(ஓயாமல் குமுதம் பத்திரிக்கையை விமர்சித்துவிட்டு இப்போது அதில் இணைந்திருக்கும் ஞாநி, பின்னாளில் காஞ்சி சங்கராச்சாரியாருடன் இணைந்தால் அதை எப்படி நியாயப்படுத்தி எழுதுவார் என்பதைக் கற்பனை செய்ததின் விளைவே இக்கட்டுரை.)

‘ஓ போடு’ 

காஞ்சிப்பாதையில் நான்: ஞாநி


"முற்போக்கு எழுத்துப் பணியில் எனக்கு 33 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. அதை விட கூடுதலான வருட அனுபவம் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஆன்மீகப் பணியில் இருக்கிறது. 80களில் தண்டத்தைக் கீழே போட்டு விட்டு அவர் ஓடிப்போன காலத்தை கழிக்க வேண்டும் என்று சில அதிமேதாவிகள் கூறலாம். எப்போதெல்லாம் அவர் ஆன்மிகப் பணி இல்லாமல், வேறு பணிகளில் ஈடுபட்டார் என்பதைக் கணக்கிடுவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை என்பதால், அதை இப்போது தவிர்த்துவிட்டு நேரே விஷயத்திற்கு வருகிறேன்.

இத்தனை ஆண்டுகள் அவர் பொதுவாழ்க்கையில் இருந்திருந்தாலும், ஒரு முறை கூட அவருக்காக நான் வேலைபார்த்ததில்லை. முன்பொருமுறை பேட்டிக்காக அவரைச் சந்தித்திருக்கிறேன். அதன்பின் அவரை விமர்சித்து சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

அவருக்கு எதிராக யாராவது மொட்டைக் கடிதாசி எழுதினால் கூட, அவரது பக்தர்கள் என்னமாதிரி நடந்துகொள்வார்கள் என்பதை அவரையும் அவரது பக்தர்களையும் அறிந்தவர்கள் அறிவார்கள். அறியாதவர்கள் சங்கரராமன் குடும்பத்தாரை அணுகி அறிந்து கொள்ளவும். ஆனால் அப்படிப்பட்டவர் இதுவரை நான் பக்கம் பக்கமாக எழுதியதை எல்லாம் மன்னித்து வந்தாரென்றால் அது அவரது தூய கருணை நெறியையே காட்டுகின்றது.

இன்று நான் சங்கரமடத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். இத்தனை நாள் அவரை விமர்சித்துவிட்டு, இப்போது அவரிடம் வேலைக்குச் சேரலாமா என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் நான் என்ன பண்ணுவது? நான் எங்குதான் வேலை பார்க்கவில்லை? யாரைத்தான் திட்டவில்லை? முன்பு முரசொலியில் இருந்தேன். சம்பளம் கொடுத்தார்கள், அவர்களுக்கு ஆதரவாக எழுதினேன். பின்னர் அங்கு பிரச்சினை ஏற்பட்டபோது அவர்களிடமிருந்து விலகி, இதுநாள்வரை அவர்களைத் திட்டி எழுதி வருகிறேன்.

ஆனந்தவிகடனில் எழுதினேன். அங்கிருந்து என்னை துரத்தியபோது, அவர்களை விமர்சித்தேன். அதற்கு முன்பு குமுதத்தையும் திட்டி வந்தேன் என்பதும், பின்பு அவர்களிடமே தஞ்சம் புகுந்தேன் என்பதும் என்னைத் தொடர்ச்சியாக வாசிக்கிறவர்களுக்குத் தெரியும். அதேபோலத்தான் முன்பு சங்கராச்சாரியாருக்கு எதிராக எழுதினேன், இப்போது அவருக்காக வேலை பார்க்கிறேன். எனவே ‘ஏதோ இப்போதுதான் நான் இப்படி இருக்கிறேன்’ என்று யாரும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ படத் தேவையில்லை.

