parliament 500தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வரும் ஒன்றியம் என்ற சொல்லுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி.

சட்டத்தில், “India that is bharath shall be union of states” என்று அரசியல் சட்டத்தின் முதல் பிரிவே கூறுகிறது. அரசியல் சட்டத்தை ஆராய்ந்தெல்லாம் பார்க்க வேண்டாம். தொடக்கத்திலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

காவல் துறையில் தான் எழுதுவார்கள், கருப்பன் என்கிற, இராமசாமி அல்லது மணி என்று ஏதாவது ஒன்றை எழுதுவார்கள். இந்தியாவிற்கும் இரண்டு பெயர்களை வைத்திருக்கிறார்கள். எனவே இவர்கள் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மொழி பெயர்ப்பதில்கூட பாரதம் என்ற சொல்லை ‘இந்தியா’ என்ற சொல்லிற்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் சட்டத்தில் இருக்கும் சொல் ‘ஒன்றியம்’ என்ற சொல். ‘Panjayat Union’ என்ற சொல்லை ‘பஞ்சாயத்து மத்திய அரசு’ என்றா மொழி பெயர்க்கிறார்கள்? ‘ஊராட்சி ஒன்றியம்’ என்று தான் மொழி பெயர்க்கிறார்கள். அரசவையில் ஒன்றியம் என்ற சொல்லை குறித்து பல வாதங்கள் நடைபெற்றிருக்கின்றன.

நாங்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். மத்திய அரசின் சார்பில் வரும் ஆங்கில செய்திகள் எல்லாம் ‘Central minister’ என்றெல்லாம் பயன்படுத்து வதில்லை. ‘Union Minister’ என்று தான் பயன்படுத்துகிறார்கள். Central minister என்று பயன்படுத்தினார்கள் என்றால் மத்திய அமைச்சர் என்று மொழி பெயர்க்கலாம்.

ஆனால் அவர்களே Union Minister என்று பயன்படுத்தும் போது அதை ‘ஒன்றிய அமைச்சர்’ என்று தான் மொழி பெயர்க்க வேண்டும். இது தான் சரியான மொழி பெயர்ப்பு. இவர்கள் தவறாக மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லது திராவிட முன்னேற்றக் கழகம் எதை செய்தாலும் அதற்குள் ஏதோ இருப்பதைப் போல இந்த சங்கிக் கூட்டங்கள் அதை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்களே தவிர மிகச் சரியானச் சொல்லை காலம் கடந்தாவது இப்போது பயன்படுத்துவதிலும் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

திமுக நீண்ட நெடுங்காலமாகவே ‘ஒன்றியம்’ என்று பயன்படுத்திவருவதை சட்டமன்ற உரை யிலேயே முதலமைச்சர் கூறியிருக்கிறார். இருந்தாலும் முன்னர் தவறாக கூட மத்திய அரசு அழைக்கப்பட்டு வந்திருக்கலாம்.

தவறை திருத்திக் கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய் என்பது, முட்டாள் தனம். தவறை திருத்திக் கொண்டதை ஏன் என்று கேட்பது நியாயமானதாக இல்லை. அதைத் தான் இந்த சங்கி கூட்டம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அங்கே மய்யத்திலே ஒன்றிய அரசின் தலைவராக இருப்பவரின் கருத்தும், சித்தாந்த திணிப்பும் என்பது ஒற்றை இந்தியாவை நோக்கி போவது.

எனவே மாநிலங்கள் பெற்றிருக்கிற உரிமையெல்லாம் மெல்ல மெல்ல தங்கள் கையில் எடுத்து செல்கிற கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிற இதுபோன்ற ஒன்றிய அரசு இருக்கிறபோதுதான், ‘நாம் இல்லை; நீங்கள் எனக்கு மேலான அல்லது மத்திய அரசு அல்ல நாங்களெல்லாம் (மாநிலங்கள்) ஒன்றி நாங்களெல்லாம் சேர்ந்து எங்களுடைய பிரதிநிதியாக வைத்திருக்கிறோம்’ என்பதை நினைவூட்டுவதற்காக இந்த சொல்லை பயன்படுத்துகிற தேவை தற்போது வந்துள்ளது.

