“ ஒடுக்கப்பட்ட மக்கள்‌, குரல்‌ பெற்று தங்கள்‌ சுய அனுபவங்களை மையப்படுத்திப்‌ பேசும்போது மாற்றம்‌ நிகழும்‌ இதைத்தான்‌ நாம்‌ அனைத்து அடிமட்ட இயக்கங்களிலும்‌ காண்கிறோம்‌” - ஜானெட்‌ மாக்‌

இந்த மாற்றத்தின்‌ பாதை எளிமையானது அல்ல. சுய அனுபவங்களைப்‌ பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில்‌ கடந்த காலத்தின்‌ கசப்பை அசைபோட வேண்டும்‌. அதற்கு அஞ்சிப்‌ பலர்‌ பேசாமலேயே போகலாம்‌. வலியை எதற்காக மீண்டும்‌ கிளர வேண்டும்‌ என்று எண்ணலாம்‌. சமூகத்திற்காக நாம்‌ சுமக்கும்‌ பாரத்தை இறக்கி வைக்க, நடந்த அநீதிகளை அது தந்த வலியைப்‌ பேசும்‌ துணிச்சலைப்‌ பிறப்பிப்பது தவிர வேறேதும்‌ வழி உண்டா? வலியை விம்மி அழுது விழுங்குபவர்களை ஆசுவாசப்‌ படுத்துவதோடு, வாழ்க்கையை எதிர்கொள்ள நம்பிக்கையூட்டும்‌ பேரன்பின்‌ அணைப்பாகத்தான்‌ நான்‌ குலவை - 2025ஐப்‌ பார்க்கிறேன்‌.avvai dramaநாடக நெறியாளுநர்‌, இலக்கியப்‌ பேராசிரியர்‌, மற்றும்‌ அறிஞர்‌ அ. மங்கை அவர்களின்‌ 40-ஆண்டுக்காலத்‌ தமிழ்‌ பெண்ணிய நாடக வெளியின்‌ பயணத்தைக்‌ கொண்டாடுவதற்காக பல கலைஞர்கள்‌, ஆளுமைகள்‌, தோழர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஜூன்‌ (7.8.2025) ஆகிய நாட்களில்‌ ஒன்றிணைந்தனர்‌. தமிழ்‌ நாடக அரங்கில்‌ பெண்ணியம்‌ மற்றும்‌ பாலின விழிப்புணர்வை அடிப்படையாகக்‌ கொண்டு உருவான பல நாடகங்கள்‌ அரங்கேற்றப்பட்டன. நாடகங்களுக்கு இடையே மங்கையின்‌ நாடகப்‌ பாடல்கள்‌ மற்றும்‌ ஏனைய பெண்ணியப்‌ பாடல்கள்‌ அரங்கேறின.

இரண்டு நாள்‌ விழாவில்‌ சில அற்புதமான படைப்புகளைக்‌ காண முடியாத சூழல்‌ ஏற்பட்டது. நான்‌ பார்த்த வரையில்‌ எனது அனுபவத்தைப்‌ பகிர்ந்து கொள்ளும்‌ விழைவுதான்‌ இந்தப்‌ பதிவு.

செளமியாவின்‌ வாழ்க்கை நிகழ்வுகளை, வலிகளை மாயா ஆஞ்சலோவின்‌ இரண்டு கவிதைகளுடன்‌ இணைத்து விவரிப்பதாக “நான்‌ ஒரு பெண்‌: நாடகம்‌ அமைந்தது.

இரண்டாவதாக அரங்கேறிய நாடகம்‌ உள்ளுரம்‌. “எனது உடல்‌ எனது உரிமை” என்று தொடங்கிய உள்ளுரம்‌ - ஓர்‌ உரிமைக்குரல்‌. பெண்கள்‌ தம்‌ வாழ்வில்‌ சிறுவயதில்‌ இருந்து கடந்து வரவேண்டிய இன்னல்களை அடிப்படையாகக்‌ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பாலியல்‌ சீண்டல்கள்‌ ஒரு பள்ளிப்‌ பருவப்‌ பெண்ணின்‌ உடல்‌ நலத்தையும்‌ மனநலத்தையும்‌ சீர்குலைக்கும்‌ யதார்த்தம்தான்‌ உள்ளுரத்தின்‌ மையக்கரு. இந்த நாடகத்தைப்‌ பார்த்துவிட்டு என்‌ நட்பு வட்டத்தில்‌ எழுந்த உரையாடல்‌ ஆறுதலைத்‌ தந்தது. இதுவரை யாரிடமும்‌ சொல்லாத பல பக்கங்களை வெளிப்படையாகப்‌ பேசும்‌ வெளியை உருவாக்கியது.

