தமிழக வரலாற்றில் 2000 ஆண்டுகளில் ஆண்ட மன்னர் பரம்பரையினரில் "கரிகாலன், மகேந்திர பல்லவன், ராஜராஜன், சரபோஜி" என சில மன்னர்கள் ஏதோ சூழ்நிலையில் தொடர்ந்து நினைக்கப்படுகிறார்கள். இதற்கு இவர்கள் செய்த ஒரு சாதனை அல்லது பிரமிப்பு ஏதோ ஒன்று காரணம்.

காவிரியாற்றில் ஒருவன் அணை கட்டினான். ஒருவன் கடற்கரைப் பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோவில்களை அமைத்தான். ஒருவன் உலகமே வியக்கும் பிரம்மாண்டமான கோவிலைக் கட்டினான். ஒருவன் பெரிய நூல் நிலையத்தை உருவாக்கினான். இவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் நினைக்கப்படுகிறார்கள். இப்படியான செயல்பாடுகளுடன் அழியாத இலக்கியங்களைப் படைத்த அரசர்களும் நினைக்கப்படுகிறார்கள்

தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் சிலர் தனிப்பாடல்களையோ சிறு இலக்கியங்களையோ படைத்திருக்கிறார்கள். இவர்கள் தமிழில் எழுதியவர்கள். சமஸ்கிருதத்தில் எழுதி தென்னிந்தியாவில் தன் புகழை நிறுத்தி வாழ்ந்து கொண்டிருப்பவன் பல்லவ அரசர்களில் முக்கியமானவனாகக் கருதப்படும் முதல் மகேந்திரவர்மன்.pallava sculpturesபல்லவர்கள் கிபி 250 முதல் 949 வரை 700 ஆண்டுகள் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டு இருக்கிறார்கள். இவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம். பல்லவ மன்னர்களில் முதல் மகேந்திரவர்மன் (590-630) 40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவன்.

இவனது தந்தை சிம்ம விஷ்ணு. மகேந்திரனின் நாடு கிருஷ்ணா நதி வரை இருந்தது. வட கேரளத்திலும் இவரது செல்வாக்கு இருந்தது. இவன் சமணனாக இருந்து சைவத்திற்கு மாறியவன். இவனது சமகாலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசர் இவனுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்.

மகேந்திர பல்லவனுக்கு நிறையப் பட்டப்பெயர்கள் உண்டு. அவற்றில் ஒன்று மத்த விலாசன். மகேந்திரவர்மன் அமைத்த மாமண்டூர் குகையில் உள்ள நீண்ட கல்வெட்டில் ஆறாவது வரியில் மத்த விலாசன் என்ற பெயர் வருகிறது. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் (Uol 4 - P888) இருக்கிறது (A.R.E. Report Madras 1928 P145).

இந்தக் கல்வெட்டை ஆராய்ந்தவர்கள் மத்த விலாசம் என்பது ஒரு நாடகத்தைக் குறிப்பது; அதை எழுதியவன் இந்த மகேந்திர வர்மன். அந்தப் பெயரால் இவன் அழைக்கப்பட்டு இருக்கிறான் என்பதையெல்லாம் முழுமையாகக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நாடகத்தின் பிரதி தமிழகத்திலும் கிடைக்கவில்லை. ஆனால் கேரளத்தில் மத்த விலாசம் நாடகத்தின் பிரதியும் மகேந்திரன் எழுதியதாக கருதப்படும் பகவதஜ்ஜீக பிரகசனம் என்ற நாடகத்தின் பிரதியும் கிடைத்தன.

இந்த நாடகங்கள் திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் சமஸ்கிருதத்துறை வழி வெளிவந்தது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அன்றைய திருவாங்கூரின் ஒரு பகுதியாகவும் இப்போது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்த்திவசேகரபுரம் என்ற ஊரில் கவி பாசனின் சுவப்பன வாசவதத்தா என்ற நாடகத்தின் பாடபேதம் இல்லாத ஏடு கிடைத்தது. இதைக் கணபதி சாஸ்திரி என்பவர் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார். பின்னர் இதன் தமிழ் மொழிபெயர்ப்பும் வந்தது (கணபதி சாஸ்திரி கலைமகள் 1954).

