தொடர்புடைய படைப்புகள்

நீதிபதி பரத சக்கரவர்த்தி வரலாறும் அரசியல் அறிவியலும் அறிந்துதான் பேசுகிறாரா?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி 2026 சூன் 29 அன்று, ஒரு தேசத்துரோக வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தபோது நீதிமன்றக் கருத்துரையாகக் கூறிய பதிவு தமிழ் மொழி-இன நாட்டு உணர்வாளர்களிடையே ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

ஆனால், தமிழ்ச் சமூகம் அவர் கூறியதையோ, அதன் பொருளையோ, எது பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போலவே மயக்கத்தில் இருக்கிறது. நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறிய கருத்து நீதிமன்றத் தீர்ப்பு அல்ல; தீர்ப்பை வழங்கும்போது அவர் கூறிய நீதிமன்றக் கருத்துரைதான் அது. குறிப்பிட்ட வழக்கில் தேசத்துரோகக் குற்றம் பொருந்துமா என்பதை ஆராய்ந்தபோது கூறப்பட்ட கருத்து அது.

நூல் எழுதியதற்குத் தேச விரோத வழக்கு!

2014 இல் சென்னை வடபழனியில் இளங்கோவன் என்பவர் எழுதிய 'தமிழ்த் தேசியத் தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்' என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழரசன் தமிழகம் தனியாகப் பிரிய வேண்டும் என்றும், பிரிவினைக்காகக் கொரில்லாப் போர் முறை கையாளப்பட வேண்டும் என்றும் பேசியதாக இந்நூல் குறிப்பிடுகிறது. 1967 இல் தமிழரசன் கோவையில் தனித்தமிழ்நாடு குறித்து எந்தக் கருத்துப் பதிவுகளோ, நடவடிக்கைகளோ செய்யவில்லை. இப்புத்தகம் தவறான ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட கழகம் பதிப்பகத்தை நடத்தி வந்த இளங்கோவன் இப்போது இறந்துவிட்டார். சென்னை கலைஞர் நகரைச் சேர்ந்த கீ.ரா., சாலிகிராமத்தைச் சேர்ந்த தமிழ் பாலா ஆகியோர் மீது காவல்துறையினர் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் கீ.ரா. மற்றும் தமிழ் பாலா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி 2026 சூன் 29 அன்று தன் தீர்ப்பை வழங்கினார். நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி:

'1967 இல் தமிழரசன் பேச்சு இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பையோ அவமதிப்பையோ ஏற்படுத்தி இருக்கலாம்; ஆனால் இன்றைய சூழலில் இந்தியா ஒரு தேசமாக உள்ளத்தாலும் உயிராலும் ஒருங்கிணைந்து கிடக்கிறது. இன்றைய சூழலில் யாராவது தமிழகம் தனி நாடாகப் பிரிய வேண்டும் என்று பேசினால் அந்த நபருக்கு மனநலம் சரியில்லை என்றுதான் பொதுமக்கள் கருதுவர்'

என்று தம் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த நூல் பேசக்கூடிய செய்தி பொதுமக்கள் இடையே எந்தவிதமான வெறுப்பையும் ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் தற்காலத்தில் பிரிவினைக்கான அழைப்பு எதுவும் இல்லை; பல தசாப்தங்களுக்கு முன் தமிழரசன் கூறியதை மட்டுமே அது பதிவு செய்துள்ளது. நடந்ததை வெறும் பதிவு செய்தது வெறுப்பைத் தூண்டும் முயற்சியாகாது என்பதால் தேசத் துரோக வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி கூறி இருக்கிறார்.

நீதிபதி பரத சக்கரவர்த்தி தமிழகத்தைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்ற கருத்துத் தெரிவிப்பவர்களை மனநலப் பிரச்சனை உள்ளவர்களாகவே மக்கள் பார்ப்பார்கள் என்று கருத்து கூறியிருக்கிறார்.

