arjun sampath saffronising valluvarசமீப காலமாக ஒரு சில விஷயங்கள் வன்மமாகவும், விஷமமாகவும் பாஜக IT அணியால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள், எதற்கு இப்படி வீண் புரளியை நம்ப வைக்க வேண்டும்?

மீம்ஸ் போடுபவர்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடியும். ஒரு கான்செப்ட் எடுப்பார்கள், அது குறித்து மீம்ஸ் போடுவார்கள். அது பிரச்சினை அல்ல. ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் என்று வைக்க வேண்டியது. திடீரென்று ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட வேண்டியது. அதில் குளிர் காய்ந்து விட்டு, அடுத்த பிரச்சினைக்கு குரங்கு தாவுவது போல் தாவி விட வேண்டியது. கேட்கும் போதே, இதெல்லாம் ஒரு பொழப்பா என்று கேட்கத் தோன்றும். ஆனால் அதையும் ஒரு பொழப்பாக இங்கு ஒரு கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

இவர்கள் திட்டமிட்டு ஒரு சமுதாயத்தைத் தாக்கும் வகையில் கீழ்த்தரமாக பொய்களைப் பரப்ப வேண்டியது. பின்பு அந்தப் பிரச்சினை அவர்களை நோக்கி வரும் போது பெருந்தன்மையாக "வல்லவராயரே நாங்கள் வேண்டும் ஐயா" என்று காலில் விழுந்து விடுவது. சரி நேரடியாக விஷயத்திற்கு வருவோம். வலது சாரிகள் தங்களுக்கு ஒரு IT அணி வைத்துள்ளனர். ஒரு செயலைச் செய்ய மேலிடம் ஒரு கட்டளை இட்டால்,. அது என்னவென்று கூட முழுவதும் அறியாமல் வேறு விதமாக கீழ் மட்டத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்.

வள்ளுவரும் வாக்குவாதமும்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். இது வள்ளுவன் குறள். அதாவது வாய்மை எனக் கூறப்படுவது எது என்றால், அது மற்றவருக்கு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் எனப் பொருள். ஆனால் இவர்கள் அப்படியா? வடக்கே ஓர் அமைப்பு வள்ளுவரை கீழ் ஜாதி என்று கூறி, அவரது சிலையை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மதத்தை சாரா உலகப் பொது மறையாம் குறளைத் தந்த வள்ளுவனுக்கு இந்த நிலை.

தமிழகத்தில் ஒரு படி மேலே சென்று தஞ்சையில் 2019ல் வள்ளுவர் சிலை சில கயவர்களால் சேதப்படுத்தப் பட்டது. அதற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இந்த சம்பவம் ஒரு பக்கம் அரங்கேற, இன்னொரு பக்கம் இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி என வலது சாரி அமைப்பினர் பலர் வள்ளுவருக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் சிலையைச் சுத்தம் செய்து திருவள்ளுவருக்கு நெற்றி நிறைய திருநீரு பூசி, காவித் துண்டு அணிவித்து, திருவள்ளுவர் ஒரு இந்து என்று ஒரு பூகம்பத்தைக் கிளப்பி விட்டனர். தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அட இது உண்மை திருவள்ளுவர் உருவம் அல்ல, 1964ம் ஆண்டு கே ஆர் வேணுகோபால் சர்மா என்பவரால் தான் அவருக்கு ஒரு முழு உருவம் கிடைத்தது. இந்த உண்மையைக் கூற வந்தால் இந்து துரோகி என்று முத்திரை குத்துகிறார்கள். வள்ளுவர் வாழ்க்கை குறித்தே சில உண்மைகள் விளங்காத காலகட்டத்தில், அவரை இந்து என்று கூறி ஒரு அரசியலைச் செய்தனர். அதனையும் இந்த மாட்டு சங்கிகள் என்ன ஏது என்று கேட்காமல் திருவள்ளுவரை காவி உடையில் வரைந்து திருநீரு பூசி அலங்கோலமாக்கினார்கள். இதற்கு பக்கத் துணையாக இருந்தது தமிழக பாஜக என்று கூறினால் அது மிகையாகாது.