“யுகங்களின்‌ மெளனத்தை இன்று நாம்‌ கலைக்கிறோம்‌!
சேருவோம்‌ தோழி நாம்‌ சோர்வகற்றிச்‌ சேருவோம்‌ !'

என்னும்‌ சுபத்ராவின்‌ வரிகள்‌ எனக்குள்‌ ஏற்படுத்திய கிளர்ச்சி, நம்பிக்கையின்‌ கண்ணீரால்‌ வெளிபட்டது.

“ஒளவை” இன்குலாப்‌ எழுதிய முதல்‌ நாடகம்‌. மங்கையின்‌ நெறியாள்கையில்‌ முதன்‌ முதலில்‌ 1998-இல்‌ அரங்கேறியது.

சில தமிழ்‌ அறிஞர்களும்‌ திரைப்படங்களும்‌ ஒளவையை, தள்ளாடும்‌ தமிழ்‌ மூதாட்டியாகவும்‌ ஆண்கள்‌ உருவாக்கிய தர்மத்தை ஆதரிக்கும்‌ புலவராகவும்‌ சித்தரித்துள்ளனர்‌ என்பதை உணர்த்தும்‌ முயற்சியே ஒளவை நாடகத்தின்‌ கரு. நாடகந்தோறும்‌ நகைச்சுவை இழையோடியது. வலிமையான வசனங்கள்‌ நிறைந்திருந்தன.

“கடந்த காலத்தின்‌ கட்டுக்கதைகள்‌ எல்லாம்‌
ஆர்ப்பரிக்கும்‌ கடலுக்குள்‌ எரிவோம்‌'

“உன்னை மீறிய எந்தக்‌ குறியும்‌ உனது உடலை
தீண்டாதவாறு அக்னி குஞ்சாய்‌ உயிர்த்தெழு !'

என முடியும்‌ ஒளவை நாடகம்‌ பலவித எதிர்ப்புகளைக்‌ கடந்து சேர்த்த வீரத்திற்கு வலுச்‌ சேர்த்தது.

இலங்கைச்‌ சூழலைக்‌ குறித்த “புல்லின்‌ சிறகு”, “நடை நடையாய்‌? ஆகிய நாடகங்களைப்‌ “பாடினிகள்‌?” குழுவினர்‌ நிகழ்த்தினர்‌. ஈழத்து மக்களின்‌ அன்றாட வாழ்வின்‌ சிக்கல்களை மையப்படுத்துவதாக நாடகங்கள்‌ அமைந்தன. போருக்குத்‌ தீர்வாக அன்பு ஒன்றே கலங்கரை விளக்கம்‌ எனப்‌ பாடினிகள்‌ நிறுவினர்‌. “தோள்கள்‌ இணைய, குரல்கள்‌ உயர, அன்பு செய்வோம்‌. அன்பே அறமென மொழிவோம்‌.” என்று நிறைவு செய்யும்‌ பொழுது பார்வையாளர்களின்‌ மனம்‌, மாற்றம்‌ நிகழும்‌ எனும்‌ நம்பிக்கையால்‌ நிறைந்ததை உணர முடிந்தது. “மட்டுநகர்‌ கண்ணகைகள்‌” என்னும்‌ நூலில்‌ பாடினிகள்‌ குழுவைக்‌ குறித்தும்‌ அவர்களின்‌ நாடகங்களைக்‌ குறித்தும்‌ விரிவாக மங்கை அவர்கள்‌ எழுதி இருக்கிறார்‌.