மகேந்திர வர்ம பல்லவன் மத்த விலாச பிரகசனம், பகவதஜ்ஜீக பிரகசனம் ஆகிய இரண்டு சமஸ்கிருத நாடகங்களை எழுதியுள்ளான். இவற்றில் மத்த விலாச பிரகசனம் மகேந்திரவர்மன் எழுதியது என்பதில் பல்லவ வரலாற்று ஆசிரியர்களிடம் சந்தேகமில்லை. இந்த நாடகத்தின் பெயர் மகேந்திரவர்மனின் மாமண்டூர் கல்வெட்டில் வருவதால் இது உறுதியாகிவிட்டது.

மாமண்டூர் கல்வெட்டில் பகவதஜ்ஜீகம் என்னும் சொல் வருகிறது. இது பகவதஜ்ஜீக பிரகஸன நாடகத்தைக் குறிக்கிறது என்று சொல்லுகின்றனர். இந்த நாடகம் மத்த விலாச பிரகசன நாடகத்தின் நடையை ஒத்துக் காணப்படுவதால் மகேந்திரவர்மன் இந்த நாடகத்தையும் எழுதி இருக்க வேண்டும் என்று சிலர் ஊகிக்கின்றனர்.

ஸ்ரீநிவாச சர்மா தன் வடமொழி நாடக இலக்கிய வரலாறு என்ற நூலில் (அண்ணாமலை பல்கலைக்கழகம் 1989) பகவதஜ்ஜீகம் நாடகத்தை போதான கவி எழுதினார். இவரது காலத்தைத் திட்டவட்டமாகக் கூற முடியாது எனினும் கவி பாசன் நாடகங்கள் தொகுத்த காலமே இந்த நூலின் காலம் என்கிறார் (ப.147).

மயிலை சீனி வேங்கடசாமியும் மகேந்திரவர்மன் மத்த விலாச நாடகத்தை எழுதினான், ஆனால் பகவதஜ்ஜீகம் நாடகத்தை எழுதவில்லை என்கிறார். மத்த விலாசம் நாடகத்தை அவன் எழுதியதற்கு மாமண்டூர், பல்லாவரம், திருச்சி குடைவரைக் கோவில்களில் உள்ள கல்வெட்டுக்கள் சான்று என்கிறார். இவர் கருத்துப்படி மத்த விலாசம் பெரும்பாலும் கி.பி. 620 இல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது மகேந்திரனின் 30 ஆவது ஆட்சி ஆண்டு ஆகும்.

பகவதஜ்ஜீகம் பிரகசனம் நாடகத்தின் ஏடு கிடைத்துள்ளது. அதில் மகேந்திரன் பெயர் இல்லை. நாடக மூலத்திலும் இவன் பெயர் இல்லை. இது போதாயனர் அல்லது பரத முனிவர் எழுதியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால் இந்த நாடகத்தைக் கேரளத்தில் பதிப்பித்த சிலரும் விமர்சித்த சிலரும் இது மகேந்திரன் எழுதிய நாடகம் என்று சொல்லுகின்றனர்.

மகேந்திரன் சமணனாய் இருந்து சைவனாக மாறிய பின்னர் எழுதிய மத்த விலாச நாடகத்தை எள்ளல் தொனியில் எழுதியிருக்கிறான். இந்த நாடகத்தின் மூலத்தில் வியப்தாபனி பாசனம் என்ற சொல் வருகிறது. இதற்கு உலகமாகிய பாத்திரத்தில் நிறையக் கடவது என்பது பொருள். இதில் வரும் அவனி பாகன் என்பது மகேந்திரன் பெயராகும். ஆகவே பகவதஜ்ஜீகம் நாடகத்தை மகேந்திரனே எழுதினான் என்று ஊகிக்கின்றனர்.

சமஸ்கிருத பிரகசன (நகைச்சுவை) நாடகங்களை சுத்தம் விசித்தம், சங்கீரணம் என்று மூன்றாகப் பகுப்பர். இவற்றில் மத்த விலாசம் சுத்த பிரகசன வகையில் அடங்கும்.

மத்த விலாசம் நாடகத்தின் ஆரம்பத்தில் நடிகை (நடி) நாம்-- வெற்றியை உரிமையாக்கப் போகிற கவிஞன் யார் என்று சூத்திரதாரியிடம் கேட்கிறாள். அதற்கு சூத்திரதாரி "கேள் அன்பே அவர்தான் ஸ்ரீ மகேந்திர விக்கிரமன் என்னும் பெயர் கொண்ட ராஜாதி ராஜ பல்லவ வம்சத்தின் பெருமலை சிம்ம விஷ்ணு வர்மனின் மகன் அவரையே இந்த நாடகத்தின் ஆசிரியர்" என்கிறான். அவள் அப்படியானால் "ஏன் தாமதம் அபூர்வமான இந்த நாடகத்தை உடனே நடத்த வேண்டும்" என்கிறாள்

