பெருஞ்சித்திரனார் காலத்தில் கவியரசர்கள் கவிச்சக்கரவர்த்திகள் கவிக்கோக்கள் எனப் பெயர் சூட்டிக் கொண்டவர்கள் கவிஞர்களாக இருந்து வந்தார்கள்.

துரை மாணிக்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பாவலரேறு என்பதைத் தன்னுடைய பாத்திறனுக்கு முன் ஒட்டாக வரித்துக் கொண்டார். ஏறு என்பது தமிழ்த்திணை கருப்பொருளில் இருந்து (பதினான்குள் ஒன்றாகிய) எடுத்தாண்டதுதான். பாவலரேறுவுக்குள் அரசோ, கோக்கலோ, சக்கரவர்த்திகளோ எதுவும் இல்லை.

கண்ணதாசன்களாகவும் கம்பதாசன்களாகவும் ஆழ்வாருக்கு அடியான்களாகவும் கவிஞர்கள் புனைப்பெயரில் வெளிப்பட்டு கொண்டிருந்த காலத்தில் திணை இலக்கியக் கவிஞனாகப் பெருஞ்சித்திரனாரைத் தமிழ்ச் சமூகத்தின் மீள் நினைவுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்.

பாவலரேறு என்றாலே முதன்மை நிலையிலே நமக்குத் தெளிவு கிடைத்து விடுகிறது. எந்த விழுமியங்களைத் தமது வருகையின் மூலம் வெளிப்படுத்த எண்ணுகிறார் என்பதே மிக முக்கியமானதாகும். பாவலரேறு அவர் காலத்திய முக்கிய சிக்கலை அவர் எதிர்கொண்டவகைதான் அவரது மேன்மையான ஆளுமையாகும்.

perunchiththiranarஅவர் காலத்திய குறிப்பான சிக்கலை அவரின் மேதமையால் எதிர்கொண்டு வந்தார். அதில் தான் பாவலரேறுவின் சிறப்பு இருக்கிறது.

பாவலரேறுவின் காலக்கட்டம் மிக முக்கிய உரையாடலுக்கு உரியன. குறிப்பாக 80-கள்,90-களின் காலக்கட்டம் என்பது இந்தியத் தேசியத்தினுடைய சிக்கல் வாய்ந்த கட்டமாகும் 80 -கள் முடிவு வரை சோவியத் தகர்வு நடந்து முடியவில்லை. சோவியத்துத் தகர்வுக்குப் பிறகு ஒரு துருவமயமாதல் உலகம் நடந்தேறுகிறது. பின்னர்தான் பலரும் ஐரோப்பிய, அமெரிக்க உலகவயமாதலை நோக்கி நகர்கிறார்கள். அதுவரை இந்திய நாடு சோவியத்து யூனியனோடு ஒரு நல்லுறவைப் பேணி வருகிறது. தொடர்ச்சியாகக் காட்டிக் கொள்கிறது. ஆனால் அடி ஆழத்தில் உள்ளுர நீர் பூத்த நெருப்பாய் 'இந்துத்துவம்’ புதைந்துள்ளது. வெளிப்புறத்தில் ஓர் அயலுறவு கொள்கையாகச் சோவியத் ரசியஆதரவு உள்ளதைப் பார்க்கிறோம். இவ்விடத்து நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. ரஷ்யாவை விட்டால் அன்றைய நிலையில் வேறு மாற்று என்ன? இரும்புத் தொழிலோ கனரக தொழிலோ என்ற வகையில் இந்தியாவுக்கு உதவுபவர்கள் அவர்களைத் தவிர வேறு யாரும் இலர்.