எழுத்தாளர்‌ மற்றும்‌ பாலியல்‌ சிறுபான்மையினரின்‌ உரிமைக்காகப்‌ பணியாற்றும்‌ ஆர்வலர்‌ ஆ. ரேவதியின்‌வாழ்க்கை நிகழ்வுகளின்‌ தொகுப்புதான்‌ “வெள்ளை மொழி. 120க்கும்‌ மேற்பட்ட மேடை அரங்கேற்றம்‌ கண்டுள்ளது. அவர்‌ போராட்டத்தைப்‌ பார்வையாளர்களுக்குக்‌ கடத்தும்‌ பனுவலும்‌ நடிப்பும்‌ நாடகத்தின்‌ வெற்றி.

“என்னைத்‌ தொடர்ந்து பல திருநங்கைகள்‌ புத்தகங்கள்‌ எழுதத்‌ தொடங்கியுள்ளனர்‌” என்பதைச்‌ சொல்லும்‌ பொழுது ரேவதியின்‌ கண்களில்‌ மிளிரும்‌ பெருமிதம்‌ பேரழகு.

“நல்ல வேளை, நான்‌ பிறப்பால்‌ பெண்‌ இல்லை. பெண்ணாக நீங்கள்‌ ஏற்க மறுத்ததே எனக்கு கிடைத்த விடுதலை.

உங்கள்‌ ஆணாதிக்க குறியை அறுத்துக்‌ கொள்ளுங்கள்‌. அப்பொழுது தெரியும்‌ நீங்கள்‌ யார்‌ என்பது.

பிறகு சொல்லுங்கள்‌, நான்‌ பெண்ணில்லை என்று”

எனும்‌ கல்கி சுப்பிரமணியத்தின்‌ கவிதை வரிகளுடன்‌ ரேவதி கை தட்டி முடிப்பார்‌. ஒவ்வொருமுறை “வெள்ளை மொழி” அரங்கேறும்‌ பொழுதும்‌ சில நொடிகளுக்கு அரங்கத்தில்‌ கை தட்டல்கள்‌ நிற்பதே இல்லை.

போர்க்களத்தில்‌ இறந்தபட்ட வீரர்களின்‌ குடும்பத்துப்‌ பெண்களின்‌ மனநிலையைக்‌ காந்தாரி, குந்தி ஆகிய மகாபாரத பாத்திரங்களின்‌ பார்வையை இன்றைய போர்ச்‌ சூழலுடன்‌ ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட நாடகம்‌ “ஸ்த்ரீ பர்வம்‌.” நாடகத்தின்‌ இறுதிப்பகுதியில்‌ குந்தியும்‌ காந்தாரியும்‌ கட்டியணைத்து அரவணைப்பை வெளிப்படுத்தும்‌ காட்சி நாடகத்தின்‌ உச்சம்‌. முக்கியப்‌ பாத்திரமாகவே வெள்ளைத்‌ துணி, கலைஞர்களுடன்‌ பயணிக்கிறது. திரையில்‌ போரால்‌ பாதிக்கப்பட்ட மக்களின்‌ பெருந்துயரை உணர்த்தும்‌ புகைப்படங்கள்‌, இறந்து பட்டவர்கள்‌, படுகாயம்‌ அடைந்தவர்களின்‌ புள்ளி விபரங்கள்‌ காட்டப்பட்டன. போர்ச்சூழலில்‌ எழுதப்பட்ட கவிதைகளும்‌ திரையிடப்பட்டன. பார்வையாளர்களுக்குத்‌ துயரம்‌ கடத்தப்பட்டது. “போர்‌ வேண்டாம்‌. ஒற்றுமையாக வாழ்வோம்‌”

“கொடூரமான ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்‌. அன்புள்ளம்‌ படைத்தவர்கள்‌ உலகை ஆள வேண்டும்‌: என்ற கருத்துடன்‌ “ஸ்த்ரீ பர்வம்‌” முடிந்தது.

