rajini‘ஆன்மிக அரசியல் வேறு; மதவாத அரசியல் வேறு’ என்று விளக்க உரை தந்திருக்கிறார், ‘ரஜினி’. கட்சியின் ‘சூப்பர்வைசர்’ தமிழருவி மணியன்! அத்துடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தியின் டுவிட்டர் பதிவு ஒன்று முகநூலில் வலம் வருகிறது.

“அரிய வகைகளையெல்லாம் அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் காலமாக தற்காலம் உள்ளது. அந்த வகையில் வேதப் பண்டிதர்களாகவும், அறிவு சார்ந்த நல்லொழுக்க சீலர்களாகவும் உள்ள ‘பிராமணர்’களையும் அவர்களுக்கே உரித்தான அடையாளங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்”

பிராமணர் அனைவருமே அறிவு சார்ந்த நல்லொழுக்க சீலர்கள் என்று நன்னடத்தைச் சான்றிதழ்களை தயாராகவே வைத்திருக்கிறார், ரஜினி கட்சியின் மற்றொரு நிர்வாகி அர்ஜுனமூர்த்தி.

எதையாவது இப்படிப் பேசிக் கொண்டே இருங்கள், நான் பெங்களூருக்கு ‘அண்ணாத்தே ஷூட்டிங்கு’ப் புறப்படுகிறேன் என்று கிளம்பி விட்டார் - கதாநாயகன்.

இப்போது குருமூர்த்தி என்ற ஆடிட்டரும் அவருக்காகப் பேச வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்ததுபோல் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார் என்று கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக் காட்டுகிறார், ஆடிட்டர்.

அர்ஜுன மூர்த்தி, குருமூர்த்தி பேச்சுகள் ஆன்மிகமா, மதவாதமா? எந்தப் பிரிவின் கீழ் வருகிறது என்பதை உரை எழுதும் தமிழருவி தான் விளக்க வேண்டும்.

தமிழருவியின் மற்றொரு பேச்சும் முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கருநாடகம் வெறும் ‘கண்டக்டராக’ (நடத்துனர்) மட்டும் வைத்திருந்தது. அந்த கண்டக்டரை உச்சம் பெற்ற நடிகனாக மாற்றியவன் தமிழன்; கோடீசுவரனாக மாற்றியவன் தமிழன்; இங்கே இருக்கிற சில இளிச்சவாய் தமிழர்கள் முதலமைச்சராக மாற்ற வேண்டும் என்றுகூட நினைத்திருக்கிறான்; இந்த ரஜினிகாந்த் தனது முதலீடு முழுவதையும் கருநாடகத்தில் போட்டிருக்கிறான்...”

தமிழருவி மணியன், முதலமைச்சர் பதவிக்கு கடந்த பல ஆண்டுகளாகவே ஆள் பிடித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு முன்பு அவர் பேசிய பேச்சு இது. இதுவும் ஆன்மிகத்தில் வருமா, மதவாதத்தில் வருமா என்பதையும் அவர்தான் விளக்க வேண்டும்.

மற்றபடி தமிழருவி, ‘மதவாதம் - ஆன்மிக’த்துக்கு பதிவுரை பொழிப்புரை வழங்குவதற்கு ரஜினி பேசிய பேச்சுகளின் நீண்ட பட்டியலே இருக்கிறது.

“அரசியலுக்கு நான் வரப்போவது உறுதி; ஆனால் முதலமைச்சர் பதவிக்கு வரமாட்டேன்.”

“என்னுடைய உடல்நலன் கருதி மருத்துவர்கள் என்னை அரசியலுக்குப் போக வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.”

“நான் ஓட்டுகளைப் பிரிப்பவனாக இருக்க விரும்ப வில்லை; அதிகாரத்தைப் பிடிப்பவனாக அரசியலுக்கு வரவேண்டும்.”

“மக்கள் புரட்சி வந்த பிறகு அரசியலுக்கு வருவேன்”.

“நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி; தோற்றால் அது மக்களின் தோல்வி; (அதாவது அது எனது தோல்வி அல்ல; எனக்கு அதிகாரம் வழங்காமல் மக்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்)”.

“மோடியும் அமித்ஷாவும் - கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள்.”

“500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியது துணிவான நடவடிக்கை; கருப்புப் பணம் ஒழியும்; குடியுரிமை திருத்தச் சட்டத்தை வரவேற்கிறேன்.”

- இப்படி ரஜினி உதிர்த்த பல்வேறு பொன்மொழிகள் ஆன்மிகமா? மதமா? என்பதை எல்லாம் தமிழருவி விளக்கி, ரஜினிகாந்த் தொடங்கப் போகும் கட்சியை ‘இளிச்சவாய் தமிழனிடம்’ கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

அர்ஜுன மூர்த்தி, ‘பிராமணர்களைப்’ பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொள்ளட்டும்; தமிழருவி இளிச்சவாய் தமிழர்களைப் பார்த்துக் கொள்ளட்டும்.

‘ரஜினி கட்சி’ ஆன்மிகக் கொடி ஏற்றி வளரட்டும்; அதை விட முக்கியம் ‘அண்ணாத்தே’ படத்தின் வெற்றி!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It