சூத்திரதாரியிடம் நடிகை "இந்த வயோதிக காலத்தில் இளமையான பாத்திரங்களைக் கொண்ட போதை களிப்பு பற்றிய கேலி நாடகத்தை நடத்த வந்திருக்கிறீர் " என்கிறாள். அதாவது இந்த நாடகம் நகைச்சுவை நாடகம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறாள்

 பகவதஜ்ஜீகம் நாடகத்தின் ஆரம்பத்தில் சூத்திரதாரி விதூசகனிடம் பத்து வகை நாடகங்களின் பெயர்களைச் சொல்லுகிறான்.

வார      -     நாடகம்

இஹம்ரி க     -     ஒரு தலை காதல்

திம       -     முற்றுகையிடல்

சமவக்கார -     தொடர்பற்று துவங்கி                      ஒன்றாகக் கூடி வரும் நாடகம்

வியா யோக    -     போர் பூசல்

பாண     -     ஓர் ஆள் காதல் வீரம்

சல்லாப   -     தொடர்பற்ற பேச்சு                       உரையாடல்

வீதி      -     ஒருவர் அல்லது இருவர்

உத்சிரிஷ்டி காங்க -  ஓரங்கம்

பிரகசனம் -     எள்ளல்

இப்படி எல்லாம் சொல்லிவிட்டு நான் பிரகசன நாடகத்தை நடத்தப் போகிறேன் என்கிறான்.

மத்த விலாச நாடகத்தை முதலில் திருவிதாங்கூர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறையினர் பதிப்பித்தனர் (1917). இதன் பிறகு தொடர்ந்து பகவதஜ்ஜீகம் வந்தது. இதன் பிறகு மத்த விலாசத்தில் பல பதிப்புகள் வந்துவிட்டன.

 காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்ட அரசன் எழுதிய சமஸ்கிருத நாடகங்கள் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. கேரளத்தில் எப்படி கிடைத்தது ? இதற்குப் பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.

 கேரளத்தின் வடபகுதி பல்லவனின் அதிகாரத்தில் இருந்தது. கேரளத்தில் எல்லா காலகட்டத்திலும் சமஸ்கிருத இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. கேரளக் கலைகள் சமஸ்கிருத இலக்கியங்களைப் போற்றி இருக்கின்றன. மத்தவிலாசம் கிடைத்ததற்கு இவை போன்ற காரணங்களைக் கூறலாம்.

கேரளத்து சமஸ்கிருத அறிஞர்கள் பாஷன், காளிதாசன். சூத்ரகன் என்னும் ஆளுமைகளை அறிந்திருக்கின்றனர். இவர்களின் நாடக ஏடுகள் கேரளத்தில் கிடைத்திருக்கின்றன. மத்த விலாசம் கேரள அறிஞர்களால் சாதாரணமாய் படிக்கப்பட்டிருக்கலாம்.

தமிழகத்தில் எழுதப்பட்ட மத்த விலாசம் கேரளத்தில் கிடைத்ததற்கு இன்னும் ஒரு முக்கியமான காரணம் உண்டு. இந்த நாடகம் கேரளத்தில் பல ஆண்டுகளாய் நடிக்கப்பட்டு இருக்கிறது. மத்த விலாசத்தை மையமாகக் கொண்டு நடந்த கூடியாட்டம் என்னும் கலை இப்போதும் வழக்கில் உள்ளது.

 கேரளத்தில் மிக பழைய கலையான கூடியாட்டம் நிகழ்வில் மத்த விலாசம் சமஸ்கிருத மொழியில் நடந்திருக்கிறது. கூடியாட்டம் நாடகம், இசை எனக் கலந்து நடப்பது. இதன் முக்கிய நுட்பமாக அபிநயம் (வெளிப்பாடு), அங்கிகா (உடல் அசைவு) வக்கி கா (பேசும் வார்த்தை) ஆகார்யா (ஆடை அலங்காரம்) சாத்திகா (உணவு) ஆகியவற்றைக் கூறுகின்றனர்.

 இந்தியாவில் இன்று எஞ்சி இருக்கும் சமஸ்கிருத நாடக வடிவம் கூடியாட்டம். இந்தக் கலையை சாக்கையர் (ஆண்கள்) நங்கையர் (பெண்கள்) நடத்துகின்றனர். இந்தக் கலையை நடத்துவதற்குக் கோவில்களில் கூத்தம்பலம் உண்டு. புகழ்பெற்றக் கூடியாட்டக் கலைஞர் பைங்குளம் நாராயண சாக்கையார் இதற்கு அங்கீகாரம் வாங்கிக்  கொடுத்துள்ளார். இந்தக் கலை ஐக்கிய நாட்டு கழகத்தின் அங்கீகாரம் பெற்றது.