அம்பேத்கரும் ஆஸ்காரும்

ஒரு கட்சி என்று ஒன்று இருந்தால் அதற்கு கொள்கை என்று ஒன்று இருக்கும். அந்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு தான் அந்தக் கட்சி இயங்கும், அதனைத் தான் மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குகள் சேகரிக்கும். இது மத்திய, மாநிலக் கட்சிகள் அனைத்திற்கும் பொருந்தும். இப்படி இருக்கும்போது ஏப்.14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் வந்தது. அதற்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி எச்.ராஜா தான் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதாவது அம்பேத்கரின் கொள்கையைத் குழிதோண்டிப் புதைத்து விட்டு, இந்தியக் குடியுரிமைக்கு எதிராக அனைத்தும் செய்துவிட்டு, அம்பேதக்கரின் புகழைப் பரப்புவதாக நாடகத்தை அரங்கேற்றினார்.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கொங்கு மண்டலத்தை அக்கா வானதி சீனிவாசனுக்கு தாமதமாகத் தான் அப்டேட் வந்தது போல... தனது மொபைல் டாப்ல புகைப்படத்தை வைத்து வீட்டு வாசலில் வைத்து வணங்குவது போல போஸ் கொடுத்துள்ளார். புகைப்படம் பதிவிட்ட சில மணி நேரத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இப்படித் தான் நீங்கள் கட்சி சார்பில் மரியாதை செலுத்துவீர்களா?

இவர்களைத் தொடர்ந்து இந்து கட்சி சேர்ந்த நபர் ஒருவர் குறித்த காணொளியும் அன்றைய தினம் வைரலாகப் பரவியது. அதாவது ஈவெராவுடன் உடன்பாடு இல்லை, அதே நேரத்தில் அம்பேத்கருடன் எங்களுக்கு உடன்பாடு உள்ளது என்று கூறியிருந்தார். பெரியாரையோ, அம்பேத்கரையோ முழுவதும் அறியாத இவர்களின் பேச்சுக்கும், நடிப்புக்கும் ஆஸ்கார் கொடுக்கலாம்.

கொரோனா கூத்து

சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளை மட்டுமின்றி இந்தியாவையும் விட்டு வைக்காமல் ஒரு ஆட்டு ஆட்டியது. கொரோனா தாக்கம் ஒரு பக்கம் இருக்க, இந்த சங்கிகள் அதையும் வைத்து அரசியல் செய்தார்கள். டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டிற்குச் சென்று வந்த இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். ஆனால், இதில் எப்படியாவது அரசியல் செய்ய வேண்டும் எனத் துடித்த சங்கிகள் தப்லீக் ஜமாத்-ஐச் சேர்ந்தவர்களால் தான் கொரோனா பரவியது, அவர்கள் தான் இந்தியா முழுவதும் பரப்பி வருகின்றனர், அப்படி இப்படி என்று பழைய வீடியோக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து சேகரித்து ஒரு கேடு கெட்ட செயலைச் செய்தனர்.

இப்படி இந்த ப்ராஜெக்ட் இருக்கும்போது, அடுத்து வந்த ப்ராஜெக்ட் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கொரோனாவிற்கு தங்களிடம் உள்ள ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது. உடனே அமெரிக்கா அந்த மருந்தை இந்தியா வழங்க வேண்டும், இல்லையேல் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியதும், சௌகித்தார் மோடி இங்கிருந்து மாத்திரைகளை அமெரிக்கா அனுப்பி வைத்தார். உடனே ட்ரம்ப் புகழ்ந்து தள்ளினார்.

காவி ஆர்மி பாய்ஸ், அவர் மோடியை மிரட்டவில்லை, அன்பாகத் தான் கேட்டார் என்று கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல சமாளித்து விட்டனர். அடுத்து கான்செப்ட் கிடைக்கவில்லை என்ற போக்கில் அரபு நாட்டினரை வம்பிழுத்து வாங்கி கட்டிக் கொண்டனர். தற்போது அரபுநாடுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை தீவிரவாத அமைப்பாக அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிசயம் என்னவென்றால், இஸ்லாமியத் தோழர்களை நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நெட்டிசன் முன்னணி நாயகர்கள் நாராயணன் திருப்பதி, எஸ்.வி.சேகர் போன்றவர்வர்கள் 'கீதோபதேசம்' செய்து, தங்களை சாவர்க்கரின் வாரிசுகள் என்பதை நிரூபித்ததுதான்.

