப்புக் காவல் சட்ட விரோதமானது என்பதற்கான சான்றாகும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அரசியல் சட்டம் 19(1)(ஏ) வழங்கியுள்ள பேச்சுரிமையை இந்தக் கைது பறித்துள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். கடந்த பிப்.20 ஆம் தேதி திண்டுக்கல்லில் நிகழ்த்திய உரைக்காக காவல்துறை வழக்கு பதிவு செய்து மார்ச் 3 ஆம் தேதி கைது செய்தது. பிணை கேட்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிணை மனு நிலுவையில் இருக்கும் போதே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யும் ஆணையை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பிறப்பித்தார். ஆள் தூக்கி சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தி எப்படியாவது சிறையிலடைத்து காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை முடக்கிட கலைஞர் கருணாநிதி துடித்தார். 56 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு அடக்கு முறை சட்டத்தை எதிர்த்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுதலையாகிறார். கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர், இதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதே போன்று, ஈரோட்டில் 14.12.2008 அன்று ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டத்தில் பேசியற்காக தி.மு.க. ஆட்சி கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசன் ஆகியோரை 19.12.2008 அன்று கைது செய்தது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் 31 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு, 19.1.2009 அன்று விடுதலை செய்யப்பட்டனர். கலைஞர் கருணாநிதி ஆட்சி ஈழத் தமிழர்களைப் பற்றி பேசினாலே அடக்குமுறைகளை ஏவி சிறையிலடைத்து வருகிறது. இந்த ஆட்சிதான் இப்போது உண்ணாவிரத நாடகத்தையும் நடத்தி முடித்திருக்கிறது.

இயக்குனர் சீமானுக்கு கழக சார்பில் எழுச்சி வரவேற்பு

புதுவை சிறையிலிருந்து ஏப்.27 அன்று விடுதலையாகி வெளிவந்த இயக்குனர் சீமானுக்கு புதுவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமையில் எழுச்சியான வரவேற்பு வழங்கப் பட்டது. சிறைச்சாலையிலிருந்து ஊர்திகள் பின் தொடர, அரியாங்குப்பம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை புறப்பட்டு வந்த இயக்குனர் சீமானுக்கு, வி.ஜி.பி. தங்க கடற்கரையருகே இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கலையுலகப் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நீலாங்கரையருகே பெரியார் திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியான வரவேற்பு தரப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார். கழகத் தோழர்கள் பொதுமக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திரண்டு, உணர்ச்சி முழக்கமிட்டு வரவேற்றனர்.

Pin It