நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86-வது ஆண்டில் புகுகிறேன்.
இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்து, இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து, அதுவும் ஓய்வு என்பதை அறியாத தொண்டும், சுகம் என்பதை அறியாத வாழ்வும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டு வாழ்ந்து விட்டேன் என்றால் என் ஆயுளைப்பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா ?
என்ன செய்து சாதித்து விட்டாய்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள்) தான் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித் தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்கு சரி என்று பட்டதையும் தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன்.
வாழ்வில், செயலில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும் அதையே ஒரு படிப்பினை யாகக் கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்து கொண்டு தான் வருகிறேன்.
நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்து வரவில்லை என்பதும் எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விஷயமாக இருந்து வந்தது.
இப்படிப்பட்ட எனது வாழ்நாள் பற்றிய விளக்கம் என்னவென்றால் 1964 செப்டம்பர் 17-ந் தேதி வியாழக்கிழமைக்கு சரியான குரோதி வருஷம் புரட்டாசி மாதம் 1-ந் தேதிக்கு எனக்கு 85 வயது முடிகிறதென்றால் அது நான் பிறந்து ஓராயிரத்து இருபது (1020) மாதங்கள் ஆகிறதுடன், நான் பிறந்து இன்றைக்கு (17-9-1964-க்கு) முப்பத்தி ஓராயிரத்து நாற்பத் தேழு நாட்கள் வாழ்ந்து விட்டேன் என்று ஆகிறது.
மற்றும் நான் (1034) ஓராயித்து முப்பத்தி நான்கு அமாவாசையையும், 1034 பவுணர்மியையும்,1034 பிறையையும் கண்டுவிட்டேன் என்று ஆகிறது. “ஆயிரம் பிறை கண்டவன் முழுஆயுள் வாழ்ந்தவனா வான்” என்று சொல்லுவார்கள். அதுபோல் முழு வாழ் நாள் வாழ்ந்துவிட்டேன். எனவே கிரமப்படி பார்த்தால் உங்களிடம் நாண் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான் எனது நேர்மையான கடமை.
அதற்கேற்ப எனக்கு புத்திக் கோளாறு ஒன்றும் இல்லை என்று நான் கருதினாலும், ஞாபகக் கோளாறு அதிகமாகி விட்டது. பேசப் பேச பேச்சுத் தொடர் மறந்து போகிறது, வெகு கெட்டிக்காரத்தனமாய் சமாளித்துக் கொள்ளுகிறேன். காது 100க்கு 40 சதவிகிதம் (செவிடு) சப்தம் கேட்பதில்லை. கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி (அதுவும் பைக்கா-12 பாயிண்ட் எழுத்து)க்கு மேல் படிக்க முடிவ தில்லை. கண்களில் கண்ணீர் வந்து மறைத்து விடுகிறது. நடை 10 எட்டு, அதாவது 15 அடி தூரத்துக்கு மேல் நடந்தால் நெஞ்சுத்துடிப்பு அதிகமாகி களைப்பு வந்துவிடுகிறது. அதுவும் துணை பிடிப்பு இல்லாமல் நடக்க முடிவதில்லை. ஹெர்ணியா என்னும் நோய் ( குடல் வாதம்) இருப்பதில் உட்கார்ந்திருக்கும் போது ஒரு இளநீர் அளவு பரிமாணம் குடல் இறங்கி சிறு வலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நின்றால் ஃபுட்பால் (உதை பந்து) அளவுக்கு பெருகி பெருவலி கொடுக்கிறது.
இந்தக் காரணங்களால் நானே என்னை கண்டெம்டுமேன்-வேலைக்குப் பயன்படமுடியாத தள்ளப்பட்ட மனிதன் - என்றே கருதி வாழ்ந்து வருகிறேன். இவ்வளவு குறைபாடுகளும் இயலாமை யும் இருந்தும் மக்கள் என்னிடம் வைத்து இருக்கும் அன்பும், மரியாதையும் ஜன்னி வந்தவனுக்கு ஏற்படும் பலம் சகிப்புத்தன்மை போல் எந்நிலை அறியாத அளவுக்கு வேலைகளையும், பொறுப்புக்களையும் நானாக மேற்போட்டுக் கொண்டு தொந்தரவடைந்து வருகிறேன். இந்த இப்படிப்பட்ட தொந்தரவுகளால் நான் அவஸ்தைப்படாமல் இருக்கத்தக்க வண்ணம், நோய் தெரியாமல் இருப்பதற்கு, டாக்டர்கள் குளோரஃபார்ம் (மயக்க மருந்து) கொடுப்பது போல் , பணம், பண்டம் (ரூபாய்) தாராளமாய்க் கொடுத்து உற்சாகப்படுத்தி விடுகிறார்கள்.
