காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோவில் பார்ப்பன அர்ச்சகர் தேவநாதன், கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் அர்ச்சனை செய்கிறார், “சூத்திரர்” நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் போய் வழக்காடும் “கர்ப்பகிரகத்துக்குள்”, “மச்சேஸ்வரன்”கள் முன்னாலே பல பெண்களுடன் “கிருஷ்ண லீலை”களை (அதாவது பாலுறவுகள்) நடத்தியுள்ளார். ஆகமவிதிப்படி அங்கீகரிக்கப்பட்டவரான இந்த புனிதரின் பக்தி நடவடிக்கைகள் அலைபேசி வழியாக படம் பிடிக்கப்பட்டது. அதை ஜூனியர் விகடன் ஏடு படத்துடன் பரபரப்பாக அம்பலப்படுத்தியது.
பிறகு “பிராமண குல” ஒழுக்க சீலரின் விளையாட்டுகள் குறுந்தகடுகளில் பதிவாக்கப்பட்டு, நாடு முழுதும் கடைகளில் அமோக விற்பனையாயின. சில வாரங்கள் தலைமறைவாகி, பிறகு காவல்துறையிடம் ‘ஆகம விற்பன்னர்’ சரணடைந்தார். இப்போது காவல் துறையில் விசாரிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் பெருநகர நீதிபதி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க 2 நாள்கள் மட்டுமே அனுமதித்தார். காவல்துறையோ, குறைந்தது 5 நாளாவது காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
வழக்கின் நேரிடை சாட்சி ‘மச்சேசுவரன்’; “அவன்” சாட்சி சொல்ல வரமாட்டான் என்பது கருவறைக்குள்ளேயே இருக்கும் தேவநாதனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், அலைபேசிப் பதிவுகள் சாட்சியாகிவிட்டன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் சங்கர்ராமன் வெட்டி வீழ்த்தப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டு காஞ்சி ஜெயந்திரன் மீது திரும்பி, குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். அதே காஞ்சியில் ‘மச்சேஸ்வரன்’ கருவறைக்குள் இந்த ‘பாலுறவு’களை பார்ப்பன அர்ச்சகர் நடத்தியிருக்கிறார்.
இந்துக்கள் உள்ளத்தை பகுத்தறிவாளர்கள் புண்படுத்துவதாக அவ்வப்போது ஓலமிடும் இராம கோபாலன், இல. கணேசன், துக்ளக் சோ, சு.சாமி குழுவினர், எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. வாயை இறுகக் கட்டிக் கொண்டு விட்டார்களே!
“சூத்திரன்” கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டாகிவிடும் என்று கூறும் பார்ப்பன சிரோன்மணிகளே!
பார்ப்பான் கருவறைக்குள் பெண்களை பாலுறவு கொண்டால் கருவறை புனிதம் பெற்று விடுமா?
எங்கே, மானம் சூடு சொரணை இருந்தால் பதில் சொல் பார்க்கலாம்!