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் இவர்களுக்கு ஒரு தடுப்பணையை போட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த சொல்லை கூறியிருக்கிறார். தற்போது அனைத்து மாநில முதல்வர்களும் இந்தச் சொல்லை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

ஒன்றியம் என்ற சொல்லை கூறியதற்கு சரியான நோக்கம் இருக்கிறது. இதைப்பற்றி கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் நாம் பழக்கத்தின் காரணமாக சில சொற்களை பயன்படுத்தி விட்டோமே இனி சரியான சொல்லை பயன்படுத்தினால் தான் ஒன்றிய அரசிற்கு உரைக்கும் என்பதாலும், தங்களுடைய நிலை இதுதான் என்பதை காட்டுவதற்காகவும் தான் இந்த சொல்லை பயன்படுத்தியாக வேண்டும் என்ற தேவை இருக்கிறது.

பழகிப் போனது என்பதால் தொடர்ந்து எதையும் நாம் பேசிக் கொண்டே இல்லை. பலவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறோம். பாஜக அரசு வந்தபின், ஆசிரியர் பிறந்தநாள் என்பது டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் சரியோ தவறோ, ஆனால் இவர்கள் ‘வியாசர்’ பிறந்த நாளை ஆசிரியர் தினம் என்கிறார்கள். உழைப்பாளர் தினம் மே 1 என்றால் இல்லை இல்லை எங்களுக்கு விஸ்வகர்மா பிறந்த நாள் என்கிறார்கள், குரு உற்சவ் என்கிறார்கள்.

ஏன் மாற்றுகிறார்கள்? இருப்பதே இருக்க வேண்டியது தானே? ஆனால் இவர்கள் தங்கள் கொள்கைக்காக தவறாகக் கூட மாற்றிக் கொள்கிறார்கள். நாம் தவறாகக் கூறி வந்ததை மாற்றிக்கொண்டு தற்போது சரியாக பயன்படுத்தி வருகிறோம் இதில் அவர்களுக்கு என்ன வலிக்கிறது?

அரசியல் சட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்றியம் என்ற சொல்லால் தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிகாரப் பூர்வ மொழி பெயர்ப்பையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள், இப்போது நாம் கூறுகிற சரியான மொழிபெயர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றால் நீங்கள் நினைத்ததை செய்து கொள்ள இது புராண காலமல்ல, இதிகாச காலமல்ல இது ஜனநாயக காலம்.

மக்கள் உரிமை பெற்று தாங்களே அரசை நடத்திக் கொண்டிருக்கிற காலம். எனவே இங்கு எது சரியோ அதைத்தான் பேச வேண்டும். இதுவரை பேசாமலிருந்தது பிழையாகவே இருக்கட்டும் தற்போது சரியான சொல்லை கூறுகிறோம் அதை ஏற்றுத்தான் தீர வேண்டும். இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் சரியான சொல் அதுதான். (‘சன் நியூஸ்’ 5 நிமிடம் பேட்டி)

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘சன் நியூஸ்’ கேள்விக் களத்தில் பங்கேற்று தந்த விளக்கம்

மோடி அரசிற்கு ஏதோ தற்காலிகமாக அழுத்தம் கொடுப்பதற்காக ‘ஒன்றியம்’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அப்படி கூறினால் அதன் நோக்கத்தை சிதைப்பதாக மாறிவிடும். இந்திய அரசியலமைப்பு படி இந்தியா என்பதே ஒன்றிய அரசு தான். ‘Union of States’ என்பது கூறப்பட்டிருக்கிறது அரசியலமைப்பு சட்டத்தில். அமைச்சர்களை ‘Union Minister’ என்று தான் அழைக்கிறார்கள்.

Service commission-யை Union Public Service Commission என்று தான் அழைத்து வருகிறார்கள். நீதிமன்ற வழக்குகள் வரும் போதுகூட Union of India என்று தான் குறிப்பிடு கிறார்கள். இவையெல்லாம் ஏற்கெனவே இருப்பவை தான். ஆனால் கடந்த காலத்தில் இதை பயன் படுத்தாமல் தற்போது பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏன் வந்துள்ளது என்று கேட்கிறார்கள்.

