ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி கற்க வேண்டுமானால், பல்வேறு வேலைகளை, அந்த கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் (குரு)க்கு செய்து கொடுத்து கல்வியைக் கற்க வேண்டிய கால கட்டம் இருந்ததை நாம் அறிவோம்..!

இருந்த போதிலும் அனைவரும் கல்வியைக் கற்க முடியுமா.? என்றால் நிச்சயம் இல்லை. ஏனெனில், அவர்கள் அங்கு சாதி பார்த்து, மதம் பார்த்தல்லவா கல்வியைக் கற்றுத் தந்தார்கள்.

சாதியில் உயர்ந்தவன் மேசையில் அமர்ந்து படிக்க வேண்டும், சாதியால் தாழ்த்தப்பட்டவன் கோணிப்பையில் அமர்ந்து படிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன காலங்களை நாம் மறக்கவா முடியும்..? அதுமட்டுமா.? சாதிக்கு ஏற்ற உடையுமல்லவா இருந்தது. ஆனால், அந்த பல கொடுமைகளையும் தாண்டி, அந்த கல்வி முறையிலே படித்துப் பட்டம் பெற்று வந்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கரையும், கல்வி வள்ளல் காமராசரையும் நாம் மறக்கவா முடியும்..?

மேல்சாதிக்கு ஒரு கல்வி, கீழ் சாதிக்கு ஒரு கல்வி அல்லாமல் அனைவருக்கும் கல்வி, அதுவும் சமச்சீர் கல்வி என்றெல்லாம் கல்வி முறையிலே பல்வேறு வகையான மாற்றத்தை, சீர் திருத்தத்தைக் கொண்டு வந்து வருங்காலத் தலைமுறையினர் நல்லதொரு கல்வியுடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று போராடிய தலைவர்களை நாம் அறிந்திருக்கிறோம்.

அவ்வாறு அவர்கள் இன்னல் பட்டு, துன்பப்பட்டு வாங்கித் தந்த கல்வியை, இன்று நாம் புத்தகத்தின் மூலம் படித்து வருகிறோம். புத்தகங்களை நாம் சரியாகப் படிக்கிறோமா.? என்றால், ஆம்.! என்று சில பதில்களையும், இல்லை என்று சில பதில்களையும் நாம் அறிவோம்.

இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் பேஸ்புக் மோகம் அதிகமாக உள்ளது என்பது தெரிந்த ஒன்றுதான். இந்த மோகம் நாளடைவில் அவர்களை அதற்கு அடிமையாக மாற்றுகிறது. பள்ளிக்கு (ஸ்கூல்) செல்லும் மாணவர்கள் பாடப்புத்தகத்தை எடுக்கிறார்களோ.! இல்லையோ.! நிச்சயம் அவர்கள் பேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அப்படிப் பார்க்கும் போது, பேஸ்புக்கா.? ஸ்கூல் புக்கா.? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் நிச்சயம் எழுகிறது. அவ்வாறு கேள்விகள் தோன்றக் காரணம் நான் முன்பே கூறியது போலவே பேஸ்புக்கின் மீது கொண்ட மோகம் தான்.

பேஸ்புக்கையும் வாட்ஸ்அப்பையும் மாணவர்கள், இளைஞர்கள், மட்டும் தான் பயன்படுத்துகிறார்களா? என்று கேட்டால் அதற்கு இல்லை என்பதே பதிலாகும்.

ஏனெனில்,

“இருபதில் இருந்து அறுபது வரைக்கும்

எல்லோர் கையிலும் செல்போன்”

அறிவியல் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவைகளே முன் உதாரணமாக நமக்கு அமையும். ஒரு மாணவன் என்ன தான் அவன் பாடப்புத்தகத்தைப் படித்தாலும் 100 சதவீதம் புரிந்து படிக்க முடியுமா.? என்று கேட்டால் இல்லை என்பது பதில். காரணம், ஒவ்வொரு மாணவனின் எண்ணங்களும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும் என்பது மனரீதியான உண்மை.