(“Talk of separate Tamilnadu today would be seen as mental health issue not sedition; such a comment may at best cause annoyance in the present social context and cannot be considered as inciting hatred.”)

நீதிபதி கூறுவது:

'1967 இல் தமிழரசன் காலத்தில் தமிழக விடுதலை அமைப்பு உருவாக்கிய போது அத்தகைய பேச்சு அல்லது வெளியீடு வெறுப்பைத் தூண்டி இருக்கலாம்; ஆனால் இன்றைய சூழலில் இந்தியா என்ற ஒரு தேசம் இதயத்தாலும் உயிராலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. முன்பு நடந்ததைப் பதிவு செய்வது என்பது வெறுப்பைத் தூண்டுவது ஆகாது' என்கிறார்.

இந்த நூல் அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதாக எழுதப்படவில்லை; ஆகவே இது தேசத்துரோகம் என்ற வகையில் வராது என்று நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இதுபோன்ற பிரச்சனைகளைத் தற்போது நிலவும் சமூகச் சூழலிலும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திற்கும் ஏற்பப் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் நீதிபதி குறிப்பிடுகிறார். 1967 இல் இத்தகைய பதிவுகள் அரசுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கி இருக்கலாம்; ஆனால் இப்போது அந்தச் சூழல் இல்லை என்று நீதிபதி கருதுகிறார். ஒரு பிரச்சனையை அந்தச் 'சமூகச் சூழல் மற்றும் நாம் வாழும் காலம் இவற்றின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

அவர் தேசத்துரோக வழக்கைத் தள்ளுபடி செய்தது மிகச் சரியானது. ஒரு நூலில் எழுதியதாலே அது தேசத் துரோகம் ஆகிவிடாது என்பதை இந்த வழக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது; இவற்றை நாம் வரவேற்கலாம்.

தமிழ்த்தேசியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி:

நீதிபதி கூறி இருப்பது அவருடைய மதிப்பீடு; அதில் தமிழ்த்தேசியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. அவருடைய கருத்தின்படி இந்தியத் தேசியம் என்பது மக்களுடைய உள்ளத்திலும் உயிரிலும் கலந்திருக்கிறது; தமிழ்நாடு பிரிவினைக் கோரிக்கை என்பது மக்களால் குறிப்பிட்ட நபரின் உளநிலைப் பாதிப்பாகத்தான் மக்கள் கருதுவார்கள் என்பது அவருடைய கருத்து. மக்கள் அவ்வாறு கருதுகிறார்களோ இல்லையோ, நீதிபதி பரத சக்கரவர்த்தி அவ்வாறுதான் மிக எளிதாகக் கருதுகிறார். நீதிபதியின் கருத்துப் பதிவு தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கை குறித்த அவருடைய இளக்காரமான மதிப்பீட்டைக் காட்டுகிறது.

தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கை மக்கள் மயமாகவில்லை என்பது உண்மை. தமிழ்நாடு விடுதலைக் கருத்தியல் மக்கள் மயமாகியிருந்தால் நீதிபதி இவ்வாறு ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்க மாட்டார். இப்போது நிலை இன்னமும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு விடுதலையை இலக்காகக் கொண்ட தமிழ்த் தேசியக் கருத்தியல் முடமாக்கப்பட்டு, பிழைப்புவாதத் தேர்தல் அரசியலுக்குள் சிறை வைக்கும் முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியம் என்ற சொல்லைப் பிழைப்புவாதிகளும், பித்தலாட்டக்காரர்களும் களவாடித் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வலிமையான அரசியல் சக்திகள் இந்தியத்துடன் இணக்க அரசியலைக் கைக்கொண்டு விட்டன. ஒன்றிய அரசுடன் போர் நடத்த எந்த அரசியல் கட்சியும் தயார் இல்லை. இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தாங்கள் அரசியல் களத்தில் இருப்பதாக உறுதிமொழி எடுப்பதில் எந்த அரசியல் கட்சிக்கும் தயக்கமில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டின் இறையாண்மை அரசியலைப் பேசும் அமைப்புகள் வலுக்குன்றியவையாகவே இருக்கின்றன. அதனாலேயே நீதிபதி பரத சக்கரவர்த்தி போன்றவர்களுக்குத் தனித்தமிழ்நாடு கோரிக்கை தமிழர்களின் உளவியல் பாதிப்பாகத் தோன்றுகிறது. பெரியாரின் பெயரைச் சொல்லுகிறவர்கள், அண்ணாவின் வழியில் வந்ததாகக் கூறிக்கொள்கிறவர்கள் இத்தகைய கருத்துப் பதிவைக் கேட்டு கொதிப்படைந்து இருக்க வேண்டும்; ஆனால், அவர்கள் மௌனமாகக் கடந்து போகிறார்கள்.

