“இலங்கை போர் நிறுத்தம் அறிவிக்குமா என ஞாயிற்றுக்கிழமை இரவு முழுதும் கண் விழித்திருந்து எதிர்பார்த்திருந்தேன். ஆனால், போர் நிறுத்தத்தை அறிவிக்காததால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறேன்” - என்ற அறிவிப்போடு அண்ணா நினைவிடம் அருகே, காலை 6 மணியளவில் (ஏப்.27, 2009) கலைஞர் கருணாநிதி தொடங்கிய உண்ணா விரதம், ஆறரை மணி நேரத்தில், “இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்து விட்டது; உண்ணாவிரதம் மாபெரும் வெற்றி” என்ற அறிவிப்புடன் முடிவுக்கு வந்துவிட்டது. உண்ணாவிரதம் முடிந்த உடனேயே முல்லிவாய்க்கால் பகுதியில் ராணுவம் பகல் 12.50 மணிக்கு ஒரு முறையும், மீண்டும் பகல் 1.10 மணிக்கு மறுமுறையும் முப்படைகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் 272 தமிழர்கள் பிணமாகி விட்டனர்.

கலைஞர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து ‘வெற்றிப் பிரகடனத்தை’ வெளியிட்ட சில மணி நேரத்துக்குள் சிங்கள ராணுவத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் உதய நாணயக்காரா, “அரசு போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை. விமானத் தாக்குதலும், எரிகணை வீச்சும் மட்டும், அது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற் படுத்துபவை என்பதால் நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். ராஜ பக்சேயும், சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்குமானால், அதை மகிழ்ச்சியோடு வரவேற்று, முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு மாலைகளை நாமே குவித்திருப்போம். இந்தப் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்துக்கு அரசியல் கண்ணோட்டம் ஏதுமில்லை. ஆனால், நிகழாத ஒரு போர் நிறுத்தத்தை நிகழ்ந்ததாக பரப்பி, தமிழின அழிப்பு என்னும் மாபெரும் மனிதகுல அவலப் பிரச்சினையில் அதன் பரிமாணத்தைக்கூட கவனத்தில் கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் கபட நாடகங்களை அரங்கேற்றும்போதுதான் நாம் வேதனைப்படுகிறோம். இந்த உண்ணாவிரதம் யாரை எதிர்த்து நடத்தப்பட்டது என்பது முதல் கேள்வி!

போரை நடத்துவதே சோனியா தான். எனவே சோனியாவும், காங்கிரசும் நினைத்தால்தான் போரை நிறுத்த முடியும், என்பதே, ஈழத் தமிழர்களின் மீது உண்மையான கவலை கொண்ட அனைவரது கோரிக்கை. கலைஞர் கருணாநிதியோ, காங்கிரசையும், சோனியாவையும் தலைமீது வைத்துக் கொண்டாடி வந்தார். சோனியாவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, தனக்கு கடிதம் எழுதிவிட்டார் என்றார். உண்மையில் சோனியா அப்படி ஒரு கடிதம் எழுத வேண்டியது ராஜபக்சேவுக்குத்தான். மற்றொரு நாட்டின் இறையாண்மையில் ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியாது என்று ‘முரசொலி’யில் எழுதினார். காங்கிரசின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஜெயந்தி நடராசன், கடந்த வாரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “இந்தியா இலங்கையிடம் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்” என்றார். அப்போது ஒரு செய்தியாளர் கேட்டார், “அப்படியானால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்று விட்டது என்கிறீர்களா?” ஆத்திரமடைந்த ஜெயந்தி நடராசன், பேட்டியை பாதியில் முடித்து விட்டு எழுந்து சென்றார். இந்தியாவால் இதற்கு மேல் இலங்கையிடம் வலியுறுத்த முடியாது என்று பேசிய அதே கலைஞர் தான் - இப்போது, தமது உண்ணாவிரதப் போராட்டத்தால் - இந்தியா, இலங்கையை வலியுறுத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்துவிட்டது என்கிறார்.

அப்படியானால், இப்படி ஒரு போராட்டத்தை, சில மாதங்களுக்கு முன்பே நடத்தியிருந்தால் எத்தனையோ ஆயிரம் தமிழர்களைக் காப்பாற்றி இருக்க முடியுமே என்ற கேள்வியும் எழத் தானே செய்யும்?

கலைஞர் கருணாநிதி போராடாதது மட்டுமல்ல; போராடியவர்களையும் தி.மு.க. ஆட்சியின் காவல்துறையைக் கொண்டு ஒடுக்கியது. இனப்படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பைச் சார்ந்த 20 பெண்கள் 14 நாட்கள் சாகும் வரை பட்டினி போராட்டம் நடத்தினர். மாவீரன் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தைத் தொடங்கிய பெண்களை காவல்துறை மிரட்டி, விரட்டியது. தனியார் இடங்கள் ஏதும் அவர்களுக்கு கிடைக்க விடாதபடி காவல்துறை மிரட்டியது. இறுதியாக மூன்றாவது நாள் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தங்களது கழகத்தின் தலைமையகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தாமாக முன் வந்து, உதவினார்.

