நாரதனும்-கிருஷ்ணனும் கூடிப் பெற்ற 60 சமஸ்கிருத ஆண்டுகளா? அல்லது திருவள்ளுவரைக் கொண்டாடும் ஆண்டுகளா?

தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசு வழங்கும் உணவுப் பொருள்களுக்கான பைகளில் பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. உடனே பா.ஜ.க. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றுவதா என்று ஆர்ப்பரிக்கிறது. அ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு மாற்றக் கூடாது என்கிறார். அரசியலுக்குள் கால் பதிக்கத் துடிக்கும் சசிகலாவும் இதே குரலை ஒலித்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு கலைஞர் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா - கலைஞர் ஆட்சி பிறப்பித்த ஆணையை நீக்கம் செய்து சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சார்பில் உத்தரவிட்டார்.

உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு தமிழர்களை தை முதல் நாள் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பிறகு எப்படி சித்திரைக்கு மாறியது என்பதற்கு வரலாறு இருக்கிறது.

முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதிலும் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியை பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்வார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்."

தை முதல் நாள் தான் தமிழர்களுக்கு புத்தாண்டாக இருந்தது என்பதை நடைமுறை உதாரணங்களோடு இப்படி விளக்கிக் காட்டியுள்ளவர் டாக்டர் மு. வரதராசனார்.

பழந்தமிழர்கள் தங்களது அறிவுக்கு உகந்தவாறு காலங்களைக் கணித்தார்கள். ஒரு ஆண்டை தமிழன் ஆறு பருவ காலமாகப் பிரித்தான். இளவேனில் (தை மாசி), முதுவேனில் (பங்குனி, சித்திரை), கார் (வைகாசி, ஆனி), கூதிர் (ஆடி, ஆவணி), முன்பனி (புரட்டாசி, அய்ப்பசி), பின் பனி (கார்த்திகை மார்கழி). தமிழன் தன் வாழ்வை இளவேனிற் காலத்தில் தொடங்கினான். இதையே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். எனவே தை மாத முதல் நாளே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். இவை தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்பதற்கான வாழ்வியல் காரணங்கள்.

தமிழர்களின் காலக் கணக்கீட்டைக் கொண்டும், இந்தக் கருத்தை நியாயப்படுத்த முடியும். காலக் கணக்கீட்டிற்கு அடிப்படையாக இருப்பது சூரியன்தான். பகல், இரவு, நாள், கிழமை, பருவம், ஆண்டு எல்லாமே சூரியன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியும், மற்ற கோள்களும் சுற்றினாலும், பூமியில் உள்ளவர்கள் பார்வையில் சூரியன் காலையில் எழுகிறது. மாலையில் மறைகிறது. சந்திரன் தேய்கிறது, வளர்கிறது. நட்சத்திரங்களின் இருப்பிடங்கள், கோள்களின் நிலைகள்... மனிதர்களின் பார்வையில் மாறுகின்றன. இந்தப் பார்வையில் தெற்கே சென்ற சூரியன், வடக்கு நோக்கித் திரும்புகிற நாள் தை முதல் நாளாக, புத்தாண்டின் துவக்கமாகத் தமிழர்களால் ஏந்தப்பட்டது. சூரியன் வடக்கு நோக்கித் திரும்புவது தான் தமிழர்கள் வாழும் பகுதியில் நிகழ்வதால் தமிழர்கள், தங்களின் வானியல் கணிதப்படி அதுவும் தை மாதத்தில் நிகழ்வதால் தமிழ் மக்கள் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

தமிழர்கள் வகுத்துக் கொண்ட வானியல் கணிப்பின்படி, தை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக இருந்திருக்கிறது. ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் சூரியன் உதயமாவதும் இல்லை, மறைவதும் இல்லை. அது என்றும் ஒளிர்கிறது. பூமி, தற்சுழற்சியாக சூரியனை சுற்றி வரும்போது 24 மணி நேரத்தில் சூரிய ஒளிபடுகிற இடமெல்லாம் பகலாகவும், மறுபகுதி இரவாகவும் அமைகிறது.

தமிழர் கொண்டாடியதை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு - தனது பெயரால் ‘விக்கிரம சகம்' என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் - சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனையாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரமசகம்' எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம்' 60 ஆண்டுகளை வரையறுத்தது. ‘பிரபவ' ஆண்டில் தொடங்கி ‘அட்சய' ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை - வேதனை.

இந்த 60 ஆண்டுகளையும் கடவுளோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் உருவாக்கி விட்டார்கள். நாரதரும், கிருஷ்ணனும் உறவு கொண்டு (இருவரும் ஆண்கள்) பெற்ற குழந்தைகளே 'பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்' என்று தமிழ்க் கலை களஞ்சியமான 'அபிதான சிந்தாமணி' கூறுகிறது. இதற்கு புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61வது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் 'பிரபவத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்' நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத குழப்பங்களும், மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் - தமிழ் அறிஞர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். மூன்று முக்கிய முடிவுகளை அவர்கள் அப்போது எடுத்தார்கள்.

  1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது.
  2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
  3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவர்.

அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் 'அகில இந்திய தமிழர் மாநாடு' சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி.இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.

1971-ல் அன்றைய கலைஞர் ஆட்சி, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையையோ 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது. 1969-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இடையில் வந்து புகுந்த சித்திரை - தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்

60 ஆண்டுகளும் சமஸ்கிருதப் பெயரைச் சுமந்து கொண்டிருக்கிறது, சித்திரையில் தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு. இதற்கு மாறாக, தமிழ்ப் புத்தாண்டுக்கு என் கணிதப்படி திருவள்ளுவர் பிறப்பை முன் வைத்து கொண்டாடப்படுகிறது - தை முதல் நாளாகக் கொண்டாடப்படும் தமிழ்ப் புத்தாண்டு.

நாரதனும் கிருஷ்ணனும் கூடிப் பெற்றதாகப் புராணம் கூறும் 60 சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப் புத்தாண்டு என்கிறது பா.ஜ.க.வும் அதன் ஊதுகுழலான அ.இ.அ.தி.மு.க.வும்.

தமிழுக்கு பெரியார் எதிரி போலவும், தாங்களே தமிழின் காவலர்களாகவும் ‘புதிய வேடம் போட்ட’ பா.ஜ.க.வினர், இப்போது தங்கள் அடையாளம் எது என்பதைக் காட்டி விட்டார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It