அப்பா

மகனுக்காக உழைக்கிறேன்
மனசு வலித்தது
என் தந்தையை நினைத்தபோது

கோயில்

நான் இட்ட
பிச்சை
தட்டேந்தியவர்
உள்ளே
கையேந்தியவர்
வெளியே

நெசவாளி

வண்ண வண்ணமாய்
சாயம் ஏற்றி
விதவிதமாய் தீட்டி
விழா காலங்களில்
விடிய விடிய
அவன் நெய்த பட்டுப்புடவை
வின்னை முட்டும் அளவுக்கு
விலை போனது
ஆடையகத்தில்
அழகு பெண் ஒருத்தி
தோளில் போட்டு காட்டினாள்
கூலிக்கு நெய்த அவனோ
தெருவோர கடைகளில்
மலிவு விலையில்
மனைவிக்கும் மகளுக்கும்
புடவை தேடினான்

கல்விக் கடன்

பிள்ளையின் படிப்புக்காய்
வங்கியில் வாங்கியக்
கடன்
வாசலில் வந்து
நின்றது
வட்டியோடு
பெற்ற கடன் பற்றி
ஒற்றை வரியில்
சொல்லி முடித்தான்
மகன்

நன்றி மகனே

வாசல் கதவும்
வசதியானதுதான்
ஒளிந்து கொள்ள
இதமாய்
வாசலில்
கடன்காரன்
பதில் சொல்லும் முன்
பல முறை
திரும்பிப் பார்த்துச்
சொன்னான்
என் மகன்
அப்பா
வீட்டில் இல்லை

மரம் பேசுகிறேன்

உளி கொண்டு
சிலை வடித்தாய்
கலை பிறந்தது
கலைக் கொண்டு
மொழி வளர்த்தாய்
தமிழ் வளர்ந்தது
விதை கொண்டு
பயிர் வளர்த்தாய்
உணவு கிடைத்தது
எனைக் கொன்று
பணம் வென்றாய்
பூமி வரண்டது
இனி எதைக் கொண்டு
மழை கேட்பாய் மனிதா
பூமியோடு பந்தம்
அறுபட்டு கிடப்பது
நான் மட்டுமல்ல
நீயும் தான்.

ஏழை

இல்லை என்று சொல்ல
மனமும் இல்லை
இருப்பதாய் காட்டிக்கொள்ள
பணமும் இல்லை
அறிவுரையை மட்டும்
அள்ளித் தருகிறேன்
அழுத விழிகளோடு
அருகில் என் மகன்

மீண்டும் நாங்கள்

கடந்து போன
ஆட்சிகளில்

நடந்து போன
திட்டம் என்ன

எவ்வளவு ஒதுக்கீடுகள்
எவ்வளவு பதுக்கீடுகள்

இது எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
வாக்கு விற்பனையில்
வாக்காளன்

அரியணை கனவுடன்
கரை வேட்டியில்
வெள்ளை சட்டை
வியாபாரிகள்

ஏமாறத் தயாராகி
எப்போதும்? நாங்கள்

என்ன பயன்

அந்தியூர் முதல்
அம்மாபேட்டை வரை

ஆட்சியாளர்களின்
அகலப்பாதை

அடியோடு அழிக்கப்பட்டது
ஆயிரம் உயிர்கள்

மனிதம் இழந்த மனிதா
மண்ணுக்கும் மரங்களுக்கும்
மரணத்தை தந்துவிட்டு
மழை வேண்டி
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம்.

- அந்தியூர் கி.ரவிச்சந்திரன்

Pin It