என்னை ஒரு முற்போக்கு எழுத்தாளன், நடுநிலைப் பத்திரிகையாளன் என்று அனைவரும் அங்கீகரித்திருந்தால் நான் ஏன் இத்தனை இடங்களுக்குத் தாவி இருக்கப்போகிறேன்? முரசொலியில் வேலை செய்தபோது, ‘பார்ப்பன குலத்தில் பிறந்திருந்தாலும் அந்தக் குணம் கிஞ்சித்தும் இல்லாமல் திராவிட இயக்கங்களோடு இணைந்து ஞாநி வேலை செய்கிறார்’ என்று கருணாநிதி எனக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தால் நான் ஏன் அவரை திட்டி எழுதப் போகிறேன்?

‘அய்யா’ தொலைக்காட்சித் தொடரை இயக்கிய என்னை, ‘பெரியார்’ படத்தையும் இயக்கித் தருமாறு கேட்டிருந்தால் அந்தப் படத்தை நான் ஏன் விமர்சித்திருக்கப் போகிறேன்? யார் யாருக்கோ இலட்ச ரூபாய் சம்பளம் தரும் சன் டிவி குழுமத்தார் என்னையும் கூப்பிட்டு ஏதாவது கொடுத்திருந்தால், அவர்களை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கப் போகிறேன்? ஜெயா டிவியில் போய், ஏன் புத்தகம் வாசிக்கப் போகிறேன்?

வாய் ஓயாமல் சங்கராச்சாரியாரை நான் திட்டிக் கொண்டிருந்தபோது, எத்தனை திராவிட அமைப்புகள் இருக்கின்றன, ஏதாவது ஒன்று ‘திராவிடப் பெருசு’ என்ற பட்டத்தை எனக்கு அளித்திருந்தால், நான் ஏன் இப்போது சங்கராச்சாரியாரிடமே வேலைக்கு சேர்ந்திருக்கப் போகிறேன்? இப்போது புரிகிறதா இவையெல்லாம் என் குற்றமில்லையென்று.

மேலும் எழுத்தாளர்களுக்கு பத்திரிக்கை என்பது வாடகை வீடு போலத்தானே! வேறொரு வீடு வசதியாக இருந்தால் அந்த வீட்டிற்குப் போவதில் என்ன தவறு? அதோடு, ‘மாற்றம் என்ற ஒன்றே மாறாதது’ என்று காரல் மார்க்ஸ் சொன்னதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது புரியாமல் பேசுகிறவர்களிடம் நான் என்ன பதில் சொல்வது?

சங்கரமடத்தில் இருந்து வரும் ‘தெய்வத்தின் கூப்பாடு’ பத்திரிக்கையில்தான் எழுதப்போகிறேன். அது என்ன ஆன்மீகத் தொடரா? எங்கு எழுதினாலும் எனது முற்போக்கு முகமூடி கிழியாமல் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியாதா?

இப்போது எழுதப்போவதும் ஒரு முற்போக்கான தொடர்தான். தலித் மக்கள் எப்படி சுத்தபத்தமாக, ஆச்சாரமாக வாழ வேண்டும் என்பது குறித்து எழுதப்போகிறேன். சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்வது நல்ல விஷயம்தானே! தலித்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வது முற்போக்கானதுதானே!

இதுவும் நிரந்தரமல்ல என்பது எனக்குத் தெரியும். நாளையே நான் ஆர்.எஸ்.எஸ்.சிலோ, வி.எச்.பி.யிலோ சேர்ந்து, ‘சேது சமுத்திரத் திட்டம் எப்படி மீனவர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும்’ என்று ஊர் ஊராகப் பேசப் போய்விடலாம். எனக்கு இடம் முக்கியமல்ல, மக்களுக்கு நல்லது சொல்லவேண்டும். அதுவும் நிறைய பேர் இருக்கிற அல்லது வாசிக்கிற இடத்தில் இருந்து சொல்ல வேண்டும். அது விஜயபாரதமாக இருந்தால் என்ன, சரோஜா தேவி புத்தகமாக இருந்தால் என்ன? இந்தியா டுடே, ஆனந்த விகடன், ஜெயா டிவி, குமுதம் ஆகியவற்றில் நான் எழுதியதில் இருந்தே என்னை நீங்கள் புரிந்து கொள்ளமுடியவில்லையா?