ஆதலாலேயே உடல்நிலையைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தொண்டாற்றி வர முடிகிறது என்று சொல்லுவேன். நல்ல அளவுக்கு, என் தகுதிக்கு ஏற்ப பணம் தேடிவிட்டேன். அதுவும் யாரையும் ஒரு காசு அளவுகூட தயவாய்க் கேட்காமல் வேண்டுகோள் விடுவதும், கட்டளை இடுவதும், ரேட் (விகிதம்) ஏற்படுத்துவதும், மக்கள் தாங்களாகவே மேல்விழுந்து கொடுக்க வருவதுமான தன்மையிலேயே இயக்கத் திற்குப் பணம் சேர முடிந்தது. அதைக் கொண்டு இயக்க நடப்புக்கும், பிரச்சாரத்துக்கும், காரியாலயக் கட்டடங்களும், இடமும், வயலும், தோப்பும், காலி மனைகளும், வீடுகளும், மண்டபங்களும், பள்ளிகளும், பள்ளிப் பிள்ளைகளுக்கு பயன்படும் தங்குமிடங்களும் செலவுக்கு வருவாய் வரத்தக்க வீடுகளும் ஒரு அளவு ஏற்பாடு செய்துமிருக்கிறேன்.
இவைகளையெல்லாம்விட குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று என்னவென்றால், திருச்சியில் ஒரு கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்று இரண்டு ஆண்டுகட்கு முன் முயற்சித்து சென்ற ஆண்டில் பெண்கள் கல்லூரியாக ஏற்படுத்த அரசாங்கத்தில், யுனிவர்ஸிட்டியில் அனுமதி பெற்று செயலில் இறங்கும் போது, அதற்கு மேலும் கட்டடம், நில ஆர்ச்சிதம் முதலிய காரியங்களும், துவக்கியதில் அதிகச் செலவு மாத்திரமல்லாமல் பல தொந்தரவுகளும் ஏற்படுவதா யிருந்தது பற்றி சிந்தித்து, செயல்பட இருக்கும்போது, இதை அறிந்த திருச்சி தோழர்கள் பலர் திருச்சிக்கு இப்போது அவசரமாய் வேண்டியிருப்பது ஆண்கள் கல்லூரி என்று பல காரணங்களைச் சொல்லி முறை யிட்டார்கள். எனது 10, 15 வருஷ திருச்சி வாசத்தில் நான் கண்ட அனுபவம் அம்முறையீடுகளை உண்மைப் படுத்தியதால், பெண்கள் கல்லூரி விஷயம் பின்னால் கவனிக்கலாம். இப்போது அவசரமாக ஆண்கள் கல்லூரி விஷயம் கவனிக்க வேண்டியதாகும் என்பதாக எனக்குத் தோன்றியதால், அரசாங்க கல்வி அதிகாரியை அணுகி இதற்கு யோசனை கேட்டதில் “அவர்கள் அங்கு ஏற்கனவே மூன்று காலேஜுகள் ஆண்களுக்கு இருக்கின்றன. இரண்டு காலேஜுகள் பெண்களுக்கு இருக்கின்றன. மேற்கொண்டு இப்போது அவசர மில்லை என்று சர்க்கார் நினைக்கிறது” என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு மேலும் அவர்களை வேண்டிக் கொண்டதன் மீது 5 லட்சம் ரூபாய் பொருளுதவி செய்தால் அரசாங்கம் கவனிக்கும் என்று சொல்லி விட்டார்கள். நாம் சொந்தத்தில் வைப்பதானால் 50 ஏக்கர் இடமும், சுமார் 4,5 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியதான கட்டடமும், 2,3 லட்ச ரூபாய்க்கு மேலாக தளவாட சாமான்கள், இவை தவிர காலேஜ் ஏற்பட்ட பிறகு 2, 3 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு ரூ.2000-3000 சிப்பந்திகள் செலவும் செய்ய வேண்டி வரும் என்று தெரியவந்ததால், அரசாங்க விருப்பப்படி அவர்கள் கேட்கும் தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டு தொகையும் செலுத்தப்பட்டாய்விட்டது. அநேகமாக அடுத்த ஆண்டு காலேஜும் துவக்கப் படலாம்.
