மே, 2005-இல் தமிழ்த் தேசப் பொதுவுடமை கட்சி (இன்றைய தமிழ்த் தேசியப் பேரியக்கம்) ஈரோட்டில் "வெளியாரை வெளியேற்றுவோம்" என்ற மாநாட்டை நடத்தியது. 1956 நவம்பர் முதல் தமிழ் மாநிலம் உருவான பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளிமாநிலத்தவர் முதலாளிகளாக இருந்தாலும், தொழிலாளிகளாக இருந்தாலும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது மாநாட்டின் நோக்கமாக இருந்தது. தமிழ்த் தேசியப் பேரியக்கம் இன்றளவும் தன் கோரிக்கையில் மாற்றம் செய்யவில்லை.

தமிழ்த் தேசப் பொது உடமை கட்சியின் "வெளியாரை வெளியேற்றுவோம்" என்ற மாநாட்டிற்கு எதிராக புரட்சிகர இளைஞர் முன்னணியும், புரட்சிகர இளைஞர் -மாணவர் முன்னணியும் துண்டறிச்க்கை கொடுத்தன. புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் துண்டறிக்கை கொடுத்தவர்களில் நானும் ஒருவன். இரண்டு அமைப்புகளின் துண்டறிக்கையின் சாறம் "வெளியாரை வெளியேற்றுவோம்" என்ற முழக்கம் இனவாதம் என்பதே. இவ்விரு அமைப்புகளும் வெளி மாநிலத்தவர் சிக்கல் குறித்து அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் ஒற்றுமை நோக்கிலிருந்து தெளிவான பாட்டாளி வர்க்க ஆய்வை எதையும் இதுவரை முன் வைக்கவில்லை.

தமிழ் நாட்டில் செயல்படும் இந்தியத் தேசியக் கட்சிகளானாலும், தமிழ்த் தேசிய கட்சிகளானாலும் வெளி மாநிலத்தவரை வெளியேற்றுவதில் தமக்குள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன. வெளியார் யார்? என்று கூட ஒத்த முடிவுக்கு வர இயலாமல் உள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களில் செயல்படும் தீவிர இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசு, பி.ஜே.பி இடது-வலது கம்யூனிஸ்டுக்கள் இந்திய தேசியத்தை பேசிக்கொண்டே அந்தந்த மாநிலங்களின் நலன் என்ற கண்ணோட்டத்திலேயே செயல்படுகின்றன. தமிழ் நாட்டில் அப்படி இல்லை.

tn jobs for tamilsதமிழ்நாட்டில் மார்க்சிய- லெனினிய- மாவோவிய குழுக்களின் இந்திய தேசியப் பார்வை வெளியாரை வெளியேற்றுவோம் என்பதே இனவாதம் என கண்ணை மூடிக்கொள்கின்றன. தமிழ்த் தேசிய மார்க்சிய -லெனினியா- மாவோவியக் குழுக்கள் கூட வெளியாரை வெளியேற்றுவதில் பாட்டாளி வர்க்க நலனைக் கைவிட்டு இனவாத அடிப்படையிலோ அல்லது இந்தியத் தேசிய அடிப்படையிலோ வெளிமாநில முதலாளிகளையும், தொழிலாளிகளையும் சம நிலையில் அணுகுகின்றனர்.

தமிழகப் பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்ட நலன் மற்றும் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களது ஒற்றுமை என்ற கண்ணோட்டத்திலிருந்து வெளியார் சிக்கலை ஆராயவேண்டும்.