ஏன் பயன்படுத்தப்படுகிறது என்றால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்திலும் சரி, வாஜ்பாயி தலைமையிலான ஆட்சி காலத்திலும் சரி ஏற்கெனவே இருந்த மத்திய, மாநில அடிப்படை உறவுகள் சீர்குலையாமல் அப்படியே இருந்து கொண்டு இருந்தது.

அப்போதும் கூட மாநிலங் களுக்கான உரிமை போதவில்லை என்றும் நாம் கூறி வந்துள்ளோம். ஆனால் தற்போது மோடியின் ஆட்சி வந்த பிறகு ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டு அது ‘ஒற்றை ஆட்சி’ என்ற இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பிக்கிறது.

கல்வியை அவசர நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றிய போது கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற ஒற்றை குரல் தமிழ்நாட்டில் எழுந்தது. தற்போது உயர்கல்வித் துறை எங்களுடைய கட்டுப்பாடு என்று ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது.

வரி விதிப்பு, ரேசன் கார்டு, மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமலேயே ‘தேசிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டம்’ என்று இப்படி பலவற்றை மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள்.

எனவே மாநிலங்களின் ஒவ்வொரு உரிமையையும் நடுவண் அரசு என்று சொல்லிக் கொள்கின்ற அரசு படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிற நடவடிக்கைகளில் தீவிரமாகின்ற நிலையில் தான் அதன் எதிர்வினையாக, இல்லை; நீங்கள் நடத்துவது ஒன்றிய அரசு தான்.

மாநிலங்களுக்கான ஒரு கூட்டாட்சி இங்கே இருக்கிறது என்பதைத் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த சொல்லை பயன்படுத்துவதன் மூலம் அறிவித்திருக்கிறார். ஆளுநர் உரையில் கூட, ‘மாநில சுயாட்சியை நோக்கி இந்த ஆட்சி நகரும்’ என்பதை தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

வாஜ்பாயி ஆட்சி காலத்தில் சொல்லாத அந்த சொல்லை, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் சொல்லாத சொல்லை, இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் சொல்லாத சொல்லை தற்போது கையில் எடுக்க வேண்டிய அவசியத்தை மோடி ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

இந்த சொல்லை பயன்படுத்துவது தவறு என்று குறை சொல்பவர்களைப் பார்த்து நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன். அரசியல் சட்டம் என்ன கூறுகிறது? ‘India that is Bharath’ என்று எழுதி வைத்துள்ளீர்கள்.

நான் கேட்கிறேன், இந்தியா என்ற சொல்லை இதுவரை, பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறதா? கட்சிக்கு இந்திய ஜனதா கட்சி என்று பெயர் சூட்டாமல் - பாரதிய ஜனதா கட்சி என்று ஏன் பெயர் சூட்டியுள்ளீர்கள்.

இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? பா.ஜ.க.வில் பல்வேறு துணை அமைப்புகளை வைத்துள்ளீர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பல்வேறு துணை அமைப்புகளை வைத்துள்ளீர்கள், இத்தனை ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளிலும் சரி, பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைப்புகளிலும் சரி ‘இந்தியா' என்ற வார்த்தையை நீங்கள் ஏன் திட்டமிட்டு தவிர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்? பாரதியம், பாரத் என்ற இந்த சொல் மட்டுமே குறியீடாக கூறப்பட்டுக் கொண்டே வருகிறது.

பிரதமர் மோடி அறிவிக்கிற அத்தனை திட்டங்களிலும் ‘இந்தியா’ என்று பெயர் கொண்டுள்ள ஒரு திட்டத்தை இவர்களால் எடுத்துக் காட்ட முடியுமா? முடியாது. ஏன் இந்தியா என்ற சொல்லை தவிர்க்கிறீர்கள் என்று கூறினால், உங்களுடைய ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை உருவாக்கிய ‘கோல் வாக்கர்’ எழுதி வைத்திருக்கிறார். ‘நாமெல்லாம் பாரதியர்கள், பாரத் என்பதே நமது மதத்தைக் குறிப்பிடும்.

