சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சி ஜெயேந்திரன் வழக்கிலிருந்து விடுதலை பெற யாகம் நடத்தியுள்ளார், கும்பகோணத்தில் சுந்தரராம தேசிகர் எனும் பார்ப்பனர். தனது வீட்டின் தோட்டத்தில் கேரள வேத பார்ப்பனர் ஒருவர் தலைமையில் பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு பல லட்சம் செலவில் இந்த யாகம் நடந்துள்ளது.

யாகத்தில் கடந்த 14 ஆம் தேதி ஜெயேந்திரனும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த யாகம் - ஒரு ‘அசைவ’ யாகம். 17 ஆடுகள் பலியிடப்பட்டுள்ளன. ஆடுகளின் வாயைப் பொத்தி, கழுத்தை நெறித்து, கொலை செய்து, ஈரலை எடுத்து வேதமந்திரம் முழங்கி புரோகிதர்கள் யாக குண்டத்தில் போட்டுள்ளனர். விலங்குகள் நல அமைப்பைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, காவல் துறை விசாரணை நடத்துவதாக ‘குமுதம் ரிப்போட்டர்’ விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. ‘ஜுனியர் விகடன்’ ஏட்டிலும், ‘சன்’ செய்தியிலும் இதே செய்திகள் வெளி வந்துள்ளன.

“வேத விதிப்படி வைதீகத்தில் உயிர்க் கொலை உண்டு; யாகத்தில் பலி தருவது வேத மரபுதான்” என்று, பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நியாயப்படுத்துகிறார்கள். ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ் இதையும் வெளியிட்டிருக்கிறது. கோயிலுக்குள்ளே ‘மனித உயிர்ப்பலி’ செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நிற்கும், ஜெயேந்திரனை குற்றத்திலிருந்து விடுவிக்க, ‘மிருக பலி’ தருவதற்கு பார்ப்பனர்கள் தயாராகிவிட்டனர் போலும்!

“ஆடுகளை யாகத்தில் பலியிடுவது இந்து மதத்துக்கு எதிரான செயல் அல்ல. கல்கத்தா காளி கோயிலில் ஆடுகள் பலியிடுவதை அரசு நிறுத்த முயன்றபோது அதைத் தடுக்கக் கூடாது. அது பாரம்பர்ய முறையான அர்ப்பணிப்பு என்று அப்போதே காஞ்சி பெரிய சங்கராச்சாரி கூறியுள்ளார்” என்று பார்ப்பனர்கள் இப்போது நியாயப்படுத்துகிறார்கள்.

அது மட்டுமல்ல, “ஜீவகாருண்யம் என்பது, வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கத்துக்கு மட்டுமே உள்ள மரபு. வேத மரபு அல்ல, சைவம் - வைணவம் உள்ளிட்ட எல்லாமுமே வேதத்திற்குள் தான் அடக்கம்” என்றும் பார்ப்பனர்கள் பளிச்சென்று கூறி விட்டார்கள் (‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 22.11.2007). ஆக இந்துமதம் என்பதாக ஒரு மதமில்லை. வேத மதம்தான் இந்து மதம் என்பதை பார்ப்பனர்கள் மீண்டும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.

இதற்குப் பிறகும் தன்மானமுள்ள தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளலாமா, என்ற கேள்வி எழவே செய்கிறது.

“பூசாரிகளின் பூசைகளிலிருந்து மிகப் பெரிய வேத விற்பன்னர்களின் யாகங்கள் வரை உயிர்ப்பலி என்பது உண்டு. கொன்றதைச் சாப்பிடலாமா இல்லை தூக்கி எறிந்து விடலாமா என்பதில்தான் கருத்து வேறுபாடு” (அதே பத்திரிகை) என்றும் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.

சோமபானம், சுராபானங்கள் என்ற அந்தக் காலத்து “விஸ்கி-பிராந்தி”களை குடித்துக் கொண்டு, ஆடு, மாடுகளை யாகத்தில் போட்டு அந்தக் காலத்து “மட்டன், சிக்கன் பிரியாணியை” சாப்பிட்ட கூட்டம்தான் ஆரியர் கூட்டம். உழைக்கும் மக்களின் உற்பத்திக் கருவிகளாக இருந்த ஆடு மாடுகளை நெருப்பில் போட்டு எரித்ததால், விவசாயத் தொழில் முடங்கிப் போனது. அப்போது, யாகத்தின் பெயரால் உற்பத்தியை முடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்டதுதான் புத்த மார்க்கம். புத்த மார்க்கம் செல்வாக்கோடு வளர்ந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் தங்களது யாகப் பலியையும் நிறுத்தி தங்களது கொள்கையை மாற்றிக் கொண்டு பார்ப்பனிய மதத்துக்கு உயிரூட்டத் துடித்தார்கள்.

“ராமன் மாட்டுக் கறி சாப்பிட்டான். சோமபானம், சுராபானம் குடித்தான்” என்று வால்மீகி ராமாயணத்தில் எழுதி வைத்ததை எடுத்துச் சொன்னாலே, “அய்யோ, ராமனைப் புண்படுத்துகிறார்கள்” என்று துள்ளி குதிக்கும் பார்ப்பனக் கூட்டம், இப்போது, ஜெயேந்திரர் மிருக பலியாகத்தை வேத மந்திரத்தோடு நடத்துவதற்கு என்ன பதில் கூறப் போகிறது?

பார்ப்பனர்கள் யாகம் செய்வதே தங்களது ‘பாவ’ச் செயல்களிலிருந்து, தங்களை விடுவித்துக் கொள்வதற்குத்தான் என்கிறார், வேத விற்பன்னர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரி! இதன்படி பார்த்தால் ஜெயேந்திரர் தனது ‘பாவத்தை’ அதாவது ‘கொலைக் குற்றத்தை’ ஒப்புக் கொண்டு அந்த ‘பாவத்திலிருந்து’ தன்னை மீட்டுக் கொள்ளவேயாக சாலைக்கு வந்திருக்கிறார் என்பது புரிகிறது!

“பாவத்தை தொலைப்பதே யாகம். யாகத்தை பிராமணர்கள் செய்யும்போது பாவம்... ‘அக்னி’யாகும்... அந்த அக்னியில் யாகம் செய்யும் போது பாவங்கள் எல்லாம் பிராமணனிடத்தில் வரும். இந்த பாவங்கள் எல்லாம் வேதமந்திரத்தை உச்சரிக்கும்போது அழிந்து விடும். அதனால்தான் பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் பிராமணன் இடத்தில் போய் யாகம் செய் என்கிறது வேதம்” - என்கிறார் தாதாச்சாரி! (ஆதாரம்: ‘இந்துமதம் எங்கே போகிறது?’)

இவைகள் ஒரு புறம் இருக்கட்டும். இப்போது நடப்பது வேதத்தின் ஆட்சியல்ல; சட்டத்தின் ஆட்சி! பார்ப்பான் கொலை செய்தால், அவனது மயிரை வெட்டினால் போதும் என்ற மனுதர்மத்தை இந்திய கிரிமினல் சட்டம் ஏற்காது! யாகத்தில் உயிர்ப்பலி தருவது சட்டப்படி குற்றம். அதை சங்கராச்சாரிகள் வேதத்தின் அங்கீகாரத்தோடு நடத்துகிறார். இதை சட்டம் அனுமதிக்கிறதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி!

Pin It