கருத்தறிவித்த நீதிபதி வரலாறும் அரசியல் அறிவியலும் அறிந்துதான் பேசுகிறாரா?

'நாம் வாழும் காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று கூறிவிட்டு, தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கை குறித்த இளக்காரமான கருத்துகளை அள்ளி வீசுகிற நீதிபதி பரத சக்கரவர்த்தி போன்றவர்கள், நிகழ்காலத்தின் நிகழ்வுப் போக்கைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கட்டும்.

வரலாறு திரும்பத் திரும்ப ஒரு செய்தியைக் கூறிக்கொண்டிருக்கிறது. வரலாற்றின் ஓட்டத்தில் தேசிய இனங்கள் உருவாக்கம் பெறுகின்றன; அவை வரலாற்றின் விளைபொருட்கள். அப்படி உருவான தேசிய இனங்கள் இயல்பாகத் தங்கள் விடுதலையை நோக்கி நகரும்; அதை யாரும் தடுத்துவிட முடியாது. சனநாயக முறையில் பெற முடியாத விடுதலையை ஆயுதப் போராட்டங்கள் மூலம் அந்தத் தேசிய இனம் வென்றெடுக்கும். இதற்கான எத்தனையோ சான்றுகளை வரலாறு பதிவு செய்துள்ளது.

சின்னஞ்சிறு நாடுகளும் விடுதலையை இலக்காக முன்வைக்கின்றன!

சமீபத்தில் ஒரு சின்னஞ்சிறு நாடு உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. 2026 பிஃபா உலகக் கோப்பை 'நாக் அவுட்' சுற்றில் (3.7.2026) அமெரிக்காவின் மியாமியில், அர்சென்டைனாவும் மிகச் சிறிய நாடான கேப் வர்டே தீவுகள் நாடும் மோதின. இந்தப் போட்டியில் கால்பந்தில் வெல்ல முடியாத நாடாகக் கருதப்படும் அர்சென்டைனா மிகுந்த திணறலுக்கு உட்பட்டு கடினமாகப் போராடி 3-2 என்ற கோல் கணக்கில் கேப் வர்டே நாட்டைத் தோற்கடித்தது. கேப் வர்டே ஆற்றலைப் பார்த்து உலகமே வாயைப் பிளந்தது. அட்லாண்டிக் பெருங்கடலில் 10 எரிமலைத் தீவுகளின் கூட்டமைப்புதான் கேப் வர்டே என்ற நாடு.

இந்தச் சின்ன நாட்டின் மக்கள் தொகை 5.5 லட்சம்; தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி. தமிழ்நாடு 1,30,058 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைவிட கேப் வர்டே 32 மடங்கு சிறியது. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் 4,086 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்டிருக்கிறது; கேப் வர்டே நாட்டின் பரப்பளவு 4,033 சதுர கிலோமீட்டர். சிவகங்கை மாவட்டத்தை விடவும் கேப் வர்டே சிறியது. 15-ஆம் நூற்றாண்டு வரை இந்த நாட்டிற்கு வரலாறு கிடையாது; ஏனென்றால் 15-ஆம் நூற்றாண்டு வரை இத்தீவில் மக்கள் வாழ்ந்தது இல்லை. போர்ச்சுகீசியர்கள்தாம் இந்தத் தீவைக் கைக்கொண்டு, அங்கே அடிமைகளைக் குடியமர்த்தினார்கள். ஆப்பிரிக்க - ஐரோப்பிய இனங்களின் கலப்பான கிரியோல் அல்லது முலாட்டோ அங்கே வாழ்கிறார்கள்; 71% கலப்பினத்தவர், 28% ஆப்பிரிக்கர்கள்.