மத்த விலாசத்தில் மகேந்திரனின் மதச்சார்பு வெளிப்படையாகத் தெரிகிறது. மகேந்திரன் சமணனாக இருந்து பின் சைவன் ஆனவன். ஒரு வகையில் கூறுவதாக இருந்தால் சமணம் தமிழத்துக்கு வந்த 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த நாடகம் எழுதப்பட்ட காலத்தில் காஞ்சிபுரத்துக்கு வந்த சீன யாத்திரிகன் யுவான் சுவாங் காஞ்சி நகரத்தில் புத்த விகாரைகள் நிறைய இருந்தன; தர்மபாலர் இருந்தார் என்கிறான். அந்தக் காலத்தில் காஞ்சியில் இருந்தது மகாயான பௌத்தம். பல்லவ அரசர்கள் பௌத்தர்களுக்கு நிபந்தம் கொடுத்தது குறித்த செய்தி கிடைக்கவில்லை.

மத்த விலாசத்தில் சைவத்தின் ஒரு பிரிவான கபாலிகம் பின்னணியாக வருகிறது. மகேந்திரன் காலத்தில் காஞ்சியில் கபாலிகம் இருந்தது. சைவத்தில் ஒரு பிரிவான மாவிரதியருடன் காபாலிகர் கொள்கை தொடர்பு உடையவர். இவர்கள் முறைப்படி தீட்சை பெற்றவர். பைரவரை வணங்குபவர். உடம்பில் நீறு பூசிக் கொள்வர். கழுத்தில் மண்டையோட்டு மாலை போட்டுக் கொள்ளுபவர். இடது கையில் காபாலம் இருக்கும்.

வடநாட்டில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான சமயப் பிரிவுகளில் கபாலிகம் ஒன்று. இதை பிற சைவர்கள் வெறுத்திருக்கின்றனர். மண்டை ஓட்டில் யாசகம் பெறும் இந்தப் பிரிவினரை மத்த விலாசம் எள்ளல் தொனியுடன் விமர்சிக்கிறது.

இசைத்தன்மையுடன் கூடிய மத்த விலாசத்தில் 23 பாடல்கள் உள்ளன. காஞ்சிபுரத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாடகத்தில் ஏகாம்பரநாதர் கோவிலின் மத்தள ஓசை, பூக்கடைகள், இளம் மங்கையர்கள் வீதியில் செல்லுதல். மதுக்கடைகளில் சலசலப்பு, அதிகாரிகள் லஞ்சம் வாங்குதல் எனப் பல சமகாலச் செய்திகள் வருகின்றன.

பௌத்தர்களின் மேல் நிறைய குற்றச்சாட்டுகளை இந்த நாடகம் முன் வைக்கிறது. புத்தர்கள் வேதம் மகாபாரதம் போன்றவற்றிலிருந்து கருத்துக்களைத் திருடினார்கள். பௌத்தம் மது, மாது இரண்டையும் ஒதுக்கியது குறித்த மனத்தாங்கல் பௌத்தர்களுக்கு இருந்தது. விகாரைகளுக்குச் சொந்தமான வருமானத்தை பௌத்த பிட்சுகள் அனுபவித்தார்கள். அவர்களிடம் ஒழுக்கம் இல்லை. இப்படியான குற்றச்சாட்டுகள் நாடகத்தில் வெளிப்படையாக வருகிறது.

ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் உள்ள தான் தோன்றி ஈஸ்வரர் கோவில் சுவரில் மத்த விலாசம் சிற்பங்கள் உள்ளன.

மயிலை சீனி வெங்கடசாமி, மகேந்திர வர்மன் என்ற நூலின் பின்னிணைப்பில் மத்த விலாச நாடகத்தை மொழிபெயர்த்துக் கொடுத்து இருக்கிறார். தமிழில் பிரளயன் இந்த நாடகத்தை சில மாற்றங்களுடன் மேடை ஏற்றி இருக்கிறார். பேராசிரியர் பாலுச்சாமி மத்த விலாச நாடகத்தை விரிவாக ஆராய்ந்து இருக்கிறார். (2023).