சோவியத்துத் தகர்வுக்குப் பிறகு இந்தியா விரைவாக உருண்டோடிப் போய் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதரவு நிலைக்குப் போய்விடும் தந்திரம். இந்த உலகவயக் கட்டத்தில் இன விடுதலை, மொழி விடுதலை, பண்பாட்டு விடுதலை, சமூக விடுதலை என்கிற கருத்தோட்டமெல்லாம் இந்திய அரசு ஏற்றால்தான் உண்டு. தூக்கி எறிந்தால் ஒன்றும் செய்ய இயலாத அவலம். கூட்டாட்சியாகவும் இல்லை. அரசமைப்பு உறுதி அளித்த மொழி, பண்பாடு, மாநில உரிமை போன்ற தனித்துவங்களைப் பேணிக் கொள்ளுதல் என்கிற எந்த மரியாதையும் அளிக்காத ஏதேச்சை அதிகார இந்திய அரசாக இயங்குவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

இந்தப் புள்ளியில்தான் பாவலரேறு தொடர்ந்து எது நீதியானது? எது வரலாற்றுப் பூர்வமானது? என்கிற உரையாடலை ஆற்றல் மிகு மொழியில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். மூன்று செய்திகளின் ஓர் இணைப்பு புள்ளியாகப் பாவலரேறு திகழ்ந்தார்.

ஒன்று : மறைமலை அடிகள் வழிகளான தனித்தமிழ் இயக்கத் தொடர்ச்சி.

இரண்டு : பெரியார் ஈ.வே.இரா.வழியிலான சுயமரியாதை இயக்கத் தொடர்ச்சி.

மூன்று : பாராளுமன்றவாதக் கம்யூனிஸ்டுகள் மீதானஅவ நம்பிக்கையிலிருந்து வெடித்துக் கிளம்பிய மார்க்சிய, இலெனினியத் தொடர்ச்சி.

இம்மூன்றின் சங்கமமும் இதை மொழிப்படுத்தும் போதொரு திணை இலக்கியத் தமிழுமான ஒன்றாகப் பாவலரேறுவை வரையறுக்கலாம். இதன் துணையாகப் பாரதிதாசனின் மொழி வீச்சைச் சில இழைகளில் காணலாம். பாரதிதாசனிலிருந்து பல படிகள் முன்னேறி இன்னொரு வேகமான மொழி வீச்சை எட்டி இருப்பதைப் பாவலரேறுவிடம் அவதானிக்கலாம்.அதற்கு மூலக் காரணம் அவரது காலக்கட்டம் அவருக்கு அளித்த புறநிலை அழுத்தமே ஆகும்.அதுவே பாவலரேறுவின் மொழி உச்ச கொதிநிலையை அடைவதற்கான சமூகவியல் காரணம் எனலாம். ஆனால் பாரதிதாசனுக்குக் கிடைத்த விடுதலை பெற்ற இந்தியாவின் அரசு, பொருளாதாரம், பண்பாட்டுக் களம் ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்வியும் தொடர் மந்த நிலையும் விளைவாக ஏற்பட்ட சோர்வும் ஆகும்.

மறுமுனையில் பாவலரேறு இந்திய அரசின் தோல்வியைத் தேசிய இனங்களின் எழுச்சியோடு போர்க் குணத்துடன் எதிர்கொண்டு அணியம் ஆகிவிட்ட நிலையே இந்தப் பாய்ச்சலுக்குக் காரணமாகும். நிற்க.

அன்றைய காலக்கட்டத்தில் ஈழ விடுதலை ஆதரவு என்ற நிலை இந்திராவின் மீதும் காங்கிரஸ் மீதும் கொண்ட ரசிகர் தன்மையோடு இயங்கிய நிலை இருந்தது. அப்படியான ஒரு நிலை ஈழ ஆதரவு என்கிற களத்தில் பாவலரேறுவிடம் இருந்ததே இல்லை. சிங்களர்களை அடிபணிய வைக்க புலி ஆதரவு, புலிகளைச் சரிகட்ட சிங்கள அரசு ஆதரவு என்னும் தந்திரமான உள்நோக்க, உத்தி கொண்ட இந்திய அரசின் இரட்டைத் தன்மையும் பாவலரேறுவிற்குத் தெள்ளத்தெளிவாகப் புரிந்திருந்தது.

