தமிழ்நாடு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் 105 படகுகளை இலங்கை அரசு ஏலமிடப் போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இப்படகுகள் பாரம்பரியப் பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த மீனவர்களிடம் இருந்து கடந்த 2015க்கும் 2019க்கும் இடைப்பட்டக் காலத்தில் கைப்பற்றப்பட்டவை என்பது குறிப்பிடதக்கது.
மீனவர்களின் வாழ்வாதாரமே படகுகள்தான் என்று இருக்கும் நிலையில், அவர்களின் படகுகளை ஏலம் விடுவது என்பதை, அவர்களின் வாழ்வை முழுமையாக முடக்கும் செயலாகவே பார்க்க வேண்டும்.
வழக்கமாக மீனவர்களைக் கைது செய்வது என்று இருந்த நிலையில், படகுகளைப் பறிமுதல் செய்வதற்குத் தான்தான் அறிவுறுத்தியதாகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணியசாமி பேட்டி கொடுத்தது நினைவு கூரத்தக்கது. இங்குதான் தமிழ்நாட்டு மீனவர்களின் சிக்கல் அடுத்த கட்டத்திற்குப் போனது. மீனவர்கள் கைது மட்டும் அல்லாமல், படகுகளைத் திருப்பித் தராமல் பறிமுதல் செய்யத் தொடங்கியது இலங்கை அரசு. அதன்பின் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகே திருப்பிக் கொடுத்தது.
தற்போது நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது. ஆம், தற்போது தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டப் படகுகளை, தங்கள் நாட்டுப் படகுகளைப் போல இலங்கை அரசு ஏலமிட நாள் குறித்து இருக்கின்றது. பிப்ரவரி 7ஆம் நாள் தொடங்கி ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8ஆம் நாள் யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகள், அதே நாளில் காங்கேசன் துறையில் 5 படகுகள், பிப்ரவரி 9ஆம் நாள் கிராஞ்சியில் 24 படகுகள், பிப்ரவரி 10ஆம் நாள் தலைமன்னாரில் 9 படகுகள், பிப்ரவரி 11ஆம் நாள் கற்பிட்டியில் 2 படகுகள் என ஏலம் விட நாள்கள் குறிக்கப்பட்டுள்ளன.
வெளியுறவுத் துறையைக் கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு, ஒவ்வொரு முறையும் மாநில அரசு கடிதம் எழுதும் வரை மௌனமாகவே இருப்பது வாடிக்கையான கதை.
இம்முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அதில் மீன்பிடித்தல் குறித்த கூட்டுப் பணிக்குழுப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் இந்த நடவடிக்கை, மீனவர்களிடம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் தளபதி அவர்கள், இலங்கையில் வெவ்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள 125 படகுகளை மீட்க, இலங்கைக்குத் தொழில்நுட்பக் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று ஒன்றியத்தின் வெளியுறவுத் துறையைக் கேட்டுக்கொண்டு, செல்லவேண்டிய அதிகாரிகள் மற்றும் கொள்முதலாளர்கள் தகவல்களை ஒன்றியத்திடம் தெரிவித்து, படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இலங்கை அரசு படகுகளை ஏலம் விடுவதற்கு விளம்பரம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களின் சட்ட நடைமுறைவழியே விடுவிக்கப்பட்டுள்ளப் படகுகள் தமிழ்நாடு மீனவர்களுக்கே சொந்தமானவை. இலங்கை அரசுக்கு ஏலம் விட உரிமை இல்லை. எனவே உயர் அதிகாரிகள் மூலம் இலங்கை அரசுக்கு இந்திய அரசு மறுப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் முதலமைச்சர்.
2018ஆம் ஆண்டுக்குப் பிறகு கைப்பற்றிய 75 படகுகள் மற்றும் மீன்பிடி பொருட்களை மீட்டுத் தருவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி உள்ளார்.
ஒரு மாநில அரசு செய்ய வேண்டிய வேலைகளுக்கு அதிகமாகவே தமிழ்நாடு மாநில அரசு செய்து வருவதை, இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் இருந்தே அறியலாம். அதுபோல விரைந்து செயல்பட வேண்டிய இடத்தில் ஒன்றிய அரசு இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இலங்கை அரசு உணவுப் பொருள் வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நிலையில், பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்து இருப்பதை அங்கே பார்க்க முடிகின்றது. எரிபொருள்களின் விலையும் அது போலவே இருக்கின்றது. இலங்கை அரசு கிட்டதட்ட திவால் ஆகும் நிலையில், இந்திய ஒன்றிய அரசு 18,090 கோடி ரூபாய் கடன் உதவியை அறிவித்துள்ளது. இந்நிலையில் கூட இலங்கை, இந்தியர்களை குறிப்பாக தமிழ்நாட்டினரை எவ்வாறு பார்க்கின்றது என்பது குறித்த அக்கறையில்லாமல் ஒன்றிய அரசு இருப்பது வேதனை அளிக்கின்றது. இந்திய ஒன்றிய அரசு உதவி செய்யும் நிலையில் மீனவர்கள் பிரச்சனைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வர சில நிபந்தனைகள விதிக்கலாம். வெளியுறவுத் துறை அதிகாரிகள் மூலம் பேசிப் பெற்றுத் தர வேண்டிய நியாயமான உரிமைகள் குறித்து கூட கவனம் செலுத்தாமல் இருக்கிறது ஒன்றிய அரசு. இலங்கை நம் கைகளை எதிர்பார்த்து இருக்கும் வேளையில் கூட, இந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்பது கவனத்திற்கு உரியது. ஒன்றிய வெளியுறவுத் துறை, மீன்வளத்துறை இரண்டும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து, உரிய இடத்தில் உரிய காலத்தில் மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
இராமேசுவரம் மீனவர்கள் தங்களின் குடியுரிமைக்கான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் திருப்பிக் கொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தங்களின் சொல்லொணாத் துன்பத்தை மக்கள் இவ்வாறு வெளிப்படுத்தி விட்டனர்.
இந்திய ஒன்றியம் தம் எல்லைக்கு உட்பட்ட மக்களின் சுயமரியாதையு டன் கூடிய வாழ்வையும், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியின் உரிமையையும் உறுதி செய்வது, அதன் கடமை ஆகும்.