ஒரு மாணவனுக்குப் பாடல் கேட்டுப் படிக்கப் பிடிக்கும், ஒரு மாணவனுக்கு எழுதிப் படிக்கப் பிடிக்கும், நடந்து படிக்கப் பிடிக்கும், படம் பார்த்து படிக்கப் பிடிக்கும்... இப்போதெல்லாம் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தையே படமாக அல்லவா பார்க்கப் பிடிக்கிறது. மாணவர்கள் பாடத்தை படமாகப் பார்க்கும் போது அவர்களுக்கு எளிமையாகப் புரிந்து பதிந்து விடுகிறது.

அதுபோலவே இன்று முகநூலில் வெறும் பொழுதுபோக்கு அல்லாமல் அதிலும் பல்வேறு வகையான செயல்பாடுகள் உள்ளது.

(1) கல்வி

(2) விளையாட்டு

(3) பொழுதுபோக்கு

என செயலியில் (App) பல்வேறு வகையான சிறப்புகளைப் பொருந்தியதாக பேஸ்புக்கானது விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருப்பதால் அதனுடைய பயன்பாட்டாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

இன்னும் சிறப்பு என்னவென்றால் P.hd முடித்தவர்கள் தான் பேஸ்புக்கை பயன்படுத்த முடியும் என்றில்லாமல் யார்வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற வகையில் அமைந்திருப்பதால் தான் அனைவரும் பேஸ்புக்கையும் வாட்ஸ்அப்பையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனுடைய பயன்பாட்டில் பல்வேறு வகையான நன்மைகள் இருக்கிறது. அவற்றை நாம் தீய வழியில் பயன்படுத்தினால் தீமை தரக்கூடியதாகவே அமையும்.

முகநூலில் இருக்கும் நபர் நமக்கு என்ன சாதி, என்ன மதம் என்பவையெல்லாம் தெரியாது. நாம் நம்முடைய உரிமையை, எண்ணத்தைப் பதிவிடும் ஓர் இடமாக முகநூல் அமைந்து வருகிறது. நாம் பாடப்புத்தகத்தில் படித்திருப்போம்... ஓர் ஊரினுடைய பிரச்சனைகள், முடிவுகளையெல்லாம் ஒரு ஊரின் ஆல மரத்தினடியில் ஒன்று சேர்ந்து அமர்ந்து பேசி முடிவெடுப்பார்கள் என்று படித்திருக்கிறோம்.

ஆனால்..,

இன்றோ..! ஒரு தாய் தந்தை கூட தன்னுடைய பிள்ளையை சந்தித்துப் பேச முடியாத அளவில் அவர்களுடைய கால அட்டவணையைத் தீட்டி செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் இடமாக முகநூல் பயன்பட்டு வருகின்றது. நாட்டில் நடக்கும் செயல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் இந்த முகநூல் பயன்பட்டு வருகிறது.

இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள் நாளை நம்முடைய நாட்டை முன்னேற்றுவதற்காக இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமல்லாமல் அரசியல், பொருளாதாரம், அறிவியல், சோதிடம் என அனைத்தையும் இன்றைய சமுதாயம் முகநூலில் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலைமாறி நல்லதொரு பகுத்தறிவுச் சிந்தனைகள், அறிவியல் வளர்ச்சி, செயல்பாடுகள் போன்ற தகவலை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களினுடைய பொது அறிவை, இந்தப் பொழுதுபோக்குச் செயலியின் (App) மூலம் பயனுள்ள செயல்பாடாக மாற்றியிருந்தால் நாளைய தலைமுறை பற்றிய கவலை இல்லாமல் போயிருக்கும்.

பேஸ்புக்கா.? ஸ்கூல் புக்கா.? என்ற கேள்வி தோன்றும் போது.. நாம் இந்தப் பார்வையில் பார்த்தால் அதற்கான பதில் கிடைக்கும் என்று சொல்லலாம். நம்முடைய கடந்த கால வரலாற்றைக், கடந்த கால அறிவியல் கண்டுபிடிப்புகளைக், கோட்பாடுகளைக், கணித வரையறைகளைக், கணிதப் புதிர்களைத், தமிழ், ஆங்கிலம் இலக்கண இலக்கியங்களைத் தெரிந்து தெளிவு பெற ஸ்கூல் புக்கையும் இன்றைய நிகழ்வுகளை உண்மையுடன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள பேஸ்புக்கையும் பயன்படுத்தினால் சிறப்பு என்று சொல்லலாம்.

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்”

என்ற பழமொழி நினைவுடன் செயல்படுவோம்.

Pin It