தமிழ்நாட்டின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றையும் மத்திய அரசு நிறுவனங்களையும் வெளி மாநிலத்தவர் கைப்பற்றியுள்ளனர் என்று சாதாரண மக்கள் பேசும் அளவிற்கு வெளியார் சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ்த் தேச இறையாண்மை சார்பில் வெளியிடப்பெற்ற "தமிழ்த் தேசமும் மார்க்சியமும்" முதல் பதிப்பு 2020 நூலின் 68-வது பக்கத்தில் நான் எழுதியிருந்தது என்னவென்றால் "ஒரு தேசிய இனத்தில் மிகு எண்ணிக்கையில் வேறு ஒரு தேசிய இனத்தினை அனுமதிப்பது தன் தீர்வு உரிமை கோட்பாட்டுக்கு எதிரானதாகும். தன் தீர்வு உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமை எனப் பார்த்தோம். பல தேசிய இனங்கள் அவ்வுரிமையுடன் சேர்ந்து கூட்டரசில் வாழ்வதாகக் கொள்வோம். ஒரு தேசிய இனத்தின் உரிமை பாதிக்கப்படும்போது அத்தேசிய இனம் பிரிவினையைக் கோரும். அப்போது அத்தேசிய இனத்தில் பிரிந்து போவதா சேர்ந்து வாழ்வதா என ஒட்டெடுப்பு நடைபெறும். இந்நிலையில் அத்தேசிய இனத்தில் மிகு எண்ணிக்கையில் வேறு தேசிய இனத்தவர்கள் இருந்தால் அவர்கள் பிரிந்து போவதற்கு எதிராக வாக்களிப்பார்கள். அதன் மூலம் அதன் தாயகம் பறிபோகும். தமிழ் ஈழ மக்களது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய சிங்கள அரசு தமிழர்கள் பகுதியில் சிங்களக் குடியேற்றத்தை நடத்தி அந்நாட்டை சிங்களமயமாக்கியது. அதேபோல் தமிழ்நாடு இந்தியமயமாகிறது. எனவே 1956 நவம்பர் மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட பிறகோ அல்லது வேறு ஒரு காலக்கோட்டிற்கு பிறகோ தமிழ்நாட்டில் குடியேறிய வேற்று தேசிய இனத்தினரை வெளியேற்ற வேண்டும். அதேபோல் வேற்று தேசிய இனத்திலுள்ள தமிழர்களை தமிழகம் திரும்பப் பெற்று அவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலையும் வாழ்வும் வழங்க வேண்டும்"என்று எழுதியிருந்தேன்.

இக்கருத்து மிகு எண்ணிக்கையில் வெளியார் ஒரு தேசிய இனத்தில் கலந்து அவர்களுக்கு வாக்குரிமை அளித்தால் அவர்கள் பிரிந்து போவதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை விளக்க போதுமானதே தவிர, வெளியார்சிக்கலை முழுமையாக விளக்கப் போதுமானது அல்ல.

வெளியார் யார்?

பொதுவாகச் சொன்னால் ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசக் கூடிய தாயகம் உலகில் எங்குமே இருக்க இயலாது. தாயக உருவாக்கம் என்பது வரலாற்று காரணங்களால் உருவாவது. இது மனிதன் மனம் சாராத புறநிலை இயக்கம். தமிழர் தாயகத்தில் தமிழ்மொழியை பேசுவோரே பெரும் அளவில் இருப்பினும் எல்லையோரம் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் தேசிய சிறுபான்மையினராக அமைந்துள்ளனர். அவர்களது உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பண்டைக் காலம் தொட்டே தமிழ் நாட்டின் உட்பகுதியில் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் குடியேறிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், சௌராட்டிரம், உருது மொழி பேசுபவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களைப் பொறுத்த அளவில் தமிழைப் பொதுமொழியாகவும் தாய்மொழியை வீட்டு மொழியாகவும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழர் தாயகத்தின் குடிமக்களே. இவர்களை வெளியார் என அழைப்பதும், இரண்டாம் தர குடிமக்களாக கருதி ஒதுக்குவதும், அவர்கள் அரசியல் அதிகாரம் பெறக்கூடாது என்பதும் தமிழர் தாயகத்திற்கு இடையூறாக அமையும்.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் தான் வெளியார் சிக்கல் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது. காஷ்மீர், நகாலாந்து, அசாம், மணிப்பூர், சிக்கிம், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் வெளியாருக்கு வரம்பு கட்டிட சிறப்பு உரிமைகள் உள்ளன. இம்மாநிலங்களில் நுழைய வேண்டுமானால் உள் எல்லை அனுமதி முறை (Inner Line Permit System - ILP System) செயலில் உள்ளது.வெளி மாநிலத்தவர் 15 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை. பாசிச பா.ஜ.க. அரசு காஷ்மீருக்கான சிறப்புமையை நீக்கி விட்டது.