தமிழ்ப்‌ பெண்ணிய நாடக வெளி உருவாக்கத்தில்‌ இன்றியமையாத பங்கு வகித்தவர்கள்‌, தங்கள்‌ பயணத்தைப்‌ பகிர்ந்து கொள்ளும்‌ களமாக இரண்டாவது நாள்‌ கலந்துரையாடல்‌ அமைந்தது. இதனை வலையயொளிப்‌ பக்கத்தில்‌ பதிவேற்றினால்‌ பல கலைஞர்களுக்கும்‌ ஆய்வாளர்களுக்கும்‌ நாடகத்துறையில்‌ ஆர்வம்‌ உள்ளவர்களுக்கும்‌ அடிப்படையான முக்கியத்‌ தரவாக அமையும்‌. திறமைகளை வெளிக்கொணரவும்‌ உணர்வுகளைக்‌ கலையாக்கவும்‌ திறந்த ஆற்றகைக்களம்‌ இடமாக அமைந்தது. கட்டைக்கூத்துக்‌ கலைஞர்‌ திலகவதி, மகாபாரதத்தின்‌ பாத்திரங்களான அம்பை மற்றும்‌ சிகண்டியாக நடிக்கிறார்‌. அம்பை சிகண்டியாக மாறிப்‌ பீஷ்மரைக்‌ கொல்கிறாள்‌. எதற்காக? என்பது கதைக்களம்‌. “பனித்தீ” கட்டைக்கூத்து வடிவத்தில்‌ உருவாக்கப்பட்ட நாடகம்‌. நடித்துகொண்டிருக்கும்‌ பொழுது
மேடையில்‌ ஆடை ஒப்பனைகளைக்‌ களைதல்‌ முறையன்று என்ற பழமையை மங்கை உடைத்திருக்கிறார்‌. சிகண்டி அம்பை ஆகிறாள்‌. பார்வையாளர்களைத்‌ திசை திருப்பும்‌ நோக்கம்‌ ஏதுமின்றி, பெண்ணியம்‌ பனுவலில்‌ மிளிர்கிறது. பார்வையாளர்களுக்கு “பனித்தீ” ஓர்‌ ஒப்பற்ற அனுபவம்‌. வசனங்கள்‌ மடைதிறந்த செந்தமிழ்‌ வெள்ளம்‌. பின்னிருக்கையில்‌ இருந்து பார்ப்பவர்களுக்கு இசை வாத்தியங்களின்‌ ஓசை அதிகமாக இருந்தமையால்‌ சில வசனங்கள்‌ புரியாமல்‌ இருக்க
வாய்ப்புள்ளது என்று தோன்றியது. 25 ஆண்டுகளுக்கு முன்‌ உஷாராணி பனித்தீயை அரங்கேற்றி இருக்கிறார்‌. அவர்தம்‌ அனுபவத்தை பகிர்ந்து கொண்டது, அரங்கத்தை நெகிழ்வித்தது.

“போரில்லாமல்‌ அனைவரும்‌ சமமென
தோழமையோடு வாழ்ந்திடுவோம்‌”

என்று “பனித்தீ” முடியும்‌. திலகவதி அம்பை மற்றும்‌ சிகண்டியாக வாழ்ந்தார்‌.

நாடகங்களுக்கு இடையே அரங்கேறிய பாடல்கள்‌ நம்‌ முன்னோர்கள்‌ தலைமுறை தலைமுறையாக ஆணாதிக்கச்‌ சமூகக்‌ கட்டமைப்பால்‌ பட்ட துயரத்தையும்‌ இடைவிடாத போராட்டத்தையும்‌ எண்ணிப்பார்க்க வைத்தது. குறத்தி பாடல்களும்‌ தாலாட்டும்‌ இடம்‌ பெற்றன.

“சைக்கிள்‌ ஓட்டக்‌ கத்துக்கணும்‌ தங்கச்சி' என்ற பாடல்‌, ஒரு வாகனம்‌ ஓட்டக்‌ கற்றுக்கொள்ளுதல்‌ பெண்களுக்கு வாழ்வை எளிமைப்படுத்துவோடு அவர்கள்‌ சுதந்திரமாக வாழத்‌ துணை புரிகிறது என்பதை உணர்த்தியது.

“அவர்‌ விம்மி விம்மி விம்மி விம்மியழுங்‌ குரல்‌ கேட்டிருப்பாய்‌
காற்றே, துன்பக்‌ கேணியிலே - எங்கள்‌ பெண்கள்‌ அழுத சொல்‌”

என்று நாட்டை நினைப்பாரோ எனும்‌ பாடல்‌ வரிகள்‌ காற்றில்‌ கலந்து எதிரொலித்தன.

