இந்திய அரசமைப்புச்சட்டத்தின் தலைமைச் சிற்பி, புரட்சியாளர் அம்பேத்கரின் முழு உருவச் சிலை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது. இந்திய நீதிமன்ற வளாகங்களில் - உச்ச நீதிமன்றம் உட்பட - இத்தகையதொரு முயற்சி, இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, மேற்கொள்ளப்படவில்லை என்பது வியப்புக்குரிய செய்தி அல்ல. தமிழகத்திலேயே அதிக அளவிலான உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட அமைப்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், இந்த முயற்சியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தொடர்ந்து மேற்கொண்டது. அதற்கென அச்சங்கம் தீர்மானங்களையும் இயற்றி தலைமை நீதிபதியிடம் அளித்தது. ஆனால், அம்முயற்சிக்கு தொடக்கத்திலிருந்தே பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டால், அதே போல் மற்ற தலைவர்களுக்கும் சிலை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழும் என்று கூறப்பட்டது.

kayarlanji_380இந்திய அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள நீதித்துறையின் ஓர் அங்கமான உயர் நீதிமன்றத்தில் மற்ற "தலைவர்களுக்கு' சிலை வைக்கப்பட எழுப்பப்படவிருக்கும் கோரிக்கையின் நியாயம் எந்த அளவு ஏற்புடையது என்பது, பரிசீலனையில் அடிபட்டுப் போகும் என்ற பதிலுக்கு மறுப்பேதும் வரவில்லை. அம்பேத்கர் சிலைக்கு பாதுகாப்பு பிரச்சினை வரும் என்றும் கூறி "முற்போக்காளர்கள்' முயற்சியை முடக்கப் பார்த்தனர். இதில் நீதித் துறையிலிருப்பவர்களும் விதிவிலக்கல்ல. இத்தனையையும் கடந்து சிலை நிறுவப்பட்டு விட்டது. சிலை நிறுவப்பட்ட பிறகாவது பிரச்சினை முடிந்ததா என்றால், அது எந்தெந்த காரணங்களினால் தேவையற்றது என்பதைப் பட்டியலிட்டு, தங்களது தீண்டாமை மனப்பாங்கு வெளியில் தெரிந்துவிடாத வகையில் பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டன, தரப்பட்டு வருகின்றன.

"ஒரு மனிதன் - ஒரு மதிப்பு' (One Man – One Value) என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தை, தலைமையேற்று வடித்த சமூகப் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை நிறுவுதல் குறித்துதான் - இத்தனை விமர்சனங்களும், வியாக்கியானங்களும். ஆனால், எவரொருவரின் கோரிக்கையு மின்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவத்திற்கு நேர்மாறாக "சாதிக்கு ஒரு நீதி' வகுத்த மநுவிற்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திர மாநில மூத்த வழக்குரைஞர் கே.ஜி. கண்ணபிரான் உள்ளிட்ட ஒரு சில மனித உரிமை ஆர்வலர்கள் தவிர, வேறொருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இன்றைய அளவிலும்கூட, இந்திய அரசமைப்புச் சட்டப்படியும் அதன் அடிப்படையில் அமைந்த இன்னபிற சட்டங்களின் வழியாக நீதி வழங்குவதாகக் கருதப்படும் நீதிமன்றங்களில் - குறிப்பாக தமிழக நீதிமன்றங்களில் - அம்பேத்கரின் நிழற்படம் இடம்பெறாததும் இத்தகையதொரு வெளிப்பாடே. இது தொடர்பாக, வழக்குரைஞர் பொ. ரத்தினத்தின் ஒருங்கிணைப்பில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உரிய வகையில் சமூக அக்கறை கொண்ட சென்னை மற்றும் மதுரை வழக்குரைஞர்கள் கையெழுத்திட்டு எழுத்துப்பூர்வமாக முறையீடு செய்யப்பட்டு, சற்றேறக்குறைய ஓராண்டு காலமாகியும் இன்னமும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989இல் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரும், அதனைச் செயல்படுத்த பாதிக்கப்பட்டோர் பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது. காவல் துறை தன் பங்கிற்கு ஒரு வன்கொடுமை வழக்கை நீர்த்துப் போகவும் வீணடிக்கவும் எடுக்கும் முயற்சிகளுக்கு, சற்றும் குறையாத அளவிலேயே நீதித்துறையின் பங்களிப்பும் உள்ளது. வன்கொடுமை நிகழ்வுதான் என்று உறுதியாகத் தெரியும் வழக்குகளிலும்கூட, நீதித்துறை வன்கொடுமைச் சட்டத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது தொடர் நிகழ்வாகி வருகிறது.

மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை, திண்ணியத்தில் - தலித்துகளை மலம் தின்னச் செய்வித்தது, ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சென்னகரம்பட்டி அம்மாசி, வேலு படுகொலை வழக்கிலும்கூட, வன்கொடுமை சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அண்மையில் தீர்ப்பு வழங்கியிருப்பது - வன்கொடுமைச் சட்டத்தின் நோக்கத்தை திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாகும். இதற்கு நீதித்துறையும் துணை போவதாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக இதுவரை வழங்கியுள்ள தீர்ப்புகளைப் பார்க்கும்போது, இது மிகத் தெளிவாகப் புரியும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் மும்பை உயர் நீதிமன்றத்தின் கிளை, 2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த கயர்லாஞ்சி வன்கொடுமை நிகழ்வு தொடர்புடைய வழக்கில் 14.7.2010 அன்று தீர்ப்பு வழங்கி, மீண்டுமொரு முறை அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது. 131 பக்கங்களைக் கொண்ட இந்த நீண்ட தீர்ப்பு, நீதிபதிகள் திரு. ஏ.பி. லவண்டே மற்றும் திரு. ஆர்.சி. சவான் ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பையாலால் போட்மாங்கே அக்குடும்பத்தின் தலைவர். அவருடைய மனைவி சுரேகா, மகன்கள் சுதிர், ரோஷன் மற்றும் மகள் பிரியங்கா ஆகிய நால்வர்தான் அவர்கள். கயர்லாஞ்சியை ஒட்டியுள்ள தோலி என்ற கிராமத்தில் 29.9.2006 அன்று மாலை 6.30 மணியளவில் 40 பேர் கொண்ட கொலைவெறி கும்பல் கையில் கம்பு, சைக்கிள் செயின் போன்றவற்றுடன் பையாலாலின் வீட்டை முற்றுகையிட்டது. அதற்கு முன் 13.9.2006 அன்று காலை, பையாலாலின் குடும்ப நண்பர் சித்தார்த் என்ற காவலர் பையாலாலின் வீட்டிற்கு வந்திருந்தபோது, சித்தார்த்திடம் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்ரு (வழக்கில் 2-ஆம் குற்றம்சாட்டப்பட்டவர்) நிலுவை கூலி கேட்டு பிரச்சனை செய்தது, அன்றைய தினமே மாலையே சித்தார்த், கந்தரி என்ற இடத்திற்கு செல்லும் வழியில் கிராமவாசிகள் சிலரால் தாக்கப்பட்டதும், அதைக் கேள்வியுற்று சுரேகா மற்றும் பிரியங்கா சித்தார்த்தை அவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததுடன், இரண்டு நாட்கள் கழித்து அச்சம்பவம் தொடர்பாக அந்தால்கன் காவல் நிலையத்தில் புகார் செய்து, சுரேகா அடையாளம் காட்டியதன்பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும், அதன் காரணமாகவே மேற்படி 40 பேர் கொண்ட கும்பல் பையாலாலின் வீட்டை முற்றுகையிட்டதாக வழக்குரைக்கப்பட்டுள்ளது.

பையாலாலின் வீட்டை அந்த கும்பல் சுற்றி வளைத்ததும் அந்த கும்பலில் இருந்தவர்கள் அவர்களை நோக்கி, பையாலாலின் சாதியைக் குறித்து இழிவாகத் திட்டியுள்ளனர். இச்சூழலில் மிரண்டுபோன பையாலால் வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டிருக்கிறார். வீட்டைவிட்டு வெளியே வந்த சுரேகா, தங்களைத் தாக்க வந்தவர்களை விரட்டும் பொருட்டு மாட்டுத் தொழுவத்தை தீயிட்டு கொளுத்தியிருக்கிறார். தப்பிக்க முயன்ற சுரேகாவை துரத்திப் பிடித்த அக்கும்பல், கையிலிருந்த ஆயுதங்களால் அவரை தாக்கி கொலை செய்திருக்கிறது. தப்பியோட முயன்ற சுதீரும் இதே வகையில் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சுதீரின் உடலை இறந்துபோன சுரேகாவின் உடல் இருந்த இடத்திற்கு இழுத்து வந்து போட்டிருக்கின்றனர். பையாலால் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைத் தேடியபோது, மாட்டுத் தொழுவத்தின் அருகே தென்பட்ட ரோஷனையும் கொடூரமாகத் தாக்கி கொன்றிருக்கிறது அந்தக் கும்பல். பிரியங்காவும் அதே போல் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு மாட்டு வண்டியை கொண்டு வந்து நான்கு உடல்களும் அதில் ஏற்றப்பட்டு அடுத்த கிராமத்திற்கு அருகே செல்லும் கால்வாயில் வீசப்பட்டிருக்கின்றன. பிரியங்காவின் உடல் கைப்பற்றப்பட்டபோது முழு நிர்வாண நிலையில் இருந்தது.

