“நாட்டில் நிலவும் சிக்கல்களைப் பார்த்து, அதை மாற்றப் பெரியார் போராடினார்; அது போல் நாம் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்று மே 19 இல் தஞ்சையில் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில் குறிப்பிட்டார். உரை விவரம்:

சாதியைப் பாதுகாக்கிற அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்கிற போராட்டத்தை அறிவித்த இந்த தஞ்சை மண்ணில், அதை எரித்த வீரர்களை அழைத்து வந்து 50 ஆண்டுகள் கழித்து, மகிழ்ச்சியாக கொண்டாடுகிற பொன்விழா அல்ல. இந்த மாநாடு, அந்தக் கொடுமை, அவர்கள் ஒழிக்க நினைத்த கொடுமை இன்னும் தொடர்கிறதே என்ற ஆதங்கத்தோடு எடுத்த அந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்களுக்கு வணக்கங்களை கூறிக் கொள்கிறேன்.

பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன, பேசப்பட்டிருக்கின்றன. சாதி ஒழிப்புப் போராளிகள் பல கருத்துகளை சொன்னார்கள். காலை அரங்கில் அவர்கள் தங்களுடைய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கின்ற அந்த வாய்ப்பு ஒரு சில பேருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது.

அவர்கள் சொன்னார்கள் - எங்களுக்கு இப்பேர்பட்ட வாய்ப்புக் கிடைக்கும், இப்படி பாராட்டு கிடைக்கும் என்று கருதி, இந்தப் போராட்டத்திற்கு வரவில்லை. ஒரு மனிதனுடைய கடமை அது. மனிதனாக வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுடைய கடமையை நாங்கள் ஆற்றினோம். அதற்காக நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. இன்றும் இப்பேர்ப்பட்ட போராட்டங்கள் எடுக்கப்படுமேயானால், நாங்கள் கலந்து கொள்ள இப்போதும் அணியமாக இருக்கிறோம் என்றெல்லாம் அவர்கள் பேசிய உரை நம்முடைய தோழர்களுக்கு ஒரு புத்தெழுச்சியை உண்டாக்கியிருக்கிறது.

பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் மிகப் பெரும் தலைவர். அவர் பெரும் ஆளுமை கொண்டவர். அவர் நினைத்தால் ஒரு அறிக்கையின் வழியாக, நாம் பெரும் போராட்டத்தின் வழியாக ஏற்படுத்துகிற எழுச்சியை அல்லது அரசுக்குக் கொடுக்கின்ற அழுத்தத்தை பெரியார் ஒரு அறிக்கையின் வழியாக கொடுக்க முடியும். ஆனால், நம்மால் அப்படி செய்ய முடியாது. நாம் பெரியார் அல்ல.

பெரியாரை பார்த்தோம், படித்தோம், அறிந்தோம், உணர்ந்தோம், உள் வாங்கிக் கொண்டோம். அவர் இலட்சியங்களை அடைய வேண்டும் என கருதுகின்றோம். ஒருவேளை பெரியார்கைக் கொண்டிருந்த அந்த வழிகளை விட்டு விலகிக் கூட சில செயல்கள் நடந்திருக்கின்றன. அவர்களையும் நாம் பாராட்டினோம். காரணம் அவர்கள் உள்ளத்தில் இருந்த உணர்வுகள் நியாயமானவை. செயல்கள் சட்டப்படி தவறாக இருக்கலாம்,