இன்றைய தமிழ் நாட்டின் நிலை என்ன? தமிழ்நாட்டின் மாநகரங்களில் தொடங்கி கிராமப்புறம் வரையிலும் பார்ப்பன-பனியா, பன்னாட்டு முதலாளிகள் (இவர்களுடன் ஒரளவு மலையாள முதலாளிகளும்) தொழில், வணிகம், வட்டி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். பன்னாட்டு முதலாளிகள் கூட மேலே கண்ட முதலாளிகளுடன் கைகோர்த்து வருகின்றனர். (இந்தியாவின் பெரும் முதலாளிகள் என்றால் மார்வாடிகள்,குஜராத்தி சேட்டுகள் போன்ற பனியா முதலாளிகளையே குறிக்கும்.) வேலைவாய்ப்புகளைப் பொறுத்த அளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் வரம்பற்ற முறையில் நுழைந்து தமிழர்களது வேலை வாய்ப்புகளைப் பறித்துள்ளனர். தமிழக அரசில் கூட வெளியார் வேலையில் சேர அரசு வழி செய்துள்ளது. இவர்கள் அனைவரும் தமிழர் தாயகத்திற்கு அச்சுறுத்தலே. எனவே வெளியாருக்கு தமிழ்நாட்டில் வரம்பு கட்ட வேண்டும். எனவே தமிழ்த் தேசிய அமைப்புகள் பொதுவாகக் கூறக் கூடிய நவம்பர்-1, 1956 ஆம் ஆண்டு மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அமைந்த பிறகு அல்லது வேறு காலக் கோட்டில் தமிழ்நாட்டில் குடியேறிவர்களை வெளியார் என்போம்.

இந்தியக் குடியுரிமையும், தமிழ் நாட்டுக் குடியுரிமையும்

தேசம்,தேசியம், எதிர் தேசியம், தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமை, தாயக உரிமை, குடியுரிமை ஆகியனவற்றிற்கு இடையே வேறுபாடுகளும் உண்டு, ஒற்றுமையும் உண்டு. தேசம்,தேசியம், எதிர் தேசியம், தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமை ஆகியனப் பற்றி "தமிழ்த் தேசமும் மார்க்சியமும்" நூலில் விளக்கி இருக்கிறேன். தற்போது தாயக உரிமை குறித்தும், குடியுரிமை குறித்தும் பார்ப்போம்.

இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதன் முதலில் 1955 இல் இயற்றப்பட்டது. 1986,1992, 2003, 2005, 2015 ஆண்டுகளில் திருத்தப்பட்டன. 2015 திசம்பர் 12ஆம் நாள் பாசிச பா.ஜ.க. அரசால் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக இருந்தது, இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை பெற தகுதி குறைந்தது 11 ஆண்டுகாலம் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை6 ஆண்டுகளாக தளர்த்தப்பட்டது. இச்சலுகை இந்து, சீக்கியர், பௌத்தர், ஜைனர், பார்சி, கிறிஸ்துவர் ஆகியோர்களுக்கு மட்டுமே. முஸ்லீம்களுக்கு பொருந்தாது என்கிறது. நேபாளமும், பூடானும், இலங்கையும் அண்டை நாடுகளாக இருந்தபோதிலும், இதில் சேர்க்கப்படவில்லை. தமிழீழ மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஏன்?அவர்கள் அகதிகள் என்றுகூட ஏற்றுக் கொள்ளவில்லை. அகதிகளுக்கான சட்டம் இந்தியாவில் இல்லை என்பதை கவனத்தில் கொள்வோம்.

1950, சனவரி 26ஆம் நாளுக்குப் பிறகு இந்திய ஒன்றியப் பகுதியில் குடியேறுவோர் "வெளியார்" என 1955 ஆம் ஆண்டு இயற்றிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் கூறுகிறது. அதே நேரத்தில் இந்திய ஒன்றியப் பகுதியிலுள்ள காஷ்மீர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், சிக்கிம், மிசோரம், அருணாசலப் பிரதேசம், கோவா, மேகாலயா ஆகியன இதில் அடங்காது. இவை தனித்தனியான குடியுரிமைச் சட்டங்களை வைத்துள்ளன.

