கீற்றில் தேட...

சென்ற இதழ் தொடர்ச்சி

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை என்றாலும், இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல், தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க முன் வந்தனர். ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தக் காலத்திலும் இந்தியா வுக்கு அடிபணியாது என்று ‘ரா’ உளவு நிறுவனம், உறுதியான முடிவுக்கு வந்துவிட்டது.

எனவே, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட விடுதலைப்புலிகளை, பலவீனமாக்கி செயலிழக்கச் செய்யும் திட்டங்களை உருவாக்கியது. இந்திய ராணுவத் தின் தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் பிரபாகரனை சந்தித்தபோது, பிரபாகரனே அவரிடம் நேரில் நடத்திய உரையாடலை இந்திய ராணுவத் தளபதியாக இலங்கையில் செயல்பட்ட தீபிந்தர் சிங் தனது நூலில் பதிவு செய்துள்ளார்:

“1987 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை நான் சந்தித்தபோது, தங்களுக்கு நம்பகமான ஒரு தகவல் கிடைத்துள்ளது என்றார். நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், மிகவும் பலவீனமாகி விட்டோம் என்று ‘ரா’ உளவு நிறுவனம் கூறி வருவதோடு, எங்களோடு ராணுவ மோதலை நடத்துமாறு, ஏனைய தமிழ் குழுக்களைத் தூண்டிவிட்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று நட்சத்திரக் குழுக்களை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்த ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்று பிரபாகரன் என்னிடம் கூறினார்.

இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்பதால், அன்று மாலையே இந்திய ராணுவத் தலைமையகத்துக்கு தெரிவித்து, இது பற்றி விசாரிக்குமாறு கூறினேன். அது உண்மையல்ல என்று அடுத்த நாள் எனக்கு பதில் வந்தது. அதை பிரபாகரனை சந்தித்துத் தெரிவித்தேன். எனது மறுப்பைக் கேட்ட பிரபாகரன் மிகவும் அமைதியாக பதில் சொன்னார். நீங்கள் உண்மையானவராக இருக்கிறீர்கள். ஆனால், டெல்லியிலிருந்து உங்கள் மூலமாக தரப்பட்ட தகவல் உண்மையல்ல; நான் கூறியதுதான் உண்மை என்று தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார்.”

லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் எழுதிய  நூல் - பக்.56

பிரபாகரன் கூறியதுதான் நடந்தது. போட்டிக் குழுக்களை உருவாக்கி சகோதர யுத்தத்தை தொடங்கி வைத்ததே ‘ரா’ நிறுவனம் தான். அதற்காகவே டக்ளஸ் தேவானந்தாவை சென்னை சிறையிலிருந்து விடுவித்து, இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப் பாணத்துக்கு அனுப்பி வைத்தது ‘ரா’.

தனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்து - தமது இலக்கில் உறுதியாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு எதிராக போட்டிக் குழுக்களை உருவாக்கியும், அதில் வெற்றி பெற முடியாமல் கரியைப் பூசிக் கொண்டு, 1990-ல் இந்திய ராணுவம், இந்தியா திரும்பிய போது, ‘ரா’ உருவாக்கிய ஈ.என்.டி. எல்.எப்., ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய குழுக்களையும் இந்தியாவுக்கு தங்களுடனே அழைத்து வந்துவிட்டது உளவுத்துறை. அப்போது இந்தப் போட்டிக் குழுக்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது, இந்திய உளவு நிறுவனம் தான். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் குலைக்க ‘ரா’ எவ்வளவு முறைகேடுகளை செய்தது என்பதற்கு இவைகள் சாட்சியங்கள்!

இதற்கான ஆதாரங்கள் - ராஜீவ் கொலையில் அன்னிய சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் அறிக்கையில் அரசு ஆவணங்களோடு பதிவாகியுள்ளன. போட்டிக் குழுக்களையும் தமிழகத்துக்கு அழைத்து வருவதை தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சி எதிர்த்தது.

இப்படிப் போட்டிக் குழுக்கள் தமிழகத்துக்கு வந்தால், தமிழ்நாட்டில் சகோதர யுத்தங்கள் நடக்கும் ஆபத்துகள் இருப்பதை முதல்வர் கலைஞர் கருணாநிதி சுட்டிக் காட்டினார். அன்றைய பிரதமர் வி.பி.சிங்குக்கும் இதை கடிதம் மூலம் எழுதினார். ஆனால், இந்திய உளவுத் துறை இதை செவி மடுக்காமல் போட்டிக் குழுக்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டியது.

மத்திய அரசிடமுள்ள உளவுத் துறை தொடர்பான ஆவணங்களில் இது குறித்து, ஏராளமான செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்.

(தொடரும்)