தமிழ்நாட்டையும் கேப் வர்டே தீவுகளையும் ஒப்பிடவே முடியாது. தமிழ்நாடு வரலாற்று, மொழிவளப் பாரம்பரியத்திலும், பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியது; நீண்ட வரலாறு கொண்டது; உலகின் மிகப் பழமையான மொழி விளங்கி வந்திருக்கும் நாடு. உலகில் தமிழ்நாட்டை விட மக்கள் தொகையில் அதிகம் கொண்ட நாடுகள் 19 மட்டுமே. உலக நாடுகளில் 175 நாடுகள் தமிழ்நாட்டை விடச் சிறியவை; 97 நாடுகள் தமிழ்நாட்டை விடப் பரப்பளவில் சிறியவை. 1975 சூலை 5 அன்று, கேப் வர்டே போர்ச்சுகீசியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது. 1963 முதல் 1974 வரை 10 ஆண்டுகள் கூட்டு ஆயுதப் போர் நடத்தி விடுதலை பெற்றது. போர்ச்சுகீஸ் நாட்டின் பொருளாதாரப் புறக்கணிப்பு, ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து கேப் வர்டே விடுதலை பெற்றது. மொழி, இனம், பொருளாதாரம் இவற்றின் அடிப்படையில் எங்கு பாரபட்சம் இருந்தாலும், பாதிக்கப்படும் இனம் விடுதலை கோரிப் போராடும் என்பதற்கு கேப் வர்டே என்ற சின்னஞ்சிறு நாட்டின் விடுதலைப் போராட்டம் ஓர் உதாரணம்; அது விடுதலை பெற்று 50 ஆண்டுகள் தான் ஆகின்றன.

உலக நாடுகள் விடுதலையை வென்றெடுத்ததற்கும் உளவியல் பாதிப்புதான் காரணமா?

1914 முதல் 1918 வரை முதல் உலகப்போர் நடைபெற்றது. அப்போது ஐரோப்பாவில் இருந்த நாடுகள் 26 மட்டுமே. முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் (1939-45) இடையில் ஐரோப்பாவில் இருந்த நாடுகள் 33. இன்று ஐரோப்பாவில் இருக்கும் நாடுகள் 50. இத்தனைத் தேசங்கள் எங்கிருந்து முளைத்தன? ஒரு பேரரசிலிருந்து அல்லது வல்லாதிக்க நாட்டில் இருந்து இத்தேசங்கள் விடுதலை அடைந்ததற்கு ஐரோப்பிய மக்களின் மனநிலை பாதிப்புதான் காரணமா? ஆஸ்திரியா, ஹங்கேரி என்ற ஒரு நாடு ஆஸ்திரியா தனியாகவும் ஹங்கேரி தனியாகவும் பிரிந்ததற்குக் கூட மனநிலை பாதிப்புதான் காரணமா?

1993 சனவரி 1 அன்று, செக்கோஸ்லோவேக்கியா (Czechoslovakia) எந்தப் போரும் இல்லாமல், நாடு பிரிந்து இரண்டு புதிய நாடுகள் — செக் குடியரசு (Czech Republic / Czechia), ஸ்லோவாக்கியா (Slovakia) — உருவாயின.

எந்தவொரு வன்முறையும் இன்றி அமைதியான முறையில் இந்த நாடு பிரிக்கப்பட்டது. இதனால் இது வரலாற்றில் வெல்வெட் விவாகரத்து (velvet divorce) என்று அழைக்கப்படுகிறது.