பார்ப்பன பத்திரிக்கைகளிலேயே தொடர்ந்து நான் எழுதுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். ‘பூணூலைக் கழட்டி எறிந்தாலும், பெயரை ஞாநி என்று மாற்றி வைத்துக் கொண்டாலும், உள்ளே இருப்பது சங்கரன்தான்’ என்பதை நீங்கள் எப்படி கண்டுகொள்கிறீர்களோ, அதேபோலத்தான் அவர்களும் ‘எங்க எழுதினாலும், என்ன எழுதினாலும் அவன் நம்ம ஆத்துப் பையன்’ என்று கண்டுகொள்கிறார்கள், அணைத்துக் கொள்கிறார்கள்.

‘நம்மளைத் திட்டுறதா இருந்தாலும், நம்மவாதான் திட்டணும்’ என்ற பார்ப்பன உளவியல் அதில் இருப்பதாக சில திராவிட அறிவுஜீவிகள் கூறினால், அதற்குப் பதில் கூற வேண்டியது நானல்ல, அந்தப் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களே.

இதே அறிவுஜீவிகள் நான் எழுதாமல் இருக்கும் விஷயங்கள் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.

‘திருவாசகத்திற்கு இசையமைத்ததற்காக இளையராஜாவை விமர்சிக்கும் ஞாநி, அத்தனை கடவுள்களுக்கும் தனித்தனியாக பாட்டு எழுதி, பின்னர் பிராமண சங்கத்திலும் பேசிய பாரதியை, திராவிட இயக்கத்தினரும், ம.க.இ.க.வினரும் அம்பலப்படுத்திய பின்பும், அது குறித்து வாயே திறக்காமல் இருப்பதன் பெயர்தான் சாதிப்பாசமா?’

‘கருணாநிதியை ஓய்வெடுக்கச் சொல்லும் ஞாநி, ஒருமுறை கூட சங்கர்தயாள் சர்மாவையோ, வாஜ்பாயையோ அவ்வாறு சொன்னதில்லையே, அது என்ன நடுநிலைமை?’

‘எவ்வளவு அபத்தமாக எழுதினாலும், எவ்வளவு மோசமாக உளறிக்கொட்டினாலும், தமிழின் சிறந்த படைப்பாளிகள் என சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வாஸந்தி ஆகியோரைப் பட்டியலிட்டுக் கூறுவதுதான் (பார்ப்பன) முற்போக்குத்தனமா?’

இப்படி சுற்றிச் சுற்றி அடித்தால் நான் என்ன செய்வது? ‘இவர்களுக்குப் பதில் சொல்லி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதைவிட செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன’ என்ற எனது வழக்கமான பல்லவியைப் பாடுவதைத் தவிர எனக்கு வேறு என்ன வழியிருக்கிறது?

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஆனந்தவிகடனில் கருணாநிதியை நான் விமர்சித்தபோது ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தலைமையில் கண்டனக் கூட்டம் நடத்தினீர்கள். இப்போது சங்கராச்சாரியாரின் பத்திரிக்கையில் ‘தலித் மக்கள் சுத்தபத்தமாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் நாற்பது ஆண்டு கால கழக ஆட்சிகள்தான்’ என்று எழுதப் போகிறேன். இதற்கு நீங்கள் அருந்ததிராய் தலைமையில் கண்டனக் கூட்டம் நடத்தவும், இந்த வேலையில் இருந்து என்னை துரத்தவும் முயற்சிக்கலாம். 

அப்படி நேர்ந்தால் நான் ஆர்.எஸ்.எஸ். அல்லது பி.ஜே.பி.யில் சேர்ந்து அவர்களது பத்திரிக்கையில் எழுத ஆரம்பிப்பேன். அப்போது என்ன நோம் சாம்ஸ்கியைக் கூப்பிடுவீர்களா? அது உங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கும் விஷயம். அதற்குப் பதிலாக உங்கள் பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் என்னை ஏன் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது? எனக்கு எந்த கூச்சநாச்சமும் கிடையாது, உடனே வருவேன் என்பது உங்களுக்குத் தெரியும். முடிவு சதா என்னைத் துரத்தும் உங்களது கையில்."

- கீற்று நந்தன்