ஆனால் நியாயமானவை. அந்த உணர்ச்சியோடு பார்க்கிற நாம், பெரியாருடைய எல்லா போராட்டங்களும், எல்லா பேச்சுகளும் அவை அனைத்தும் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சிந்திக்கப்பட்டவை, பேசப்பட்டவை, எழுதப்பட்டவை. இந்த சமுதாயத்தில் பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. அவர்களெல்லாம், தமிழனுக்கு உரிமை, ஆட்சி உரிமை எல்லாம் பேசுகிறார்கள். முதலில் மனிதனா கட்டும் அவன். அவர்களை மனிதனாக்க பெரியார் இயக்கம் எடுத்தார். மனிதனான பின்னால் அவனுக்கு உரிமைகள் என்ற உணர்வு வரும். அடிப்படையாக சமத்துவம் உள்ள மனிதனாக ஆக்குவதற்கான சிந்தனைகளை முன் மொழிந்திருக்கிறார். நாம் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலத்தில் எல்லாம் தேர்தலே நடக்காதிருந்தது. இப்போது நடத்திக் காட்டி விட்டார்கள். இப்போது தேர்தல் நடந்தது ஒரு முன்னேற்றம். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இன்னும் அலுவலகத்திற்குள் போகவில்லை. வெளியே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வெளியேக்கூட நாற்காலி போட்டு அல்ல, கீழே உட்கார வைத்திருக்கிறார்கள். அவர்கள் எடுத்துவிட்ட தீர்மானங்களுக்கு கையெழுத்து போடுவது மட்டும்தான்.

போட்டால் தான் செல்லும் என்பதால், சிறு மாற்றம். சிறு முன்னேற்றம். ஆனால், இன்னும் அந்த உள்ளாட்சிகளில் கிராமங்களில் என்ன நடக்கிறது? ஒரு பக்கம் நம் அறிஞர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டார் வழிபாடு பார்ப்பான் எதிர்ப்பை உள்ளடக்கியது. அது தமிழர் பண்பாடு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அதில் கருத்து வேறுபாடு உண்டு.

தீண்டாமையை இந்த சிறு தெய்வங்கள் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவன் அந்தக் கோயில்களுக்குள்ளே நுழைய முடியாது. அங்கு ஓடுகிற தேரின் வடத்தை இவன் தொட முடியாது. பெருந் தெய்வங்களையெல்லாம்கூட தொட்டு விடலாம். கண்டமங்கலத்தில் இன்னும் தேருக்கான போராட்டம் நீதிமன்றம் ஆணையிட்டாலும் நடந்து கொண்டு இருக்கின்றது.

ஒரு பக்கம் காவேரி நீருக்காக, முல்லை பெரியாறுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் வாகரை என்ற ஊராட்சியின் அந்த தலைவர் தன்னுடைய கிராமத்திற்கு தண்ணீரைக் கொண்டு போகிறார், அரசு திட்டத்தின் வழியாக கொண்டு போகிறார்.

அதை அனுமதிக்க மாட்டேன் என்கிறான். காவேரியையும், முல்லை பெரியாறு, பாலாறையும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பேச வேண்டியதுதான். அதற்கு முன்னால் நம்மோடு இருக்கின்ற சக மனிதன் அவன் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும்கூட தன்னுடைய பகுதிக்கு அரசு திட்டத்தின் வழியாக, சட்டப்படியாக நீர் கொண்டு செல்வதற்குக்கூட தடுக்கப்படுகிற நிலை இன்னும் இருக்கின்றது.

நாம் உள்ளூர் சிக்கல்களைப் பார்க்கிறோம். இங்கிருந்து தொடங்குவோம். பெரியார் வழியில் நாராயண குரு இருந்தார். அவர் சில அமைப்புகளை, இயக்கங்களை, திட்டங்களை, செய்திகளைச் சொல்லி ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னால் அய்யன்காளி வந்தார். அவர் பார்த்தார் நாராயணகுரு அமைதியாக போதித்தார். அய்யன்காளி, எவனாவது டீ கடையிலே, கள்ளுக்கடையிலே தீண்டத்தகாதவன் என புறக்கணித்தால் உதைத்தார், ஆட்களைக் கொண்டு போய் அடித்தார். மாட்டு வண்டியிலே போகக் கூடாது என்றால் அடித்தார். இதைத்தான் அய்யன்காளி செய்தார்.

