சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் உடைச்சதுக்காக ஓர் ஆள் என் மீது வழக்குப் போட்டார். அது முதலிலே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு, அதற்குப் பிறகு அப்பீலில் மேல்முறையீட்டில் சப்-ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளிவிட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு. அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 3-4 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதி விட்டானே!

இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது; அதனால் நீதி முறைக்கேட்டிற்கு இடம் இருக்கிறது. காரணம், நீதித்துறை அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது. இந்த நாட்டுக்கு (தமிழகத்துக்கு) நீதிபதிகளாக இருப்பவர்களை, எதற்கான டெல்லியில் இருக்கிற ‘பிரசிடெண்டு’ நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும்? நாம் எதற்காக டெல்லிக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? பொதுவான பாதுகாப்பு, படை - அதுக்காக அவருக்கு அதிகாரம் என்றாலாவது ஓரளவு அர்த்தம் இருக்க முடியும். இந்த அதிகாரங்களை அங்கே கொடுத்துவிட்டு, நாம் பார்ப்பானிடம் சிக்கிக் கொண்டு எதற்காக அவஸ்தைப்பட வேணும்? ரொம்பக் கஷ்டப்பட்டுப் பெரிய கிளர்ச்சி பண்ணினால்தானே, நாம் இதிலிருந்து விடுபட முடியும்.

ஓர் அய்க்கோர்ட் ஜட்ஜ் என்றால், அவர் தீர்ப்பு எழுதுவதன் மூலம்தான் நம்மவர்களுக்குக் கேடு விளைவிக்க முடியும் என்பது அல்ல; இன்னும் பல வழிகளில் செய்ய முடியும். கீழே இருக்கிற நீதித்துறையில் உள்ள அத்தனை அதிகாரிகள், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட், சப்மாஜிஸ்திரேட் முதலிய பல உத்தியோகத்திலுள்ளவர்களின் வேலையைப் பற்றி விமர்சனம் செய்து தூக்கியும் விடலாம் கீழே அழுத்தியும் விட முடியும்.

தங்களுக்கு வேண்டாதவர்களை ஒழித்துக் கட்டி விடுவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஜட்ஜுக்கும் ஒவ்வொரு ஜில்லா என்று பிரித்துக் கொடுத்து, அந்த ஜில்லாவில் உள்ள நீதித் துறை அதிகாரிகளின் குடுமிகள் அவர் கையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பான் கையில் தமிழன் குடுமி சிக்கினால் அவ்வளவு தான். அவன் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட முடியும்.

பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் (திராவிடருக்கும்) இப்போது நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தின் ஓர் அம்சம் தான் இந்த நிகழ்ச்சிகள் என்பதை, நம் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அது எப்படி இருந்த போதிலும், நாம் இந்த மாதிரி நீதிப் போக்கின் கொடுமையைக் கண்டிக்காமல் இருந்துவிட முடியாது. ஆகவே விளைவு என்னவானாலும் சந்தோஷத்தோடு அதை ஏற்பது என்ற முடிவோடு, இந்தக் கேட்டைக் கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும்.

(23.10.1960 அன்று திருச்சியில் ஆற்றிய உரை)

Pin It