இந்தியா என்ற சொற்றொடர் இந்துக்களை மட்டும் குறிப்பிடுபவை இல்லை. இங்கே இருக்கிற இஸ்லாமியர்களை, கிருத்துவர்களையும் குறிக்கும் சொல். அது இந்துக்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. நாம் இந்துக்கள் என்று குறிப்பிடுவதற்கு பாரத் என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும். அல்லது இந்துக்கள் என்று நேரடியாக பயன்படுத்தலாம்.

இந்தியா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தத்துவ பிதாமகர் கோல்வாக்கர் எழுதி வைத்த கருத்தை நீங்கள் உங்கள் கட்சியில் பயன்படுத்துகிறீர்கள், அரசு திட்டங்களில் பயன்படுத்துகிறீர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் பயன்படுத்துகிறீர்கள்'. மொழி வழி மாநிலம் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக அறிவித்த ஒரு கொள்கையாகும்.

எனவே மொழி வழி மாநிலத்தையும் நீங்கள் ஏற்கவில்லை, இந்தியா என்ற சொல்லையும் நீங்கள் ஏற்கவில்லை, பாரதியம் பாரதத்தை நோக்கி இந்துஇராஷ்டிரமாக இந்த நாட்டை அழைத்துச் செல்வதற்கு நீங்கள் போகிற முயற்சியினால் தான், இன்றைக்கு ஒன்றியம் என்ற சொல்லை ஒரு குறியீட்டுச் சொல்லாக பயன்படுத்தும் வரலாற்று நிர்ப்பந்தம் ஆகியிருக்கிறது.

இந்தியாவை நீங்கள் ‘பாரதம்’ ஆக மாற்றும்போது மய்ய ஆட்சியை நாங்கள் ஒன்றியமாக மாற்றுகிறோம். இந்தச் சொல்லில் பயனுள்ளதா? இல்லையா? என்பதை வரலாறு தான் முடிவு செய்ய முடியும். ஆனால் தற்போது ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து போராட்டக் குரல் எழுப்பிக் கொண்டுள்ளன.

குறிப்பாக, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, கல்வி உரிமை ஆகியவைகள், பாரதிய ஜனதா கட்சி அல்லாத அனைத்து மாநில முதல்வர்களும், தாங்கள் மாநிலத்தின் பிரதிநிதி என்ற முறையில் அவர்களெல்லாம் ஒன்றிணைந்து தங்களுடைய மாநிலங்களுக்காக, ஒன்றிய அரசை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்புகின்ற ஒரு நிலைக்கு இந்திய அரசியல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த அரசியல் தான் நியாயமான அரசியல் மொழிவழி மாநிலங்களை எப்போது ஏற்றுக் கொண்டோமோ, அதே போல ஒரு மாநிலத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொண்ட பிறகு, இது தான் இந்திய அரசியலமைப்பு என்று ஏற்றுக் கொண்ட பிறகு ‘ஒன்றியம்’ என்று அழைப்பதால் பயனில்லை என்று எப்படி கூற முடியும்.

இதனால் பயனில்லை என்று கூறுகிறவர்கள் ஏன் மாநில உரிமையை பறித்து வைத்துக் கொண்டுள்ளீர்கள்? உரிமைகளை பறித்து வைத்ததால் என்ன பயனை மாநிலத்திற்கு கொடுத்தீர்கள்? பண மதிப்பிழப்பு மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் செய்ததனால் மாநிலங்களுக்கு என்ன பயன் கிடைத்தது? ஜி.எஸ்.டி கொண்டு வந்து மாநிலங்களின் வரி விதிப்பு பறித்து வைத்தீர்கள் இதனால் என்ன பயன் மாநிலங்களுக்கு கிடைத்தது? புதிய கல்வி கொள்கை மூலம் மாநிலங்களுக்கு என்ன பயன்? இவற்றினால் மாநிலங்களின் மக்கள் உங்களை எதிர்த்து போராடுகிற நிலையைத் தான் உருவாக்கியிருக்கிறீர்கள்.

மாநிலங்களே இல்லாமல் அதிகாரக் குவியலை நோக்கி நீங்கள் பயணிக்கிற வேலைதான் பயனற்ற வேலை. இவற்றிலிருந்து மீட்கும் ஒரு சொல்லை பயனற்ற சொல் என்று சொல்வது அறியாமையின் வெளிப்பாடு.

- கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன்

 

Pin It