'தேநீர் மேசையில்' செக்குகள் தனியாகவும் ஸ்லோவாக்குகள் தனியாகவும் என அமைதியாக இரு நாடுகளாகப் பிரிந்ததற்குக் கூட மனநிலை பாதிப்புதான் காரணமா?

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கோரிப் போராடிய இந்தியத் துணைக்கண்டத்துத் தலைவர்கள் எல்லாம்கூட மனநோயாளிகளா?

தேவையின் வெளிப்பாடுதான் விடுதலை கோரிக்கை!

ஒரு தேசிய இனம் இன்னொரு அரசதிகாரத்தின் ஒடுக்குமுறையில் இருந்து விடுபட விரும்பினால், தன் விடுதலைப் போராட்டத்தை நடத்தி, இறையாண்மை உள்ள தேசமாக மாறுகிறது. ஒடுக்குமுறையின் வலி அந்தத் தேவையை ஒரு தேசிய இனத்திற்கு உணர்த்துகிறது. இந்திய வல்லாதிக்கத்தால் சூறையாடப்படும் உள்நாட்டு காலனியாக (Internal Colony) தமிழ்நாடு நீண்ட காலமாக இந்தியாவில் இருந்து வருகிறது. அந்தத் தேவையின் வெளிப்பாடுதான் தமிழ்நாட்டின் விடுதலைக் குரலாகக் கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை பெரியார் தொடங்கி அறிஞர் அண்ணா, பாவலரேறு பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், பல மார்க்சிய இலெனினிய அமைப்பினர் எனப் பலராலும் பல்வேறு அமைப்புகளாலும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

மூளைச்சலவைக்கு உள்ளானவர்களுக்கு இந்தியாவே சொர்க்க பூமி! அவர்களுக்குத் தேசிய இன விடுதலைக் கோரிக்கை உளநிலைப் பிரச்சினை!

மூளைச் சலவைக்கு உள்ளானவர்களுக்குத் தேசிய இன விடுதலை உளநிலைப் பிரச்சினையாகத்தான் தோன்றும்! இந்திய ஒருமைப்பாடு குறித்துக் குழந்தைகளின் முதல் வகுப்பு முதல் தொடர்ந்து திரும்பத் திரும்பக் கற்பிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியத்தை ஏற்கும் மனநிலை ஊட்டப்பட்டிருக்கிறது. அந்த விளைபொருள்களில் ஒருவர்தான் நீதிபதி பரத சக்கரவர்த்தி. வர்க்க ரீதியாகவும், வருண ரீதியாகவும், மொழியின அடிப்படையிலும், தாங்கள் அமர்ந்திருக்கும் அதிகாரப் பீடங்களின் அடிப்படையிலும், இந்தியம் பலருக்கு இனிமையானது. தங்கள் வாழ்வு வசதியோடும், வளங்களோடும், சகல சுகங்களோடும் அமைந்திருக்குமானால் அதுவே இனிமையானது. அந்த வகையில் இந்தியா பலருக்குப் பிரச்சனையற்றதாக இருக்கிறது.

வசதியான வாழ்க்கையை அடைந்தவர்கள், பெரிய வருமானம் தரும் பதவிகளில் அமர்ந்தவர்கள், இந்தியா முழுவதும் தங்களுக்கான வேலைவாய்ப்புகளை, வணிக வாய்ப்புகளைப் பெறுகிறவர்கள், வாழ்வியல் வாய்ப்புகளை வழங்கும் நிலப்பரப்பாக இந்தியாவைக் கருதுகிறவர்கள், இந்தியாவைத் தங்களுக்கான பெரும் சந்தையாகக் கருதுகிறவர்கள், இந்தியா என்பது தங்களுக்குப் பாதுகாப்பானதாக, சகல வசதிகளையும் வழங்கக்கூடியதாக உணர்கிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பான, அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் மிக்க வாழ்க்கையை வாழ்கிறார்கள். வறுமை, அடக்குமுறை அல்லது வாழ்வாதார இழப்பை அவர்கள் நேரில் காண்பதே இல்லை. இவர்களுடைய வர்க்க நலன்களும், கையில் இருக்கும் அதிகாரமும், பிறர் அனுபவிக்கும் துன்பங்களை உணரச் செய்வதில்லை.