இந்தியாவில் ஒன்றிய அரசு என்றும், மாநில அரசு என்றும் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டுள்ள இரண்டு வகையான அரசுகள் செயல்படுகின்றன. தங்களுக்கு இடையிலான அதிகாரங்களை மத்தியப் பட்டியில் என்றும், மாநிலப் பட்டியில் என்றும், பொதுப்பட்டியல் என்றும் பிரித்துக் கொண்டுள்ளன. இருந்த போதிலும் மாநிலங்களைப் பொருத்த அளவில் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தும் அதிகாரமற்றவையாக அதாவது இறையாண்மை கொண்டவையாக இல்லை. இந்தியாதான் இறையாண்மை கொண்டவையே ஒழிய மாநிலங்கள்அல்ல. இந்தியாவிற்கு இறையாண்மை உண்டு, தமிழ்நாட்டிற்கு இல்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தியக் குடியுரிமை உண்டு, தமிழ்நாட்டு குடியுரிமை இல்லை என்பது தமிழக மக்களின் அடிமை நிலையைக் காட்டுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திபு திபு என குடியேறும் வெளியாரை ஒரு போதும் தடுக்க இயலாது. தமிழ்நாடு இறையாண்மை பெறுவது நீண்ட கால நோக்கமாக இருப்பதால் அதுவரை வெளியார் தமிழ்நாட்டில் கட்டுத்திட்டமின்றி குடியேறுவதை அனுமதிக்க இயலாது. வரம்பு கட்டியாக வேண்டும்.

தமிழ்நாட்டில் வெளியாறுக்கு வரம்பு கட்டும் போது மார்வாடி, குஜராத்தி, மலையாளி ஆகிய சுரண்டும் முதலாளிகளையும், தமிழ்நாட்டில் பிழைப்புக்காக குடியேறும் உழைக்கும் மக்களையும் சமநிலையில் வைத்து அணுகுவது அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும், வர்க்கப் பேராட்ட நலனுக்கும் ஊறு விளைவிக்கும். தொழிலாளி வர்க்கத்தை இனவாதத்தில் மூழ்கடிக்கும். அதே நேரத்தில் வரம்பு கட்டியாக வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்திற்கு தேசிய, அனைத்து தேசிய ஒற்றுமை குறித்தும், முதலாளியம், புரட்சி குறித்தும் வர்க்கக் கண்ணோட்டத்தை அளித்தாக வேண்டும். இது கடினப் பணியே, வேறு வழி இல்லை. இந்திய பன்னாட்டு முதலாளிகள் குறித்தும், சொந்த தேசிய இனத்திலுள்ள ஆளும் வர்க்கம் குறித்தும் தொழிலாளி வர்க்கத்தை (வெளி மாநில தொழிலாளி வர்க்கமாக இருந்தாலும்) இனவாத கண்ணோட்டத்திலிருந்து மீட்டு அவர்களுக்கு வர்க்கக் கண்ணோட்டத்தையும், பாட்டாளி வர்க்க அனைத்து நாடுகளின் ஒற்றுமை உணர்வையும் ஊட்ட வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டுத் தாயக உரிமை மீட்புப் பேராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை தலைவனாக உயர்த்த முடியும். அனைத்து நாடுகளின் தொழிலாளி வர்க்கம் எப்போதும் புரட்சியின் நட்பு ஆற்றல்களே.

இந்திய, தமிழக ஆளும் வர்க்கங்கள் பன்னாட்டு முதலாளி வர்க்கத்துடன் இணைத்து உழைக்கும் மக்களை ஒடுக்குவதில் ஒன்று பட்டுள்ளனர். தங்களுக்கு இடையே முரண்பாடுகள் இருந்த போதிலும்உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சிதைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தொழிலாளி வர்க்கத்திற்கு அனைத்து தேசியதொழிலாளர்களது ஒற்றுமையை உணர்வை ஊட்டுவதன் மூலம் முதலாளிகளின் கூட்டு முயற்சிகளை முறியடிக்க முடியும்.