பின் இணைப்பு எண் 1

மத்தவிலாச பிரகசன நாடகச் சுருக்கம்

கதாபாத்திரங்கள்:

சூத்திரதாரி,

நடிகை ஆத்திரதாரியின் மனைவி (நடி)

கபாலிகன் (சத்திய சோமா)

தேவ சோமா (சத்திய சோமாவின் காதலி)

புத்த துறவி (நாக சேனன்))

பாசுபதன் (பாப்ரு கல்பன்)

உன்மத்தன்(பைத்தியக்காரன்)

சூத்திரதாரி உலகை இயக்கும் இறைவனை வணங்குகிறான். தனது இரண்டாம் மனைவி காரணமாக கோபம் கொண்டிருக்கும் மூத்த மனைவியை மகிழ்விக்க வேண்டும் என்று அரச சபையில் ஒரு நாடகம் நடத்த கேட்டுக் கொண்டார்கள். இது நல்ல வாய்ப்பு அவளை கேட்போம் என்று சொல்லிக் கொள்ளுகிறான்.

சூத்திரதாரியின் முதல் மனைவி வருகிறாள். கணவனிடம் "உமக்கு வயதாகிவிட்டது இளம் பாத்திரங்களை வைத்துக்கொண்டு நாடகம் நடத்த போகிறீரா" என்று கிண்டலாக கேட்கிறாள். அதற்கு சூத்திரதாரி "உன்னை வைத்துத்தான் நடத்தப் போகிறேன்" என்கிறான்.

 அவள் "இல்லை உன் இரண்டாம் காதலியை வைத்து நடத்து" என்கிறாள். அவன் "உன் நடிப்பு மேடைக்குப் பொருத்தமானது பார்வையாளர்களுக்கு பிடிக்கும்" என்கிறான். அவள் அவனது புகழ்ச்சிக்கு மயங்கி "என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறாய்" என்று கேட்கிறாள்.

சூத்திரதாரி "போதை களிப்பு நாடகம். இது கிண்டலானது" என்கிறான். அவள் இதை நடத்துபவர் யார் எனக் கேட்கிறாள். சூத்திரதாரி " மகேந்திரவர்மன் சிம்ம விஷ்ணுவின் மகன்" என்கிறான்

 அவள் "ஆஹா நல்லது சீக்கிரம் நாடகத்தை நடத்து" என்கிறாள்

 இந்த நேரத்தில் அரங்கத்தின் பின்னே இருந்து குரல் கேட்கிறது. கபாலிகன் ஒருவன் அன்பே தேவ சோமா என அழைக்கிறான்.

 சூத்திரதாரியின் அறிமுக உரை முடிகிறது

கபாலிகன் தன் இளம் காதலியுடன் வருகிறான். குடி போதையில் பேசுகிறான். "அன்பே தேவ சோமா ஒருவன் தான் விரும்பிய வடிவத்தை அடைய தவம் செய்யலாம். நீயோ பேரழகு வடிவத்தை எடுத்து விட்டாய்" என்கிறான். அவள் "எனக்கு மயக்கம் வருகிறது. விழுந்து விடுவேனா" என்கிறாள். கபாலிகன் அவளைத் தாங்கிப் பிடிக்கிறான்.

தேவ சோமா என்னும் பெயருடைய அவளை சோமதேவா என அழைக்கிறான். அவளோ "ஓஹோ இந்தப் பெயர் உடைய ஒருத்தி உனக்கு இருக்கிறாளா" என்று கேட்கிறாள். கபாலி "என் குடி என்னை இப்படி ஆக்கிவிட்டது: இனிமேல் குடிக்க மாட்டேன்" என்கிறான். அவளோ அவன் காலில் விழுந்து "உங்கள் தவமே குடிதான். அதை நிறுத்த வேண்டாம்" என்கிறாள்.

அவன் அவளைத் தழுவிக் கொள்ளுகிறான். "சிவன் "வாழ்க" என்கிறான். தேவ சோமா சமணர்கள் வேறு மாதிரி விளக்கம் தருகிறார்களே என்கிறாள்.கபாலி அவர்கள் நாத்திகர்கள் 'நீசர்கள்' நிந்தனைக்குக் கூட தகுதியற்றவர்கள். அவர்களைப் பற்றிப் பேசிய வாயை மதுவால் கழுவ வேண்டும்" என்கிறான்.

தேவ சோமா "சரி வேறு மதுக்கடைக்கு போவோம்" என்கிறாள். இருவரும் நடக்கிறார்கள். கபாலி காஞ்சிபுரம் நகரை வர்ணிக்கிறான். அவர்கள் மதுக்கடையில் மது வாங்குகின்றனர். அவனுக்கு மதுக்கடை வேள்விக் கூடமாகத் தெரிகிறது.