தற்போதைய சமூக, அரசியல் கட்டமைப்புத் தங்களுக்குச் சாதகமாக இருப்பதால், அவர்கள் மாற்றத்தை விரும்புவதில்லை. இந்திய அதிகார வர்க்கத்தினர், அரசியல் ஆளுமைகள், நீதிபதிகள், பெருமுதலாளிகள், உயர் சாதி வருணத்தவர்கள், கார்ப்பரேட்டுகள் இவர்களின் இந்தியாவில் எந்தத் துன்பமும் இல்லை. சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடியினர், உழைப்பை நம்பي வாழும் தொழிலாளர்கள், கீழ்நிலைச் சாதியினர், அன்றாடம் வாழ்வியல் வாழ்வாதாரப் பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள், சமத்துவம் மறுக்கப்பட்ட தேசிய இனங்கள் காணும் இந்தியா மிகவும் துன்பமானது.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்குப் பின்னாலும் அவனுடைய வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மாதச் சம்பளம் ரூ. 2,50,000-மும், இதர நீதிபதிகளுக்கு மாதச் சம்பளம் ரூ. 2,25,000-மும் வழங்கப்படுகிறது. மேலும், நீதிபதிகளுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை மற்றும் அரசுக் குடியிருப்புகள் போன்ற பிற சலுகைகளும் மற்றும் ஓய்வூதியப் பலன்களும் கிடைக்கின்றன. இவர்களுடைய சமூகத் தகுதி பெரியது; எல்லா இடங்களிலும் எல்லோராலும் மதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா இனிமையானது. தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது இவர்களைப் பொறுத்தவரை உளநிலை பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைதான்.

இந்தியா சகல வளங்களையும் வாய்ப்புகளையும் சுகங்களையும் வாரி வழங்கி இருக்கும்போது, தேசிய இன விடுதலை தங்களின் பொருளாதார மற்றும் சமூக ஆதிக்கத்தைக் குறைத்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கும். இந்தியா என்ற கருத்தியல் பாதுகாப்பில் தங்களுடைய நலனும் இருப்பதாக உணர்கிறவர்கள் தேசிய இன விடுதலையை மறுக்கிறார்கள்.

இது பொது விதி அன்று; தேசிய இன உரிமைக் கோரிக்கையின் நியாயப்பாட்டை உணர்ந்து, அதற்கு ஆதரவு நிலை எடுக்கும் நீதிபதிகளும் உண்டு.

தமிழ்மக்களின் நிலை என்ன?

கூடுதலாக, ஒரு வருந்தத்தக்க நிலை தமிழ் மக்களிடையே இருக்கிறது. தமிழர்கள் தாங்கள் ஒரு தேசிய இனம் என்பதை உணரவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகள் அந்த உணர்வைக்கூட இன்னமும் ஒட்டுமொத்தத் தமிழினத்திடம் உருவாக்கவில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவ, மாணவியர் கடிவாளம் போட்ட குதிரை போல, தங்கள் பாடப்புத்தகங்களையும், பாடத்திட்டங்களையும்தவிர வேறு எதையும் கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படவில்லை அல்லது அனுமதிக்கப்படவில்லை. இந்தி மொழித் திணிப்பைக்கூட தங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் வாய்ப்பாகக் கருதும்படி இளந்தலைமுறையினர் கற்பிக்கப்பட்டிருக்கின்றனர்.