மற்றபடி நமது இயக்கப் பிரசார வேலைகள் எப்போதும் போல் நடந்து வந்தாலும் சில விஷயங்களில், அதாவது நம் மக்கள் எண்ணிக்கைப்படி அரசாங்கப் பள்ளிகளிலும், உத்யோகங்களிலும், பதவிகளிலும் விகிதாசார உரிமைபெற சில கிளர்ச்சிகள் நடத்தப்பட வேண்டியது நமது சென்ற ஆண்டினுடை யவும், வரும் ஆண்டினுடையவும் திட்டமாக இருந்தாலும் அரசாங்கத்தால் மற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியத்தை முன்னிட்டு, நாம் ஒரு அளவுக்கு அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய காரியத்தைச் செய்யவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறபடியால், மற்ற கிளர்ச்சிகளை சிறிது தள்ளிப் போட வேண்டியதாகிவிட்டதால், இப்போது அது விஷயமாய் (வகுப்புவாரி உரிமை விஷயமாய்) பிரசார அளவில் இருக்க வேண்டியதாகிவிட்டது.
நமது அரசாங்கத்தின் சமதர்ம (சோஷ்யலிச) திட்டம் எளிதான திட்டம் அல்ல. அரசாங்கத்திற்கு மிகவும் சிரமமும், தொல்லை தரத்தக்கதுமான திட்டமாகும். நம் நாட்டில் பாமர மக்கள் பகுத்தறிவற்றவர்களாக இருப்பதாலும், ஆதிக்கத்தில் இருந்துவரும் பார்ப்பனரும், செல்வவான்களும் எந்தக் கேடான காரியமும் செய்யத்தக்க அளவுக்கு துணிவும், வசதியும் உடையவர்களாக இருப்பதாலும், இவர்கள் ஆதரவால் காலிகளும், முஸ்லீம்களும் பொறுப்பற்ற தன்மையில் அரசாங்கத்திற்கு எதிரிகளாய் இருப்பதாலும் அரசாங்கத்திற்கு பொதுமக்கள் ஆதரவு மிக மிகத் தேவைப்படுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அரசாங்கத்தின் சோஷ்யலிசத் திட்டம் நல்ல அளவுக்கு நிறைவேறும்படி செய்வோமானால், நமது திட்டங்கள் ஒரு நல்ல அளவுக்கு நிறைவேற வாய்ப்பு இருக்கிறது என்பது எனது கருத்தாகும்.
இப்போது அரசாங்கக் கல்வித் திட்டத்தினால் மக்களின் பாமரத்தன்மை ஒழிந்து வரும் என்பதில் ஆட்சேபணையில்லை. இந்த நிலை ஜாதி ஒழிப்புக்கு நல்ல ஆதரவான நிலையாகி விடும்.
பொருளாதார பேதம் ஒழிய வேண்டியது அவசியமேயானாலும், முதலில் கவனம் செலுத்த வேண்டியது ஜாதி ஒழிப்பு வேலையே ஆனதனால் அந்தக் காரியத்திற்கு, அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க வேண்டியவர்களாகிறோம்.
பொருளாதார பேதம் பெரிதும் உலகமெங்கிலும் இருந்துவரும் பேதம் என்பதோடு, அதை அவ்வளவு எளிதில் ஒழித்துவிடுவது என்பது மிக்க சிரமத்தைத் தரத்தக்கதாகும். ஏன் எனில் ஆட்சி ஜனநாயகமானாலும், ஆட்சியாளர்கள் ஜாதி ஆணவக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதோடு, பொருளாதார உணர்ச்சி கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள்.பொதுவாக சொல்லுவதானால் நமது நாட்டு ஆட்சியாளர்கள் கட்சியான காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கத்தைவிட பணக்காரர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. மந்திரிமார்கள் பெரிதும் செல்வவான்களும், செல்வத்தை சேர்க்க வேண்டும் என்ற பேராசை உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். அதோடு செல்வவான்கள் ஆட்சியில் நல்ல அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்களாகவும், தங்கள் செல்வ விருத்தியை முன்னிட்டே காங்கிரசை ஆதரிப்பவர்களாகவும் இருப்பதால், ஒரே சமயத்தில் இருவர் எதிர்ப்பையும் சமாளிப்பது அரசாங்கத்திற்கு பெருந் தொல்லையாக இருக்கும்.
ஆதலால் நமது மேற்கண்ட இரு திட்டங்களும் இன்று அரசியல் திட்டங்களாக இருக்கும் நேரத்தில் நாம், மற்ற நமது திட்டங்கள் விஷயமாய் பிரசாரத் திலும், மாநாடு கூட்டுவதிலும் லட்சியமாக இருக்க வேண்டியதுடன், கிளர்ச்சிக்காரர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடாது என்பது எனது கருத்து.
நமது இயக்க தோழர்கள் இன்று எந்தக் கிளர்ச்சிக்கும் தயாராயிருக்கிறார்கள் எனபதும், கிளர்ச்சி துவக்காத காரணத்தாலேயே என் மீது பலருக்கு சலிப்பு என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் நமக்கு, அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதும், ஆட்சியின் சோஷ்யலிச திட்ட நடப்புக்கு எதிராக ஏற்படும் சமுதாய விரோதிகளின் கிளர்ச்சிகளையும், தொல்லைகளையும் முறியடிப்பதும் தான் இன்று முக்கியமான காரியமாக இருக்கவேண்டும். காங்கிரசுக்கு நம்மால் கூடியவரை பலம் ஏற்படும்படி செய்ய வேண்டும்.
