சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் சென்னை சட்டசபைக்கும் இந்தியா சட்டசபைக்கும் வரப்போகும் தேர்தல்களுக்கு ஐயங்கார் கோஷ்டியாரால் அபேக்ஷகர்களை நியமனம் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. இதனை எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியாரும் ஒப்புக்கொண்டு உறுதிபடுத்தியாய் விட்டதாம். ஆனாலும் இன்னும் பல ஜில்லாக்களுக்கு அபேக்ஷகர்களைப் பூர்த்தி செய்யாமல் காலியாக விட்டுவைத்திருக்கிறார்கள். அது எதற்காக வென்றால் தாங்கள் இதுவரை நியமித்த பட்டியலானது பிராமணரல்லாதவர்களையே அதிகமாய் நியமித்ததாகப் பொது ஜனங்களை நம்பும்படி செய்வதற்காகவும், பிராமணர்களை நியமிக்கப்போகும் ஸ்தானங்களையெல்லாம் காலியாக வைத்து பின்னால் சமயம் பார்த்து ஜில்லாவுக்கு ஒவ்வொருவராகச் சேர்த்துக்கொள்ளும் தந்திரத்திற்காகவுமேதான் என்று சொல்லுவோம்.
உதாரணமாக, தஞ்சை ஜில்லாவுக்கு ஒரு ஸ்தானம் காலி. இதற்கு ஒரு ஐயரோ, ஐயங்காரோ திரைமறைவில் இருக்கிறார் . அவர் பெயரை இப்போது சொன்னால் கலகம் ஏற்பட்டுவிடும். ஆதலால் மூடு மந்திரமாகவே வைத்திருந்து, சமயம் பார்த்து அந்தப் பெயரை வெளிப்படுத்திவிடுவார்கள். ஜனங்கள் ஒரு சமயம் ஒப்பமாட்டார்கள் என்று தெரிந்தால் பிராமணரல்லாதாரிலே ஒரு ஆகாவளியைப் பெயருக்கு மாத்திரம் போட்டு, ஐயரோ ஐயங்காரோ சுயேச்சையாய் நின்று சுலபத்தில் தட்டிக் கொண்டுபோய் விடும்படி செய்வார்கள். மற்ற ஜில்லாக்கள் விஷயத்திலும் இதே இரகசியக்கருத்துதான். இந்த தந்திரத்திற்கு எப்படியாவது, பணச்செலவு செய்தாவது பிராமணரல்லாத “தலைவர்களையும்” பிரசாரகர்களையும் உட்படுத்திக்கொள்ளுவார்கள்.
ஓட்டர்களும் இதை அறியாமல் “ஐயோ, பாவம் ஸ்ரீமான் ஐயங்காரும் முதலியாரும் தன்னாலானவரை பிராமணரல்லாதாரையே நிறுத்தப்பார்த்தார்கள்; ஆட்கள் கிடைக்கவில்லையே, என்ன செய்வது” என்று நம்பி ஏமாற அனுகூலமாயிருக்கும் என்கிற முன்னெச்சரிக்கையுடனேயே பல ஸ்தானங்கள் காலியாக விடப்பட்டிருக்கின்றன. ஆனபோதிலும் இப்பொழுது உறுதிபடுத்தப்பட்ட அபேக்ஷகர்களை வைத்துக்கொண்டு நமது பிராமணர்கள் செய்யப்போகும் வேலை என்னவென்று பார்ப்போமானால் மகாத்மா பெயராலும், காங்கிரஸ் பெயராலும், சுயராஜ்யக்கட்சி பெயராலும், ஜெயிலுக்குப்போய் கஷ்டப்பட்ட தேசபக்தர்கள் பெயராலும் ஜஸ்டிஸ் கட்சியை திட்டுவதுபோல் பிராமணரல்லாதார்களைத் திட்டிக்கொண்டு தங்களுக்குள் தங்கள் சொற்படி ஆடத்தயாராயிருக்கும் ஆள்களுக்கும் ஓட்டுப்பிரசாரம் செய்வதைத் தவிர வேறு வேலையில்லை. இதற்காக பிராமணப் பத்திரிகைகளும் பிராமணப் பிரசாரகர்களும் ஏற்கனவே தங்கள் கைவசமிருந்த போதிலும் தற்காலம் உள்ள நிலைமையில் பிராமணரல்லாத