அவர்களின் மது போதை தெளிந்தது. அப்போது கபாலி என் கபாலத்தை காணவில்லை என்கிறான். அவளும் அதைத் தேடுகிறாள். கபாலி "அதில் பொரித்த இறைச்சி இருந்தது அதை நாயோ புத்த துறவியோ எடுத்திருக்கலாம்" என்கிறான். தேவ சோமா "காஞ்சி நகரம் முழுவதும் தேடுவோம்" என்கிறாள். இருவரும் தெரு வழியே நடக்கிறார்கள்

 இந்த நேரத்தில் ஒரு புத்த துறவி வந்து கொண்டிருக்கிறான். அவன் தனக்குள் பேசிக் கொள்கிறான். "இந்த புத்தர் மது மாது இரண்டையும் ஏன் விடச் சொன்னார். உண்மையில் அவர் சொன்னாரா அல்லது புத்தபிடகத்தில் மறைத்து விட்டார்களா மூல பாடத்தை தேட வேண்டும். புத்தர் சொன்ன முழுமையான விஷயத்தை கண்டுபிடிக்கலாம்" என்று சொல்லிக் கொள்ளுகிறார்.

தேவ சோமா அந்த புத்த துறவியைப் பார்க்கிறாள். "வந்து கொண்டிருக்கின்ற புத்த பிட்சுவைப் பார். அவன் ஒரு பாத்திரத்தை மறைத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பிடித்து விசாரிப்போம்" என்கிறாள்.

கபாலிகன் பிட்சுவை அழைக்கிறான். புத்த துறவிக்கு கபாலியுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை. கபாலிகையின் அழகு அவனைக் கவர்கிறது. கபாலிக்கும் பிட்சுவுக்கும் தர்க்கம் நடக்கிறது. புத்தத் துறவி " உன் மண்டை ஓட்டை நான் எடுக்கவில்லை" என்கிறான்.

கபாலனும் தேவ சோமாவும் புத்த துறவியைப் பிடித்து இழுக்கின்றனர். அவனது பாத்திரத்தைப் பறிக்கப் போகின்றனர். அவன் அவர்களை எட்டி உதைக்கின்றான். தேவ சோமா கீழே விழுந்து விடுகிறாள். புத்த துறவி அவள் எழுந்து நிற்க உதவுகிறான்.

 கபாலன் என் தேவசோமாவைப் புத்த துறவி தொட்டுவிட்டானே என்று ஓலமிடுகிறான். அப்போது பாசுபதன் ஒருவன் வருகிறான். கபாலன் அவனிடம் "புத்த துறவி செய்த காரியத்தைக் கேட்பாய். என் பாத்திரத்தை இவன் எடுத்து விட்டான்" என்கிறான்.

 பாசுபதன் மனதிற்குள் இந்த புத்த நாகசேனனை பழிவாங்குவதற்கு இது சந்தர்ப்பம். சத்திய சோமா உதவி செய்வான் என்று எண்ணுகிறான். அவன் துறவியிடம் உன் பாத்திரத்தைக் காட்டு என்கிறான். பிச்சு காட்டுகிறான். அது கருப்பு நிற பாத்திரம். தேவ சோமா இவன் என் கபாலத்தின் நிறத்தை மாற்றி விட்டான் என்று கூறுகிறான்.

அப்போது பாசுபதன் "உங்கள் வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வோம்" என்கிறான். தேவ சோமா "இந்த நாகசேனன் நீதிபதிகளுக்குப் பணம் கொடுத்து வாயை அடைத்து விடுவான்" என்கிறான்.

இந்தச் சமயத்தில் ஒரு பைத்தியக்காரன் வருகிறான். அவனிடம் கபாலம் இருக்கிறது அவன் "இதை ஒரு நாயிடம் நான் பெற்றேன்" என்கிறான். அதைக் கொடுக்க பைத்தியக்காரன் முதலில் மறுக்கிறான். கடைசியில் அவனிடமிருந்து கபாலத்தைப் பெறுகிறான் கபாலன். புத்த துறவியிடம் மன்னிப்பு கேட்கிறான். எல்லோரும் பிரிகின்றனர்

பின்னிணைப்பு எண் 2

பகவதஜ்ஜீக பிரசனம்

கதாபாத்திரங்கள்:

சூத்திரதாரி

விதூசகன் (கோமாளி)

பரிவிராசகர் (துறவி)

சாண்டில்யன் (பரிவிராசகரின் சீடன்)