இங்கே இந்து மதக் கொடுமை தாங்காமல் கிருத்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார்கள் சில பேர். அமெரிக்கா போன்ற நாடுகளிலே கிருத்துவர்களாக இருந்த நீக்ரோக்களில் கொஞ்சம் பேர் இசுலாமியர்கள் ஆனார்கள். அவர்கள் கேட்டார்கள், கிருத்துவனைப் பார்த்து, என் பிள்ளைகளை, குழந்தைகளை, மனைவியை, பெண்களை நீ நிறவெறியில் கொன்று போடுகிறாய், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசு சொன்னார் என்று சொல்கிறீர்கள், ஆனால் எங்கள் பிள்ளைகளைக் கொலை செய்கிறாய். அதனால் நாங்கள் இசுலாமியர்களாகிறோம் என்றார்கள்.

பெரியார் சொன்னார், “தேவைப்படுகின்ற எந்த வழியிலாவது நாம் மனிதர்களாக வேண்டும்” என்றார். பெரியார் தத்துவம் படித்தெல்லாம் பொது வாழ்க்கைக்கு வரவில்லை. நாட்டில் நிலவி இருக்கிற சிக்கல்களைப் பார்த்து அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்.

பெரிய தத்துவங்களை பேசிக் கொண்டிருக்க நமக்குத் தெரியவில்லை. அல்லது நமது எதிரிக்கு நம்முடைய தத்துவங்கள் புரியாமல் இருக்கிறது. நாம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டாக வேண்டும். சட்டப்படி தீண்டாமை கொடுமையானது. குற்றமானது என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் எல்லாம் அதை வெளியிட்டார்கள். பெரிய தலைவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கிறது. அதை எப்படித்தான் மாற்றுவது, எப்படித்தான் தீண்டாமையை பின்பற்றுபவர்களை சிந்திக்க வைப்பது? இவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தாக வேண்டும்.

பெரியார் கூட இந்த போராட்டத்தை அறிவித்தபோது பெரியார் 3 ஆம் தேதி அறிவித்தார் என்றால், 11 ஆம் தேதி அரசு அவசரமாக சட்டம் இயற்றுகிறது. எட்டு நாளில் ஒரு மசோதா உருவாக்கி, நிறை வேற்றி தேசிய சின்னங்களை, சட்டத்தை எரிப்பது, காந்தி படத்தை எரிப்பது என்பதெல்லாம் குற்றம் என அவசர அவசரமாக அரசு எட்டு நாளில் சட்டம் இயற்றிய பின்னால் தான் பெரியார் தொண்டர்கள் சட்டத்தை எரித்தார்கள். மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என்று சட்டம் வந்தது தெரிந்த பிறகுதான், இவர்கள் சட்டத்தை எரித்தார்கள்.

எனவே, சில போராட்டங்களை எடுக்கிறபோது, நாம் இந்த போராட்டங்களை நடத்துவதன் வழியாக உடனே மாறிவிடுவார்கள் என்றில்லை. இப்படிப் பட்ட போராட்டங்களையும் எடுப்பார்கள் என்று நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிறிய முயற்சியாக இந்த சாதி ஒழிப்பு போராட்ட வீரர்களை பாராட்டினோம்.

அவர்களை பாராட்டுவதென்பது, அவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். தோழர் தியாகு பேசினார், தஞ்சையில் மாநாடு என அறிவித்த உடன் எனக்கு தியாகு அவர்களின் நினைவு வந்தது. அதற்கு முன்பு பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது 1979 இல் ஒன்பதாயிரம் வருமான வரம்பாணையை எதிர்த்து பிரச்சாரம் பல முனைகளில் நடந்தது. நானும் கன்னியாகுமரியில் இருந்து நடந்து வந்து 30 நாள் பிரச்சாரம் செய்து, தஞ்சையில் முடித்தோம். அந்த மாநாடு முடிந்தபோது தியாகுவை சந்தித்தேன்.