தமிழர் தாயகம் காப்போம் :

தாயக உரிமை என்பது ஆட்சி புலக்கட்டுக் கோப்பு (அதாவது ஆட்சிப் பரப்பிலுள்ள நிலம், நீர், கனிம வளங்கள் உள்ளிட்டவை) எல்லைகளின் மீறா வொண்ணாமை, மக்கள் தொகை இயைபு ஆகியவற்றின் மீதான தமிழர்களது உரிமையை குறிப்பதாகும். இவ்வுரிமை தற்போது தமிழ்நாட்டிற்கு இல்லை. தமிழ் நாட்டின் தாயக உரிமை இந்திய அரசாலும், பன்னாட்டு வல்லாதிக்கங்களாலும் அடியோடு சிதைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிலம், நீர், கனிம வளங்கள் பன்னாட்டு வடநாட்டு முதலாளிகளுக்கு விற்கப்படுகின்றன. கச்சத் தீவை இலங்கைக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி இந்திய அரசு எடுத்துக் கொடுத்தது. எனவே, தமிழ்நாட்டின் எல்லைகளை இந்திய அரசு தனது நோக்கத்திற்கு இயைந்த வகையில் மாற்றி அமைக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பெரும் விழுக்காடு தமிழர்கள் தான் இடம்பெற வேண்டும். மிகு எண்ணிக்கையில் வெளியார் இடம் பெற்றால் தமிழ்நாடு தமிழர் தாயகமாக நீடிக்காது. எடுத்துக் காட்டாக பாலதீனர்கள் தங்களது தாயகத்தை இஸ்ரேலுவிடம் இழந்ததையும், கனடாவில் கியூபெக் போராடிக் கொண்டிருப்பதையும், பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து போராடிக் கொண்டிருப்பதையும் கொள்ளலாம்.

எனவே, தமிழ்நாட்டு மக்கள் தங்களது தாயகம் காக்க போராட வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக் காடாக மாறி தமிழர்கள் அகதிகளாக மாறும் நிலை ஏற்படும்.

பாட்டாளி வர்க்க அனைத்து நாடுகளின் தேசியம் உருவாகவில்லை என்பதால் தற்போது அது தேவை இல்லை என்ற கருத்து தவறானது. "உலகில் இரு வேறு கண்ணோட்டங்கள் நிலவுகின்றன. ஒன்று முதலாளியக் கண்ணோட்டம், மற்றொன்று பாட்டாளிக் கண்ணோட்டம். முதலாளியமானது எந்த ஒரு சிக்கலையும் தனது சுரண்டல் நலனில் இருந்தே அணுகுகிறது. இது வல்லாதிக்க நோக்கம் கொண்டதாகும். பாட்டாளியமானது எந்த ஒரு சிக்கலையும் சுரண்டலை ஒழித்து சோசலிசத்தைப் படைப்பது என்றே அணுகுகிறது. இது கம்யூனிச நோக்கம் கொண்டதாகும். வல்லாதிக்க நிலையில் தேசிய இனச் சிக்கல்கள் ஒரு நாட்டைப் பற்றியதாக இல்லாமல் உலகு தழுவியதாக மாறிவிட்டதால் இப்பேராட்டாமானது உலகு தழுவியதாக மாறிப் போனது. எனவே, ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது ஒடுக்கும் தேசிய இனத்தில் ஆளும் வர்க்கத்தை வீழ்த்துவதுடன் அவர்களுக்குத் துணை நிற்பவர்களையும் (சொந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) வல்லாதிக்கங்களையும் சேர்த்தே வீழ்த்த வேண்டியுள்ளது. இதற்கு உலகு தழுவிய பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை தேவையாகும். எனவே தேசிய இனச் சிக்கலில் எந்த ஒரு தீர்வையும் பாட்டாளி வர்க்கமானது தனது வர்க்கப் போராட்ட நலனிலிருந்து அணுகுகிறது. அதன்படியே வரலாற்றை ஆய்வு செய்கிறது." (தமிழ்த் தேசமும் மார்க்கசியமும் - முதல் பதிப்பு 2020 பக்கம் 46-47) என்று எழுதினேன்.