“ஈரம்‌ மறுக்கப்பட்ட எல்லா கரைகளிலும்‌ ஆயிரம்‌ முலைகள்‌
அமுதசுரபிகளாய்‌ நதியும்‌ அவ்வாறு நடந்தது”

“கற்பு, கற்பு என்று சொல்லி கதை அளக்கும்‌ புராணங்களைக்‌
கேட்டால்‌ எனக்குக்‌ கோபம்‌ வருதம்மா”

யாரு யாரு யாரு நீ? கேள்வி கேட்க யாரு நீ?”

போன்ற பாடல்கள்‌ சமூக அரசியல்‌ கட்டமைப்பை எதிர்க்கும்‌ குரலாக அமைந்தது.

நாடகம்‌ ஒரு கூட்டு முயற்சி, இந்தத்‌ திருவிழாவும்‌ அப்படியே நிகழ்ந்தது. குலவைக்காகப்‌ பல தன்‌ ஆர்வலர்கள்‌ ஒன்று இணைந்தனர்‌. நாடகங்கள்‌ தொடங்குவதற்கு முன்‌ மேடையைத்‌ தயார்‌ செய்தல்‌, பார்வையாளர்களை முறையே வழிநடத்துதல்‌, “தமிழ்‌ பெண்ணிய நாடக விழா” எனும்‌ சட்டையை அவர்கள்‌ அணிந்திருந்ததால்‌ எவ்வித உதவிக்கும்‌ எளிமையாக அவர்களை அணுக முடிந்தது. அரங்கிற்கு வெளியே புத்தக விற்பனை நடைபெற்றது. கழிவு விலையில்‌ பல நூல்களை மக்கள்‌
வாங்கிப்‌ பயனடைந்தனர்‌. குலவையில்‌ கலந்து கொள்ள இலவச அனுமதியோடு இரு வேளை உணவும்‌ தேனீரும்‌ வழங்கியது, எல்லோரும்‌ ஒன்றாக அமர்ந்து உண்டது விழாவின்‌ தனிச்சிறப்பு.

நாடகங்கள்‌ அரங்கேறும்‌ பொழுது திரையில்‌ அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும்‌ (சப்டைட்டில்ஸ்‌) காட்சிப்படுத்தியது பார்வையாளர்களுக்கு முழுமையான அனுபவத்தைத்‌ தந்தது.

ஆங்கில சப்டைட்டில்களைக்‌ கையாள்பவர்‌, அந்த நாடகத்தை ஆழமாக உள்வாங்குதலும்‌ ஒவ்வொரு நாடகக்‌ கலைஞரின்‌ வசன வேகத்திற்கு ஏற்பக்‌ காட்சிப்படுத்தப்‌ பயிலுதலும்‌ இன்றியமையாதது. இந்த முயற்சி பெரும்பான்மையான நாடகங்கள்‌ அரங்கேறிய பொழுது வெற்றி அடைந்தது எனினும்‌ சில இடங்களில்‌ நாடகக்‌ கலைஞர்களின்‌ வசனத்தைக்‌ காட்டிலும்‌ திரையில்‌ ஆங்கில சப்டைட்டில்கள்‌ முன்னதாகவோ தாமதமாகவோ தென்பட்டது.

1980 தொடங்கி மங்கையின்‌ நாடக மேடைப்‌ பொருட்கள்‌, புகைப்படங்கள்‌, அவர்‌ குறிப்பேட்டின்‌ சில பக்கங்கள்‌, ஆடை வடிவமைப்பு வரைபடங்கள்‌, கைப்படத்‌ தோழர்கள்‌ எழுதிய வாழ்த்துகள்‌, அழைப்பிதழ்கள்‌, பத்திரிகைக்‌ கட்டுரைகள்‌ கண்காட்சியில்‌ இடம்பெற்றன. மட்டக்களப்பு நியாய நடை 2022 மே மாதம்‌, இலங்கையில்‌ நடந்த நாடுதழுவிய போராட்டத்தில்‌ தினமும்‌ நடையில்‌ கலந்து கொள்வோர்‌ பிடித்துச்‌ சென்ற முழக்கங்களைச்‌ சுமந்த முழு நீளச்‌ சேலை
ஒன்றும்‌ காட்சிப்படுத்தப்பட்டது. கண்காட்சியில்‌ நாங்க ரெடி, சிரிப்புதான்‌ வருது, காற்று, கிரேவ்‌ டிக்கர்‌, பனித்தீ, ஏர்வாடி, ஸ்த்ரீ பர்வம்‌, வாக்குமூலம்‌, ஒளவை, சஞ்சாரி, யாது தம்‌ ஊர்‌, பல்‌ சான்றீரே, சுடலையம்மா, குறிஞ்சிப்பாட்டு, கறுப்பி போன்ற நாடகங்களிலிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும்‌ வசனங்கள்‌
வைக்கப்பட்டிருந்தன.