தமிழக அரசியல் களத்தில் எம்ஜிஆர் (அரசியல் கட்சி) நெடுமாறன் (சமூக இயக்கம்) போன்றோர் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஈழ ஆதரவு, புலிகள் ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். இவ்வகையான ஆதரவு செயல்பாட்டுக்குப் பின்புறத்தில் இந்திய அரசு ஆதரவு என்னும் பாதுகாப்பான அமைவு நிலை ஒளிந்திருந்தது. மேலும் இவர்கள் வரலாற்று அளவிலான வைதீகத்தின் கேடுகளைத் தமிழ்நாடு முழுவதும் எதிர்த்துச் சமராடும் போக்கு கொண்டவர்களாகவும் இல்லை. பாவலரேறுவின் நிலை இதுவல்ல. இந்திய அரசு புலிகளுக்கு ஆதரவு அளித்தாலும் ஆதரவு அளிக்காவிட்டாலும், காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும் அளிக்காவிட்டாலும், தமிழக அரசு ஆதரவு அளித்தாலும் அளிக்காவிட்டாலும், தேசிய இன விடுதலைக்கு ஈழ விடுதலை என்பது இன்றியமையாததோர் அடைவு என்பதே பாவலரேறுவின் கண்ணோட்டமாகும். ஈழ ஆதரவு சார்ந்து எத்துணைத் துன்பம் வந்தாலும் அதற்கான விலையைத் தர அணியமாக இருந்தார். இந்த நிலைமை வேறெந்த அமைப்புக்கோ தனி மனிதருக்கோ அந்தக் கட்டத்தில் இல்லை. திராவிடர் கழகம் என்கிற அமைப்பு தவிர வேறெந்த அமைப்புக்குமில்லை.

90-களில் நிலைமை இன்னும் சிக்கலானது. பாவலரேறுவுக்கு இச்சூழலில் கிடைத்த காலம் அளித்த அரிய வாய்ப்பு அவரின் முழு ஆற்றலும் வடிந்து நின்ற அவரது எழுத்தே ஆகும். தனித்தமிழில் அவர் நடத்திய இதழ்கள் தனித்தமிழ் இதழ் என்கிற வகைமைக்கான பரிசோதனை முயற்சி என்ற அளவில் மட்டும் குறுகாமல் இன விடுதலை செயல்பாட்டின் இதயமும் மூளையுமாக இருந்தது. பாவலரேறுவின் மிக முக்கிய பன்முகமய தனி வழியாகும்.

'அகண்டதமிழகம் ’ மாதிரியான கருத்தியலோடு இருந்த அமைப்பு ஒன்றின் இதழ் வெறும் நிலமாக மட்டும் தேசிய இனப் பிரச்சனையைச் சுருக்கிக் கொண்டு செயல்பட்டு வந்தது. மற்றபடி மொழிக் கொள்கை, இனக் கொள்கை, பண்பாட்டுக் கொள்கையோ அவர்களுக்கு அறவே இல்லை.

மொழிக் கொள்கையைப் பேசுவோர், இனக் கொள்கையைப் பேசுவதில்லை. இனக் கொள்கையைப் பேசுவோர், பண்பாட்டுக் கொள்கையைப் பேசுவதில்லை. பண்பாட்டுக் கொள்கையைப் பேசுவோர் வர்க்கச் சிக்கல்களைப் பேசுவதில்லை. இவையெல்லாம் இணைத்துப் பெரியார், பாவலரேறு ஆகியோர் மட்டுமே பேசி வந்தனர். இதற்குச் சரியான சான்று பகை ஆற்றல்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொண்ட ஈடு இணையற்ற துன்ப துயரங்களே ஆகும். இதை வேறு எவரும் அந்தக் கட்டத்தில் சுமந்ததே இல்லை. பாவலரேறு பெரியாரையும் கடந்து மொழி உரிமை நிலைகளிலும் தமிழ்நாட்டு விடுதலை நிலைகளிலும் அக்கறை செலுத்தியவர்.. ஆற்றலான செயல்பாடுகள் கொண்டவர்..

வெறும் ஈழ விடுதலையை ஆதரிப்போர், தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு சுயமரியாதை முயற்சியின் மீதான அக்கறையைக் கொள்வதில்லை.

இப்படியான போக்குகள் மிகுந்த தமிழ்நாட்டின் சூழலில் பன்முக சேர்க்கையின் வெளிப்பாடாகத் திகழ்ந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

- பேராசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 

Pin It