(உள்ளக்குமுறலுடன் ஒரு நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த பெரியார் பெருந்தொண்டர் எழுதிய கடிதம்)

மனித சமுதாயம் தோன்றிய காலத்திலேயிருந்தே வாழ்வியல் முறையில் மாற்றங்களை சந்தித்து வருகிறது - அறிவு வளர்ச்சிக்கேற்ப இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, வாழ்வியல் முறை நெறிபடுத்தப்படுகின்றன. தமிழிலக்கியங்களில் முக்கியமாக திருக்குறளில் வாழ்வியல் நெறி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன - என்றாலும் சமுதாயத்தில், ஏற்றத் தாழ்வுகளும், பாகுபாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன - சம உரிமை பெற்று வாழும் சமுதாயத்தில் மட்டுமே தூய வாழ்வில் நெறிகள் விதைக்கப்படும்போது சமுதாயம் விழிப்புணர்ச்சி பெற்று வளர்ச்சி பெறும் அனைவருக்கும் பாகுபாடின்றி அதன் வளர்ச்சிப் பயன் கிட்டும்.

இந்தியச் சமுதாயம் குறிப்பாக தமிழ்ச் சமுதாயம், சூழ்ச்சி, வஞ்சகம் ஆகியவற்றால் தாக்குண்டு, ஊனப்பட்டு கிடக்கின்றது. ஆரியர்களின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து விடுபட முடியாமல் திராவிட இனம் அடிமைப்பட்டு கிடக்கிறது. இந்த வன்கொடுமையை கண்ட பெரியார் வெகுண்டெழுந்து இந்த மக்களை சூத்திரர்களாக சாகவிட மாட்டேன் என சூளுரைத்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். இதனையே தனது வாழ்க்கையின் லட்சியம் என ஆக்கிக்கொண்டார். பெரியார் மறைந்து 34 ஆண்டுகள் ஓடிவிட்டன. பெரியார் தொண்டர்கள் மேலும் கடுமையாக பணியாற்ற வேண்டிய காலகட்டம் இது. இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பெரியாரின் புரட்சி சிந்தனைகள் வெகுவாக மறைக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் திசை திருப்பிவிடப்படுகின்றனர். புரட்சி சிந்தனைகள் சிதைக்கப்படுகின்றன. இளைஞர்கள் நுகர்வோர் கலாச்சார போதையில் மயங்கி கிடக்கின்றனர்.

பெரியாருக்கு வாரிசுகளாக்கப்பட்டவர்கள் பெரியாரின் கொள்கைகளை மென்மைப்படுத்தும் வழிமுறைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களிடத்தில் புரட்சியை தூண்ட வேண்டியவர்கள், வாழ்வியல் வேதாந்தத்தை போதிக்க புறப்பட்டு விட்டார்கள். அந்த வேலையைத் தானே மடத்து சந்நிதானங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேலையை இவர்கள் ஏன் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்? பெரியாரின் வாரிசுகளாக்கப்பட்டவர்கள் வெளியிடும் `வாழ்வியல்' புத்தகங்களை இப்போது மடத்து தம்பிரான்கள், பக்தர்களுக்கு கொடுத்து ஆசி வழங்கி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரியார் பெயரில் புதிதாக ஒரு மடம் கட்டப்பட்டு, புதிய தம்பிரான்கள் உருவாகிறார்கள்! தமிழ்ச் சமுதாயம் இவர்களை மன்னிக்குமா?

(குறிப்பு: `வீரமணியின் வாழ்வியல் சிந்தனை' நூல்களை மொத்தமாக வாங்கி, மதுரை மடாதிபதி, தமது மடத்தின் முத்திரையைப் பதித்து, தன்னிடம் ஆசி கேட்டு வரும், சைவர்களுக்கு வழங்கி வருவதையே இந்த பெரியார் தொண்டர் குறிப்பிடுகிறார்.)

Pin It