கொரோனா தொடங்கி ஜோதிகா வரை

நாடே ஊரடங்கில் அமைதியாக இருந்தாலும் பாஜகவினரால் அப்படி இருக்க முடியாது. கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள், நாய்க்கு வேலையும் இல்ல நிக்க நேரமும் இல்ல. அது போல ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்பாமல் இவர்களால் இருக்க முடியாது. அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோதிகா பேசிய ஒரு கருத்தினை மாற்றி, திருத்தி, அதனை வைத்து சமூக வலைத்தளங்களில் ஒரு பிரச்சினையைக் கிளப்பினர்.

இவர்களுக்கு காரியம் நடக்க வேண்டுமென்றால் யாரையும் இப்படி கீழ்த்தரமாக செய்வார்கள் என்பதற்கு இதுவே தக்க உதாரணம். ஜோதிகா இந்தக் கருத்தை இதற்கு முன்னரே கூறியுள்ளனர். அப்போது எங்கு சென்றனர்? கோவில்களுக்கு செய்யும் செலவில் ஒரு பகுதியை கல்விக்கும், மருத்துவத்திற்கும் வழங்கலாம் என்று கூறினார். தஞ்சாவூர் படப்பிடிப்பிற்காக சென்றபோது தான் பார்த்த அவலத்தைக் கண்டு மனம் பொறுக்காமல் பொது மேடையில் கூறினார். அது அவரது உரிமை, தனிப்பட்ட கருத்து. ஆனால் அதனை வைத்து கீழ்த்தரமாகப் பேசுவது, விமர்சிப்பது சரியான போக்கையா காட்டுகிறது?

இதில் ஒரு சிலர் இவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டினால் நீங்கள் கம்யூனிஸ்ட்டா அல்லது காங்கிரஸா என்று கேட்கின்றனர். அவர்களுக்கு சில விஷயங்களை எடுத்துக் கூற நாம் கடமைப் பட்டுள்ளோம். ஒருவர் வெளியிட்ட வீடியோவில் 'ராஜராஜ சோழனின் வீரம் தெரியுமா, அவர் எதற்காக இந்தக் கோவில் காட்டினார், அப்படி இப்படி என்று எல்லாம் சரி.. அவரது காலத்தில் கல்விக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனை யாரேனும் பின்பற்றினீர்களா. கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது? கியூபா கல்விக்கும், மருத்துவத்திற்கும் தான் முக்கியத்துவம் கொடுத்து தற்போது உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது. அதே போல இந்தியாவில் கேரளாவில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வடமாநிலங்களில் கல்வி எப்படி வழங்கப்படுகிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்...

உங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கவே நீங்கள் இவ்வளவு சிரமப்படும் போது, ஆயிரக்கணக்கான குழந்தைகள், இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை அகரம் அறக்கட்டளை மூலம் சூர்யா நடத்திக் காட்டுகிறார். ஒருவரிடம் கருத்து வேறுபாடு இருந்தால் அது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஜாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி இழிவாகப் பேசுவது தான் நாகரீகமா? தமிழகம் மருத்துவத்தில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? அதற்கு பதில் கேட்டால் உடனே, அதை விட்டுவிட்டு அடுத்து அரசின் மேல் பழி போட ஆரம்பித்து விடுவீர்கள். ஜோதிகா நிலைப்பாடு சரியே. இங்கு கல்வியும் மருத்துவமும் தான் முக்கியம்.

நேற்று தப்லீக் இன்று ஜோதிகா... இப்படி இவர்கள் ஒரு பிரச்சினையில் இருந்து இன்னொரு பிரச்சினைக்கு பச்சோந்தி போல் மாறி வருவார்களே தவிர அவர்களுக்கு கொள்கை ரீதியான எந்த ஒரு நிலைப்பாடும் கிடையாது. ஏனெனில் மக்கள் மீது உண்மையில் அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. இவர்களை அடையாளம் கண்டு கொண்டு அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பதும், அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பதும் நமது கடமையாகும்.

- சேவற்கொடி செந்தில்

Pin It