தமிழர்களாகிய நமக்கு பெரிதும் அவரவர் சுயநலம் தான் முக்கியமே தவிர இனநலம் அலட்சியமாய்க் கருதக் கூடியதாக இருந்து வருகிறது. ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், தமிழன் என்ற உரிமையால் பதவிக்கு வந்து ஓட்டு கொடுக்கும் தமிழர்களில் 100-க்கு 90 பேர் அரசாங்க எதிரிகளாகவும், எதிரிகளின் கையாட்களாகவும் இருக்கிறார்கள். இன்று அரசாங்கத்துக்கு தமிழர்களில் படித்தவன் ஆதரவும் இல்லை. பணக்காரன் ஆதரவும் இல்லை. பதவி பெற்று ஓய்வெடுத்தவர்கள் ஆதரவுமில்லை. இது மாத்திர மல்லாமல் அரசாங்க பெரும்பதவி, சிறு பதவியில் இருப்பவர்கள் ஆதரவும் இல்லை. நாம் அப்படிப்பட்ட பிறவியாளர்களாக ஆகிவிட்டோம்.
ஆனதனால் நம் தலையில் விழுந்திருக்கும் பொறுப்பு மகத்தானது. இன்னும் சொல்ல வேண்டுமானால் அரசாங்கம் நம்மை ஒரு நல்ல அளவுக்கு நம்பித்தான் இவ்வளவு தீவிர திட்டத்தில் இறங்கி இருப்பதாக உணருகிறேன். இப்போது நாம் மேற்சொன்னபடி நிபந்தனை அற்ற ஆதரவாளர்களாக இல்லையானால் நாமும் மேற்கண்ட தமிழர் விரோதிகள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆகி விடுவோம்.
இன்று தமிழர் சமுதாயத்திற்கு மாத்திர மல்லாமல், ஏழை எளியவர்கள் சமுதாயத்திற்கும் இரட்சகர் என்கின்ற முறையில் காமராஜர் இருந்து வருகிறார். அவர் இல்லாவிட்டால் உள்ளது ஒன்றுமே இல்லை. இருக்கவேண்டியது ஒன்றுமே இல்லை எனபது மாத்திரமல்லாமல் எல்லாக் கேடுகளும் நம்மைச் சுற்றிக்கொண்டு இருக்கும்.
எனவே காமராஜரை உற்சாகப்படுத்தும் அளவுக்கு நமது ஆதரிப்பு ஆட்சிக்கும், காங்கிரசுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். இன்றியமையாத அவசியமாகும்.
இதுவரை நாம் ஒன்றும் செய்யவில்லை என்று கருதிவிடாதீர்கள். அரசியல் ரீதியில் இன்று காங்கிரசுக்கு, காமராஜருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது, நமது இயக்கம் தான். பார்ப்பான் குள்ளநரி ஆகிவிட்டான். முஸ்லீம்லீக் இன்று செல்லாக்காசு ஆகிவிட்டது. கண்ணீர்த்துளி நாட்டுக்கு நியூசென்சாகி விட்டது. இது யாரால் ? இதற்கு காங்கிரஸ் என்ன பாடுபட்டது ? ஆதலால் நாம் ஒன்றும் செய்யவில்லை என்று கருதி விடக்கூடாது.
ஆகவே நாம் ஒன்றும் செய்யவில்லை என்றோ, நமக்கு திட்டமில்லை என்றோ, கருதாமல் சலிப்படையாமல் நமது தோழர்கள் கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய ஒழிப்புக் காரியங்களைத் திட்டமாகக் கொண்டு பிரசாரம் செய்வது, மாநாடு கூட்டுவது ஆகிய காரியங்களில் ஈடுபட்டு தீவிரமாகக் காரியங்கள் செய்ய வேண்டிக்கொள்ளுகிறேன்.
கழக ஸ்தாபனங்கள், மாநாடுகள் கூட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களை அவர்கள் கலந்து கொள்ள ஆசைப்படும் அளவுக்கு அழைக்கலாம். நாமும் அவர்கள் விரும்பும் அளவுக்கு கலந்து கொள்ளலாம். நம் தனிமையை எப்போதும் மறந்துவிடாமல் தொண்டாற்றலாம்.
இது தான் எனது 86-ஆம் ஆண்டு வேண்டுகோள் செய்தியாகும்.
(‘விடுதலை’ - பெரியார் பிறந்த நாள் மலர்- 17-9-1964)