திரையில்‌ முழு நாடகங்களைக்‌ காண வழிவகை செய்யும்‌ வலையொளிப்‌ பக்கத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ க்விக்‌ ரெஸ்பான்ஸ்‌ கோட்‌ இருந்தது. நாடகக்‌ குழுவின்‌ பயணம்‌ மேடைக்குப்‌ பின்‌ எவ்வாறு இருக்கும்‌ என்பதை உணர இக்கண்காட்சி உதவியது. பார்வையாளர்களுக்கும்‌ தம்‌ உள்ளக்‌ கருத்தை வெளிப்படுத்த இடம்‌ ஒதுக்கப்பட்டிருந்தது.

டீ மற்றும்‌ சுரேன்‌ வடிவமைத்த இந்தக்‌ கண்காட்சி ஜூன்‌ 6 முதல்‌ 10 வரை அலையன்ஸ்‌ பிரான்சிஸின்‌ தரைத்தளத்தில்‌ திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குலவை 2025 எண்ணற்ற வினாக்களை எழுப்பி விடைகளைக்‌ கண்டறியும்‌ பாதையையும்‌ வகுத்துத்‌ தந்துள்ளது.

இறுதி நாள்‌ மங்கை தன்‌ உரையில்‌,

“என்றும்‌ புதிதாய்‌ கற்க வேண்டும்‌
என்‌ தோள்‌ மீது நின்று அடுத்த தலைமுறை
எல்லை விரிக்க வேண்டும்‌”

என்று தன்‌ கவிதையைச்‌ சொல்லி முடித்தார்‌.

மேலும்‌ இந்த இரண்டு நாள்கள்‌, மங்கையின்‌ அரங்கப்பயணத்தில்‌ இடைவெளியற்ற படைப்பூக்கத்துடன்‌ பயணித்த மறைந்த மக்கள்‌ கவிஞர்‌ இன்குலாப்‌, பெண்ணிய வரலாற்று ஆசிரியர்‌ வ.கீதா, தமிழக வேர்களைத்‌ தூரிகையால்‌ தீட்டும்‌ ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு மரியாதை செய்யும்‌ நிகழ்வாகவும்‌ அமைந்தது.

குலவை - பெண்கள்‌, க்வீர்‌ சமூகத்தினரின்‌ போராட்டத்தை உரக்கப்‌ பேசியது. எதிர்ப்பை எவ்விதத்‌ தயக்கமும்‌ இன்றி முன்வைத்தது. வாழ்க்கையே போராட்டம்‌ தான்‌ எனும்‌ நிலையில்‌ இரண்டு நாள்கள்‌ ஒன்றிணைந்து ஒருவரையொருவர்‌ அரவணைத்துக்‌ கொண்டாடித்‌ தீர்த்த திருவிழா - குலவை.

குலவையுடன்‌ விழா நிறைவுற்றது.

தமிழ்‌ பெண்ணிய நாடக வெளியில்‌ அறிவின்‌, சமத்துவத்தின்‌, அன்பின்‌ ஒளி மேலும்‌ பரவ வேண்டும்‌ என்ற குலவையின்‌ நோக்கம்‌ நிறைவேறட்டும்‌.

- நந்தினி மா,
முனைவர்‌ பட்ட ஆய்வாளர்‌,
முதுகலைத்‌ தமிழியல்‌ மற்றும்‌
உயராய்வுத்‌ துறை,
செல்லம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி,
கிண்டி, சென்னை - 600 032.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.