1980களின் தொடக்கத்திலிருந்தே, ஈழ மக்கள் உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கும் ஏதிலிகளாகப் பயணப்படத் தொடங்கி விட்டனர். அடுத்த கரையும், இன்னொரு தாயகமும் தமிழ்நாடுதான் என்பதால் தொடர்ந்து இங்கே அவர்கள் வரத் தொடங்கினர். மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் அவர்கள் அகதிகள், நமக்கு உறவுகள்.
முகாம்களில் தங்கியுள்ளோர் நிலை கவலைக்குரியதாகவும், போதிய வசதிகள் இன்றியும் இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கூறிக் கொண்டே இருந்தனர். செய்திகளைக் கவனத்தில் கொண்ட நம் முதலமைச்சர் ரூ.12 கோடியை அவர்கள் நல்வாழ்விற்காக ஒதுக்குவதாக அறிவித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் உள்ள மக்களுக்கு அந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்ற ஐயம் எல்லோருக்கும் எழுந்தது.
ஆனால் நவம்பர் 12 ஆம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. தக்கனவற்றைத் தக்க நேரத்தில் செய்யும் நம் முதலமைச்சரின் செயல்திறன் மிகுந்த பாராட்டிற்குரியது.
ஒதுக்கப்பட்ட தொகையும், எந்தெந்த வழிகளில் செலவிடப்பட உள்ளது என்ற விவரங்களையும் அரசு அறிவித்துள்ளது. ஏறத்தாழ 6 ஆயிரம் வீடுகளைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் பணிக்கு, ரூ37.33 கோடியும், மிக அருமையான திட்டமாகிய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அவர்களுக்கும் விரிவுபடுத்த ரூ.1 கோடியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்காக ரூ.4.55 கோடியும், பெண்களின் திருமணம் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.2.40 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் திறன்களை வளர்க்கவும், மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கவும் உரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 54.60 கோடி ரூபாய்க்கான திட்டமும் விரைவில் அறிவிக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறும் ஆட்சி நல்லாட்சி என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று வேறென்ன வேண்டும். பாராட்டுவது அல்லது மனம் புழுங்குவது என்பதைத் தவிர, எதிர்க் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.
இத்தருணத்தில், ஈழமக்களின் கல்வி குறித்து ஒரு வேண்டு கோளை முன்வைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. சென்ற முறை, கலைஞர் ஆட்சியில், மருத்துவம், பொறியியல், வேளாண் கல்லுரிகளில் ஈழப்பிள்ளைகளுக்கென்று குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பிறகு அ.தி.மு.க ஆட்சியில் அந்தக் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டு விட்டது. மீண்டும் அப்பிள்ளைகளுக்குக் கல்வியில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், கல்விக்காகவும் ஒரு தொகை ஒதுக்கப்படவேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.