ஆட்டிசம் என்ற சொல் புதிதாகவும், ஆட்டிச நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் வினோதமாகவும் பார்க்கப்பட்ட காலம் மாறி, பணியிடத்தில், பள்ளியில் என பல இடங்களில் நம்முள் ஒருவராய் ஆட்டிச நிலையாளர்கள் பலருடன் பழகும் வாய்ப்பைப் பெற்று ஆட்டிசம் என்ற சொல் தனி மதிப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சமீப அறிக்கையின்படி 68 இல் 1 குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப் படுகின்றது. இந்த நிலையில் ஆட்டிச நிலை பற்றிய விழிப்புணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவது அவசியம். Autism Spectrum Disorder என்பதையே சுருக்கமாக ஆட்டிசம் என்கிறோம் .ASD எனப்படும் autism spectrum disorder ஆட்டிசம் உட்பட பல மூளை சார்ந்த வளர்ச்சி குறைபாடுகளை உள்ளடக்கும் ஒரு குடைப் பெயர்.

இக்குடைப்பெயரின் கீழ் வரும், ஒவ்வொரு நிலையும் தனக்கென தனி இயல்புகளால் வரையறுக்கப்படுகின்றன.

ASD என்ற குடையின் கீழ் வரும் குறைபாடுகள்:

 ஆட்டிசம் (autism)

 அஸ்பெர்ஜர் ஸின்ட்ரோம்(asperger syndrome)

 பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் (pervasive developmental disorder)

 பரவலான வளர்ச்சிக் குறைபாடுகள் என வரையறுக்க முடியாதவை. pervasive developmental disorder-not otherwise specified)

 ரெட் ஸின்ட்ரோம்(Rett syndrome)

 குழந்தைப்பருவ ஒத்திசைவின்மைக் குறைபாடு(childhood disintegrative disorder)

உலகம் முழுவதும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆட்டிச நிலைக்கென, மரபு சார்ந்த மற்றும் உடலியல் சார்ந்த காரணிகள் கூறப்பட்டாலும், எந்த ஒரு தனிப்பட்ட காரணியோ, அதன் பங்கோ அறியப்படவில்லை. எனவே ஆட்டிசம் உள்ளிட்ட பல வளர்ச்சி குறைபாடுகளுக்கு முழுத் தீர்வு அளிக்கும் எவ்வித மருந்தோ அல்லது மருத்துவ முறையோ கண்டறியப்படவில்லை.

இன்று பல தடுப்பூசிகளும், மருந்துகளும் மருத்துவ முறைகளும் உலா வந்துகொண்டு இருப்பதன் காரணம் அந்தந்த நோய்களின் காரணிகள் கண்டறியப்பட்டு உறுதிபடுத்தப் பெற்றதால் தான். வயிற்று வலியை எடுத்துக்கொண்டால், உறவினர் முதல் மருத்துவர் வரை "என்ன உண்டீர்கள்?" என்றே கேட்பார்கள். இது காரணியைத் தெரிந்துகொள்ள ஒரு முயற்சியே ஆகும். காரணி கண்டறியப்பட்டதால்தான் அதற்கேற்ற மருத்துவ முறைகளும் மருந்துகளும் குணப்படுத்தப்படுகிறது. ஒவ்வாமையின் காரணியை கண்டறியவே ஆய்வுக்கூடங்கள் பல இயங்குகின்றன.

ஆனால் ஆட்டிசம் எனப்படும் ASD பொறுத்தவரை பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் எந்த காரணியின் பங்கும் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் ஆட்டிசம் ஒரு நோயல்ல. ஆட்டிசம் என்பது ஒரு நிலையே ஆகும்!

ஆட்டிச நிலையின் அடையாளங்களை 18 வது மாதத்திலிருந்தே கண்டறியலாம். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் நன்கு கவனிப்பது அவசியம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரையோ அல்லது மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. கண்டறிவதோடு மட்டுமல்லாமல் கூடிய விரைவில் தக்க பயிற்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிக அவசியம்.

 ஒதுங்கி இருப்பது

 கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது

 ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது

 அதீதமான பதட்டம் அல்லது துறுதுறுப்பு அல்லது மந்தத் தன்மையுடன் இருப்பது

 தன் தேவைகளை வெளிப்படுத்த விரலை சுட்டிக்காட்டுவது

 பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது

 மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது ஈடுபாடு இல்லாமல் இருத்தல்.

ஆட்டிச நிலைக்கு சிகிச்சை முறைகள் என்று பார்த்தால் முதன்மையாக நான்கு வகையான சிகிச்சை முறைகள் தேவைப்படும்

அவை  1) நடத்தைப் பயிற்சி

                2) வளர்ச்சிக்கான பயிற்சி

                3) கல்விக்கான பயிற்சி

                4) பேச்சுப் பயிற்சி.

இந்தப் பயிற்சிகள் அனைத்தின் நோக்கம் -ஆட்டிச நிலையாளர்கள் தன்னிச்சையாக தரமான வாழ்வைச் சந்திக்கத் தயார்படுத்த வேண்டும் என்பதே ஆகும். அதாவது அடுத்த நிலையில் தன்மைகளான அதீத சுறுசுறுப்பும் பேச்சுக் குறைபாடு கவனமின்மை பதற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்தலே ஆகும். தற்கால சிகிச்சை முறைகள் எதுவும் ஆட்டிசம் எனப்படும் ASD இன் காரணிகளின் வேர்களை அடிப்படை நோக்கமாக கொண்டவை அல்ல.

எனவே எந்த மருத்துவ முறையும் மேற்கொள்வதற்கு முன்னால் நன்கு ஆராய்ந்து தகுந்த ஆலோசனைப் பெறுவது சிறப்பு. அதேநேரம் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் இருப்பது வேண்டும்.

இதனைத் தாண்டி ஆட்சிச நிலையாளர்களின்‌ கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் மாநில அரசும் மத்திய அரசும் பல சட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி பல சிறப்புப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன அங்கு அவர்களுக்கு தொழிற்கல்வியும் கற்றுத் தரப்படுகின்றது.

இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் துவங்கி உணவகங்கள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் என பல இடங்களிலும் ஆட்டிசம்  ஆலோசனையாளர்கள் பணிபுரிவது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.!                                       

Pin It