12 ஆம் நாள் போராட்டத்தில் பெண்கள் பலர் உயிருடன் போராடிய நிலையில் அவ்வழியே தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை வாக்கு கேட்க காவல்துறை அனுமதித்தது. அவர் பின்னால் வந்தவர்கள் பெண்கள் உண்ணாவிரதம் இருந்த ம.தி.மு.க. அலுவலகத்தின் வாயிலில் வெடிகளை வெடித்து மகிழ்ச்சிக் கூத்தாடினர். அங்கே திரண்டிருந்த இன உணர்வாளர்கள் மீது கற்களை வீசியதில் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த ஒரு பெண் பலத்த காயமடைந்தார். அவரது முகத்தில் ஏழு தையல் போடப்பட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய அமைப்புகளை எல்லாம் தி.மு.க. அரசின் காவல்துறை ஒடுக்கியது. ஈழத் தமிழர் பற்றிய பரப்புரைகளே நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இந்தத் தேர்தலில், ஈழத் தமிழர் பிரச்சினையை மக்கள் பிரச்சினையாகவே கருதவில்லை என்று கலைஞர் கருணாநிதி கூறினார். தங்களின் சாதனைகளையே முன்னிறுத்துவோம் என்றார். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும், இதே கருத்தை செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார். எதைச் செய்தாவது ஈழத் தமிழர் பிரச்சினை தேர்தல் களத்துக்கு வந்து விடக் கூடாது என்பதில் தி.மு.க. தீவிரமாக கவனம் செலுத்தியது.

‘சங்கமம்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் குழுவை மக்களை மகிழ்விக்க, கனிமொழி தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கி விட்டார். ஒவ்வொரு நாளும் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பிணங்களாக வீழ்கிறார்களே என்ற அடக்க முடியாத துயரங்கள் சூழ்ந்து நிற்கும் இந்த தேர்தல் களத்தை கேளிக்கைக் கொண்டாட்டமாக்கி மகிழ்ந்திடும் பிரச்சாரத் திட்டங்களை உருவாக்கி, வெந்த புண்ணில் வேலை சொருகியது தி.மு.க. அனைத்து முயற்சிகளும் மக்கள் மன்றத்தில் தோல்வியைத் தழுவி, சென்றவிடமெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை, காங்கிரசின் துரோகத்துக்கு எதிராக வீறு கொண்டது. கடும் நெருக்கடிக் குள்ளான தி.மு.க. தலைமை தேர்தல் வெற்றிக்காக இந்த உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி, அதிலும் மிக மோசமான தோல்வியையே சந்தித்திருக்கிறது.

கலைஞர் கருணாநிதியின் இந்த உண்ணாவிரதம் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஒன்று - தி.மு.க., மத்திய அரசுக்கு வலிமையான அழுத்தம் தந்தால், போரை நிறுத்தியிருக்க முடியும் என்பதை இப்போது கலைஞர் கருணாநிதியே, இந்தப் போராட்டத்தின் வழியாக, தமிழ்நாட்டுக்கு சொல்லியிருக்கிறார். அப்படியானால், ‘முடிந்ததை எல்லாம் செய்து விட்டோம்’ என்று ஏற்கனவே கூறி வந்தது பொய்யா? அல்லது எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்று இப்போது கூறுவது பொய்யா?

இரண்டாவதாக போரை நிறுத்துவது - இந்தியாவிடம் இல்லை என்று கூறி, இது வரை காங்கிரசைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் போரை நிறுத்த ஏற்பாடு செய்துவிட்டதாக தம்மிடம் உறுதி கூறியதால், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டிருக் கிறார். அப்படியானால் போரை இந்தியாவால் நிறுத்தியிருக்க முடியும் என்பதை, இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியால் ஏற்கனவே காங்கிரசைக் காப்பாற்ற இவர் எடுத்து வைத்த வாதமெல்லாம் உண்மையானவை அல்ல என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. ஆக ‘போர் நிறுத்தம்’ ஏற்பட்டுவிட்டது என்ற பொய்மையுடன் முடிவடைந்த இந்த ‘உண்ணாவிரதம்’, குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட கதையாகி விட்டது!

வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-05-05 06:06:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இன்னும் சற்று உக்கிரமாகச் சொல்லலாமே!

குளிக்கப்போய், மலம் பூசிக்கொண்டு நாற்றமெடுத்து உலவும் கதை இது!

kanthasamy
2009-05-05 10:52:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Ruling political parties are executive committee of the ruling bourgeoise
நன்றி காரல் மார்க்ஸ்.
கண்களைத் திறந்த காரல் மார்க்சுக்கு கோடானு கோடி நன்றிகள்

Pin It