நீதிபதி பரத சக்கரவர்த்தியின் கருத்து ஒரு சராசரி இந்தியனின் கருத்துதான். தமிழ்நாட்டின் தமிழர்கள் இந்தியர் என்ற மனநிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் தமிழ் பேசுவதால் மட்டுமே தமிழர்கள் என்று கருதுகிறார்கள்; அதைவிடக் கூடுதலான உணர்வோ புரிதலோ அவர்களுக்கு ஊட்டப்படவில்லை. இந்தியாவில் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் பற்றிய புரிதல் தமிழ் மக்களுக்கு இல்லை. அரசியல் கட்சிகளும்கூட தாங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு அரசியல் நடத்தவில்லை; இந்தியர்கள் என்ற புரிதலோடுதான் திராவிடக் கட்சிகளும் பிற கட்சிகளும் தங்கள் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதியின் இளக்காரமான மதிப்பீட்டுக்குக் கண்டனம்!

தனித்தமிழ்நாடு குறித்துப் பேசுகிறவர்கள் மனநலப் பிரச்சனை உள்ளவர்கள் என்று கருதும் நீதிபதி பரத சக்கரவர்த்திக்குக் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்!

அதே நேரம், நீதிபதியின் சொற்கள் ஒரு சராசரி இந்தியனின் மதிப்பீடு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் தேசிய இனங்கள் படும் துன்பங்களை, தமிழ்நாடு அடையும் பொருளாதார இழப்புகளை, தமிழ் மொழிக்குத் தரப்பட்டிருக்கும் இரண்டாம் நிலை தகுதியை, தமிழ்நாட்டின் இயற்கை வள, கனிமவளச் சுரண்டலை, தமிழ்நாட்டின் மீதான ஒடுக்குமுறைகளை, ஒட்டுமொத்த இழப்புகளைத் தமிழ் மக்கள் உணரும்படிச் செய்யும் வேலைகள் தமிழ்த்தேசியர்களின் உடனடி வேலைத்திட்டமாக அமைய வேண்டும். இதை உணர்த்தாத வரை தமிழ்நாடு விடுதலை கோரிக்கை என்பது இந்தியத் தேசியவாதிகளுக்குத் தேசத் துரோகமாகவும், பிரிவினைவாதமாகவும் தோன்றும். இந்தியாவில் தோய்ந்து ஊறிப்போன தமிழர்களுக்கும்கூட அது மனநலப் பாதிப்பின் வெளிப்பாடாகத்தான் தோன்றும்.

தமிழ்த் தேசிய இனம் ஒரு தேசிய இனமாக உணர வேண்டும்!

தாங்கள் தமிழ்த்தேசிய இனம் என்பதையும், உலகின் ஏனைய தேசிய இனங்களைப் போல தங்களுக்கும் அத்தனை உரிமைகளும் உண்டு என்பதையும், இந்தி மாநிலத்தவர்கள் மற்றும் குசராத்திகளுக்கு இருக்கக்கூடிய அதே உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை என்பதையும், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளுக்கு உள்ள தகுதி நிலை தமிழுக்கு வழங்கப்படவில்லை என்பதையும், பொருளாதார ரீதியாகத் தமிழ்நாடு சூறையாடப்படுகிறது என்பதையும், தமிழ்நாட்டின் இயற்கை வளமும் கனிம வளமும் கொள்ளை போகிறது என்பதையும், தமிழ்நாட்டின் நீர் உரிமை, கடல் உரிமை களவாடப்படுகிறது என்பதையும் தமிழ் மக்களுக்கு உடனடியாக உணர்த்த வேண்டும்.

அடிப்படையில் நாம் யார் என்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நாம் தமிழ்த் தேசிய இனத்தவர் என்பதையும், இந்தியாவில் பல தேசிய இனங்கள் இருப்பதையும், அத்தேசிய இனங்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் கருத்து இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. கற்றறிந்த ஒரு நீதிபதியின் நிலையே இப்படி இருந்தால், மற்றவர்கள் உளநிலை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! காலநிலையையும் களநிலையையும் உணர்ந்து தமிழ்த் தேசியர்கள் தங்கள் செயல்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்!

- பேராசிரியர் த.செயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.