ராஜ கணிகை (வசந்த சேனை இன்னொரு பெயர் அஜ்ஜூகா

மது காரிகா (பணிப்பெண்)

பரப்பிரிதிகா (பணிப்பெண்)

எமதூதன்

கணிகையின் "அம்மா

இராமிலகன் (வசந்த சேனையில் காதலன்)

மருத்துவர்

 சூத்திர தாரி சிவனை, வாழ்த்துகிறான். விதூசகன் சூத்திரதாரியிடம் "நான் குறி சொல்பவன் ஒருவனைச் சந்தித்தேன். அவன் நீ அரசரின் சபையில் ஒரு நாடகம் நடத்தப்போவதாகவும் அதற்கு உனக்கு சன்மானம் கிடைக்கும்" என்று சொன்னான். உடனே சூத்திரதாரி "நான் ஒரு அங்கத நாடகத்தை நடத்தப் போகிறேன் நீ அதை அறிந்து கொள்," என்றான்

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது திரையின் பின்புறத்தில் இருந்து சாண்டில்யா என யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது. அழைத்தவன் ஒரு துறவி. அவன் திரைக்கு முன்னே வருகிறான். மீண்டும் சாண்டில்யா சாண்டில்யா என அழைக்கிறான். அப்போது சாண்டில்யன் வருகிறான்

சாண்டில்யன் தனக்குத் தானே பேசுகிறான். "நான் அந்தணன், ஆனால் படிக்காதவன். வறுமையின் காரணமாக புத்த மதத்திற்குப் போனேன். அங்கு பலன் கிடைக்கவில்லை. இப்போது இந்த பண்டிதனுக்குப் பாத்திரம் சுமக்கிறேன்" என்று பேசிக்கொண்டே போகிறான்

குருதேவர் பரிவிராசகர் சாண்டில்யனிடம் ஆன்மா பற்றி பேசுகிறார். சீடனுக்கு விளங்கவில்லை சீடனும் குருவும் ஒரு சோலைக்குள் செல்கின்றனர். குரு அவனிடம் பாடம் சொல்லுகிறேன் கேள் என்கிறார். அவனுக்கு அதில் விருப்பமில்லை.

குரு அறிவு ஞானத்திற்கு வழிகாட்டுகிறது என்று சொல்லுகிறார். அவனோ சாப்பாடு விஷயத்தில் குறியாக இருக்கிறான். புத்த மதத்தில் இருந்த போது கேட்டதை எல்லாம் விவரிக்கிறான்.

இந்த நேரத்தில் ராஜ கணிகையான வசந்தசேனை இரண்டு பணிப்பெண்களுடன் சோலைக்கு வருகிறாள்.

ராஜகணிகை தன் பணிப்பெண்களுடன் சோலையில் ரம்யமான ஒரு இடத்தில் அமருகின்றாள். பணிப்பெண் கணிகையிடம் இனிமையான ஒரு பாட்டு பாடு என்கிறாள். கணிகை பாடுகிறாள்.

இந்தச் சோலையில் காதல் கடவுள் மன்மதன் நிற்கின்றான்

குயிலும் வண்டும் இசைக்கின்றன வில்லை

வளைக்கின்றான்

அரும்பை அம்பாக வைத்து நாணைப் பிடித்ததால் மனம் அலைகின்றது

என்று பாடுகிறாள்

இந்தப் பாட்டைக் கேட்ட பரிவிராசகரின் சீடன், சாண்டில்யன் மயக்கத்துடன் நிற்கின்றான். கணிகை தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறாள். சாண்டில்யன் பாட்டின் மயக்கத்தில் புலம்ப ஆரம்பித்தான். "குரு தேவனே இந்தப் பாடலின் மொழியும் குரலும் மட்டும் எனக்குக் கேட்கிறது" என்கிறான்.

 இந்த நேரத்தில் அந்தச் சோலைக்கு எம தூதன் வருகின்றான். எமதூதன் இந்தக் கணிகையின் ஆயுள் முடியப்போகிறது. அவளது உயிரை எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறான்.

 அப்போது கணிகை அசோக மரத்தின் அருகே செல்லுகிறாள். மரத்தில் உள்ள ஒரு மொட்டைப் பறிக்க முயன்ற போது எமதூதன் பாம்பாக மாறி அவளைக் கடித்து விடுகிறான்.

 கணிகை மயங்கி கீழே விழுகிறாள். பணிப்பெண் அவளைத் தூக்கி எடுக்கிறாள். அவள் இறந்து போனதை அறிந்து அரற்றுகிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சீடன் சாண்டில்யன் வருத்தப்படுகிறான்.