வீட்டைவிட்டு தப்பி ஓடிய பையாலால், துசலாவிலுள்ள சித்தார்த்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார். சித்தார்த், அந்தால்கன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். காவல் நிலையத்திற்கு சென்றபோதும் அச்சத்தின் காரணமாக, பையாலால் புகார் தராமல் திரும்பி விடுகிறார். பின்னர், மறுநாள் காலை பையாலால் தன் வீட்டிற்கு சென்று, தன் மனைவி மக்களைத் தேடியிருக்கிறார். பின்னரே அவர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். இதற்கிடையில், "பிரியங்கா' என கையில் பச்சை குத்திய உடலை கால்வாயிலிருந்து எடுத்ததாக காவல் நிலையத்திற்குத் தகவல் வரவே, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் உள்ளூர் காவல் துறை வழக்கை விசாரித்தபோது விசாரணை சரியான வகையில் நடத்தப்படாததால், பின்னர் மாநில அரசு உத்தரவின்படி மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவ்விசாரணையிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததால், மாநில அரசின் வேண்டுகோளின்படி நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்டது.

பின்னர் நடுவண் புலனாய்வுத் துறை 11 நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147 (சட்டவிரோதமாகக் கூடுதல்), 148 (கலகம் விளைவித்தல்), 149 (பொது உட்கருத்துடன் குற்றத்தில் பங்கேற்றல்), 120பி (சதித் திட்டமிடல்), 302 (கொலை) மற்றும் பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989 இன் பிரிவுகள் 3(1)(X) (பொதுப் பார்வைக்குட்பட்ட இடத்தில் பட்டியல் சாதியினரையோ/பட்டியல் பழங்குடியினரையோ மனஉளைச்சல் ஏற்படுத்தும் எண்ணத்துடன் இழிவுபடுத்துதல் (அ) மிரட்டுதல்), 3(1)(Xi) (பட்டியல் சாதியை/பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த பெண்ணின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் செயல்), 3(2)(V) (பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த நபருக்கு எதிராகவோ (அ) அவரது சொத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அந்த நபர் பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப்படி, பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கக் கூடிய எந்த ஒரு குற்றத்தையும் புரிதல்) மற்றும் 3(2)(Vi) (பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினருக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றத்தை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

pune_380விசாரணை நீதிமன்றத்தில், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் பல்வேறு ஆவணங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சாட்சிகள் எவரும் விசாரிக்கப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வனையப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அனைத்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும் விடுவித்த விசாரணை நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படியான குற்றச்சாட்டுகள் 3 நபர்களுக்கு எதிராக நிரூபிக்கப்படவில்லை எனக் கருதி அவர்களை விடுவித்தும், மீதமுள்ள 8 நபர்களை குற்றவாளிகள் எனத் தீர்ப்புரைத்ததுடன், அதில் 6 நபர்களுக்கு மரண தண்டனையும், 2 நபர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்தது.

மரண தண்டனை என்பதால், அது உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நிறைவேற்ற முடியும் என்பதால், அதற்காக மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளைக்கு இவ்வழக்கு அனுப்பப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, தண்டனை பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். நடுவண் புலானய்வுத் துறையும், 2 நபர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தண்டனையை உயர்த்தக் கோரியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியான குற்றச்சாட்டுகளிலிருந்து தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்தும் இரண்டு மேல்முறையீடுகள் தாக்கல் செய்திருந்தது. அவற்றின் மீதான தீர்ப்புதான் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உறுதி செய்ய மறுக்கப்பட்டதுடன், ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்து செய்தும், இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது சரியே எனக்கூறியும், நடுவண் புலனாய்வுத் துறையின் மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்துள்ளது. மரண தண்டனைக்கு மாற்றாக, தண்டிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 25 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்புரைத்துள்ளது. மேல்முறையீடுகளில் குற்றவாளிகள் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், கீழ்க்கண்ட வாதங்களை மட்டுமே உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது :

(அ) வழக்கின் முதல் தகவல் அறிக்கை, மிக காலதாமதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது (ஆ) சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளின் சாட்சியம் நம்பத்தகுந்தவையாக இல்லை. அவற்றில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன (இ) மருத்துவ சாட்சியம் சம்பவ சாட்சிகளின் சாட்சியங்களுக்கு முரணாக உள்ளது. (ஈ) குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்ததாகச் சொல்லப்படும் சட்டப்பூர்வமற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நம்பத்தக்க வகையில் இல்லை (உ) இவ்வழக்கு, மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியதொரு அரிதினும் அரிதான வழக்கு அல்ல.

மேற்கண்ட வாதங்களை ஆய்ந்துள்ள உயர் நீதிமன்றம், வழக்கின் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கும்போது, 3 கண்ணுற்ற சாட்சிகளின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவையாகவும் இயல்புக்கு மாறுபடாமலும் அமைந்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் விரிவாகவும், ஏற்கும்படியும் அமைந்துள்ளது எனவும், மருத்துவ சாட்சியம் விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது எனவும் கூறி, வழக்கு சம்பவத்தில்தான் இறந்துபோன 4 நபர்களின் இறப்பும் நிகழ்ந்துள்ளது என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள்தான் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தியது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் அளித்ததாகக் கூறப்படும் சட்டப்பூர்வமற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் - நம்பத்தக்க வகையில் அமையவில்லை என்றும், இவ்வழக்கு மரண தண்டனை வழங்க வேண்டியதொரு "அரிதினும் அரிதான வழக்கு' என்று கூற முடியாது என்றும் தீர்ப்புரைத்துள்ளது. அதற்கு மாற்றாக, 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.

40 பேர் கொண்ட ஆயுதமேந்திய ஒரு கும்பல், ஆயுதம் ஏதுமற்ற 4 அப்பாவி தலித்துகளை ஓட ஓட விரட்டி, காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களால் தாக்கியதில், ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த கிராமத்திலுள்ள 150 குடும்பங்களில் 3 மட்டுமே தலித் குடும்பங்கள்; அதில் ஒன்று பையாலால் குடும்பம். சம்பவத்தில் பிரியங்கா பள்ளி மாணவி. அவரைக் கொலை செய்ததுடன் முழு நிர்வாணப்படுத்தி வாய்க்காலில் வீசியுள்ளது அக்கொலைக் கும்பல். பையாலாலுக்குள்ள 5 ஏக்கர் முன்னோர் நிலத்தில் தங்களுக்கு வழிவிட வேண்டும் என்று அடாவடி செய்து, 15 அடி அகலத்திற்கு அவரை வழிவிடுமாறு வட்டாட்சியர் மூலம் உத்தரவு பெறும் அளவுக்கு அக்கிராமத்தவர்களின் வலிமை இருந்திருக்கிறது. இதையும் மீறி பையாலால் குடும்பம் வாழ்ந்தது, அவர்களை மிகவும் உறுத்தியிருக்கிறது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது சாதி வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் எவரையும் அதிர்ச்சியடையவும் துணுக்குறவும் செய்யக்கூடியது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சி கொள்ளச் செய்த இக்கொடூர சம்பவம், நிச்சயமாக "அரிதிலும் அரிதான' வழக்காகக் கருதப்பட வேண்டிய ஒன்று. ஆனால், ஒரு நாளைக்கு இரண்டு தலித்துகள் கொல்லப்படுவதாக தேசிய குற்ற ஆவணங்கள் மய்யத்தின் புள்ளிவிவரம் தெரிவிப்பதாலோ, என்னவோ இவ்வழக்கை "அரிதினும் அரிதான வழக்காக' ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. இதே தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கி சிங்-எதிர்-பஞ்சாப் அரசு (1983) 3 SCC 470 என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில் மரண தண்டனை வழங்க "அரிதினும் அரிது' என்று கருத கீழ்க்கண்ட அளவுகோல்களை சுட்டிக் காட்டியுள்ளது :

(அ) கொலை நிகழ்த்தப்பட்ட விதம் (ஆ) கொலைக்கான நோக்கம் (இ) நிகழ்த்தப்பட்ட குற்றம், சமூகத்திற்கு எதிரானதாகவோ (அ) சமூகம் அருவருக்கத்தக்க வகையிலோ அமைந்திருத்தல் மற்றும் (ஈ) இழைக்கப்பட்டுள்ள குற்றத்தின் சமூகவீச்சு மற்றும் கொலை செய்யப்பட்ட நபரின் சமூக அந்தஸ்து. கயர்லாஞ்சி வழக்கில் மேற்கூறிய அனைத்துக் கூறுகள் இருந்தும் உயர் நீதிமன்றம் அதை "அரிதினும் அரிதான வழக்காக' கொள்ளவில்லை என்பது சட்டப்படியும்கூட பிழையானதாகும்.

