Eelamஎதுவுமே
தெரியவில்லை நண்பனே

கனவிலும் கேட்க்கும்
உறவுகள் ஓப்பாரி

குருதி அறியா
என் குழந்தைகள்
குருதியாய்
அழுது அழுது
காய்ந்த விழிகள்

குதறிக் கிளிபடும்
என்சகோதரி உடல்கள்

சர்வதேசமே காப்பாற்று
கடைசி நிமிடம்வரை
கதறிய குரல்கள்
நந்திக்கடல் சாட்சியாக
தீயுள் மண்ணுள்
புதைக்கப்பட்டதை
எரிக்கப்பட்டதை

பாராமல் இருந்த
கொடிய மனிதர்களை

முடியவில்லை நண்பனே

ஓடிவிழையாடி
இயற்க்கையைத் தின்று
நேரங்கள் மறந்து
குலாவித்திரிந்ததும்
என் அன்னையின்
உடல் சங்கமமானதும்
வன்னிமண்ணில்

யாரும் நினைத்திரா
பொழுதொன்றில்
அன்னியர் புகுந்து
கால் பதித்ததில்
அமைதி அழிந்து
குருதி ஓடுகிறது

பாடித்திரிந்த பறவைகளும்
கனவுகள் வளர்த்த
இழயவர்களும்
கூச்சல்போட்ட சிறுவர்களும்
குலாவித்திரிந்த பெண்களும்
கூடிப்பேசிய வயதினரும்
காணாமல்போயினர்

அள்ளி அள்ளி
வழங்கிய மக்கள்
கை ஏந்தித்
தவிப்பதை

முடியவில்லை நண்பனே

புதைகுழிகள் இப்போ
நவீனமாகி
தடயங்கள் அழிக்கும்
எரிகூடங்களாகிறது
கருகிய மனிதர்கள்
கடலில் கரைகிறார்

காற்றில் இப்போ
நறுமணம் இல்லை
கடல் இப்போ
நீலமும் இல்லை
வானத்தில் இப்போ
வர்ணங்கள் இல்லை

முடியவில்லை நண்பனே
எதுவும்

இன்று என்னிடம்
எஞ்சியிருப்பது
ஈழத்து அகதியின்
வலிகள் மட்டுமே. 


றஞ்சினி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)