சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 20 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக மீனவர்கள் மீது முதன் முதலாக 13.8.1983 ஆம் ஆண்டு சிங்கள கடற்படை தொடங்கிய துப்பாக்கிச் சூடு, 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து இதுநாள் வரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகும் இதுவரை ஒருமுறை கூட சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்க முன்வராத இந்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பிரதமர் மன்மோகன்சிங், சிங்களக் கடற்பகுதியில்தான் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்று கூறி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
சிங்களக் கடற்படையால் இதுவரை 1,000 படகுகளுக்கு மேல் சேதமடைந்து பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும் உபகரணங்களும் அழிந்துள்ள நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும்- பிறகு இந்திய தமிழக அரசின் தலையீட்டில் விடுதலை செய்வதும் தொடர் கதையாகி தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் நிலை குலைந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உரிமையை மீட்டுத் தரும் உடனடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
பார்ப்பன இந்துத்துவா சக்திகளுக்கு மாற்றாக இருக்கும் ஒரே காரணத்தால் மதச்சார்பற்ற தமிழர்களால் ஆதரிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தமிழக மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான சிங்கள கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்கி துணை போவதை தமிழகத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியோ, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு இந்திய அரசின் அத்தகைய தமிழினத் துரோகத்துக்கு பச்சைக்கொடி காட்டி வருவதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பதிலடி தரத் தயாராக வேண்டும் என்று தமிழர்களுக்கு இக்கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக- சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூடு தொடங்கி எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கண்டித்து-தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத இந்திய அரசைக் கண்டித்து சிங்களக் கடற்படைத் துப்பாக்கிகள் சுடத் தொடங்கிய அதே ஓகஸ்ட் 13 ஆம் திகதி, தமிழகம் முழுவதும் தமிழர்கள் வீடுகளில்- பொது இடங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றி கண்டனக்கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தி இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தும் கண்டன நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன், தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு. பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கோ.சு.மணி ஆகியோர் உரையாற்றினார். இரா. உமாபதி நன்றி கூறினார்.
தோழர் டி.ராசாவுக்கு பாராட்டு!
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்தும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிராக கடலுக்கடியில் கண்ணிவெடிகளை புதைத்தும் வரும் சிங்கள அரசைக் கண்டித்தும் அத்தகைய அரசுக்கு இந்தியா ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கலாமா? என்ற நியாயமான கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பி - தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.ராசாவை கோடானுகோடி தமிழர்கள் சார்பில் பாராட்டி இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.