இத்தீர்ப்பில் பலத்த பின்னடைவாக நாம் கருதவேண்டியது, இவ்வழக்கிற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பதுதான். சம்பவத்தைக் கண்ணுற்ற 3 சாட்சிகளும், பையலாலும்கூட, அக்கொலைவெறி கும்பல் பையாலாலின் குடும்பத்தினரை சாதியைச் சொல்லி திட்டியதுடன், "இந்த மகர்களை கொல்லுங்கடா' என்று கூக்குரலிட்டு கொலை வெறிச் செயலில் ஈடுபட்டதும் சாதியத்தின் வெளிப்பாடே அன்றி வேறல்ல என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியும் அவர்கள் தண்டனைக்குரியவர்களே. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வனையப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் இவ்வழக்கில் அரிதானப் பொருத்தமுடையதாகவும், சாட்சிகளின் சாட்சியங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைந்துள்ளது.

ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என்பதற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள காரணம், இச்சம்பவம் சுரேகாவும், பிரியங்காவும் சித்தார்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை மேற்கொண்டதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக அமைந்தது; அவர்கள் தலித்துகள் என்பதால் அல்லர் என்பது மட்டுமே. இது ஒரு மேலோட்டமான, திரிபுடைய பார்வையே. ஒரு வழக்கின் பொருண்மைகள் ஒட்டுமொத்தமாக அணுகப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட விதி. அப்படிப் பார்க்கும்போது, பையாலால் குடும்பம் தலித்துகள் என்பதாலேயே இத்தகையதொரு கொடுஞ்செயல் புரியப்பட்டுள்ளது தெளிவாகும். இது, குற்றவாளிகளின் ஒட்டுமொத்த செயல்களை ஆயும்போது தெளிவுற விளங்கும்.

150குடும்பங்கள் உள்ள கிராமத்தில் உள்ள 3 தலித் குடும்பங்களில் ஒன்றாக பையாலால் குடும்பம் உள்ளதே, இதற்குப் போதுமான அடிப்படையாகும். மேலும், பையாலால் குடும்பத்தினர் நால்வரை கொன்ற முறையும் கொடூரமாக அமைந்துள்ளது. அவர்கள் தலித்துகள் என்பதாலும், அவர்களுக்காக என்று எதிர்க்க ஒருவரும் அந்த நேரத்தில் இல்லை என்பதும் தெளிவு. அதேபோல், கொலை செய்த பிறகு அவர்களது உடல்களை மாட்டு வண்டியிலேற்றிக் கொண்டுபோய் கால்வாயில் எறிந்திருப்பதும் கூட, சாதிய வெறியின் அடையாளமாகவே எவரும் காணமுடியும்.

இவற்றையெல்லாம் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, இது வன்கொடுமையே அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது - நீதியையும் தலித்துகளுக்குரிய அரசமைப்புச் சட்டப்படியான தீண்டாமைக்கு எதிரான உரிமையையும் புறக்கணிப்பதாகவும், புறந்தள்ளுவதாகவும், கேலி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்றச்சாட்டுகளுக்கென ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் தண்டனையைவிடக் கூடுதலாக தண்டனை அமையப் போவதில்லை என்ற அடிப்படையில் பார்க்கும்போது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏன் குறிப்பாக விடுவிக்கப்பட வேண்டும் என்பது புரியாத புதிராக உள்ளது. இத்தகைய அணுகுமுறைதான், நீதித்துறையும் சாதிய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இசைவாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு வலுவளிக்கிறது.

இவ்வழக்கில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்கள், இது குறித்து பரவலான விவாதத்தை ஊடகங்களின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதுடன், உச்ச நீதிமன்றத்தை அணுகி, நீதியை நிலைநாட்டவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்வதே - சாதிய வன்கொடுமையின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட பையாலாலின் குடும்பத்தினருக்கு செலுத்தப்படும் உண்மையான வீரவணக்கமாக அமையும்.

Pin It