கம்யூனிஸ்ட் நாடுகளின் (சீனா, வியட்நாம், கியூபா, ரஷ்யா) அரச செயல்பாடுகள் பாட்டாளிய அனைத்து நாடுகளின் தேசியத்தை கைவிட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டி பாட்டாளிய அனைத்து நாடுகளின் தேசியத்தை கைவிடக் கோருவதும் தவறானதே. பாட்டாளிய அனைத்து நாடுகளின் தேசியம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் முழுக்கம் தானே தவிர அரசுகளுக்கானது அன்று. கம்யூனிச நாடுகளின் அரசுகள் பாட்டாளிய அனைத்து நாடுகளின் தேசியத்தை கைவிட்டால் கூட அதற்கு எதிராக அந்நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கம் போராடுவதையும், வேறு நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தை ஆதரிப்பதையும் தடுக்க இயலாது. ஸ்வீடன் ஆளும் வர்க்கம் நார்வே மீது போர் தொடுக்க எண்ணியபோது ஸ்வீடன் தொழிலாளி வர்க்கம் அதற்கு எதிராகப் போராடி நார்வே தொழிலாளி வர்க்கத்துடன் கை கோர்த்ததை பாட்டாளிய அனைத்து நாடுகளின் தேசியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக லெனின் கூறுவார்.

எனவே, வெளியாருக்கு வரம்பு கட்டும் போது வெளிமாநில முதலாளிகளையும் தொழிலாளர்களையும் வேறுபடுத்தி அணுகுவதும் பாட்டாளி வர்க்க அனைத்து தேசிய ஒற்றுமையை ஏற்றுக்கொள்வதும் தமிழ்த் தேச தாயகக் காப்புக்கும், தமிழ் தேச விடுதலைக்கும் தேவையானது. அதுதான் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்து நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவை திரட்ட வழிவகுக்கும். மேலும் வெறிபிடித்த நாடு பிடிக்கும் வல்லாதிக்க போர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டு தொழிலாளி வர்க்கத்தையும் அணி திரட்டி முறியடிக்க முடியும். இல்லாவிட்டால் தாயகப் பாதுகாப்பு என்று காவுத்ஸ்கி போல சொந்த முதலாளி வர்க்கத்தின் போருக்கு துணை நிற்கவே முடியும்.

எனவே உடனே செய்ய வேண்டியது :

1. தமிழ்நாட்டு குடியுரிமை மற்றும் இந்தியக் குடியுரிமை ஆகிய இரட்டைக் குடியுரிமை தமிழக மக்களுக்கு வேண்டும்.

2. வெளியாருக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது.

3. வெளியார்நிலம் வாங்குவதை தடுக்க வேண்டும். அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.

4. மத்திய மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடும், தமிழக அரசுப் பணியில் 100 விழுக்காடும் தமிழர்களுக்கே வேலை வழங்க வேண்டும்.

துணை நின்றவை :

1. தமிழ் நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை - தமிழ்த் தேசியப் பேரியக்கம்-2021 - நான்காம் பதிப்பு

2. வெளியாரை வெளியேற்ற வேண்டும் ஏன்?- கி.வெங்கட்ராமன் ஐந்தாம் பதிப்பு -2014

3. தமிழர் தாயகமா வெளியாரின் வேட்டைக் காடா? - 2014 கி.வெங்கட்ராமன்

4. த.தே.பொ.க.பொதுவுடைமைக் கட்சியா? தரகு தேசியக் கட்சியா? - கார்முகில்

5. தமிழர் இறையாண்மை - 2015 பழ.நெடுமாறன்

6. உரிமைத் தமிழ்த் தேசம் - மின்னிதழ் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

7. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தீர்மானம்

8. தென் மண்டல தொடர்வண்டித்துறை மற்றும் தொடர்வண்டி இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் தமிழர்கள் புறக்கணிப்பு - தமிழர் எழுச்சி இயக்கம்.

- பாரி

Pin It