அதன் பிறகு, நீண்ட தேடலுக்குப் பின்னால் மூன்று நாட்களுக்கு முன்னால் தான் அவருடைய முகவரியை அறிய முடிந்தது. சென்னைத் தோழர் தபசி. குமரன் அவர்கள் நேரடியாக அவரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்து இம்மாநாட்டிற்கு வரவேண்டும், எங்கள் இளைஞர்கள் முன்னால் உங்கள் கருத்துகளை வைக்க வேண்டும், இளைஞர்களுக்கு எழுச்சியைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெரியார் கூட தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசுகிறபோது சொல்கிறார்: “எனக்கு கத்தியைக் கொடுத்தார்கள், எதற்கு கொடுத்தார்கள், என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா, அல்லது முத்தமிடவா, விற்றுத் தின்னவா? எதற்குக் கொடுத்தார்கள், காந்தி சிலையை உடைக்கிறேன் என்று சொன்னால், ஊர் ஊராக சம்மட்டிக் கொடுக்கிறார்கள். எதற்கு? இந்தக் கொள்கை சரியானது என்று ஆதரவுக் காட்டுவதின் அடையாளம்’ என்றார்.

அப்படிப்பட்ட நமது முன்னோர்கள் வந்து பல செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இந்த மாநாட்டில் நாம் திட்ட மிட்டுள்ள செயல் திட்டத்தை விளக்கும் தீர்மானத்தை உங்கள் முன்னால் முன் மொழிகிறேன். (தீர்மானத்தைப் படித்தார்; ஏற்கனவே தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது) முற்று முடிவாக இதுவே சாதியை ஒழித்து விடாது என்றாலும்கூட சாதியக் கொடுமைகளுக்கு எதிரான இந்த செயல்பாடுகள் தொடர வேண்டும். இதைப் பற்றியெல்லாம் நாம் பரப்புரை செய்து, மக்களிடம் விளக்க வேண்டும். அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

அம்பேத்கரைப் பற்றியெல்லாம்கூட சொல்லுவார்கள். அம்பேத்கர் சொன்னார், “நம்மை நினைத்தால் நாக்கில் தீயை வைப்பதைப் போல் நடுக்கம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் கொஞ்சமாவது மாற்றிக் கொள்வான். பலியிடப்படுவது ஆடுகளைத்தான்; சிங்கங்களை அல்ல” என்று சொன்னார்.

சாதிச் சங்கங்களைப் போலத்தான் இப்பொழுது எல்லா அமைப்புகளும் நடக்கிறது. அவர்களுக்கு தலைவர்களாகவும், தேர்தலில் நிற்கவும் பதவியில் பங்கு பெறவும் தான் முன்னுரிமை தரப்படுகிறது. அந்தக் கண்ணோட்டத்தில் பெரியார் இயக்கம் இந்த போராட்டத்தை நடத்தவில்லை.

உண்மையில் சாதியத்தின் மீதான இந்த சிறு தாக்குதல் வழியாக சாதியவாதிகள் அதைப் பற்றி கருதவில்லை என்றாலும் அரசாவது கொஞ்சம் எண்ணிப் பார்க்குமா? என்ற எண்ணத்தோடுதான் போராட்டத்தை அறிவித்து இருக்கிறோம். தோழர்கள் முனைப்போடு வாய்ப்புள்ள எல்லா பகுதிகளிலும் இந்த பட்டியல் திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும். போராட்டத்தில் அனைவரும் முனைப்போடு கலந்து கொள்ள வேண்டும்.

நம்மிடத்திலே பணம் இல்லை என்றாலும், பெரியாரியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது. தோழர்களுக்கு உணர்வு இருக்கின்றது. உற்சாகம் இருக்கின்றது. அதைப் பெரியாரியலை நடைமுறைப்படுத்த நீங்கள் பயன்படுத்தவேண்டும். இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தரவேண்டும் எனகேட்டு இம்மாநாட்டிற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.

Pin It