இதைக் கண்ட குரு "மூடனே உயிர் உடலைத் துறந்து விட்டது" என்கிறான். சீடனோ அவர் சொன்னதைக் கேட்காமல் இவளுக்காக நான் அழ வேண்டும் என்று சொல்லுகிறான்.

பணிப்பெண் சீடனிடம் "ஐயா இவளது உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள். இவனது தாயை அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடுகிறாள். சாண்டில்யன் அவளது உடல் அருகே அமர்ந்து கொண்டு புலம்புகிறான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குரு இந்த சீடனுக்கு ஆன்மா உண்டு என்பதைக் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார். உடனே இறந்து போன கணிகையின் உடலில் தன் உயிரைச் செலுத்துகிறார். கணிகை உயிர் பெற்று எழுந்து நின்றாள். குரு இறந்துவிட்டார்.

இந்த நேரத்தில் கணிகையின் அம்மாவைப் பணிப்பெண் அழைத்து வருகிறாள். கணிகையின் உடலில் இருந்த குருவின் ஆன்மா அவளது அம்மாவிடம் பேசியது. மூதாட்டியே என்னைத் தொடாதே என்றாள்.

கணிகையின் அம்மா திகைத்தாள். பாம்பு கடித்ததால் விஷம் தலைக்கேறி இவளுக்குப் பித்து பிடித்து விட்டதோ என்று நினைத்தாள். ஓடிப்போய் மருத்துவரை அழைத்து வருகிறாள்.

மருத்துவர் கணிகையிடம் பேசுகிறார். கணிகையோ மருத்துவரிடம் பேசிய பேச்சு சுற்றி இருந்தவர்களுக்கு மயக்கத்தை உண்டாக்குகிறது. அவளுக்கும் பித்து பிடித்து விட்டது என்று எல்லோரும் நினைக்கின்றனர்.

இந்த நேரத்தில் எமதூதன் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. குருவின் உடம்பில் கணிகையின் ஆன்மாவைப் புகுத்தினால் என்ன என்று நினைக்கிறான். அப்படியே செய்கிறான்.

குரு எழுந்து நிற்கிறார். பணிப்பெண்ணைப் பார்க்கிறார். என்னை அணைத்துக் கொள் என்கிறார். சீடன் விழிக்கிறான். இறந்து போனவர் எப்படி பிழைத்தார் என்று தெரியாமல் திகைக்கிறான்.

குரு பணிப்பெண்ணைப் பார்த்து என்னை அணைத்துக் கொள் என்று மீண்டும் சொல்லுகிறார். அவள் விலகி ஓடுகிறாள். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நேரத்தில் கணிகையின் தாய் மகளை அழைக்கிறாள். அவள் தத்துவம் பேசுகிறாள்.

பக்கத்தில் இருக்கும் மருத்துவர் நான் குளிகையைப் பொடி செய்து தருகிறேன். அவளுக்குக் கொடு. அவளைப் பாம்பு கடிக்கவில்லை. பேய் பிடித்திருக்கிறது என்கிறார்.

 கணிகை "முட்டாள் வைத்தியனே உனக்கு சரியாக பேசவே தெரியவில்லை" என்று விளக்கம் கொடுக்கிறாள். மருத்துவன் "இவளை இலக்கணம் படித்த பாம்பு கடித்து இருக்கிறது. இவளிடம் பேச முடியாது" என்கிறான்.

 இப்படியான விவாதம் நடந்து கொண்டிருந்த போது எமதூதன் வருகிறான். இங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. இது நல்லதல்ல. இருவரின் ஆன்மாவையும் மாற்றி விடுகிறேன். அப்போதுதான் குழப்பம் தீரும் என்று நினைக்கிறான். இருவரின் உடல்களிலும் ஆன்மாவையும் மாற்றி விடுகிறான்.

இப்போது கணிகையின் உடலில் அவளது ஆன்மா வந்துவிட்டது. குருவின் ஆன்மா அவரது உடலில் புகுந்து விட்டது. குரு பழையபடி தத்துவம் பேசுகிறார். கணிகையும் பழைய நினைவில் பேச ஆரம்பிக்கிறாள்.

அவளுக்கு இப்போது நினைவு வந்துவிட்டது. கணிகையாகி விட்டாள். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. குரு சீடனிடம், வா நம் இடத்திற்குப் போவோம். ஆன்மா வேறு. உடல் வேறு என்பதை உனக்குப் புரிய வைக்கிறேன் என்கிறார்..

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.