பிரசாரகர்களும் பிராமணரல்லாத பத்திரிகைகளும் இல்லாமல் பிராமணரல்லாதார்களை ஏமாற்ற முடியாமலிருப்பதால் அதற்காக தேர்தல் முடியும் வரை சிலரைப் பணம் கொடுத்து சுவாதீனம் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்படி சுவாதீனப்படுத்திக் கொண்டாலும் சிற்சில பிராமணரல்லாதார் மூலமாகவும் அவர்களது பத்திரிகை மூலமாகவும் இவர்கள் புரட்டும் பித்தலாட்டங்களும் வெளியாகி விடுகிறபடியால், அவர்களை அடக்கவும் அவர்கள் பெயரில் ஏதாவது பழிசுமத்தி அவர்கள் வார்த்தையை பிறர் நம்பாமலிருக்கும்படி செய்யவேண்டிய அவசியமும் இப்போது பிராமணர்களுக்கு ஏற்பட்டுப் போயிருக்கிறது.
இதற்காக வேண்டி கோவை கனவான் ஒருவர் சில யுக்திகள் கண்டுபிடித்து , அதாவது முதலாவதாக இப்போது ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கரைப் பற்றி பலவாறான தூஷணைகளைக் கொண்ட துண்டுப் பிரசுரங்களையும் தூஷணையானப் பத்திரிகைப் பிரசாரங்களையும் மற்றும் பல காரியங்களையும் ஆரம்பித்திருக்கிறார். அதென்னவென்றால்,
1. ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் ஈரோடு முனிசிபல் சேர்மனாயிருந்த காலத்தில் சில தவறுகள் செய்திருக்கிறார்.
2. தங்களது குடும்ப சத்திர தர்மத்தை நடத்துகிற விஷயத்தில் தனது கொள்கைக்கு விரோதமாய் நடந்து வருகிறார்.
3. ஜஸ்டீஸ் கக்ஷியில் சேர்ந்து விட்டார்.
4. ஜஸ்டீஸ் கக்ஷியாரிடம் திரவியம், வாகனம் முதலிய சகாயம் பெற்றுப் பிரசாரம் செய்கிறார்.
5. சர்க்காருக்கு அடிமையாகி விட்டார். ஆகிய இவைகளைப் பத்திரிகைகள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், கூலிப் பிரசாரகர்கள் மூலம் திண்ணைப் பிரசாரமாகவும் ஓட்டர்களுக்கு வினியோகம் செய்து வருகிறார். இனியும், வேறு சில சதியாலோசனைகளும் நடந்து வருகின்றன. இவற்றைப்பற்றி மறுப்புரை எழுதும்படி பல நண்பர்கள் அவசரமும் ஆத்திரமுங்கொண்டு நமக்குப் பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவ்வாரத்தில் நமக்கு வெளியில் போக வேண்டிய வேலைகள் இருப்பதாலும் இன்னும் என்னென்ன விதமான விஷம விஷயங்கள் கிளம்பப்போகிறது என்று பார்த்து முடிவாக சமாதானம் எழுதலாம் என்கிற காரணத்தாலும் இவ்வாரம் அவைகளைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை. அடுத்த வாரமோ அல்லது அதற்கடுத்த வாரமோ ஸ்ரீமான் நாயக்கரைப் பற்றி பத்திரிகையில் கண்ட விஷயங்களையும், துண்டுப் பிரசுரங்களில் கண்ட விஷயங்களையும், வாய்ப் பிரசாரத்தில் சொன்னதாகத் தெரியவந்த விஷயங்களையும் சுருக்கமாக நமது பத்திரிகையில் எழுதி தக்க சமாதானம் கூறுவோமாதலால், சில நண்பர்களை தயவுசெய்து அவசரப்படவேண்டாமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 16.05.1926)